Monday, December 23, 2024
Google search engine
HomeHorrorராசாத்தீ 7(Horror) கவுதம் கருணாநிதி

ராசாத்தீ 7(Horror) கவுதம் கருணாநிதி

7

பாய்க்கு மறுநாள் ராசாத்திக்கு ஏதும் விபரீதம் நடந்துவிடும் என்று தோன்றியது. தன்னை நேருக்கு நேராய் பார்த்தும் ராசாத்தி உடம்பில் இருக்கும் ஆவி ஒன்றும் செய்யாமல் போனது ஏன்?
அப்படியென்றால் அதை அழைத்துப் பேச முயற்சி செய்யலாமா?
அப்படி செய்தால் ஒருவேளை அது ஆத்திரப்பட்டால்… ஆத்திரப்பட்டால….

அதிக பட்சம் என்ன நடக்கும்? என்னைக் கொன்று விடும்.

என்ன செய்யலாம்?

பூசாரியிடம் கேட்போம். அவரிடம் பேசினால் ஒரு தீர்வு கிடைக்கலாம்.

தனக்குள் எண்ணிய பாய் பூசாரியின் வீட்டை நோக்கி நடந்தார்.

இரவின் அடர்த்தி எங்கும் நிறைந்திருக்க பாய் எதைப்பற்றியும் கவலை கொள்ளாது வேகமாய் நடந்ததில் பூசாரியின் வீட்டை அடைந்தார்.

“பூசாரி” அழைத்தபடி கதவைத் தட்ட
பூசாரியாய் அன்னம்மாள் கதவைத் திறந்தாள்.

பாயைக் குழப்பமாய் பார்த்தாள்.

அதைப் புரிந்து கொள்ளாத பாய்

“எனக்கு உங்க ஹெல்ப் வேணும் பூசாரி” என்றார்.

அன்னம்மாள் தலையாட்டினாள்.

“சொல்லுங்க பாய் என்ன பண்ணனும்?”

“நாளைக்குப் பௌர்ணமி”

“ம்”

“ராசாத்திக்கு நாளைக்கு ஏதாவது விபரீதம் நடந்திடுமோன்னு தோணுது.”

“ம்”

“நான் மூலிகைக்காட்டுல ராசாத்தி உடம்புல இருக்குற ஆவிய நேருக்கு நேராப் பார்த்தேன்.”

பாய் சொல்ல அன்னம்மாள் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

“அது எப்படி இருந்துச்சு? யாருன்னு தெரிஞ்சதா?”

“தெரியல பூசாரி அதை தெரிஞ்சுக்கத்தான் எனக்கு ஒரு ஐடியா இருக்கு”

“என்ன சொல்லுங்க?”

“எனக்கிருக்கிற சக்திக்கு ராசாத்தி உடம்பிலிருந்து அதைப் பிரிச்சு என் முன்னாடி வர வைக்க முடியும். அப்படி வரும்போது அது கிட்ட பேசி அது யார்? அதுக்கும் ராசாத்தி க்கும் என்ன சம்பந்தம்னு தெரிஞ்சிக்க முடியும்.”

பாய் சொல்ல அன்னம்மாள் விழிகள் விரியப் பார்த்தாள்

பாய் எப்படியாவது அந்த ஆவியை ராசாத்தியின் உடம்பிலிருந்து பிரித்தால் மீண்டும் அவளின் உடம்பை அது அடைய விடாமல் நாம் தடுத்துவிடலாம். அப்போது ராசாத்தியைக் கொல்வது மிக எளிதாகப் போய் விடும்.

அன்னம்மாள் ஆர்வமானாள்.

“என்ன பூசாரி எதையோ உங்களுக்குள்ள போட்டு யோசிக்கிறீங்க?”

“நீங்க சொல்றது நல்ல விஷயம் தான் அந்த ஆவியை ராசாத்தி உடம்பிலிருந்து பிரிச்சு உங்க முன்னாடி கொண்டு வர என்ன செய்யணும்?”

“என்னுடைய எதிர்பார்ப்புப்படி அது என்னைத் தொந்தரவு செய்யாதுன்னு நினைக்கிறேன். ஒருவேளை அதோட வழில நான் திரும்பத் திரும்ப குறுக்கிடறேன்னு அதுக்குக் கோவம் வந்து என்னைத் தாக்க ஆரம்பிக்கும் அப்போ நீங்க அதை சமாதானப்படுத்த மந்திரத்தை விடாமல் சொல்லணும்”.

பாய் சொல்ல அன்னம்மாள் தலையசைத்தாள்.

“நீங்க எப்போ அந்த ஆவியை அழைக்கப் போறீங்க?”

