10
சின்னானும் அன்னம்மாளும் பெரும்பாலும் தங்கள் அறையில் இருக்க காளிங்கன் அடிக்கடி சமையலறைக்கு வருவதும் செண்பகத்தை வட்டமிடுவதுமாக இருந்தான்.
ராசாத்தியை தூக்கமுற்பட்டவனை செண்பகம் தடுத்தாள்.
“என்ன நீ? என்னை எப்பவுமே ஒரு மாதிரியா பார்க்கிற நான் உன்னோட சித்தியோட தம்பி. உனக்கு மாமா முறை.”
அவன் சொல்ல செண்பகம் பதில் ஒன்றும் சொல்லாமல் சமையலறைக்குள் சென்றாள்.
அங்கும் தொடர்ந்து வந்தவன்
“உன் வயசு என்ன?” கேட்டான்.
“அதை எதுக்கு நீ கேக்கற?” என்ற குரல் வெளியிலிருந்து வர காளிங்கன் யாரென்று பார்த்தான்.
பால்காரம்மா நின்றிருந்தார்.
ஆத்திரமான காளிங்கன் அவரிடம் கேட்டான்.
“யார் நீ?”
“அதான் நானும் கேட்கிறேன் நீ யாரு?”
“நான் செண்பகத்தோட மாமா”
“வள்ளியோட தம்பியா?”
“இல்ல அன்னம்மாளோட தம்பி ” காளிங்கன் சொல்ல பால்காரம்மா அவனை இகழ்ச்சியாகப் பார்த்தார்.
சொன்னார்.
“வந்தா வந்த இடத்துல மரியாதையா நடந்துக்கிட்டுத் திரும்ப ஊருக்குக் கிளம்பிப் போ. ஏதாவது தப்பு தண்டா பண்ணேன்னு தெரிஞ்சதுன்னா சீவக்கட்டை பிஞ்சிடும்.”
பால்காரம்மா சொல்ல காளிங்கன் ஆத்திரமானான்.
“அதைச் சொல்ல நீ யாரு?”
அவனுக்கு பதில் ஒன்றும் சொல்லாத பால்காரம்மா செண்பகத்தைப் பார்த்தார்.
“தங்கச்சி என்ன கண்ணு பண்ணுது?”
“தூங்குதுக்கா”
“ஏதாவது பிரச்னைன்னா என்னோட வீட்டுக்கு வந்துரு.”
“சரிக்கா”
காளிங்கனுக்கு அது வெறியேற்றியது.
ஏதாவது செய்ய வேண்டும். என்ன செய்யலாம்? யோசித்தான்.
செண்பகத்திற்கு ராசாத்தி என்றால் உயிர். அந்த ராசாத்தியை வைத்து விளையாடி விட வேண்டியது தான்.
அன்னம்மாள் வெளியில் வர மெதுவாகக் கேட்டான்.
“அக்கா செண்பகம் சும்மாதான இருக்கு ஏதாவது வீட்டு வேலைக்குப் போனா காசு கொண்டுவந்து கொடுக்குமே”
“ஐடியா நல்லாத்தான் இருக்கு ஆனா உன் மாமா என்ன சொல்லுவாருன்னு தெரியலயே”
“நீ சொன்னா தட்டவா போறாரு?”
“அதும் சரிதான் ஆனா சின்னவளைப் பார்க்க என்ன பண்றது?”
“அத கம்முன்னு வித்துடு”
காளிங்கன் சாதாரணமாக செல்ல அன்னம்மாள் ஒரு நிமிடம் அதிர்ந்தாள்.
“என்ன சொல்ற காளிங்கா? அத யார் வாங்குவாங்க?”
“அதெல்லாம் ஆள் இருக்குக்கா. நல்ல விலை கொடுப்பாங்க.”
“அப்படின்னா ஆள வரச் சொல்லு.”
அன்னம்மாள் சொல்ல காளிங்கன் புன்னகைத்தான்.
அன்றிரவு அன்னம்மாளும் சின்னானும் வழக்கம்போல் தங்கள் அறைக்குப் போய்விட செண்பகம் ராசாத்திக்கு பாட்டிலில் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
காளிங்கன் அருகில் வந்தான். புன்னகைத்தான். செண்பகம் அமைதியாக இருந்தாள். அருகில் அமர்ந்தான்.
