பகவான் 1
கவுதம் கருணாநிதி
குறிப்பு: இது கற்பனை கதை மட்டுமே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.
போலீஸ் ஸ்டேஷன்.
சப் இன்ஸ்பெக்டர் ஏகாம்பரம் வெளியே வந்தார். மாலை மறைந்து இருள் சூழ ஆரம்பித்திருந்தது. மழை இப்போது வந்துவிடுவேன் என்று மிரட்டியது.
உள்ளே பார்த்து குரல் கொடுத்தார்.
“கந்தசாமி”
“சார்”
“வெளில போயிட்டு வந்துடறேன்”
“சரி சார்”
ஏகாம்பரம் பைக்கில் ஏறி அமர்ந்தார். அப்போது சாமிக்கண்ணு உள்ளே நுழைந்தான். அவனைப் பார்த்த ஏகாம்பரத்தின் முகம் மலர்ந்தது.
“என்ன சாமிக்கண்ணு கொண்டாந்துட்டியா?”
“ஆமா சார்”
“ சரி கொண்டா” சாமிக்கண்ணு கொடுத்த பணக்கற்றையை வாங்கியவர் கையால் எடைபோட்டார்.
“என்ன வெயிட் கம்மியா இருக்கு?”
“சார் கரெக்டா இருக்கு சார் எதுவும் குறையல”
“அதானே பார்த்தேன் நம்மகிட்ட ஏதாவது உன்னோட வேலையை காட்டிட்டியான்னு”
“உங்கக்கிட்டல்லாம் நான் காட்டுவேனா சார்?”
“சரி போன வாரம் நாலஞ்சு பேர் நீ காய்ச்சின சாராயத்தைக் குடிச்சுட்டு ஆஸ்பத்திரிக்குப் போனாங்கன்னு கேள்விப்பட்டேன் “
“சார் அவங்க என்ன காரணத்துக்காக போனாங்கன்னு தெரியல”
“நம்பிட்டேன் இப்ப உண்மைய சொல்றியா?”
“அதான் உங்களுக்கே தெரியுமே சார்”
“பார்த்துய்யா யாரும் சாகாம இருக்கற வரைக்கும்தான் நீயும் தொழில் பண்ண முடியும் .எங்களுக்கும் நல்லது “
“புரியுது சார்”
“சரி கிளம்பு ரொம்ப நேரம் இருக்காத. ஏற்கனவே எல்லாருக்கும் சந்தேகம் இருக்கு “
“சரி சார் நான் வர்றேன்”
சாமி கண்ணு கிளம்பி விட ஏகாம்பரம் அவன் கொடுத்த பணத்தை வண்டிக்குள் வைத்தார்.
இவ்வளவு பணத்துடன் மீண்டும் ஸ்டேஷன்க்கு போக முடியாது வீட்டிற்கு போய் வைத்துவிட்டு வந்துவிடலாம்.
யோசித்தவர் பைக்கை ஸ்டார்ட் செய்தார்.
கொஞ்ச தூரம் சென்றிருப்பார். யாரோ ஒருவன் கைகாட்டி அவரை மறித்தான்.
“சார்”
“யாருய்யா நீ ?”
அவன் பதில் சொல்லாமல் சுற்று முற்றும் பார்த்தான். மழை பெய்யும் சூழலில் சாலையில் யாரும் இல்லாமல் இருக்க அவன் அவரை கோணலாய் பார்த்தான். புன்னகைத்தான். கேட்டான்.
“சார் எங்க கிளம்பிட்டீங்க?”
“ராஸ்கல் நீ யாருடா என்னைக் கேட்கறதுக்கு?”
“என்ன சார் நான் எவ்வளவு மரியாதையா பேசிட்டிருக்கேன். நீங்க எடுத்த உடனே வாடா போடான்னு பேசறீங்க ?”
“நான் முக்கிய வேலையா போயிட்டிருக்கேன். எனக்கு கடுப்பேத்தாம போ”
“எது சார் முக்கிய வேலை? கள்ளச்சாராயம் காய்ச்சறவங்க கிட்ட இருந்து லஞ்சப்பணத்தை வாங்கிட்டு வீட்ல கொண்டுபோய் வைக்கப்போறீங்க. அதான் முக்கிய வேலையா ?” அவன் கேட்க ஏகாம்பரம் அயர்ந்தார்.
“டேய்” கத்தியவரை அலட்சியமாய் பார்த்தவன் தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து அதை வெளியே எடுத்தான். அது கூர்மையான கத்தி.