“நான் அதை உடனே செய்யப் போறேன். அப்பத்தான் நாளைக்கு ராசாத்தியைக் காப்பாற்ற ஏதாவது வழி இருக்கான்னு பார்க்க முடியும்.”

அதுக்கு உங்களுக்கு என்ன வேணும்?

“எதுவும் வேண்டாம் நான் என்னோட வீட்டில தரையில் சம்மணமிட்டு ஒரு மெழுகுவர்த்தி மட்டும் ஏற்றிவைத்து அந்த ஆவிய அழைக்கப் போறேன்.
அது நிச்சயம் வரும்.”

“ஒருவேளை அது வரலன்னா?”

“இல்ல பூசாரி. எனக்கு நம்பிக்கை இருக்கு அந்த ஆவி கண்டிப்பா வரும்.”

பாய் சொல்ல அன்னம்மாள் அவரையே பார்த்தாள்.

“சரி பூசாரி நான் வீட்டுக்குப் போறேன். ஒரு அரை மணி நேரத்துல வாங்க.”

“கண்டிப்பா வரேன்.”


ராஜேந்திரன் தூக்கம் வராமல் எழுந்து அமர்ந்தார்.

மூன்று பேர் இறந்த விவகாரத்தில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது அவருக்கு உறுத்தியது.

ஏன் வைத்தியநாதன் சொன்னதுபோல் அந்த பணிக்கரை போய்ப் பார்க்கக்கூடாது?

சில நேரங்களில் நடக்கும் சில செயல்களை புரிந்து கொள்ள முடியாது நமக்கும் மேற்பட்ட ஒரு சக்திதான் அதை தீர்மானிக்கிறது என்று அனைவருக்கும் புரியும். அது எந்த சக்தி என்பது அவரவர் அனுபவத்தில் அறிவர் என்பதும் உண்மை. அப்படி என்றால் அந்தப் பணிக்கரைப் போய்ப் பார்ப்பது தவறில்லை.

தன்னுள் யோசித்த இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மறுநாள் பொழுது விடிந்ததும் பணிக்கரை போய் சந்தித்து வரலாம் என்று முடிவெடுத்தார்.

*””

அன்னம்மாள் தன் கோரமான முகத்துடன் நின்றிருந்தாள்.

எதிரில் மாயா’

“என்னை எதற்காக வரச்சொன்னாய் அன்னம்மா?”

“இன்னும் சற்று நேரத்தில் ராசாத்தியின் உடலில் இருக்கும் அந்த ஆவி பிரிந்து தனியே வரும்.”

“எப்படி?”

“அந்த ஆவியுடன் பேச அதை அழைப்பதற்கு ஒருவன் முயன்று கொண்டிருக்கிறான்.”

“சிறப்பு. என் பங்கு என்ன? இதில்? மாயா கேட்க”

“அந்த ஆவி அவள் உடம்பில் இருந்து வெளியே வந்தால் ராசாத்திக்கு எந்த சக்தியும் இருக்காது. அந்த ஆவி என் சக்தியை மீறி திரும்பவும் அவள் உடம்பில் நுழையாமல் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ அவளை நான் பலியிடும் நேரம் வரை தப்பிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.”

“அப்படியே ஆகட்டும் அன்னம்மாள்*

“சரி செல்.”

“ஒரு கேள்வி”

“என்ன?”

“அந்த ஆவியை யார் அழைக்கப் போகிறார்கள்?”

“பூசாரியின் நண்பன் “.

“எதற்கு அழைக்கப் போகிறான்?”

“அது யார் என்று தெரிந்து கொண்டு ராசாத்தியைக் காப்பாற்ற முடியுமா என்று முயற்சி செய்ய.”

“பாவம் உன் சக்தி தெரியாமல் முயற்சி செய்கிறான்.”

“செய்யட்டும் எனக்கும் நாளை வரை பொழுது போக வேண்டுமே.

“அந்த ஆவியுடன் அவன் பேசி முடித்தபின் அவனை என்ன செய்யப் போகிறாய்?”

“அவனையும் ஆவியாக்கி விட வேண்டியதுதான்.”

அன்னம்மாள் சொல்ல மாயா சிரித்தாள்.

மரங்களிலிருந்த ஆந்தைகள் அவர்களின் உரையாடல் சத்தத்தில் நடுங்கியபடி அமர்ந்திருந்தன.


பாய் தன் வீட்டில் ஒரு ஜமுக்காளத்தை விரித்தார். கிழக்கு பார்த்து அமர்ந்தார்.

தன் முன் ஒரு மெழுகுவர்த்தியைப் பற்ற வைத்தார்.

