Sunday, December 22, 2024
Google search engine
HomeCrimeஅசோக் & டீம் in வருவேன்

அசோக் & டீம் in வருவேன்

1

நள்ளிரவு நேரம்.

அந்த ஜீப் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வந்தது. வேகம் குறைத்தது. நின்றது.

விஜயானந்த் இறங்கினார். சுற்றும் முற்றும் பயமாய் பார்த்தார். எங்கோ தூரத்தில் கேட்ட ஏதோ ஒரு சத்தம் அவர் பயத்தை அதிகப்படுத்தியது.

“அய்யா” பாலன் அழைத்தான்.

“ம்”

“வெட்டியான் இன்னும் வரல போலிருக்கே.”

பாலன் சொல்ல விஜயானந்த் முகம் மாறியது.

“எங்கயாவது தண்ணியடிச்சுட்டுக் கிடக்கப் போறான். போன் பண்ணிப்பாரு”

விஜயானந்த் சொல்ல பாலன் தன் மொபைலை எடுத்து வெட்டியானுக்கு அழைத்தான்.

தூரத்தில் சத்தம் கேட்டது.

சத்தம் வந்த திசையை கணித்து அங்கே சென்றான் பாலன்.

சுடுகாட்டில் அன்று அடக்கம் செய்யப்பட்ட இடம் மேடாக இருந்தது. மாலை புதிதாக இருந்தது.

பாலன் அக்கம்பக்கம் பார்த்துக்கொண்டே நடந்தான். 

சிறிது நேரத்தில் வெட்டியான் அவன் பார்வைக்குப் பட்டான்.

வெட்டியானைப் பார்த்துக் கேட்டான்.

“என்ன எல்லாம் தயாரா?”

“குழி வெட்டியாச்சுங்க” சொன்னவன் பயமாய் அழைத்தான்.

“அய்யா” 

“சொல்லு”

“பயமா இருக்குங்க”

“ஒரு பயமும் வேணாம். எந்த பிரச்னையும் வராது”

“அதுக்கில்லங்கய்யா…”

“நீ முதல்ல வா. யாருக்கும் தெரியாம காரியத்தை முடிக்கணும்னுதான் இப்ப வந்திருக்கோம். வா”

சொன்ன பாலன் வெட்டியான் பதிலை எதிர்பாராது முன்னே நடக்க வெட்டியான் பெருமூச்சுடன் ஒன்றும் பேசாமல் அவனைப் பின்தொடர்ந்தான்.

பாலன் ஜீப்பை அடைந்தான். 

விஜயானந்த் வியர்வையைத் துடைத்தபடி அவனைப் பார்த்தார்.

எல்லாம் ஓகேவா என்று விழிகளால் கேட்க பாலன் தலையசைத்தான்.

விஜயானந்த் மீண்டும் ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்தார். கும்மிருட்டு. சுவர்க்கோழிகள் சத்தம் தூரத்தில் கேட்டது. 

“பாலா”

“அய்யா” புரிந்து கொண்டான்.

ஜீப்பின் பின்பக்கம் போனான். 

அந்த இளம்பெண் உடல் இரண்டாய் மடங்கியிருந்தது. அணிந்திருந்த சுடிதார் டாப்ஸில் ரத்தம் உறைந்திருந்தது. நிலைத்த விழிகள் பாலனுக்கு சற்று பயத்தை ஏற்படுத்தினாலும் காட்டிக்கொள்ளாமல் அவளை தூக்க முற்பட்டான். கனத்தது. இறந்து ஆறு மணி நேரத்திற்கும் அதிகமாகியிருந்தது. இறந்து போவதை நம்ப முடியாமலோ ஏற்றுக்கொள்ளாமலோ அவள் முகம் ஒருவித அவஸ்தையில் கோரமாகியிருந்தது.

பாலன் அவளை சிரமப்பட்டுத் தூக்கியபடி நடந்தான்.

வெட்டியானைப் பார்த்துக் கேட்டான்.

“குழி எங்க இருக்கு? “

“அதோ அந்த மேடு இருக்கே. அதுக்குப் பக்கத்துல தான் வெட்டியிருக்கேன். ” சொன்னவன் முன்னால் நடக்க விஜயானந்தும் பாலனும் அவனைப் பின்தொடர்ந்தனர்.

குழியை அடைந்தனர்.

பாலன் விஜயானந்தைப் பார்க்க அவர் தன் கர்ச்சீப்பில் வியர்வையை ஒற்றியபடி தலையசைத்து சம்மதம் கொடுக்க அவளை தொப்பென்று குழியில் போட்டான் பாலன்.

