Monday, December 23, 2024
Google search engine
HomeHorrorRasathiராசாத்தீ 1 (Horror) கவுதம் கருணாநிதி

ராசாத்தீ 1 (Horror) கவுதம் கருணாநிதி

1

திரையரங்கத்தில் நீண்ட பெல் அடித்தது.

படம் முடிந்து மக்கள் அனைவரும் வெளியே வந்தால் கூட்டம் அதிகமாகும் சைக்கிளை எடுப்பதற்கு சிறிது நேரம் காத்திருக்க வேண்டி வரும். யோசித்த செல்லமுத்து தன்னுடன் இருந்த கந்தனை அழைத்தான்.

“கந்தா”

“ம்”

“எந்திரிச்சு வா”

“இரு இன்னும் படம் முடியல.”

“சைக்கிள் எடுக்கமுடியாது. வா போலாம்..”

“ம்”

கந்தன் எழுந்தான் இருவரும் அவசரமாக வெளியே வந்தனர். செல்லமுத்து டோக்கன் கொடுத்து விட்டு சைக்கிளை வெளியில் எடுத்தான். காற்று குளிராக அடித்தது. மழை வரும் போலிருக்க செல்லமுத்து வானத்தைப் பார்த்தான்.

“கந்தா”

“ம்”

“சீக்கிரம் ஏறு மழை வர்றதுக்குள்ள வீட்டுக்குப் போயிடலாம்”

கந்தன் ஏறிக்கொள்ள செல்லமுத்து சைக்கிளை மிதித்தான்.

“படம் எப்படி இருந்துச்சு?” சைக்கிள் மிதித்தபடி செல்லமுத்து கேட்க கந்தன் ஒன்றும் சொல்லாமல் சிரித்தான்.

“ஏண்டா ?”

“வீட்ல நிம்மதியா தூங்கியிருக்கலாம். தூக்கம் வரலைன்னு செகண்ட் ஷோவுக்கு வந்தது தப்பாயிடுச்சு. பயங்கர போர் படம்.”

“ஏன் கந்தா? படம் நல்லாத்தானே இருக்கு? “

“நம்ம எந்த காலத்தில் இருக்கோம்? இப்ப வந்துட்டு பேய் பிசாசு பூதம் மந்திரம்னு காதுல பூ சுத்துறாங்க.”

“ம் பேய் நம்பிக்கை இல்லையா உனக்கு?”

“சுத்தமா இல்ல. உனக்கு?”

“இதுவரைக்கும் இல்ல இனிமே எப்படின்னு தெரியாது.”

“இனிமே தெரியாதுன்னா என்ன அர்த்தம்?”

“ஒருவேளை பேய் நம்ம முன்னாடி நேராக வந்து நான் இருக்கேன்னு சொன்னா நம்பித்தாளே ஆகணும்?”

செல்லமுத்து சொல்ல கந்தன் சிரித்தான்.

“எதுக்கும் கீழே பார்த்துப்போ பாம்பு ஏதாவது இருந்துடப் போகுது.”

“இந்த ரோட்டுக்கு ஒரு லைட் போடணும்னு எல்லார்கிட்டயும் சொல்லிட்டோம் யாரும் காது கொடுத்து கேட்க மாட்டேங்கிறாங்க”

“இந்த ரோடுஅந்தளவுக்குப் புழக்கம் இல்லப்பா. அப்புறம் எப்படி லைட் போடுவாங்க?

பார்த்துப்போ காட்டுப்பாதை வரப்போகுது.”

“ம்”

செல்லமுத்து காட்டுப்பாதையில் திரும்பினான். கொஞ்சதூரம் போயிருப்பான். ஏதோ ஒரு வெளிச்சம் தூரத்தில் இருக்க திகைத்தான். வெளிச்சம் புதிதாக இருக்கிறது. என்னவாக இருக்க முடியும்?

“கந்தா”

“ம்”

“அங்கு ஒரு வெளிச்சம் தெரியுது உனக்குத் தெரியுதா?”

“தெரியுது ஆனா என்ன அது வெளிச்சம் இங்கே?”

