ரத்தப்பழி
கவுதம் கருணாநிதி
1
“சொன்ன புரிஞ்சிக்க மாட்டியா?” வினோத் தன் எதிரில் நின்ற ராதிகாவிடம் கேட்க அவள் அவனைப் பாவமாய் பார்த்தாள்.
“என்னோட நிலைமையை நான் உங்ககிட்ட சொல்லிட்டேன் நீங்களும் என்னை புரிஞ்சுக்கலைன்னா எனக்கு வேற என்ன வழி? செத்துப் போறதைத் தவிர ?”
கேட்டவளை வினோத் முறைத்தான்.
“என்ன சென்டிமென்டலா பிளாக்மெயில் பண்றியா?”
“கண்டிப்பா இல்ல என்னோட நிலைமையை சொன்னேன்”
இவள் சொன்னால் புரிந்து கொள்ள மாட்டாள். மீண்டும் மீண்டும் அதே நிலையில் வந்து நிற்பாள். ஏன் இவளை முடித்து விடக்கூடாது?
வினோத் மனதில் எண்ணம் தோன்ற அதே நேரத்தில் உள்ளே எச்சரிக்கை உணர்வு தோன்றியது.
ஒருவேளை இவளை நான் கொன்றுவிட நேர்ந்தால் யாருக்கும் என் மீது சந்தேகம் வரக்கூடாது திட்டம் போட்டு கொலை செய்தால் நிச்சயமாக எந்த கொம்பனாலும் என்னை வந்து தொட முடியாது.
வினோத் சட்டென்று தன் முகத்தை மாற்றினான்.
“என்ன ராதிகா இது? இப்படி பேசாத. எனக்கு கஷ்டமா இருக்கு. நீ செத்துப் போறதுக்கா நான் உன்ன லவ் பண்ணேன்?” வினோத் பாசமாய் பேசுவது போல் நடிக்க ராதிகா அதில் உருகினாள்.
“சாரி வினோத் நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திறேனா?”
“அதெல்லாம் இல்ல இங்க வா” சொன்னவன் அவளை அணைத்துக் கொண்டான்.
“இன்னைக்கு நைட் என் கூட இங்க தங்கிடு ராதிகா பொழுது விடியும் போது என்ன பண்ணலாம்னு யோசிப்போம். “ வினோத் சொல்ல அவள் தலையாட்டினாள்.
“வினோத்”
“ம்”
“என்ன இங்க இப்பயே இவ்வளவு குளிருது ?”
“இது ஊட்டி. தெரியும்ல?”
“நைட் இன்னும் குளிருமா ?”
“குளிராது”
“குளிராதா?”
“நான் இருக்கேன் ராதிகா” வினோத் புன்னகைத்தபடி சொல்ல ராதிகா வெட்கப்பட்டுத் தலை குனிந்தாள்.
நேரம் கடந்தது.
உறங்குவது போல் நடித்த வினோத் ராதிகா உறங்கியதும் மெல்ல எழுந்தான்.
உறங்கும் அவளையே பார்த்தான்.
“ஸாரி ராதிகா நான் இதை உனக்கு பண்ணக்கூடாது இருந்தாலும் எனக்கு வேற வழியில்லை “ சொன்னவன் தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த இன்ஹேலரை எடுத்து அவள் முகத்தில் அடிக்க அவள் எதிர்ப்பு காட்டாமல் மயங்கினாள்.
வினோத் ஒரு குரூரப் புன்னகையுடன் அவளை நெருங்கினான்.
***
“இங்க பார்த்தீங்களா?” ஒருவன் கைகாட்டி கேட்க பார்த்த மற்றவன் அதிர்ந்தான்.
அந்த இடத்தில் ரிப்பன் வளையல்கள் பொட்டு பாக்கெட் இருந்தன.
“என்னங்க இது ஒண்ணுமே புரியல?”
“எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு எதுக்கும் இந்தப் பக்கம் தள்ளி வாங்க “
“என்ன சொல்றீங்க?”
“இது ஆத்ம சாந்திக்கு வேண்டி நடத்தப்பட்ட பூஜை மாதிரி தெரியுது “
“ஐயோ என்னங்க பெருசு பெருசா என்னமோ சொல்றீங்க?”
“இங்கே ஏதோ நடந்திருக்கு “ சொன்னவன் மற்றவனை ஏறிட்டான்.
“ நாம இந்த விஷயத்தை போலீசுக்கு கொண்டு போறது பெட்டர் “
அடுத்த அரை மணி நேரத்தில் போலீஸ் அந்த இடத்தை சூழ்ந்தது.