“செண்பகம் நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா என் கூட வா உன்ன சினிமா ஸ்டார் ஆக்கறேன்”.
சொன்னவன் மீது வீசிய வாசனையை வைத்து அவன் குடித்திருக்கிறானென்று அறிந்தாள்.
செண்பகம் ஒன்றும் சொல்லாமல் ராசாத்தியைத் தொட்டிலில் போட்டு ஆட்டினாள்.
காளிங்கன் மெல்ல எழுந்தான். செண்பகத்தின் பின்னால் வந்தான். சட்டென்று அவளை அணைக்க முற்பட செண்பகம் விலகிக் கொண்டாள்.
மீண்டும் அணைக்க முற்பட்டவனைத் தள்ளி விட்டாள்.
“நான் எங்கப்பா கிட்ட சொல்லிடுவேன்”
“சொல்லு யார் சொல்றத உன் அப்பா நம்பறார்னு பார்ப்போம்”
சொன்னவன் மீண்டும் செண்பகத்தின் அருகில் வர செண்பகம் ஓடினாள் சின்னான் இருந்த அறைக்கதவைத் தட்டினாள்.
கதவைத் திறந்து அன்னம்மாள் வெளியில் வந்தாள்.
“என்ன? என்ன பிரச்னை?”
பின்னாலேயே சின்னான் வந்தான்.
“அப்பா” செண்பகம் கதறினாள்
“என்ன சொல்லு” என்றான் எரிச்சலாக.
அப்பொழுதுதான் அன்னம்மாளின் உடையைக் கழட்ட ஆரம்பித்து மீண்டும் மாட்ட வைத்ததால் வந்த ஆத்திரம் அது.
“இவர் என் கிட்ட தப்பா நடந்துக்கப் பாக்கறாரு” செண்பகம் சொல்ல அன்னம்மாள் ஆத்திரமானாள்.
“ஏண்டி? முளைச்சு மூணு இலை விடல அதுக்குள்ள என்னோட தம்பிய தப்பு சொல்றியா?”
அன்னம்மாள் கேட்க சின்னான் அருகில் வந்தான்.
அப்பா தன்னை புரிந்து கொள்வார் என்று அவரை நம்பிக்கையாக பார்த்தாள் செண்பகம்.
“என்ன செண்பகம்?”
“அப்பா”
“வந்தவங்க கிட்ட எப்படி மரியாதையா நடந்துக்கணும்னு தெரியாதா?”
சின்னான் கேட்க செண்பகம் அதிர்ந்தாள்.
“அப்பா”
“அவர்கிட்ட மன்னிப்பு கேளு ” காளிங்கனை கைகாட்டிச் சொன்ன சின்னானை வெறித்தாள் செண்பகம்.
இனி அப்பாவை நம்பி பயனில்லை.
சின்னான் அன்னம்மாளை தள்ளிக்கொண்டு அறைக்குள் நுழைந்தான்.
ஒன்றும் செய்யத் தோன்றாமல் கையறு நிலையில் நின்றிருந்த செண்பகத்தைப் பார்த்து புன்னகைத்தான் காளிங்கன்.
“என்ன அதிர்ச்சியா இருக்கா? ” காளிங்கன் கேட்டபடி மீண்டும் வர செண்பகம் தூங்கிக்கொண்டிருந்த ராசாத்தியை தன் தோள் மேல் போட்டபடி சமையல் அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டாள்.
“ஏய்” என்று ஆவேசமாக கத்தியபடி ஓடி வந்த காளிங்கன் சமையல் அறைக் கதவை தொடர்ந்து தட்ட செண்பகம் திறக்கவில்லை.
இரவு முழுவதும் யோசித்த செண்பகம் ஒரு முடிவிற்கு வந்தாள்.
ராசாத்தியை தூக்கிக்கொண்டு எங்காவது போய்விடுவோம் இங்கிருந்தால் ஆபத்து.
பொழுது விடிந்தது. சமையல் அறைக் கதவை திறந்து வெளியே வந்தாள்.
