1
ஈரோடு.
திண்டல். விஜயா நகரில் மழை இப்போது பெய்து விடுவேன் என்று மிரட்டிக்கொண்டிருந்த ஓர் இரவு நேரம்.
சக்தி தன் மனைவி ரேகாவை முத்தமிட முயல அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். சக்தி மனதளவில் காயம்பட்டான்.
இன்றும் எதையாவது சொல்லி ஒன்றும் நடக்கவிடாது செய்வாளோ? சக்தி நினைத்து முடிக்கவில்லை.
ரேகா கேட்டாள்.
“ஏங்க உங்களுக்கு வெட்கமா இல்லயா?”
“ஏன் ரேகா?”
“அருண் கார் வாங்கிட்டார்.”
ரேகா சொல்ல சக்தி பெருமூச்சுவிட்டான். அருண் பக்கத்து வீட்டுக்காரர். அவர் புதிதாக எதுவும் வாங்கினாலும் பாதிக்கப்படுவது என்னமோ சக்திதான்.
“அதுக்கென்னம்மா இப்ப?”
“அதானே? உங்க கிட்ட போயி அதை சொல்றேன் பாருங்க. மனுசனா இருந்தா முன்னேறணும்னு ஆர்வம் வேணும்.”
“ரேகா”
“என்ன சொல்லுங்க?”
“இப்ப நாம எதுல குறைஞ்சு போயிட்டோம்?”
“இப்படியே பேசிட்டே உருப்படாமப் போங்க. எனக்கென்ன வந்தது? நல்லா பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சாங்க ஊரில் இல்லாத மாப்பிள்ளைய எங்க வீட்ல.”
ரேகா மீண்டும் மீண்டும் பேச சக்தி அமைதியானான். பதிலுக்குப் பதில் பேசினால் அவள் அடங்க மாட்டாள். பிறகு கோபப்பட்டு அவளை அடிக்க வேண்டியதாகிவிடும். அதற்கு இப்போதே மௌனமாக இருப்பது மேல்.
இவர்களின் சண்டையை அறியாமல் உறங்கிக்கொண்டிருந்த அவர்களின் குழந்தைகள் பிரபு நித்யா இருவரையும் பாசமாய் பார்த்தான். அவர்கள் நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டான்.
தூக்கம் வரவில்லை.
ஏன் ரேகா இப்படி ஆகிவிட்டாள்? மற்றவர்களுடன் ஒப்பிடுவதற்கு ஒரு அளவு வேண்டும் அல்லவா? எல்லாவற்றிற்கும் எல்லாருடனும் ஒப்பிட்டால் நம் வாழ்க்கையை எப்படி வாழ முடியும்?
எண்ணிப் பார்த்த சக்திக்கு சிரிப்பு வந்தது.
எங்கே வாழ்கிறோம்? வாழ்வதாக பேர் செய்கிறோம். அவ்வளவுதான்.
டிவியை ஆன் செய்தான்.
பூங்காற்று உன் பேர் சொல்ல கமலும் அமலாவும் பாட புன்னகையுடன் பார்த்தான்.
“ஹை நீங்களும் கமல் ஃபேனா?” ரேகா கல்யாணமான புதிதில் கேட்டது நினைவிற்கு வந்தது.
ரசனைக்கெல்லாம் ஆயுள் என்பது சில காலம் தானா? ஏதோ ஒரு புள்ளியில் ஒவ்வொருவரின் ரசனை மாறிப் போய் விடுகிறது அல்லது அவரிடமிருந்து விடை பெற்றுக் கொள்கிறது. அது கூட அறியாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஏராளம் பேர்.
தேவைக்காக மட்டும் பொருளாதாரத்தை சார்ந்திருந்தால் மனதில் நிம்மதி குறைவிருக்காது. தேவையற்றவைக்கும் பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால் வாழ்க்கையை வாழ்வதற்கு நேரமிருக்காது. இங்கே எனக்கு இப்படித்தான் ஆகிவிட்டது.