“டேய்” ஏகாம்பரத்தின் விழிகளில் அதிர்ச்சி தெரிய அவன் புன்னகைத்தான்.
“பைக் நான் ஓட்டறேன். எதுவும் பேசாமப் பின்னாடி உட்கார்ந்து அமைதியா வரணும். ஏதாவது சாகசம் பண்ணி தப்பிக்க நினைச்சா ரோடுன்னுகூட பார்க்காமக் குத்திப் போட்டுருவேன். காப்பாத்துறதுக்கு யாரும் ஆளில்லாம ரத்தம் வெளிய வந்து துடிதுடிச்சு சாக வேண்டியது வரும்.”
அவன் குரலில் தெரிந்த தீர்க்கம் அவரை நிலைகுலைய வைத்தது.
இப்போது என்ன செய்வது? எசகு பிசகாக வந்து மாட்டிக் கொண்டு விட்டேன். யோசித்தவர் சட்டென்று அவனைத் தாக்க முயல சுதாரித்தவன் அவர் கன்னத்தில் பளாரென்று அறைந்தான். உறுதியான அறை. உள்ளே உப்புக்கரிக்க ரத்தத்தைத் துப்பிய ஏகாம்பரம் அவனை பயமாய் பார்த்தார்.
“உனக்கு என்ன வேணும்?”
“ஏற்கனவே சொல்லிட்டேன் அமைதியா எதுவும் பேசாம பைக்ல ஏறு. இடையில தப்பிக்க நினைச்சா கண்டிப்பா கொன்னுடுவேன்” அவன் சொல்ல ஏகாம்பரம் மேற்கொண்டு ஒன்றும் பேசாமல் ஏறினார்.
அவன் பைக்கை ஸ்டார்ட் செய்தான். கொஞ்ச தூரத்தில் ஒரு காட்டுப் பகுதி வர உள்ளே நுழைந்தான்.
ஏகாம்பரத்திற்கு ஏதோ விபரீதம் என்று புரிந்தது. ஆனால் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்தார்.
ஓரிடத்தில் அவன் பைக்கை நிறுத்தினான். விசிலடித்தான். உடனே அங்கே மேலும் இருவர் வந்தார்கள்.
“ மாணிக்கம் என்னாச்சு?”
“பைக்ல சார் வாங்குன லஞ்சப் பணம் இருக்கு “ சொன்னவன் ஏகாம்பரத்தை சட்டை செய்யாமல் உள்ளே இருந்த பணத்தை எடுத்தான். எண்ணிப் பார்த்தான். பத்து லட்சம் இருந்தது.
“சார் “
“ ம்”
“இங்க ஒருத்தன் செத்தாவே கவர்மெண்ட் பத்து லட்சம் தான் கொடுக்குது ஆனா உங்களுக்கு லஞ்சப்பணம் மட்டுமே பத்து லட்சம் வருது. எப்படி சார்? நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க சார் “ அவன் சொன்னபடியே அந்த பணத்தை அவன் கூட்டாளி ஒருவனிடம் கொடுத்தான். ஏகாம்பரம் அவனை கடுப்பாய் பார்த்தார்.
“இந்தப் பணம் உங்களுக்கு வேண்டாம் சார். “ சொன்னவன் கண்காட்ட மற்றவன் புரிந்து கொண்டான். சற்று நேரத்தில் அங்கே இரண்டு குழந்தைகளை அழைத்து வந்தான்.
“என்ன சார் யாருன்னு பார்க்கறீங்களா? இவங்க ரெண்டு பேருக்கும் இப்ப யாரும் இல்ல. போன மாசம் கள்ளச்சாராயம் குடிச்சு நிறைய பேர் செத்துப் போனாங்களே அதுல இவங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் செத்துப் போயிட்டாங்க. அவங்க முகத்தை கொஞ்சம் பாருங்க சார். இந்த சின்னப் பையன் இப்பக் கூட நைட்டு எந்திரிச்சு அம்மான்னு கத்திட்டிருக்கான். இவனுக்கு இந்த வயசுலயே கோபம் ஜாஸ்தியா வருது இவனை எல்லாம் இப்படியே விட்டுட்டா நாளைக்கு கண்டிப்பா இன்னொரு கிரிமினலை இந்த சமூகம் உருவாக்கிடும். இவன மாதிரி நிறைய குழந்தைங்க பாதிக்கப்பட்டிருக்காங்க. எல்லாருக்கும் கவுன்சிலிங் கொடுக்கிறது ரொம்ப அவசியம். அவங்களுக்கு தேவையான வசதியை உண்டாக்கிக் கொடுத்து அவங்களை நல்லா படிக்க வைக்கணும். அவங்களோட இழப்பிலிருந்து அவங்க வெளியே வரணும். இதுக்கெல்லாம் எங்களுக்கு பணம் வேணும். அதுக்கு இந்த பணம் எங்ககிட்ட இருந்தாத்தான் நல்லது. நீங்க என்ன பண்ணுவீங்க? ஏதாவது ஒரு நகை வாங்கி யாருக்காவது பரிசு கொடுப்பீங்க. இல்லன்னா எங்கேயாவது ஒரு மூலையில் உங்க குழந்தைகளுக்கு நிலத்தை வாங்கிப் போடுவீங்க. ஏற்கனவே நீங்க பண்ண பாவம் போதும். இனிமேலயும் நீங்க பாவத்தை செய்துட்டே போகாதீங்க.”