இன்ஸ்பெக்டர் ரகுராம் கான்ஸ்டபிளை ஏறிட்டார்.
“அந்த இடத்தை தோண்டறதுக்கு ஏற்பாடு பண்ணியாச்சா?”
“தோண்டிட்டிருக்காங்க சார் “
“யார் நீங்க தான் கம்ப்ளைன்ட் பண்ணதா வாங்க இப்படி “
“சார்”
“ம்”
“என்னோட ஃப்ரண்டு தான் என்கிட்ட இந்த இடத்தைக் காட்டினார் ஆனால் அதைப் பார்த்ததும் எனக்கு பக்குன்னு ஆயிடுச்சு. “
“ஏன்?”
“இங்கே யாரோ ஆத்மா சாந்திக்கு வேண்டி பூஜை பண்ணியிருக்காங்க “
“யார் அப்படி பண்ணாங்கன்னு தெரியுமா?”
“தெரியாது சார் “
இன்ஸ்பெக்டர் ரகுராம் விசாரித்துக் கொண்டிருக்கும் பொழுதே கான்ஸ்டபிள் கந்தசாமி அலறினார்.
“சார்”
“என்ன சொல்லு”
“இங்க ஒரு பாடி கிடக்குதுங்க” கான்ஸ்டபிள் சொல்ல ரகுராம் பதறிப் போய் எழுந்து பார்த்தார். அதிர்ச்சியில் உறைந்தார். அந்தப் பெண்ணின் உடலில் இரு கண்களும் இருக்க வேண்டிய இடங்களில் வெறும் பள்ளங்கள் மட்டுமே இருந்தன. உடல் அழுகத் தொடங்கியிருந்தது. முகத்தில் ஆங்காங்கே ரத்தக்காயங்கள். கைகள் பின்னால் கட்டிய வாக்கில் இருந்தன.
இன்ஸ்பெக்டர் ரகுராமிற்கு புரிந்தது இந்த பெண்ணை யாரோ கொடூரமாக கொலை செய்து யாருக்கும் அடையாளம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அடையாளத்தை அழித்திருக்கிறார்கள். உள்ளே மனம் வெகுண்டது.
கான்ஸ்டபிள் கந்தசாமி அருகில் வந்தார்
“சொல்லுங்க கந்தசாமி”
“சார்”
“ம்”
“பொண்ணு யாருன்னு யாருக்குமே தெரியல சார்”
“எப்படி தெரியும்? அதான் அடையாளம் இருக்கக் கூடாதுன்னு கொலைகாரன் திட்டம் போட்டு இப்படி பண்ணி இருக்கானே? “
ரகுராம் சொல்ல கந்தசாமி ஒன்றும் சொல்லாமல் மௌனமாய் நின்றார்.
“ஆம்புலன்ஸ் வந்துருச்சு பாடி கொண்டு போறதுக்கு ஏற்பாடு பண்ணுங்க “
“சரி சார் “
ரகுராம் கந்தசாமியுடன் பேசிக்கொண்டிருக்க அங்கே கூட்டமாய் செய்தியாளர்கள் வர ரகுராம் அவர்களை ஏறிட்டார்.
“சார் இறந்து போன பொண்ணு?”
“விசாரணை போயிட்டு இருக்கு “
“யாரோ அடிச்சு கொன்னுட்டு பூஜையும் பண்ணதா க் கேள்விப்பட்டோம் உண்மையா சார் ?”
“நீங்க இப்ப கேக்கற எந்த கேள்விக்கும் என்கிட்ட பதில் இல்லை விசாரணை முடிஞ்சு உங்ககிட்ட நானே சொல்றேன் “
***
“என்ன சொல்றீங்க ரகுராம் ? பாடி கிடைச்சு பதினஞ்சு நாளைக்கும் மேல ஆச்சு இன்னும் கேஸ் ஒரு ஸ்டெப் கூட நகரவே இல்லையே. “ கமிஷனர் கேட்க ரகுராம் அமைதியாய் பதில் சொன்னார்.