யாரையும் நொந்துக் கொள்வதில் எந்தப் பயனும் இல்லை.
சக்தி தனக்குள் யோசித்தபடி அமைதியாக அமர்ந்தான்.
“ஏங்க குழந்தைகள எக்ஸ்ட்ரா கிளாஸ்ல சேர்த்துவிடணும்.”
“எதுக்கும்மா பாவம் விடு?”
“என்ன பேசுறீங்க எல்லாரோட குழந்தைகளும் எக்ஸ்ட்ரா கிளாஸ் போகுதுங்க”
“நம்ம குழந்தைகளுக்கு ஃப்ரீ டைம் கிடைக்கிறதே கொஞ்சம்தான். அவங்க பாட்டுக்கு விளையாடிட்டு சந்தோஷமா இருக்கட்டும்.”
“உங்களுக்கு சேர்த்து விட வக்கில்லன்னு வேணா சொல்லுங்க அதுக்கு எதுக்கு சாக்கு சொல்றீங்க?”
ரேகா கேட்க அப்பொழுதுதான் அவள் முதன் முதலில் அறை வாங்கினாள். அதன்பிறகு அவள் நடந்து கொண்டது இன்னும் அதிகம். ஒருமுறை அறை வாங்கினால் ஒரு வாரம் பேசமாட்டாள். சக்தி தன் துணிகளைத் தானே துவைத்துக் கொள்ள வேண்டும். சமைத்து வைக்கப்பட்டதைத் தானே எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அந்த ஒரு வாரம் சக்தி நிம்மதியாக உணர்வான். அதற்கு காரணம் ரேகா எதையும் பேசித் தொல்லை படுத்துவதில்லை என்பதுதான்.
சக்தி கண்கள் மூடி உறங்க முற்பட்டான். உறக்கம் வரவில்லை. தேவைப்படும் நேரத்தில் வராத உறக்கம் மறுநாள் அலுவலகத்தில் தேவையற்ற நேரத்தில் வந்து அனைவரும் கமுக்கமாக சிரித்துக் கொள்வர்.
“என்ன சக்தி சார் நைட் எல்லாம் சிவராத்திரியா? “
உடன் வேலை செய்யும் பார்வதி கண்ணடித்துக் கேட்க சக்திக்கு அழுவதா சிரிப்பதா என்று தோன்றும்.
ஒன்றும் சொல்லாமல் சமாளிப்பான். சில பெண்கள் சக்தியை ரகசியமாய் கவனிப்பர். கருப்பு நிறம் தான் ஆனாலும் உறுதியான உடல் வாகு. யாரிடமும் அதிர்ந்து பேசாத தன்மை. இயல்பாகவே கடைபிடிக்கும் ஒரு மென்மையான அணுகுமுறை சக்தியை நிறையபேருக்கு பிடித்திருந்தது.
சக்தி வேலை செய்வது மணிக்கூண்டில் இருக்கும் ராஜ் லாஜிஸ்டிக்ஸ். வேலை நன்றாகத்தான் போகிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் சக்தி வீட்டில் இருப்பதை விட கம்பெனியில் மிகவும் நிம்மதியாக உணர்ந்தான்.
ஏதேதோ நினைவுகளுடன் தன்னையும் மீறி அவன் உறங்கும்போது மணி அதிகாலை மூன்று.
மீண்டும் படுக்கையில் இருந்து ஏழு மணிக்கெல்லாம் எழுந்து கொண்டான்.
“அப்பா குட்மார்னிங்” பிரபு வந்து கன்னத்தில் முத்தமிட்டான்.
“குட்மார்னிங் பிரபு”
“நேத்து ஏன் பா லேட்?”
“அப்பாக்கு கொஞ்சம் வேலை இருந்துச்சு கண்ணா.”
“ம் நான் உனக்காக ரொம்ப நேரம் காத்திருந்திட்டுத் தூங்கிட்டேன்.”
“அப்படியா? ஏதாவது விஷயமா?”