காளிங்கனைக் காணவில்லை. கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
அன்னம்மாள் கதவைத் திறந்து வெளியே வந்தாள்.
“ஏண்டி?”
“சித்தி”
“சுடுதண்ணி வை குளிக்கணும்”.
“சரிங்க சித்தி”
செண்பகம் கிளம்புவதற்கான ஆயத்த ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தாள். அம்மாவின் போட்டோவை எடுத்து வைத்துக் கொண்டாள்.
‘அம்மா எங்க போகப் போறேன்னு எனக்குத் தெரியல. ஆனா எங்க போனாலும் எனக்கும் ராசாத்திக்கும் எப்பவுமே நீங்க துணையா இருக்கணும்.’
வெளியே அன்னம்மாளும் காளிங்கனும் பேசுவது கேட்டது.
“அக்கா இன்னிக்கு ஆள் வராங்க.”
“எத்தனை மணிக்கு?”
“மத்தியானம் மூணு மணிக்கு.”
“எவ்வளவு தருவாங்க?”
“எப்படியும் ஒரு மூணு லட்சம் கிடைக்கும்.”
“ரொம்ப சந்தோசம் தம்பி.”
“இதுல என்னக்கா இருக்கு? எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான்.”
“என்ன சொல்லு?”
“செண்பகத்தை எங்கயாச்சும் அனுப்பிட முடியுமா?”
“ஏன்? கேக்கற?”
“ராசாத்தியைக் கொண்டு போகும் போது ஏதாவது பிரச்சனை பண்ணா?”
உள்ளே செண்பகம் திக்கென்று அதிர்ந்தாள்.
அடக்கடவுளே இவர்கள் இருவரும் இவ்வளவு கொடூரமானவர்களா?
இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று எடுத்த முடிவு மிகவும் சரியானது. அவர்கள் அசந்த நேரம் பார்த்து வெளியில் போய்விட வேண்டியதுதான்.
அன்று மதியம் அனைவரும் சாப்பிட்டபிறகு காளிங்கன் கண்ணயர்ந்து விட செண்பகம் உஷாரானாள். அன்னம்மாள் எங்கே இருக்கிறாள் என்று பார்த்தாள். அறையிலிருக்க செண்பகம் ராசாத்தியை தூக்கிக் கொண்டாள். ஒரு கையில் ராசாத்தி மறுகையில் ஒரு கட்டைப்பையில் இருவருக்குமான துணிகள் எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
“எங்க பாப்பா போகணும்?” ஆட்டோ டிரைவர் கேட்க
“ரயில்வே ஸ்டேஷன் அண்ணா” என்றாள்.
கால் மணி நேரத்தில் ரயில்வே ஸ்டேஷன் வந்துவிட உள்ளே சென்றவள் யோசித்தாள்.
எங்கு போவது?
‘சென்னை சென்ட்ரல் செல்லும் அதிவிரைவு வண்டி பிளாட்பார்ம் எண் ஒன்றில் வந்து சேரும்’
அறிவிப்பைக் கேட்டவள் கவுண்டருக்கு சென்று சென்னைக்கு டிக்கெட் வாங்கினாள்.
பிளாட்பாரத்திற்கு சென்று காத்திருந்தாள்.
அவள் மலங்க மலங்க விழிப்பதை பார்த்த ஒருவன் அவளிடம் வந்தான்.
“பாப்பா எந்த ஊருக்குப் போறே?” கேட்டான்.
“சென்னைக்குண்ணா”
சொன்னவள் மூக்கில் தன் கைக்குட்டையை வைத்தான். செண்பகம் தன்னிலை இழக்க அவன் ராசாத்தியை தூக்கிக் கொண்டு ஓடினான்.
கொஞ்ச நேரம் கழித்து எழுந்துப் பார்த்த செண்பகம் ராசாத்தியைக் காணாது பதறினாள்.
“அய்யா என் தங்கச்சியைப் பாத்தீங்களா?”
ஒவ்வொருவராகப் போய் கெஞ்சினாள்.
எவரும் அவளை சட்டை செய்யாமல் போக பைத்தியம் பிடித்தவள் போல் ஓடினாள்.
