“சவிதா இறங்குங்க” கண்டக்டரின் குரலை தொடர்ந்து விஷ்ணு பேருந்திலிருந்து இறங்கினான்.
சவிதா மருத்துவமனையைக் கடந்து கிளைச் சாலையில் திரும்பினான்.
ராயல் பேலஸ் என்று ஆங்கிலத்தில் எழுதி இருந்த வளாகத்திற்குள் நுழைந்தான். லிப்டில் நுழைந்து வெளிப்பட்டான்.
தனியார் வங்கியின் கண்ணாடிக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான்.
விஷ்ணுவை பார்த்த சந்திரன் புன்னகைத்தான்.
“குட் மார்னிங் விஷ்ணு”
“குட் மார்னிங். மேனேஜர் வந்துட்டாரா?”
“இன்னும் இல்ல ஆனா…”
“என்ன ஆனா…?”
“புதுசா ஒரு பொண்ணு ஜாயின் பண்றதுக்காக வந்து வெயிட் பண்ணிட்டிருக்கு.”
“அவ்வளவுதானா?”
“என்ன ரொம்ப சாதாரணமா கேக்கறே?”
“ஒவ்வொருத்தருக்கும் ஒரு இன்ட்ரஸ்ட் இருக்கும் உனக்கு பொண்ணுங்களை பிடிக்கும் எனக்கு வேற இன்ட்ரஸ்ட்”
“உனக்கு எந்த பெண்ணையும் பிடிக்காமயா போயிடும் ?”
“நானும் லவ் பண்ணேன் இல்லன்னு சொல்லல ஆனா என்னமோ தெரியல அவ விட்டுட்டு போனதுக்கு அப்புறம் வேற யார் மேலயும் அந்த எண்ணமே எனக்கு வந்தது இல்லை “
“இந்த காலத்துல இப்படி ஒருத்தன்” சந்திரன் சொல்ல விஷ்ணு சிரித்தான்.
மேனேஜர் அறையை கடந்த போது விஷ்ணுவின் பார்வை விசிட்டிங் சேரில் அமர்ந்திருந்த அந்த இளம்பெண் மீது பட்டது. அதே நேரத்தில் அவளும் விஷ்ணுவை பார்க்க நேரிட விஷ்ணு பார்வையை மாற்றுவதற்கு முன் அவள் புன்னகைத்தாள். வேறு வழியின்றி விஷ்ணுவும் பதிலுக்கு ஹாய் என்றான்.
“ஐஸ்வர்யா”
“விஷ்ணு”
“மேனேஜர் வர்றதுக்கு இன்னும் நேரம் ஆகுமா?” அவள் அவன் விழிகளைப் பார்த்து கேட்டாள்.
“வர்ற நேரம் தான் வெயிட் பண்ணுங்க”
சொன்னவன் தன் சீட்டில் வந்து அமர்ந்தான்.
மனம் களைப்பாய் உணர்ந்தது.
“தம்பி. தரகருக்கு என்ன பதில் சொல்றது?” அம்மா காலையில் கேட்டது நினைவிற்கு வந்தது.
அம்மாவிற்கு என்ன பதில் சொல்வது இப்போது திருமணம் வேண்டாம் என்றா? இல்லை எப்போதும் வேண்டாம் என்றா? அம்மா புரிந்து கொள்வாளா? நிச்சயமாக அம்மாவால் என் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாது. அப்படியே அவள் புரிந்து கொள்வாள் என்றாலும் எல்லாவற்றையும் சொல்லி அம்மாவின் சந்தோஷத்தை கெடுக்க நான் விரும்பவில்லை.
விஷ்ணு தன் முன் இருந்த கம்ப்யூட்டரை ஆன் செய்தான்.
“விஷ்ணு”
“ம்”
“ஜம் ஸாரி”
“எதுக்கு ப்ரியா ?”
“என்னால உன் கூட வாழ்க்கை ஃபுல்லா இருக்க முடியல”
“பரவாயில்லை”
“உனக்கு வருத்தமா இல்லையா விஷ்ணு ?”
“இல்லாம இருக்குமா பிரியா ?”
“ஸாரிப்பா”
“வேண்டாம் பிரியா நீ ஸாரி சொல்லாத என் முன்னாடி நீ வருத்தப்படாத கொஞ்ச நாள் உன்னோட காதல் எனக்கு கிடைச்சதுக்கு நான் ரொம்ப சந்தோஷப்படறேன்”
“உனக்கு வேற எதுவும் தோணலயா விஷ்ணு ?”