“இறைவா ஓர் அப்பாவிப் பெண்ணை காப்பாற்ற முயற்சி செய்யும் எனக்குத் துணையாக இருப்பாயாக”

கடவுளை வேண்டிக்கொண்டார். அருகில் நின்றிருந்த பூசாரியை புன்னகையுடன் பார்த்தார். பூசாரி பதிலுக்கு புன்னகைக்க பாய் தொடங்கப் போகிறேன் என்பதாக சைகை காட்டினார். பூசாரி தலையசைக்க பாய் கண்களை மூடினார்.

பூசாரியாக அன்னம்மாள் பாயை வெறித்தாள்.

என்முன் மூலிகைக் காட்டில் வந்த சக்தியே மீண்டும் என் முன் வா. நீ யாரென்று எனக்குத் தெரிவி ராசாத்தியை காப்பாற்றும் என் முயற்சிக்குத் துணையாக இரு

தொடர்ந்து வேண்டிக்கொள்ள மெழுகுவர்த்தி எரிந்தபடி தான் இருந்தது எந்த அசைவும் இல்லை.

அன்னம்மாள் திகைத்தாள். என்னவாயிற்று?

ஒருவேளை அந்த ராசாத்தியைப் பிரிந்து வருவதை அந்த சக்தி விரும்பவில்லையோ என்னவோ?

அன்னம்மாள் எதையோ யோசிக்க மெழுகுவர்த்தி சட்டென்று அணைந்தது. காற்று பலமாக இங்குமங்கும் வீசியது. ஜன்னல்கள் காற்றில் அடித்துக் கொண்டன.

பாய் அசையாமல் அமர்ந்திருந்தார்

நீ யார் என்று சொல் என் முன்னால் வா.

ஜெபம் போல் விடாமல் சொல்ல அறைக்குள் வேறு யாரோ இருப்பதை பாய் உணர்ந்தார்.

யார் என்று கேட்கும் முன் ஓர் அழுகை சத்தம் கேட்டது. கொஞ்சம் கொஞ்சமாய் கேட்ட சத்தம் பலமானது.

புகையாய் ஒரு உருவம் எதிரில் நின்று கொண்டிருக்க பாயின் பார்வை அதன் மீது நிலைத்தது

“ராசாத்திக்கு ஆபத்து வராமல் இருக்க நீ என் கிட்ட கொஞ்சம் பேசணும் எனக்கு உண்மை தெரிஞ்சா தான் எப்படி காப்பாத்தணும்னு யோசிப்பேன்”

பாய் சொல்ல புகை ஒன்றும் பேசாமல் அப்படியே நின்றது

“யார் நீ உனக்கும் ராசாத்திக்கும் என்ன தொடர்பு?”

பாய் கேட்க அழுகை சத்தம் தொடர்ந்தது.

“நீ எதுக்காகவும் அழ வேண்டாம் உன் ராசாத்தியைக் காப்பாத்த முயற்சி பண்றேன். என்னை நம்பு.

உனக்கும் ராசாத்திக்கும் என்ன சம்பந்தம்?”

எங்கிருந்தோ சத்தமாய் ஒரு குரல் கேட்டது.

“ராசாத்தி என்னோட தங்கச்சி”

“என்ன சொல்றே?”


ரயில் நிலையம்.

“அய்யா காப்பாத்துங்கய்யா” அந்த சிறுமி ஓடிவந்தாள்

“யாரும்மா நீ? “

“நானும் என் தங்கச்சியும் தப்பிச்சு வந்தோம்.”

“தப்பிச்சு வந்திங்களா? எங்க இருந்து?”

“எங்க வீட்டில் இருந்து”

“வீட்டிலிருந்தா?”

“ஆமாங்கய்யா. இங்க வந்து என் தங்கச்சியக் காணோம்”

“சரி போய்த் தேடிப்பாரு. “

அந்த சிறுமி மலங்க மலங்க விழித்தபடி பிளாட்ஃபாரத்தில் ஓடினாள்.

அக்கா எங்கோ ராசாத்தியின் குரல் கேட்க அந்த சிறுமி சத்தம் வந்த திசையை நோக்கிப் பார்த்தாள்.

எதிர் ப்ளாட்ஃபார்மில் இருந்த ராசாத்தியின் வாயைப் பொத்த ஒருவன் முயல அந்த சிறுமி கீழே குதித்தாள். எதிர் ப்ளாட்ஃபார்மை நோக்கி ஓடியவள் அந்த ஸ்டேஷனில் நிற்காத ஒரு ரயில் தன் வேகம் குறையாமல் செல்ல மொத்தப்பட்டாள்.

ரத்தம் தெறித்தது.

தொடரும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

error: Content is protected !!