சற்று அருகில் போக ஒரு பெண்ணின் உருவம் வெள்ளை நிறத்தில் பளீரென்று அவன் முகத்தில் அறைந்தது.

செல்லமுத்து அதிர்ந்தான். சட்டென்று பிரேக் போட்டு சைக்கிளை நிறுத்தினான்.

“கந்தா” வார்த்தைகள் பயமாய் வெளிப்பட்டன.

“ம்”

“அங்க என்னமோ இருக்கு.”

“ஆமா முத்து” கந்தனின் குரலும் நடுங்கியது.

“இப்ப என்ன பண்ணலாம்?

“ஏதும் கண்டுக்காம சைக்கிளை மிதிச்சுடலாமா?”

“அது தாண்டித் தான் போகணும்”

“ஒண்ணு செய்யலாமா?”

“சொல்லு”

“திரும்பிப் போயிடலாம்”.

“திரும்பிப்போறதா எங்க?”

“தியேட்டர்க்கே போயிடலாம். விடியட்டும். விடிஞ்சதுக்கப்புறம் வீட்டுக்குப் போகலாம்”

கந்தன் சொன்னது செல்லமுத்துக்கு சரியான யோசனையாகத் தான் தோன்றியது.

ஆனால் எங்கே போய் தங்குவது தியேட்டரிலா? தியேட்டரில் தங்க விடமாட்டார்கள். எங்காவது இரண்டு மணிநேரம் அல்லது மூன்று மணிநேரம் நின்று கொண்டிருக்க வேண்டும்.

ஆபத்துக்கு பாவமில்லை. துணிந்து போய் விடலாமா?

செல்லமுத்து சைக்கிளில் ஏறினான்.கந்தன் திகைப்பாய் பார்க்க செல்லமுத்து சொன்னான்.

“கந்தா ஏறு ஒரே அழுத்து அழுத்திடலாம்”

கந்தன் ஏறி அமர செல்லமுத்து சைக்கிளை அழுத்தினான்.

அந்த வெள்ளை நிற உருவம் முதுகு காட்டியபடி இருக்க அதைக் கடக்க முயன்ற அந்த நொடியில் அந்த உருவத்தின் மீது வைத்திருந்த கவனம் அவனை சாலையின் குறுக்கே இருந்த சிறிய கல்லைக் கவனிக்க விடாது செய்ய சைக்கிள் அதன் மீது ஏறியிறங்க பேலன்ஸ் தவறியவன் சைக்கிளோடு கீழே விழுந்தான். கந்தன் உடன் விழுந்தான். சத்தம் கேட்ட அந்த உருவம் திரும்பியது.


மழை பெய்து கொண்டிருந்த ஒரு ராத்திரி நேரம்.

காத்தான் உறங்கிக்கொண்டிருக்க ராசாத்திக்கு உறக்கம் கலைந்திருந்தது.

மழை சடசடவென்று கூரையில் விழுந்த சத்தம் அவளை எழுப்பி விட்டது.

அருகில் உறங்கிக்கொண்டிருந்த அப்பாவைப் பாவமாய் பார்த்தாள்.

பாவம் அப்பா. எனக்காக படாதபாடு படுகிறார். என்னை ஒரு நிலைக்குக் கொண்டு வரவேண்டும் எனும் ஆசையில் கிடைத்த வேலை எல்லாம் செய்து களைப்பாக வீட்டுக்கு வருவதால் உறங்கும் போது அவ்வளவு எளிதில் எழ மாட்டார்.

காத்தானுக்கு நன்றாகப் போர்த்திவிட்ட ராசாத்தியை அந்த சத்தம் கவனத்தை ஈர்த்தது.

என்ன சத்தம் அது? மழையின் சத்தம் அந்த சத்தத்தை இன்னதென்று கண்டறிய இயலாமல் அவளைத் தொல்லைப்படுத்த அவள் புறக்கணித்து உன்னிப்பாகக் கேட்டாள். இது மூச்சுவிடும் சத்தம்.

யாரோ வெளியில் இருக்கிறார்கள். யாராக இருக்கும்? இந்த அர்த்தஜாம நேரத்தில் இங்கே வந்திருப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?.