“பிரியா வாழ்க்கையில் நாம் விரும்பற எல்லாரும் நம்ம கூட எப்பவும் இருக்கப் போறது இல்ல நம்ம அப்பா அம்மா காலத்துக்கு அப்புறம் கூட நம்ம வாழ்க்கையில நாம வாழ்ந்ததாகணுமே… எவ்வளவு அன்னியோன்யமா இருந்தாலும் ஒரு நாள் கணவனை விட்டு மனைவியும் மனைவியை விட்டு கணவனும் பிரிஞ்சித்தான் ஆகணும்..எவ்வளவுதான் பாசத்தை கொட்டி வளர்த்தாலும் குழந்தைங்க அவங்களோட வாழ்க்கைய வாழ்றதுக்கு வழி விட்டு நாம ஒதுங்கறப்ப ஒரு பிரிவு நமக்கு கட்டாயமாக வரும். இப்படி எல்லா சொந்தமும் ஒரு கால வரையறைக்கு உட்பட்டது தான். நாளைக்கு பிரிவோம்னு தெரிஞ்சாலும் இன்னிக்கு நேசிக்கிற நேசம் உண்மைதானே? எந்த ஒரு சொந்தமா இருந்தாலும் சரி காதலாக இருந்தாலும் சரி நட்பா இருந்தாலும் சரி எவ்வளவு காலம் கிடைக்குதோ அந்த காலத்துல உண்மையாவோ நேர்மையாவோ இருந்தா அந்த ஞாபகங்கள் வாழ்க்கை மொத்தத்துக்கும் போதும் ப்ரியா. நான் உனக்கு உண்மையா இருந்திருக்கேன் பிரியா அதனால எனக்கு உன்னோட பிரிவு நிச்சயமா வருத்தத்தை கொடுக்காது”
கடைசியாக தனக்கும் தன் காதலி பிரியாவிற்கும் நிகழ்ந்த சந்திப்பு அவன் மனதில் எப்போதும் ஓடுவது போல் அப்போதும் ஓடியது.
அவன் மனம் அவனை இகழ்ச்சியாய் பார்த்தது.
வருத்தப்பட மாட்டாய் என்று அவளிடம் சொல்லிவிட்டு அதையே நினைத்து உள்ளுக்குள் வருத்தப்பட்டு கொண்டே இருக்கிறாய். சரியா?
ஒருவர் பழகிவிட்டு பிரிந்தால் அந்தத் தாக்கம் வருத்தத்தை ஏற்படுத்தவில்லை என்றால் அதற்கு எந்தப் பொருளும் இல்லை.
எனக்கு பிரியாதான் எல்லாமாக இருந்தாள். அவளை மணந்து கொண்டு எப்படி எல்லாமோ வாழ வேண்டும் என்று என் மனதில் கனவுக் கோட்டை கட்டியிருந்தேன். அவளுடைய சூழல் அவளால் என்னை ஏற்றுக் கொள்ள முடியாமல் போய்விட்டது ஆனால் நேசித்த ஒரு உள்ளம் நேசம் வேண்டாம் என்று கெஞ்சும் பொழுது இல்லை என்னை நேசித்துத்தான் ஆக வேண்டும் என்னை விட்டு நீ செல்லக் கூடாது என்று மற்றொரு நேசிக்கும் உள்ளம் வற்புறுத்தாது. ஆனால் அதே நேரத்தில் எவருக்கும் தெரியாமல் ரகசியமாய் கண்ணீர் வடிக்கும்.
விஷ்ணு இலக்கில்லாமல் அங்கங்கே சுற்றித் திரியும் தன் மனதை பிடிவாதமாய் கட்டுக்குள் கொண்டு வர முயன்றான்.
இன்று என்னமோ தெரியவில்லை வழக்கத்திற்கு மாறாக ஒரு மாதிரியாக இருக்கிறது. யோசித்தவன் மெல்ல எழுந்தான்.
மேனேஜர் வந்துவிட்டார் போல். வெளியே சேரில் அமர்ந்திருந்த அந்த பெண் காணவில்லை. உள்ளே சென்றிருப்பாள்.
