12
“பாய் சொன்ன மாதிரி அவரோட தங்கச்சி ஃபாத்திமா நடத்தற ஹோம்ல பால்காரம்மா என்னையும் ராசாத்தியையும் சேர்த்துவிட்டாங்க.
ஃபாத்திமா அக்கா ரொம்ப அன்பா இருந்தாங்க. நான் ரொம்ப நாளைக்கு அப்புறம் நிம்மதியா ஹோம்ல தூங்கினேன்.
ராசாத்தியப் பார்த்துக்க ஒரு அம்மா இருந்தாங்க. நான் ஸ்கூலுக்குப் போனேன்.
எல்லாம் நல்லபடியா போச்சு. நானும் காலேஜ் படிப்ப முடிச்சேன். வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். அப்பயும் நாங்க ஹோம்ல தான் இருந்தோம். அப்போ ராசாத்தி பன்னிரண்டாவது படிச்சிட்டிருந்தா.
ஒருநாள் ஸ்கூல்ல இருந்து ரொம்ப பதட்டமா ஓடிவந்தா. என்னாச்சும்மான்னு கேட்டேன்.
தெரியல. யாரோ தொரத்தற மாதிரி இருக்கு ஆனா பின்னாடி திரும்பி பார்த்தா யாருமில்லன்னு சொன்னா.
எனக்கு பயமாயிடுச்சு.
ஃபாத்திமாக்கா கிட்ட சொன்னோம். அவங்களுக்கு ஒண்ணும் புரியல.
தர்காக்குக் கூப்பிட்டுப் போய் ஓதிவிட்டா சரியாயிடும்னு சொன்னாங்க.
தர்காக்குப் போலாம்னு சொல்லும்போதுதான் ராசாத்தி யாருன்னு எனக்குப் புரிஞ்சது.”
கூரிய நகங்களைக் கீழே குத்தியபடி செண்பகம் சொல்ல பாய் பிரமிப்பாய் கேட்டார்.
பூசாரியின் உடம்பிலிருந்த அன்னம்மாள் கடுங்கோபத்துடன் பாயைப் பார்த்தாள்.
செண்பகம் தொடர்ந்தாள்.
“அக்கா” செண்பகம் அழைக்க
ஃபாத்திமா புன்னகைத்தாள்
“ராசாத்தியக் கூப்பிட்டு வாம்மா. தர்காக்குப் போயிட்டு வந்துடலாம்”.
“சரிக்கா”
சொன்ன செண்பகம் தன் அறைக்குச் சென்றாள்.
“ராசாத்தி” அழைக்க பதிலில்லை.
செண்பகம் மீண்டும் அழைத்தாள்.
ராசாத்தி மௌனமாய் நிற்க செண்பகம் துணுக்குற்றாள்.
“ராசாத்தி கிளம்பும்மா தர்காக்குப் போயிட்டு வரலாம்”
செண்பகம் சொல்ல ராசாத்தி செண்பகத்தை வெறித்தாள்.
“என்னம்மா?” என்று பாசமாகக் கேட்ட செண்பகத்திற்கு பதில் ஒன்றும் சொல்லாத ராசாத்தியின் கையை செண்பகம் பிடிக்க ராசாத்தி செண்பகத்தை வித்தியாசமாய் பார்த்தாள்.
“ராசாத்தி என்னம்மா ஆச்சு? எதுக்கு இப்படி பார்க்கற?”
செண்பகம் வரிசையாய் கேள்விகள் கேட்க எதற்கும் பதில் சொல்லாத ராசாத்தி செண்பகத்தை இமைக்காது பார்த்தாள்.
செண்பகத்திற்குள் பயம்.
“குட்டிமா என்னடா ஆச்சு?”
“நான் தர்காக்கு வரல.”
“ஏன் மா?”
“வரலன்னு சொன்னா வரல. விடு என்னை.”
சொல்லிவிட்டு ராசாத்தி திரும்பி நிற்க செண்பகம் அவள் கையை மீண்டும் பிடித்தாள்.