“அக்யூஸ்ட் ரொம்ப சாமர்த்தியசாலி சார்”
“என்ன சொல்றீங்க? “
“இந்த கேஸ்ல அந்த பொண்ணு யாருன்னு இதுவரைக்கும் எந்த துப்பும் கிடைக்கல அது மட்டும் இல்ல இந்த கொலைக்கான மெட்டீரியல் எவிடன்ஸ் சுத்தமா எதுவுமே கிடைக்கல. ஃபாரன்சிக் டிபார்ட்மெண்ட் செக் பண்ணதுல ஒரு எவிடன்ஸ் கூட இல்லன்னு…”
“ரகுராம் ஏதாவது நாம செய்யணும். அதுவும் இடைத்தேர்தல் நடக்க இருக்கிற இந்த தொகுதியில் இப்படி நடந்தத எல்லாருமே ரொம்ப உன்னிப்பாப் பார்க்கறாங்க கவர்ன்மெண்டுக்கு இதனால் கெட்ட பெயர் னு ஆளுங்கட்சி ஃபீல் பண்ணுது. எதிர்க்கட்சிக்காரங்க இந்த கவர்மெண்ட்ல பெண்களுக்கு பாதுகாப்பு இல்லைன்னு பிரச்சாரம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. மிஸ்டர் போன் பண்ணி இன்னும் ரெண்டு நாள்ல இந்த கேஸ் சால்வ் பண்ணியாகணும் அக்யூஸ்ட் யாருன்னு பிடிச்சாகணும்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டார். “ கமிஷனர் சொல்ல ரகுராம் பெருமூச்சு விட்டார்.
“அது எப்படி சார் முடியும்?”
“இந்த கேஸ்ல அதிரடியா அதே நேரத்துல ரொம்ப இன்டெலிஜெண்டா ஏதாவது பண்ணியாகணும். “
“எப்படி சார்?”
“நம்ம டிபார்ட்மெண்டுக்கு நிறைய விதிமுறைகள் இருக்கு ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் இருக்கு. விதிமுறைகள் எதுவுமே ஃபாலோ பண்ணாத ஒருத்தர் கையில இந்த கேஸ் போனா மினிஸ்டர் சொன்ன ரெண்டு நாள்ல கண்டிப்பா குற்றவாளியா அரெஸ்ட் பண்ணிடலாம் “
“யார் சார் அவர்?” ரகுராம் கேட்க கமிஷனர் புன்னகைத்தார்.
***
“அசோக் எங்கே?” திவ்யா கேட்க “டாமிக்கு ஃபுட் வாங்கப் போயிருக்கான்” கார்த்தி சொன்னான்.
“இந்த நாலு நாள்ல நாம எந்த கேஸையும் எடுக்கக் கூடாது. ஊட்டிய ஃபுல்லா சுத்திப் பார்க்கணும் “ திவ்யா சொல்ல டேவிட் சிரித்தான்.
“என்ன டேவிட் சிரிக்கிற?”
“அசோக்கு ஒரு ராசி இருக்கு. அவன் எங்க போனாலும் ஏதாவது ஒரு கேஸ் அதுக்கு முன்னாடி அங்க காத்திருக்கும் “
“இந்த முறை நாம ஊட்டி போறது ரெஸ்ட் எடுக்கத்தான் “ திவ்யா சொல்ல கார்த்தி புன்னகைத்தான்.
“டாமிக்கு ஃபுட் வாங்கணும்னு சொல்லியிருந்தா நானே வாங்கிட்டு வந்திருப்பேன்ல? “ திவ்யா கேட்க டேவிட் சிரித்தபடியே சொன்னான்.
“டாமி விஷயத்துல அசோக் வேற யாரையும் உள்ள விட மாட்டான் எல்லாமே அவனே பார்த்து செஞ்சாத்தான் அவனுக்கு திருப்தி “
டேவிட் சொல்ல திவ்யா டாமியை பார்த்தாள்.
“என்ன டாமி எங்க தலைவருக்கு எல்லாரையும் விட உன்னத்தான் ரொம்பப் பிடிச்சிருக்கு “ திவ்யா சொல்ல டாமி குரைத்தது.
“கார்த்தி” டேவிட் அழைத்தான்.
“ம்”
“நாம இப்ப கிளம்பினாத்தான் நைட்டுக்குள்ள நாம புக் பண்ணியிருக்கிற ரிசார்ட்டுக்குப் போய் சேர முடியும் “
“புரியுது அசோக் எங்க போனான்னு தெரியலையே.”
“எதுக்கும் போன் பண்ணிப்பாரு “ டேவிட் சொல்ல கார்த்தி தன் மொபைலை எடுத்தான். அசோக்கிற்கு அழைத்தான்.
‘இந்தியன் தற்பொழுது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது’ ரெக்கார்ட் செய்த மெசேஜ் திரும்பத் திரும்ப வர கார்த்தியின் மனம் துணுக்குற்றது.
***
அவள் அவனைத் திரும்பப் பார்த்தாள்.
“ஷிவானி”
“ சொல்லு ”
“சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கு தானே?”