மேனேஜரின் அறையை கடக்கையில் அந்த பெண் உள்ளே அமர்ந்திருந்தது தெரிந்தது.
எதற்கு அவள் மீது கவனம் செலுத்த வேண்டும்? அவள் யாராக இருந்தால் எனக்கு என்ன?
விஷ்ணு தன்னைத்தானே கடிந்துக் கொண்டான்.
***
பெரியார் நகர்.
இரண்டாவது மாடியில் தன் பிளாட்டில் ஐஸ்வர்யா சாமி படத்திற்கு ஊதுபத்தி கொளுத்திக் கொண்டிருக்க அழைப்பு மணி அடித்தது.
கதவை திறக்க பக்கத்து வீட்டு மாமி நின்றார்.
“என்ன மாமி?”
“மழை வர்றது போல இருக்கு போய் துணி எல்லாம் எடுத்துட்டு வந்துரு”
“சரிங்க மாமி தேங்க்ஸ்” சொன்னவள் பிளாட்டை பூட்டிவிட்டு படிக்கட்டில் ஏறினாள்.
ஐஸ்வர்யாவிற்கு இருபத்தைந்து வயதாகிறது. அவளும் அவள் அப்பா மட்டும்தான் வீட்டில். அம்மா வருடங்களுக்கு முன் மறைந்துவிட அவள் அப்பா செல்வம் தன் வாழ்க்கை தன் மகளுக்காகத்தான் என்று தீர்மானித்து அதன்படியே வாழ்ந்தும் வருகிறார்.
செல்வம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியர். அவரது ஒரே லட்சியம் தன் மகளை நல்ல இடத்தில் மணம் முடித்து அவள் நன்றாக வாழ்வதைப் பார்ப்பதுதான்.
“ஐஸ்வர்யா”
“அப்பா”
“அந்த இடம் எனக்கு திருப்தியாக வரலம்மா”
“எதுப்பா?”
“தரகர் போன வாரம் வந்து சொன்னாரே ? குமாரபாளையம் ?”
“பையன் கூட ஏதோ கவர்மெண்ட் ஜாப்?”
“ஆமா. போய் விசாரிச்சுப் பார்த்தேன் அந்த பையனோட அம்மா எல்லார்கிட்டயும் சண்டை போடற கேரக்டர். யார் கிட்டயும் அன்பா பேச மாட்டாங்கன்னு சொன்னாங்க எனக்கு பிடிக்கலம்மா. நீ போற இடத்துல உனக்கு ரொம்ப சந்தோஷமா இல்லனாலும் மனசு சங்கடப்படாம இருக்கணும் கொஞ்சம் நிம்மதியா இருக்கணும் அப்படித்தான் ஒரு இடம் அமையனும்னு கடவுள்கிட்ட வேண்டியிருக்கேன். அது கண்டிப்பா நடக்கும்மா”
“அது நடக்கிறப்ப நடக்கட்டும்பா. நீங்க பிபி மாதிரி எடுத்துட்டீங்களா?”
“ம் போட்டுக்கிட்டேன்”
“நிம்மதியா தூங்குங்க”
ஐஸ்வர்யாவிற்கு திருமணத்தின் மீது பெரிதாக நாட்டமில்லை அதற்கு காரணம் அவள் திருமணம் ஆகிப் போய்விட்டால் அவள் அப்பா தனியாகிவிடுவார் என்ற ஒரே கவலை அவளை அப்பொழுது யோசிக்க வைத்தது. கதையில் வருவது போல் அல்லது சினிமாவில் வருவது போல் பரந்த மனம் உள்ள ஒருவன் எனக்கு வீடு பெருசு மனசு பெருசு என்று சொல்வானா என்று யோசித்துப் பார்க்க அவளுக்கு சிரிப்புதான் வந்தது இப்போது அனைவரும் சுயநலமாக நடக்கத் தொடங்கிவிட்டனர். தன்வீடு தன் மனைவி தன் குழந்தைகள் அவ்வளவுதான் தன்னைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அல்லது துணையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி ஒரு நாள் அல்லது இரு நாள் இருக்கலாம் அதற்கு மேல் இருந்தால் நிச்சயமாக எப்படியாவது ஒரு புரிதல் இல்லாமல் போய்விடும். மௌனமான புறக்கணிப்புகள் நிகழத் தொடங்கும். வெளிப்படையாக இல்லை என்றாலும் புறக்கணிக்கப்படும் ஓரிடத்தில் எவராலும் முழுமனத்துடன் ஒன்ற இயலாது. அங்கிருந்து எப்படியாவது தப்பித்து விடத்தான் யோசிப்பர்.