“ராசாத்தி எங்க இருக்க?”
கடவுளே ராசாத்தி எனக்கு திரும்பக்
கிடைக்கணும்
சற்று தூரத்தில் ராசாத்தியின் அழுகுரல் மாதிரி கேட்க திரும்பிப் பார்த்த செண்பகத்திற்கு போன உயிர் வந்தது போல் இருந்தது. எதிரிலிருந்த பிளாட்பாரத்தில் எவனோ ஒருவன் ராசாத்தியைக் கையில் வைத்திருந்தான். எதைப்பற்றியும் கவலைப்படாத செண்பகம் தானிருந்த பிளாட்பார்மில் இருந்து தண்டவாளத்தில் குதித்தாள். தண்டவாளத்தைக் கடக்க முற்பட அந்த ஸ்டேஷனில் நிற்காத ரயில் ஒன்று மிக வேகமாக வந்ததை அறியாமல் கடக்க முற்பட்டவள் மேல் ரயில் மோதியது. ரத்தம் தெறித்தது.
தூக்கி வீசப்பட்டவளை இரு கரங்கள் அவள் கீழே விழாமல் பிடித்தன.
“அண்ணா ராசாத்தியக் காப்பாத்துங்க” சொன்னவள்
முன்தலையில் இருந்து வழிந்த ரத்தத்தைத் துடைத்தவர் தன் கர்ச்சீப்பை வைத்து அவளுக்கு கட்டுப் போட்டார்.
“எங்கம்மா இருக்கா? யாரும்மா ராசாத்தி?”
அவர் கேட்க செண்பகம் கை காட்டிய இடத்தில் அவன் திருதிருவென்று விழித்தான்.
அவனிடம் சென்றவர் கேட்டார்.
“எங்கடா குழந்தை?”
“எனக்குத் தெரியாது.”
ர்ரப்பென்று ஓங்கி அறைந்தார்.
அவன் கதறிக்கொண்டு கீழே விழ அவனை மிதிப்புதற்காக காலை ஓங்கினார்.
அவன் கதறினான்.
“நான் சொல்லிடறேன்”. சொன்னவன் அவரை அழைத்துக் கொண்டு அருகில் இருந்தவனிடம் போனான்.
துணி மூட்டையில் சுற்றி வைக்கப்பட்டிருந்த ராசாத்தி மீட்கப்பட்டாள்.
அவர் அந்த இருவரையும் பார்த்தார்.
அப்போது அவர் அருகில் அவரின் ஆட்கள் வந்தனர்.
“பாய் என்னாச்சு? எங்க போனீங்க?”
“அன்வர் இப்ப என் மேல எத்தனை கேஸ் இருக்கு?”
“எட்டு இருக்கும் பாய்”
“அன்வர்”
“சொல்லுங்க பாய்”
“இன்னொரு கேஸ் கூட இருந்துட்டுப் போகுது.இந்த ரெண்டு பேரோட ரெண்டு கையையும் எடுத்துடு”
பாய் சொல்ல அன்வரும் அவன் கூட்டாளி சலீமும் அரிவாளுடன் அந்த இருவரையும் நெருங்கினர்.
அவர்கள் அலறினர். கண்டுகொள்ளாத இருவரும் அரிவாள்களை வீசினர்.
கைகள் துண்டிக்கப்பட அவர்கள் துடித்தனர்.
பாய் செண்பகத்தை புன்னகையுடன் பார்த்தார்.
“பாப்பா இனி பயப்படாதம்மா நான் இருக்கேன்.”
“சரிண்ணா”
“ஆமா வீட்ல என்னம்மா நடந்துச்சு?”
செண்பகம் அழுதபடியே சொல்லத் தொடங்கினாள்.
முழுவதுமாகக் கேட்ட பாய் அழைத்தார்.
“அன்வர்”
“சொல்லுங்க பாய்”
“இன்னும் மூணு பேரை சுளுக்கெடுக்கணும்”
“பண்ணிடலாம் பாய். எங்க இருக்காங்க?”
“இந்த பாப்பாவோட வீட்ல.”
தொடரும்