பூக்கள் தோறும் தேடிப்பார்க்கிறேன் 2
“செல்வம் …சொல்றேன்னு தப்பா நினைக்காதே பொண்ண ரொம்ப நாளா வீட்ல வச்சிட்டிருக்கிறது நல்லதுக்கில்ல. நீ எதிர்பார்க்கிற மாதிரி ரொம்ப நல்லவனா எந்த மாப்பிள்ளையும் கிடைக்க மாட்டான் பத்துக்கு ஒண்ணு ரெண்டு பழுதில்லன்னு சம்பந்தத்தை முடிச்சிட்டு போயிட்டே இருக்கிறதுதான் நல்லது ” பள்ளியில் உடன் பணிபுரியும் கணேசன் அக்கறையாய் சொல்ல செல்வம் ஒன்றும் சொல்லாமல் அமைதியாய் கேட்டுக்கொண்டார்.
“என்ன செல்வம் நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா?”
“இல்ல கணேசா நீ நடைமுறையத் தான் சொன்னே. ஆனா எனக்கு நடைமுறை முக்கியம் இல்ல. என் பொண்ணுதான் முக்கியம்.”
“என்ன சொல்ற செல்வம்?”
“என் பொண்ணு அழுது பார்க்கிறது எனக்கு பிடிக்காது. கடைசியா அவ அழுதது அவளோட அம்மா சாவுக்கு மட்டும்தான். அதுக்கப்புறம் அவ எதுக்குமே இதுவரைக்கும் அழுததில்லை. இனிமேலயும் அழக்கூடாது. எனக்கு நம்பிக்கை இருக்கு நிச்சயமா நான் எதிர்பார்க்கிற மாதிரி கடவுள் ஒருத்தனை என்கிட்ட அனுப்புவார் ” செல்வம் நம்பிக்கையுடன் சொல்ல கணேசன் மேற்கொண்டு ஒன்றும் பேசவில்லை.
திருத்தப்பட வேண்டிய விடைத்தாள்கள் இன்னும் கொஞ்சம் இருக்க செல்வம் மணி பார்த்தார்.
“ஆல்ரெடி லேட் ஆயிடுச்சு செல்வம் நாளைக்கு வந்து பாத்துக்கலாம் வா “
“இல்ல கணேசா பசங்க இன்னிக்கு கிளாஸ் போறப்பவே ரொம்ப ஆர்வமாக எதிர்பார்த்தாங்க. கொஞ்சம் கரெக்ட் பண்ணி முடிச்சிட்டா நாளைக்கு கொடுத்துடலாம்”
“சரி செல்வம் அப்ப நான் கிளம்பறேன் “
சொன்ன கணேசன் விடை பெற்றுக் கொண்டு போய் விட செல்வம் விடைத்தாள்களை திருத்த அமர்ந்தார்.
‘இல் பொருள் உவமையணி’
சூரியனை கையால் மறைத்தாற் போல்.
சூரியனை கையால் மறைத்தல் என்பது முற்றிலும் நடக்காத ஒன்று அதாவது இல்லாத ஒன்றை உவமையாக கூறுவது இல் பொருள் உவமையணி
ஒரு மாணவனின் விடையை படித்துப் பார்த்தவர் முகம் மலர்ந்தது.
பரவால்ல பசங்க நல்லாத்தான் எழுதியிருக்காங்க.
தனக்குள் யோசித்தபடி விடைத்தாள்களை மதிப்பிடத் தொடங்கினார்.
அரை மணி நேரம் கழிந்திருக்க வேலையை முடித்த திருப்தியுடன் வெளியே வந்தார்.
சாலையை கடந்து பேருந்து நிறுத்தத்துக்கு செல்ல முனைகையில் தலை சுற்றியது. தூரத்தில் ஒரு பேருந்து வருவது தெரிந்தும் விரைவாக அந்த பக்கம் சென்று விட வேண்டும் என்று முயன்றும் முடியாமல் மயக்கமாய் சாலையிலே விழுந்தார்.
யாரோ ஒருவர் தன் முன்னால் சாலையில் விழுவதைப் பார்த்த விஷ்ணு பதறிப் போனான். சட்டென்று பேருந்தைக் கை காட்டி நிறுத்த புரிந்து கொண்ட பேருந்து ஓட்டுனர் பேருந்தை நிறுத்தினார். விஷ்ணு செல்வத்தைத் தூக்கினான். அவரை தூக்கியபடி சாலையை கடந்தவன் அருகிலிருந்த கூல்ட்ரிங்க்ஸ் கடையிலிருந்த பெஞ்சில் படுக்க வைத்தான். கொஞ்சம் தண்ணீரை அவர் முகத்தில் மெதுவாய் அடிக்க செல்வம் அசைந்தார். தன்னிலைக்கு வந்தவர் மெல்ல எழுந்து அமர்ந்தார்.