அவன் சொல்ல ஏகாம்பரம் அவனை கோபமாய் பார்த்தார்.
“என்கிட்டே பணத்தை எடுத்துட்டு என்னையே மிரட்டறியா?” அவர் கேட்க அவன் சிரித்தான்.
“ஐயோ சார் நான் மிரட்டல. உங்களுக்கு எடுத்துச் சொல்றேன். உங்களுக்கு புரியணும்னு சொல்றேன். ஏற்கனவே அத்தனை பேர் செத்துப் போயிட்டாங்க. அப்பக் கூட நீங்க திருந்த மாட்டேங்கறீங்க. திரும்ப கள்ளச்சாராயம் காய்ச்சறவன் கிட்ட லஞ்சம் வாங்கிட்டு அவனை காய்ச்ச விடறீங்க. உங்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பில்ல. பொறுப்பே இல்லாத நீங்க பதவியில் இருந்தா மக்களுக்கு துன்பம் தான். உங்களுக்கு மனம் திருந்த வாய்ப்பிருக்கான்னு நாங்க செக் பண்றோம். ஆனா நீங்க திருந்தமாட்டேன்னு அடம்பிடிக்கிறீங்க. என்ன பண்ணலாம்? சொல்லுங்க “
“யார்றா நீங்களல்லாம்? மத்தவங்களுக்கில்லாத அக்கறை மயிர் உங்களுக்கு என்னடா?”
ஏகாம்பரம் கத்த அவன் அருகில் வந்தான்.
“நாங்க பீப்பிள் வெல்ஃபேர் இயக்கத்தை சேர்ந்தவங்க.” அவன் சொல்ல ஏகாம்பரம் அதிர்ச்சியில் உறைந்தார்.
“என்ன மன்னிச்சிடு தயவு செய்து என்னை விட்டுடு” அவர் கெஞ்ச ஆரம்பிக்க அவன் கேலியாக புன்னகைத்தான்.
“பரவாயில்லையே எங்க இயக்கத்தைப்பத்தி நல்லா தெரிஞ்சு வச்சிருக்கே “
“பணத்தை ஃபுல்லா நீயே வச்சுக்கோ நான் வெளியில எங்கயும் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். என்னைத் தயவு செஞ்சு கொண்டு போய் விட்டுடு “
“யோவ் நாங்க யாருன்னு சொல்றதுக்கு முன்னாடி உனக்கு மனசு திருந்தி இருந்தா நீ செஞ்ச தப்புக்கு கொஞ்சம் வருத்தப்பட்டு டிருந்தா உன்னக் கொண்டு போய் விட்டிருப்போம். ஆனா நீ திருந்தவே இல்லை. இப்ப நாங்க யாருன்னு சொன்னதுக்கு அப்புறம் பயத்துல கத்திட்டு இருக்கே. “
“தம்பி. புத்தி கெட்டுப்போய் தப்பு பண்ணிட்டேன். என்னை உன் அண்ணனா நினைச்சுக்கோ. என்ன மன்னிச்சுக் கொண்டு போய் விட்டுடு தம்பி “
“அது நான் தீர்மானிக்க முடியாது. என்ன பார்க்கற? நாங்க யாருன்னு தெரிஞ்ச ஒருத்தன் இந்த உலகத்தில் இருக்கணுமா வேணாமான்னு ஒரே ஒருத்தர் தான் முடிவு பண்ண முடியும்.” அவன் சொல்ல ஏகாம்பரம் அவனை பயமாய் பார்த்தார்.