“ம்”
“எந்த காரணத்தைக் கொண்டும் உன் மேல அவனுக்கு டவுட் வரக்கூடாது.”
“என்ன விக்டர்? நான் எத்தனை பேரை பார்த்திருக்கேன்? எனக்கு போய் ஸ்கூல் பிள்ளை மாதிரி திரும்பத் திரும்ப சொல்லிட்டிருக்கே? “
“நான் இத்தனை முறை சொன்னா அது எதுக்குன்னு புரிஞ்சுக்கோ. அவனுக்கு சந்தேகம் வந்தா நீ மட்டும் இல்லை நாம் எல்லாரும் காலி. அது மட்டும் ஞாபகம் வச்சுக்க”
“நீ இவ்வளவு சொல்றதுனால எனக்கு இப்ப ரொம்ப ஆர்வமா இருக்கு. இனி நான் பார்த்துக்கறேன் நானா அவனான்னு “ சொன்னவள் காரில் இருந்து இறங்கினாள்.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு புல்லட் அருகில் சென்று நின்றாள்.
“ஷிவானி இப்ப நீதான் ரிப்போர்ட்டர். எப்படியாவது அவன் கிட்ட பேசி பேட்டி எடுக்கணும்னு சொல்லி கார்க்கு கொண்டு வந்திடு. “
“எனக்கு பிளான் சரியா புரியல”
“அவன காருக்குக் கொண்டு வந்துட்டா மயக்கப்படுத்தி பாஸ் சொல்ற இடத்துக்கு கொண்டு போகணும். “
“அங்க என்ன நடக்கும்?”
“அது எனக்கு தெரியாது”
“ம்”
புல்லட்டின் அருகில் அவன் வர ஷிவானி புன்னகைத்தாள்.
“மிஸ்டர் விஷ்வா?”
“யெஸ்”
“என்னோட பேர் நிஷா . ஃப்யூச்சர் இந்தியா மேகசினோட ரிப்போர்ட்டர்.”
“நைஸ்”
“இந்த வாரம் எங்க கவர் ஸ்டோரிக்கு உங்க எக்ஸ்க்ளூசிவ் இன்டர்வியூ வேணும் கிடைக்குமா சார்?”
“ஸாரி எனக்கு பேட்டி கொடுக்கிறதுல இன்ட்ரஸ்ட் இல்ல “
“ஸார் ப்ளீஸ் போலீஸ் டிபார்ட்மெண்ட்ல நீங்க பண்ண சாதனைகள் கண்டிப்பா யங் ஜெனரேசனுக்கு ஒரு நல்ல மோட்டிவேஷனா இருக்கும். கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க சார் ப்ளீஸ் “
ஷிவானி சொல்ல விஷ்வா யோசித்தான்.
“இன்டர்வியூ எவ்வளவு மணி நேரம் எடுக்கும்?”
“கார்ல தான் சார் அரை மணி நேரத்துல முடிச்சிடலாம்.”
“சரி வாங்க “
இருவரும் காரில் ஏற விக்டர் விஷ்வா அறியாத வண்ணம் ஷிவானியைப் பார்த்து புன்னகைத்தான். தன் பாஸ்க்கு குறுஞ்செய்தி அனுப்பினான்.
‘அவன் கார்ல ஏறிட்டான்’
‘குட்’
‘நம்ம இடத்துக்குத் தானே? ‘
“ ஆமா .அதுக்கு முன்னால ‘
‘சொல்லுங்க’
‘அவனை ஒரு போட்டோ எடுத்து இங்க அனுப்பி வை’
‘ம்’
விக்டர் பின்னால் திரும்பிப் பார்த்தான். அவன் வெளியே பார்த்தபடி இருக்க அவன் அறியாமல் அவனைத் தன் மொபைலில் போட்டோ பிடித்து பாஸ்க்கு அனுப்பினான்.
அடுத்த நிமிடத்தில் விக்டர் மொபைல் அடித்தது.
“பாஸ்”
“காரை அப்படியே நிறுத்திட்டு நீயும் ஷிவானியும் இறங்கி வெளியில ஓடுங்க. “
“பாஸ் என்ன சொல்றீங்க ?“
“ஒரு தடவை சொன்னா புரியாதாடா உனக்கு? சீக்கிரமா தப்பிச்சு போங்கடா ? “
“பாஸ் இப்ப என்ன ஆயிடுச்சுன்னு “
“ டேய்…உன் கூட கார்ல இருக்கிறது விஷ்வா இல்ல … அசோக் “
தொடரும்
ர
Next part pls.