“ஐயா இப்ப எப்படி இருக்கு?”
“பரவால்லப்பா பிபி கொஞ்சம் ஜாஸ்தி ஆயிடுச்சு அவ்வளவுதான்” சொன்னவரை விஷ்ணு வேதனையுடன் பார்த்தான்.
“இருங்கய்யா ஒரு லெமன் ஜூஸ் குடிங்க” விஷ்ணு சொல்ல அவர் மறுத்தும் கேட்காமல் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான். செல்வம் நெகிழ்ந்து போய் பார்த்தார்.
இந்த உலகம் என்பது சுயநலத்தின் பாற்பட்டது அல்ல. எப்பொழுது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் உதவி செய்பவர்கள் நிறைந்திருக்கக் கூடிய உலகம் தான் இது. இதோ இந்த இளைஞன் யார் என்று எனக்கு தெரியாது. என்னை காப்பாற்றிக் கொண்டு வந்து லெமன் ஜூஸ் வாங்கிக் கொண்டு வருகிறான். நன்றாக இருக்கட்டும் கடவுள் இவனை நன்றாக வைத்திருக்கட்டும் இவனைப் போன்ற இளைஞர்கள் இந்த நாட்டில் இப்பொழுது மிகவும் தேவை.
லெமன் ஜூஸ் குடித்து முடித்தவர் எழுந்தார்.
“நான் வரேன்பா”
“ஐயா வீட்டுக்கு போயிடுவீங்களா? நான் வேணும்னா என்னோட பைக்ல கொண்டு வந்து ட்ராப் பண்ணவா?”
“வேண்டாம் தம்பி உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்?”
“ஒரு சிரமமும் இல்லை நீங்க உட்காருவீங்க இல்ல?”
“சரி தம்பி” சொன்ன செல்வம் விஷ்ணுவின் பைக்கில் ஏறிக்கொண்டார்.
“தம்பி”
“சொல்லுங்கய்யா”
“ரொம்ப நன்றி தம்பி”
“இருக்கட்டுங்கய்யா”
“அப்பா என்ன பண்றார் தம்பி?”
“அப்பா இல்லங்கய்யா, தவறிட்டார்”
விஷ்ணு சொல்ல அவருக்கு அவன் மீது பரிதாபம் வந்தது. பாவம் இவ்வளவு பாசமான ஒருவன் கூட வாழக் கொடுத்து வைக்கவில்லை அவன் தந்தைக்கு.
“அய்யா இப்ப எப்படி போகணும்?”
“நேரா போய் இடதுபுறத்தில திரும்பினா ஒரு மாரியம்மன் கோயில் வரும். அது பக்கத்துலத் தான் வீடு “
விஷ்ணு இன்னும் கொஞ்ச தூரம் போக மாரியம்மன் கோவில் பார்வைக்கு கிடைத்தது.
சட்டென்று ஒரு இனம் புரியாத உணர்ச்சி அவனை ஆட்கொண்டது.
இங்கே ஏற்கனவே வந்திருக்கிறோமா? இல்லையே. இது முற்றிலும் எனக்கு புதிய இடம். இப்படி ஒரு இடத்தை நான் இதுவரை கண்டதும் இல்லை. பிறகேன் இப்படிப்பட்ட ஒரு உணர்வு என்னை இப்பொழுது ஆட்கொள்ள வேண்டும்? யோசித்த விஷ்ணு அவரை அழைத்தான்.
“அய்யா”
“என்ன தம்பி?”
“வீடு எங்க?”
“அதோ அந்த கேட் போட்டிருக்கே? அதான்”
விஷ்ணு வீட்டின் முன் பைக்கை நிறுத்தினான். செல்வம் இறங்கினார்.
“அப்ப நான் வரட்டுங்களா? பத்திரமா போயிடுவிங்களா?”
“எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை தம்பி. வாங்க வீட்டுக்குப் போய் ஒரு காபி சாப்பிட்டு போலாம் “
“வேண்டாங்கயா எங்கம்மா தனியா இருப்பாங்க சீக்கிரமா வீட்டுக்குப் போகணும் ” விஷ்ணு சொல்ல செல்வம் நெகிழ்வாய் பார்த்தார்.