“யாருன்னு பார்க்கறியா?”
“ம்”
“பகவான்”
ஏகாம்பரம் கண்களில் அதிர்ச்சி தெரிந்தது.
“வேண்டாம்”
“பேரக் கேட்டாவே இப்படி பயப்படறே? ஆளப் பார்த்தா என்னாவியோ?”
சொன்னவன் மொபைல் அடிக்க எடுத்தான்.
“அண்ணா. ஆமாண்ணா. அவனைக் கொண்டு வந்துட்டேன். இல்லண்ணா. அவனுக்கு எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்ல, பணத்தை வாங்கி நம்ம அன்பு கிட்ட கொடுத்துட்டேன். ஆமாண்ணா நாம யாருன்னு சொல்லிட்டேன். இப்ப நடுங்கிட்டிருக்கான். என்ன பண்ணட்டும்ணா? “
“தப்பு பண்ணிட்டு அந்த தப்பால நிறைய பேர் சாகறதுக்கு காரணமா இருந்துட்டு எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமத் திரும்ப அதே தப்பு பண்றவன் இந்த உலகத்தில் வாழணும்னு அவசியம் இல்ல. அவன் கதையை முடிச்சிட்டு அவனக் கொண்டு போய் ரயில்வே டிராக்கில் போட்டுருங்க. ட்ரெயின் அடிச்சு செத்த மாதிரி இருக்கட்டும் “
“சரிண்ணா”
“வேலா”
“சொல்லுங்கண்ணா”
“கவனமா பண்ணு”
“சரிண்ணா”
போன் பேசி முடித்த வேலா ஏகாம்பரத்தில் அருகில் வந்தான்.
“என்னய்யா ஏதாவது சாப்பிடறியா?” வேலா கேட்க ஏகாம்பரம் வேண்டாம் என்று தலையாட்டினார்.
“பகவான் பேசினார்.”
“தம்பி”
“உன்னை முடிக்க சொல்லிட்டார்” வேலா சொல்ல ஏகாம்பரம் திடுக்கிட்டார்.
“தம்பி வேண்டாம் தம்பி நான் திருந்திட்டேன் இனிமே எந்த தப்பும் பண்ண மாட்டேன். என்னைத் தயவு செஞ்சு விட்டுருங்க “
“என்னய்யா இவ்வளவு சர்வீஸ் வச்சுட்டு அப்படியே பயந்து நடுங்கறே. “ வேலா கேட்க ஏகாம்பரம் அங்கிருந்து சட்டென்று ஓடினார். தன் பின்னால் ஏதோ மூச்சிரைக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தவர் அதிர்ந்தார். ஒரு நாட்டு நாய் அவரை முறைத்தது.
“சார்” வேலன் அருகில் வந்தான்.
“பகவான் சொன்னதுக்கு அப்புறம் இங்க யாருமே எதுவுமே மாத்தி செய்ய மாட்டோம். இந்த நாய் உள்பட “ சொன்னவன் சிரித்தபடி நாயின் தலையைத் தடவினான்.
ஏகாம்பரத்திடம் திரும்பினான்.
“ஏதாவது பிடிச்ச சாப்பாடு சாப்பிடணும்னா சொல்லுங்க. வாங்கிட்டு வரச் சொல்றேன் சாப்பிடுங்க “
“ டேய் உங்க யாரையும் நான் விடமாட்டேன் டா”
“காமெடி பண்ணாதீங்க சார்” சொன்னவன் மணி பார்த்தான்.
“சார் நம்ம ஊர் வழியாப் போறது ஒரு ட்ரெயின் தான் . அந்த ட்ரெயின் வர்றதுக்கு இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கு “
வேலா சொல்ல ஏகாம்பரம் அவனைப் புரியாமல் பார்த்தார்.
“அந்த ட்ரெயின் வர்றதுக்குள்ள உங்க பாடி ட்ராக்ல கிடக்கணும். சீக்கிரம் ரெடி ஆகுங்க “ வேலா மிகவும் இயல்பாக எந்த பதட்டமும் இல்லாமல் சொல்ல ஏகாம்பரத்தின் இதயத்துடிப்பு ஏகத்திற்கு எகிறியது.
தொடரும்.
வாசகப் பெருமக்கள் தங்கள் மேலான விமர்சனங்களை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
சூப்பர் வாத்யாரே! ஆரம்பம் அசத்தலா இருக்கு! வாழ்த்துக்கள்!