“ஆமாப்பா நேத்து மேத்ஸ் ஆன்சர் பேப்பர் கொடுத்தாங்க.”
“வெரிகுட் எவ்வளவு மார்க் வாங்கினே?”
“ஹன்ட்ரட் அவுட் ஆஃப் ஹன்ட்ரட் “
“வெரிகுட் பிரபு” மகனை அணைத்துக்கொண்டான்.
“அப்பா” நித்யா புன்னகைத்தாள்.
“வாம்மா” மகளின் நெற்றியில் முத்தமிட்டான்.
“குழந்தைகளை கொஞ்சறது போதும். போய் குளிங்க” ரேகா இன்னமும் கடுப்பு மாறாத முகத்துடன் சொல்ல சக்தி ஒன்றும் சொல்லாமல் பாத் ரூமிற்குள் நுழைந்தான்.
***
“சக்தி” எம்டி அழைத்தார்.
“சார்”
“ப்ளீஸ் கம் டு மை சேம்பர்.”
எழுந்தவன் தலையை சரியாக சீவிக்கொண்டு எம்டியின் அறைக்குள் பிரவேசித்தான்.
“சார்”
“வாங்க”
“யெஸ் சார்”
“இன்னிக்கு ஒரு இன்டர்வ்யூ கன்டக்ட் பண்ணனும்.”
“யெஸ் சார்”
“மொத்தம் எட்டு கேண்டிடேட் வந்திருக்காங்க இருக்கறது ஒரு போஸ்ட்.”
“சார்”
“இந்தாங்க இந்த எட்டு பயோடேட்டால இருந்து ஷார்ட்லிஸ்ட் பண்ணுங்க”
எம்டி சொல்லிக் கொண்டே ஃபைலைக் கொடுத்தார்.
வாங்கிக்கொண்டான்.
அரை மணி நேரம் செலவழித்து இருவரை மட்டும் இறுதி செய்தான்.
“சார் “
“ம்”
‘இந்த ரெண்டு பேரும் ஓகே சார்.”
“என்ன பேஸிஸ்ல ஷார்ட்லிஸ்ட் பண்ணிருக்கீங்க?”
“இவங்க ரெண்டு பேரும் லோக்கல் சார். அது மட்டும் இல்ல கம்ப்யூட்டர் நாலேட்ஜ் இருக்கு.”
“ம் ரெண்டு பேரும் பொண்ணுங்களா?
“ஆமா சார்”
“மேரீட் ஆர் அன்மேரீட் ?”
“ஒரு பொண்ணு அன்மேரீட் சார்”
“அந்தப் பொண்ண செலக்ட் பண்ணிடலாம்.”
“சார்”
“கல்யாணம் பண்ண பொண்ணுன்னா நிறைய கமிட்மென்ட் இருக்கும். டெய்லி நேரத்துக்கு வர மாட்டாங்க. ஏதாவது காரணம் சொல்லுவாங்க. அதனால கல்யாணம் ஆகாத பொண்ண ஓகே பண்ணிடுங்க”
எம்டி சொல்ல சக்தி தலையசைத்தான்.
“யார் அந்த பெண்?” என்று மீண்டும் அவள் பயோடேட்டாவை எடுத்துப் பார்த்தான்.
போட்டோ அழகாக இருந்தது. எக்ஸ்ட்ரா க்வாலிஃபிகேஷன் நிறைய இருந்தது.
உங்களது பலம் என்ற கேள்விக்கு எப்போதும் தைரியமாக இருப்பது என்றிருந்தது. உங்கள் பலவீனம் என்ற கேள்விக்கு அபத்தங்களை சகித்துக்கொள்ளாமலிருப்பது என்றிருந்தது அவன் புருவத்தை உயர வைத்தது.
சக்தி ஆர்வமானான். அவள் பெயர் என்னவென்று பார்த்தான்.
ராதிகா.
Enjoy Full Story as E book in Amazon KDP
Enjoy Full Story as audio book in GK Tamil Novels You Tube Channel