“சரி தம்பி”
கேட் திறக்கும் சத்தம் கேட்டு வெளியில் வந்த ஐஸ்வர்யா தன் அப்பா தூரத்தில் யாரோ பைக்கில் செல்வதை பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கேட்டாள்.
“யாருப்பா அது? ஏம்பா இன்னிக்கு லேட்டு?”
“வாம்மா வீட்ல போய் பேசலாம் ” சொன்னபடி செல்வம் நடக்க ஐஸ்வர்யா ஒன்றும் பேசாமல் மௌனமாய் அவரைப் பின் தொடர்ந்தாள்.
சோபாவில் வந்து அமர்ந்த செல்வம் ஐஸ்வர்யாவைப் பார்த்து புன்னகைத்தார்.
“இன்னிக்கு பிபி கொஞ்சம் கூடிப்போச்சும்மா”
“அய்யய்யோ என்னப்பா சொல்றீங்க?”
“ஆமாம்மா அதுவும் ரோட்டை கிராஸ் பண்றப்ப மயக்கம் வந்துடுச்சு”
“அப்பா”
“பதறாதம்மா. ஒரு தம்பி என்னைக் காப்பாத்திடுச்சு. “
“யாருப்பா அவர்?”
ஐஸ்வர்யா கேட்க அப்போதுதான் விஷ்ணுவின் பெயரை அவர் கேட்காமல் போனது அவருக்கு உறைத்தது.
“யாருன்னு கேக்க மறந்துட்டேன்மா. ஆனா என்னமோ தெரியலம்மா அந்த தம்பிய பார்க்கறப்ப மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்ததும்மா.”
செல்வத்தின் முகத்தில் வழக்கத்திற்கு மாறான சந்தோஷம் இருக்க ஐஸ்வர்யா சற்று குழம்பினாள்.
நீங்க யாருன்னு தெரியல. எங்க அப்பாவை காப்பாத்தியிருக்கீங்க நீங்க ரொம்ப நல்லா இருக்கணும் நான் உங்களுக்காக கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன்
ஐஸ்வர்யா முகம் தெரியாத விஷ்ணுவுடன் மானசீகமாய் பேசினாள்.
வங்கியில் மதிய உணவிற்கான இடைவேளை.
ஐஸ்வர்யா தன் டிஃபன் பாக்ஸைத் திறந்தாள். விஷ்ணு பார்சல் வைத்திருந்ததைப் பார்த்தவள் கேட்டாள்.
“என்ன பார்சல் அது?”
“இட்லி”
“இப்பவா? ஏன்?”
“அம்மா கொஞ்சம் டயர்டா ஃபீல் பண்ணாங்க அதான் ஹோட்டல்ல போய் இட்லி வாங்கிக் கொடுத்துட்டேன். நானும் அதையே கொண்டு வந்துட்டேன். “
“வாங்க விஷ்ணு நாம ஷேர் பண்ணிக்கலாம் “
“நீங்க என்கிட்ட இட்லி வாங்கிக்கறதா இருந்தா நீங்க கொடுக்கற சாப்பாட்ட நான் வாங்கிக்கிறேன் இது ஓகேவா உங்களுக்கு? ” விஷ்ணு புன்னகைத்தபடி கேட்க ஐஸ்வர்யா சிரித்தாள்.
“ஓகே கொடுங்க”
விஷ்ணு இட்லியும் தக்காளி சட்னியும் கொடுக்க சாப்பிட்டுப் பார்த்தவள் முகம் மலர்ந்தது.
“நல்லா இருக்கு விஷ்ணு”
“இன்னைக்கு சாயங்காலம் அந்த ஹோட்டல்காரர் கிட்ட சொல்றேன் “
“என்னன்னு?”
“உங்க ஹோட்டல் இட்லிக்கு இன்னொரு ரசிகை கிடைச்சிருக்காங்கன்னு”
“போதும்”
“ஏங்க?”
“சாப்பாடு எடுத்துக்கங்க”
“என்ன சாப்பாடு?”
“தக்காளி சாதம் உருளைக்கிழங்கு வறுவல்”
“அய்யோ செம காம்பினேஷன் எனக்கு ரொம்பப் பிடிக்கும் ” விஷ்ணு குழந்தை போல் ஆர்வமுடன் சொல்ல ஐஸ்வர்யா அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்,
“இந்தாங்க “
வாங்கிய விஷ்ணு ஒருவாய் சாப்பிட்டுப் பார்த்தான்.