வெட்டியான் மம்பட்டியை எடுத்து மண்ணைத் தள்ள முயன்ற அதே நேரத்தில் கோட்டான் ஒன்று அலறியது. வெட்டியான் திடுக்கிட்டான்.

“அய்யா”

“என்னாச்சு? ஏன் நடுங்கற?”

“ஏதோ தப்பாயிடுச்சுங்கய்யா”

“என்ன சொல்ற?”

“இது அவ்வளவு சீக்கிரம் அடங்கற ஆத்மா இல்லங்க”

“என்ன உளர்றே?”

“நெசமாத்தாங்க சொல்றேன். சகுனம் தட்டுதுங்க. ஜாக்கிரதையா இல்லன்னா காவு வாங்கிடுங்க” 

வெட்டியான் பதட்டமாய் சொன்னபடி எங்கோ ஓடினான். விஜயானந்த் பாலன் இருவரும் வியர்வையில் குளித்தபடி ஒன்றும் புரியாமல் நின்றனர். 

திரும்பிவந்த வெட்டியான் கையில் எலுமிச்சைப் பழம் ஒன்றிருந்தது. அதை நான்காய் வெட்டி குழிக்குள் போட்டான்.

மண்ணைத் தள்ளினான். முழுவதும் மண்ணால் நிரப்பியவன் அதை சமன்படுத்தினான்.

பாலன் ஐநூறு ரூபாய் நோட்டுக் கட்டு ஒன்றை வெட்டியானிடம் கொடுத்தான்.

“சரிங்க”

“ஒரு விஷயம்” பாலன் கேட்டான்.

“சொல்லுங்கய்யா”

“நீ சொன்னது எல்லாம் நிஜமா நடக்குமா?”

“என் அனுபவத்தில சொல்றேனுங்க. ஜாக்ரதையா இருங்கய்யா. ” சொன்னவன் தயக்கமாய் பார்த்தான்.

“என்ன சொல்லு?”

“பொண்ணு சிறுவயசா இருக்கு. இது எப்படி ஆச்சுங்க?” 

வெட்டியான் கேட்க விஜயானந்த் பாலன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

***

ஈரோடு.

நாடார்மேடு.

ரயில்வே காலனி நுழைவாயிலில் அவன் காத்திருந்தான்.

அவன் அருண். அணிந்திருந்த உடை அவன் செல்வந்தன் என்பதை வெளிப்படுத்தியது. சற்று தூரத்தில் பைக் பார்க் செய்தவன் தன் மொபைலில் ஐந்து நிமிடத்திற்கொருமுறை மணி பார்த்தபடி தவிப்புடன் காத்திருந்தான்.

‘ஏன் இன்னும் வரவில்லை?’ 

யோசித்தவன் மலர்ந்தான்.

சற்று தூரத்தில் அஞ்சலி நடந்துவர அவன் தயாரானான்.

அவளிடம் எப்படி பேசுவது என்று மனதிற்குள் ஒரு முறை ஒத்திகை பார்த்துக் கொண்டான்.

அஞ்சலிக்கு பதினெட்டு வயது கடந்த மாதத்தில் நிறைவடைந்திருந்தது. காண்போரைத் திரும்பிப் பார்க்க வைக்கும் எழில் முகம். சந்தன நிறம். எந்த ட்ரஸ் போட்டாலும் அவளுக்கு அது தனி அழகைக் கொடுக்கும். தற்சமயம் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றின் அலுவலகத்தில் பணி

அஞ்சலி அருகில் வர அருண் அவள் எதிரில் வந்து நின்றான். அவனைப் புரியாமல் பார்த்த அஞ்சலி சற்று விலகி அவனைக் கடந்து போக முயற்சிக்க 

“ஒரு நிமிஷம்” என்றான் அருண்.

சொன்னவனை கேள்வியாகப் பார்த்தாள் அஞ்சலி.

” என் பேர் அருண். அருணோதயம் ஹோட்டல் எங்களோடது”

“சொல்லுங்க”

“கொஞ்ச நாளா உங்களைப் பார்த்தேன். உங்களைப் பார்த்ததும் பிடிச்சிடுச்சு.  அதான் …” மேற்கொண்டு பேசத் தடுமாறியவனை புன்னகையுடன் ஏறிட்டாள் அஞ்சலி.