ஒருவேளை திருடனாக இருப்பானோ? நினைத்தவளுக்கு அந்த வேளையிலும் புன்னகை வந்தது. இங்கே எடுத்துப் போவதற்கு என்ன இருக்கிறது. என்னை எடுத்துப் போனால் தான் உண்டு. நினைத்தவள் திடுக்கிட்டாள்.

ஒருவேளை வந்தவனின் உத்தேசமும் அப்படி இருந்தால்? ராசாத்தி சட்டென்று எழுந்தாள். விளக்கைப் போட்டால் வெளியில் இருப்பவன் உஷார் ஆகி விடுவான். அவனுக்கு மறக்க முடியாத பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறேன்.

அடுப்பைப் பற்றவைத்து பாத்திரத்தில் நீரை ஊற்றி வைத்தாள்.

நீர் கொதித்தது. ராசாத்தி மெல்ல கதவருகில் சென்றாள். ஒரு காதை கதவில் வைத்து கேட்க இப்பொழுது மூச்சுவிடும் சத்தம் நன்றாகக் கேட்டது.

இப்போது என்ன செய்வது கதவைத்திறந்து யார் என்று பார்க்கலாமா அல்லது அவன் கதவைத் தட்டும் வரை காத்திருக்கலாமா?

யோசித்தாள்.

அப்பாவை எழுப்ப முயற்சிக்கலாம். அதுதான் உத்தமம்.

குரல் கொடுத்தால் வெளியில் இருப்பவன் உஷாராகிவிடுவான்.

அப்பாவை உலுக்கினாள். அவர் மெல்ல அசைந்தார். எழவில்லை.

இனி அப்பாவை எழுப்பிப் பயனில்லை.

ராசாத்தி நினைத்த அதே நேரத்தில் கதவை வெளிப்புறம் இருந்து அவன் பிறாண்டும் சத்தம் கேட்டது.

ராசாத்தி உஷாரானாள்.

கொதித்த தண்ணீரை எடுத்துக் கொண்டாள்.

கதவைத் திறந்து அவன் மேல் ஊற்றிவிட வேண்டியது தான். முடிவெடுத்தவள் பாத்திரத்தைக் கையில் பிடித்தபடி கதவின் அருகில் சென்றாள்.

ஒரு நிமிடம் யோசித்தாள். பயமாக இருந்தது. ஏதாவது தப்பு நடந்து விட்டால்? எதற்கும் பயப்படாதே ராசாத்தி உன்னைக் காப்பாற்ற வேறு யாரும் வர மாட்டார்கள். உன்னை நீ காப்பாற்றிக்கொண்டால்தான் உண்டு.

மனம் சொல்ல காளியம்மனை வேண்டிக்கொண்டு கதவை சட்டென்று திறந்தாள். திகைத்தாள்.

அவன் ஒரு கோடாங்கி. அவன் கண்கள் அவள் மேல் நிலைத்தன.

“அம்மா தண்ணி”

அவன் எழ முடியாமல் கிடக்க சட்டென்று தம்ளரில் தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க வாங்கிக் குடித்தான். அவளை பாவமாய் பார்த்தான்.

“ஐயோ ஐயோ ” கத்தினான்.

ராசாத்தி அவனை பயத்துடன் பார்க்க

“தாயி” அழைத்தான்.

அவள் மௌனமாகப் பார்க்க

“அவன் வந்துட்டான் தாயி உன்னைத் தேடி வந்துட்டான் தாயி. எங்கயாவது போய் உயிர் பொழச்சுக்க தாயி”

சொன்னவன் பெருமூச்சு விட்டான். விழிகள் மூடிக்கொண்டன.

ராசாத்தி பயமாய் பார்த்தாள். அழைத்தாள்.

“அய்யா”

பதிலில்லை.

மெல்ல கோடாங்கியின் தோளைத் தொட அவரின் உயிரற்ற உடல் சரிந்து விழுந்த அதே வேளையில் ஆந்தை ஒன்று பயங்கரமாய் அலறியது.

தொடரும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

error: Content is protected !!