“செமங்க. யாரு சமையல்? அம்மாவா?”
“இல்லங்க நான்தான்”
“ஐஸ்வர்யா உண்மையிலேயே ரொம்ப நல்லா இருக்குங்க”
“தேங்க்ஸ்”
“விஷ்ணு”
“என்ன ஐஸ்வர்யா? சொல்லுங்க”
“கஸ்டம்ஸ் அக்கவுண்ட்ஸ் லெட்ஜர் எங்க இருக்கு?”
“உங்களுக்கு லெட்ஜர்தான் வேணுமா இல்ல டீட்டெயில்ஸ் இருந்தா போதுமா?”
“டீட்டெயில்ஸ் போதும் “
“உங்களுக்கு மெயில் அனுப்பறேன் வரும் “
“தேங்க்ஸ் “
ஐஸ்வர்யாவிற்கு விஷ்ணுவை நினைக்கப் பெருமையாக இருந்தது.
தேவையில்லாமல் வந்து பேசுவதில்லை மிகவும் எதார்த்தமாக இருக்கிறான். கண்கள் தாண்டி அவன் பார்வை எங்கும் செல்வதில்லை. இதுவரை மொபைல் நம்பர் வாங்கிய அனைவரும் ஏதாவது பேச வேண்டும் என்று கேனத்தனமாக எதையோ பேசுவார்கள். ஆனால் இவன் இதுவரை அவசியம் இல்லாமல் அழைத்ததே இல்லை. அப்படியே அழைத்தாலும் தேவையானவற்றை மட்டும் பேசிவிட்டு மேற்கொண்டு எதையும் சொல்லாமல் வைத்து விடுவான்.
நான் என்ன இப்படி மாறி விட்டேன்? அவன் எப்படி இருந்தால் என்ன? நான் எதற்காக அவனைப் பற்றி சிந்திக்க வேண்டும்?
நீ ஒன்றும் தவறு செய்துவிடவில்லை உனக்கு அவனை பிடித்து இருக்கிறது.
இப்படிப்பட்ட ஒருவனை எல்லாருக்கும்தான் பிடிக்கும்.
மற்றவர்களுக்கு அவனைப் பிடித்திருப்பதும் உனக்கு அவனை பிடித்திருப்பதும் ஒன்றா?
ஒன்றுதான்.
பொய்.
சரி பொய்யாகவே இருக்கட்டும்.
உண்மை என்ன?
இப்பொழுது என்னால் ஒன்றும் சொல்ல முடியாது.
ஏன்?
அது அப்படித்தான்.
“ஐஸ்வர்யா” விஷ்ணு அழைத்தது போல் இருக்க சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.
விஷ்ணு நின்றிருந்தான்.
“என்னங்க கண்ணைத் திறந்துட்டே தூங்கறீங்க?”
“சே இல்லங்க”
“ஸாரி ஏதோ வேற உலகத்தில் இருந்தீங்க உங்கள நான் இந்த உலகத்துக்குக் கூட்டிட்டு வந்துட்டேன்”
“சொல்லுங்க விஷ்ணு”
“நாளைக்கு ஸ்பெஷல் டூட்டி எடுக்க முடியுமான்னு மேனேஜர் கேட்டார்”
“யார் யார் இருப்போம்?”
“சந்திரன் இருக்கான் நான் இருக்கேன்”
“அப்போ நானும் எடுத்துக்கறேன்” ஐஸ்வர்யா அதிக ஆர்வமாய் சொன்னது போல் விஷ்ணுவிற்கு பட்டது.
ஒன்றும் பேசாமல் சென்று தன் சீட்டில் அமர்ந்தான்.
‘என் இயல்பு இப்பொழுது மாறிக் கொண்டு வருகிறதா? வழக்கத்திற்கு மாறாக என்னை ஏதோ ஒரு மகிழ்ச்சி ஆட்கொள்கிறது ஏன்? இது எங்கே போய் முடியும்? கடவுளே…
‘எங்கேயோ ஏதோ தவறாக தோன்றுகிறது எங்கே?’ யோசித்த விஷ்ணு தன் மனதை எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல் ஏதேதோ எண்ணங்களுக்கு ஆட்பட்டான்.
ஒரு வழியாக தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன் எதார்த்தமாக ஐஸ்வர்யாவைப் பார்க்க அவள் விழிகள் அவனைக் கண்டதும் அவற்றில் பரவசம் பொங்கியதும் அவனால் உணர முடிந்தது.
தொடரும்