“லவ் பண்றீங்களா? “

“ம்”

“தப்பில்ல. உங்களுக்கு லவ் பண்ண வசதியிருக்கு. பண்ணலாம். ஆனா என்னை லவ் பண்ணதுதான் உங்க தப்பு”

“அஞ்சலி”

“எனக்கு இப்ப லவ் பண்ண வசதியில்லங்க. நான் வேலைக்குப் போனாத்தான் எனக்கும் என்னையே நம்பியிருக்கிற என் அம்மாக்கும் சாப்பாடு கிடைக்கும்”

“அஞ்சலி”

“பசி இருக்கிறப்ப காதல் வருமா? டெய்லி நான் என்ன துணி போடறதுன்னே எனக்குக் குழப்பம் வரும். எதுக்குத் தெரியுமா? எது சுமாரா இருக்கும்னு செலக்ட் பண்ண. “

“அஞ்சலி”

“எனக்கு உங்களப் பிடிச்சிருக்கு அருண். லவ் பண்ற பொண்ணுகிட்ட வெளிப்படையா சொன்னது ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆனா என் நிலைமை வேற அருண்”

“நம்ம கல்யாணத்துக்கப்புறம் அந்த நிலைமை மாறலாம் இல்லயா?” கேட்ட அருணைப் பார்த்து அஞ்சலி சிரித்தாள்.

“நீங்க ரொம்ப ஃபாஸ்ட். லவ்னு சொன்னீங்க. கல்யாணம்னு சொல்றீங்க. “

“அஞ்சலி”

“என்னை மன்னிச்சுக்குங்க. என் நிலைமைல நான் உங்க வீட்டு மருமகளா வர்றது சரியா இருக்காது. ஒரு பொண்ணோட வாழ்க்கை அவ புருஷன் கூட மட்டும் முடிஞ்சுடாது. மாமனார் மாமியார் நாத்தனார் கொழுந்தன்னு நிறைய இருக்கு. அது மட்டுமில்ல. நிலையான காதலோ காதல்ல நிலையா இருக்கிற ஆண்களோ ரொம்ப அபூர்வம்”

“இருக்க மாட்டாங்கன்னு சொல்றீங்களா? “

“வாய்ப்பு கம்மின்னு சொல்றேன்”

“முடிவா என்ன சொல்றீங்க?”

“வாழ்த்துக்கள் அருண்” சொன்னவள் அவன் பதிலை எதிர்பாராது விலகி நடக்க அருண் நடந்து செல்லும் அஞ்சலியை வெறித்தான்.

இதயத்தில் எங்கோ இடறியது.

***

அஞ்சலி கல்லூரியை அடையும் பொழுது மணி ஒன்பதைக் கடந்திருந்தது.

தன் சீட்டில் அமர்ந்து அன்றைய அலுவலுக்கான ஃபைல்களை எடுத்து தன் முன் வைத்தாள்.

“குட் மார்னிங் பஹன்” 

குரல் கேட்டவள் நிமிர்ந்தாள். மலர்ந்தாள்.

அட்டெண்டராக இருக்கும் நீரஜ் நின்றிருந்தான். சமீபத்தில்தான் இணைந்திருந்தான். பீகார் மாநிலம்.

“என்ன நீரஜ்?  ஊர்ல எல்லோரும் நல்லாயிருக்காங்களா?”

“நல்லாயிருக்கு பஹன்”

“சம்பளம் அனுப்பிட்டியா?”

“நேத்து அனுப்பிட்டேன்” 

அஞ்சலிக்கு நீரஜை மிகவும் பிடிக்கும். அப்பாவி. குடும்பத்தின் மீது நிறையவே பாசமுள்ளவன்.

“என் தங்கச்சி இப்ப சாப்பிடறா பஹன். என் குடும்பத்துக்கு தமிழ் நாடுதான் சோறு போடுது” அடிக்கடி அவன் சொல்லும் வார்த்தை. 

அட்டெண்டன்ஸ் ரெஜிஸ்டரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

அஞ்சலி தன் வேலையில் மூழ்கினாள்.

இன்டர்காம் அடித்தது. எடுத்தாள்.

“ஹலோ”

“பிரின்சிபால்”

“சார்”

“கம் டு மை சேம்பர்”

“யெஸ் சார்”

கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள்.

முதல்வர் வரதராஜன் புன்னகைத்தார்.

“உட்காரும்மா” எதிரில் இருந்த சேரைக் காட்டினார்.

அமர்ந்தாள்.

“அஞ்சலி”

“சார்”

“லக்காபுரம் தெரியுமா?”

“தெரியும் சார்”

“அங்க நம்ம மேனேஜ்மெண்ட் புதுசா ஒரு காலேஜ் கட்டப் போறாங்க. ஹெல்ப்க்கு ஒரு ஆஃபீஸ் ஸ்டாஃப் வேணும்னு மேனேஜ்மெண்ட் கேட்டப்ப எனக்கு உன் ஞாபகம்தான் வந்துச்சு. “

“அங்க நான் என்ன சார் பண்ணனும்?”