அப்பாவிற்கு அப்படி ஒரு நிலைமை நிச்சயம் வரக்கூடாது அதற்கு என்ன செய்யலாம்?
ஐஸ்வர்யா அடிக்கடி யோசிக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று.
“ஏங்க எப்பவுமே ஏதாவது யோசிச்சிட்டே இருப்பீங்களா?” அவள் நண்பன் ஜான் கேட்க புன்னகைப்பாள்.
“அப்படி என்னங்க யோசிக்கிறீங்க?”
“ஒண்ணா ரெண்டா என்ன சொல்ல?”
“நிறைய இருக்கா?”
“நிச்சயமா”
“ம்”
“மிடில் கிளாஸ்ல பிறந்தா எல்லாமே யோசிக்கத்தான் வேணும் “
“செம”
“நான் சொல்றது உண்மை”
“ நான் அப்படி யோசிக்க மாட்டேங்க. என்ன தோணுதோ அதை பேசிட்டு போயிருவேன். “
மாடியில் அடித்த மழைக்காற்று அவள் நினைவுகளை கலைத்தது.
காயப்போட்டிருந்த துணிகளை எடுத்துக் கொண்டாள்.
கீழே வந்தாள்.
அனைத்து துணிகளையும் சோபாவில் போட்டவள் மடிக்க ஆரம்பித்தாள்.
அப்பா ஏன் இன்னும் வரவில்லை? யோசித்தவள் தன் மொபைலை எடுத்தாள். நிறைய குறுஞ்செய்திகள் வந்திருக்க எடுத்துப் பார்த்தாள்.
குட் மார்னிங்
குட் ஆப்டர்நூன்
சாப்பிட்டீங்களா?
ஹாய்
என்னங்க எத்தனை மெசேஜ் பண்றேன் எதுக்குமே ரிப்ளை பண்ண மாட்டேங்கறீங்க?
அனைத்து மெசேஜ்களையும் புறக்கணித்தாள்.
இவர்களுக்கெல்லாம் வேறு வேலை கிடையாது போல். ஒரு பெண்ணின் மொபைல் நம்பர் கிடைத்துவிட்டால் உடனடியாக உலகத்தில் இல்லாத அக்கறையை எல்லாம் கொண்டு வந்து அவள் மீது காண்பிப்பது போல் நலம் விசாரிப்பது அவளுக்கு வேடிக்கையாக இருந்தது. ஒரு பெண்ணை கவர்வது என்பது அத்தனை ஒன்றும் கடினமான விஷயம் அல்ல அத்தனை ஒன்றும் கடினமான விஷயம் அல்ல. ஆனால் இவர்கள் அதற்காக செய்யும் முயற்சிகள் நிச்சயம் காமெடியானவை தான் என்பதில் சந்தேகமே இல்லை. ஒரு பெண் மனதை கவர வேண்டும் என்றால் அவளுடன் இயல்பாக பழக வேண்டும் அவரை புரிந்து கொள்ள வேண்டும் அவளை மதிக்கத் தெரிய வேண்டும். எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் இயல்பாக இருக்கும் ஒரு ஆண் எளிதில் ஒரு பெண்ணின் இதயத்தை கவர்வான். எதுவும் திட்டமிட்டு நடக்காமல் நடத்தாமல் தானாக நடந்தால் அதுவே சிறப்பு. அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்றாலும் அதுவும் பெரிதான விஷயம் அல்ல.
ஐஸ்வர்யா தன் அப்பாவிற்கு அழைத்தாள்.
ரிங் போனது. போய்க் கொண்டே இருந்தது.
அவர் எடுக்கவில்லை.
அப்பா பிசியாக இருப்பாரோ? யோசித்தவள் மணி பார்க்க மணி ஏழைக் காட்டியது. ஜன்னல் வழியாகத் தெரிந்த இருட்டு அவளை மீண்டும் அவருக்கு அழைக்க வைத்தது.
ரிங் போனது. போய்க்கொண்டே இருந்தது.
செல்வம் எடுக்கவில்லை.
தொடரும்
Waiting for next ud Anna. Starting nalla irukku.please continue