“ஸ்டாக் வெரிஃபிகேஷன் வொர்க்கர்ஸ் சேலரி கால்குலேஷன் ஓவரால் சூப்பர்விஷன் அவ்வளவுதான்”

“சரி சார் நான் பண்றேன்”

“தட்ஸ் குட் அப்ப நாளைல இருந்து அங்க போய்ட்டு இங்க வா”

“சரி சார்”

முதல்வர் கண்கள் காட்ட அஞ்சலி எழுந்துகொண்டாள்.

வெளியே வந்தாள்.

*** 

விஜயானந்தும் பாலனும் ஒன்றும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள வெட்டியான் மௌனமாய் அவர்களை ஏறிட்டான்.

“அய்யா”

“சொல்லு”

“என்ன ஆச்சுன்னு உங்களுக்குத்தான் தெரியும். எங்கிட்ட உங்களுக்கு சொல்ல விருப்பம் இல்லன்னா வேண்டாம். ஆனா இது தற்செயலாக நடந்த சாவு இல்ல. அது மட்டும் இல்ல சிறு வயசுப் பொண்ணு. இந்தப் பொண்ண சேர்ந்தவங்க பதினாறு நாள் கிழக்கு திசைல சூடம் வச்சுக் கும்பிடணும்.”

“என்ன சொல்ற?”

“உண்மையத்தான் சொல்றேன் உங்களுக்கு எதுவும் நடக்கக்கூடாதுன்னா  நீங்க இதைப் பண்ணித்தான் ஆகணும்”

“இது யார் வேணாலும் பண்ணலாமா?”

“இல்லங்க. இந்தப் பொண்ணுக்கு வேண்டியவங்க மட்டும்தான் பண்ண முடியும்”

“அது முடியாது. அதுல ஒரு சிக்கல் இருக்கு.”

“என்ன சொல்றீங்கய்யா?”

“இந்தப் பொண்ணுக்கு அம்மா மட்டும்தான்”

“அவங்கள பண்ண வைங்க”

“அது முடியாது.” சொன்ன பாலன் இடைவெளி விட்டு தொடர்ந்தான். “அந்தம்மா செத்துப் போயிடுச்சு.”

வெட்டியான் அதிர்ந்தான். ஏதோ விபரீதம் என்பது மட்டும் அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது. ஒன்றும் பேசாமல் அவர்களை வெறித்தான்.

அவர்கள் திரும்பி நடக்க அழைத்தான்.

“அய்யா”

“சொல்லு”

“உங்க பணம் நீங்களே வாங்கிக்கங்க.” ஐநூறு ரூபாய் நோட்டுக்கட்டைத் திரும்பக் கொடுத்தான்.

“உனக்கென்ன பைத்தியம் பிடிச்சிடுச்சா? ” பாலன் கேட்க வெட்டியான் நடுக்கமாய் சொன்னான்.

“பத்திரமா இருங்க.” சொன்னவன் மேற்கொண்டு ஒரு வார்த்தையும் பேசாமல் அங்கிருந்து கடந்து சென்றுவிட பாலன் விஜயானந்த் இருவரும் ஜீப்பை நோக்கி நடந்தனர்.

ஜீப் கிளம்பியது.

வெட்டியான் குடிசைக்குள் ஓடினான். தன் தலைக்கு நீர் தெளித்துக்கொண்டு காளி தேவியின் போட்டோ முன் அமர்ந்தான்.

‘அம்மா தெரிஞ்சு நான் எந்தத் தப்பும் பண்ணல. என்னக் காப்பாத்து’ 

அவன் உதடுகள் இடைவிடாமல் முணுமுணுத்தன.  

வெளியே மின்னல் வெட்டியது. இடி இடித்து மழை பெய்ய ஆரம்பித்தது.

காற்று ஆங்காரமாய் சுழன்றடிக்க மழை வலுத்தது. வெட்டியான் எழுந்தான். வெளியே வந்தவன் கால்களில் ஏதோ தட்டுப்பட என்னவென்று பார்த்தான். அவன் குழியில் வெட்டிப்போட்ட எலுமிச்சைப்பழம் ரத்தத்தில் நனைக்கப்பட்டிருக்க அவனுக்குப் புரிந்தது.

‘வந்துட்டியா? ‘

அப்போது மின்னல் பளீரென்று வெட்ட வெட்டியான் பார்வை மண்மேட்டின் மீது பட்டு உடல் நடுங்க ஆரம்பித்தது.

மண் மேட்டில் அது அமர்ந்திருந்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

error: Content is protected !!