“என்னம்மா ஆச்சு? அன்னிக்கு பயந்துட்டு ஓடிவந்தியே ஞாபகம் இருக்கா? “
“அதை விடு”
“என்னம்மா ஆச்சு?” செண்பகம் ராசாத்தியைத் திருப்ப முயல
“ஏய்ய்ய் சொன்னா புரியாதாடி உனக்கு?” ராசாத்தி கத்தினாள்.
செண்பகம் அதிர்ந்தாள். ஏதோ விபரீதம். ஒன்றும் சொல்லாமல் ராசாத்தியைப் பார்த்தாள். ராசாத்தியின் கண்களில் தெரிந்த அதீத வெறி அவளை அறையில் இருந்து வெளியேற வைத்தது.
“அக்கா” செண்பகம் பதட்டமாய் ஓடினாள்.
அவள் பதட்டமாக ஓடி வருவதைப் பார்த்த ஃபாத்திமா திடுக்கிட்டாள்.
“என்னாச்சு செண்பகம்? எதுக்கு இப்படி ஓடி வர்றே?”
“அக்கா” ஓடிவந்தவள் மூச்சு வாங்கினாள்.
“சொல்லுமா என்னாச்சு?”
“ரூம்ல ராசாத்தி”
“என்னாச்சு அவளுக்கு?”
“அவ வேற மாதிரி பேசறா.”
“என்னம்மா சொல்ற? வேற மாதிரி பேசறாளா?”
“ஆமாக்கா எனக்கு ரொம்ப பயமா இருக்குக்கா.”
“பயப்படாதே அக்கா நான் இருக்கேன்ல நீ இரு நான் போய் பார்க்கறேன்.”
சொன்ன ஃபாத்திமாவைப் பார்த்து திடுக்கிட்டாள் செண்பகம்.
“வேண்டாம்கா”
“ஏம்மா?”
“உங்கள ஏதாச்சும் பண்ணிடப் போறா.”
சொன்ன செண்பகத்தைப் பார்த்து சிரித்த ஃபாத்திமா ராசாத்தி இருந்த அறையை நோக்கிச் சென்றாள்.
அறையை நெருங்கும்போது ஒரு வித்தியாசமான வாசனையை தன்னைச்சுற்றி உணர்ந்தாள்.
என்ன இது? இப்படி ஒரு வாசனை? இந்த இடத்தில் இதுவரை இப்படி வந்ததல்லையே?
தனக்குள் எண்ணிய ஃபாத்திமா சுற்றும் முற்றும் பார்த்தாள்.
சூழ்நிலை சாதாரணமாகத் தெரிந்தாலும் அதில் ஏதோ ஒரு அசாதாரணம் இருப்பதாக அவளுக்குத் தோன்றியது.
திடீரென்று தன் அருகில் ஏதோ கடந்து சென்றது போலிருக்க ஃபாத்திமா முதல் முறையாகப் பயந்தாள்.
இன்னும் நாலு எட்டு எடுத்து வைத்தால் ராசாத்தியின் அறை. போலாமா? திரும்பிப் போய்விடலாமா?
ஃபாத்திமா மிகக் கவனமாய் சுற்றுமுற்றும் பார்த்தபடி மெதுவாக அடியெடுத்து வைத்தாள்.
திடீரென்று அந்த இடத்தின் அமைதியை குலைத்தபடி யாரோ கத்தும் சத்தம் கேட்க ஃபாத்திமா அதிர்ந்து போய் பார்க்க ஒரு கருப்புப் பூனை எதிரில் நின்றிருந்தது. பயங்கரமாய் சீறியது. பாய்வதற்கு தயார் நிலையில் இருந்த பூனையைப் பார்த்த ஃபாத்திமா பயந்தபடி நிற்க பூனை அவள் மீது பாய்ந்தது.
ஃபாத்திமாவின் முகத்தில் தன் முன்னங்கால்களால் அறைந்த பூனை தன் கோரைப் பற்களை நீட்டியபடி முகத்தை தாக்க முயன்றது. அந்தப் பூனையிடம் இருந்து விடுபட பாத்திமா தரையில் உருண்டாள்.
“யாராவது வாங்க ஹெல்ப் ஹெல்ப்” பாத்திமாவின் சத்தத்தைத் தொடர்ந்து ராசாத்தியின் அறைக் கதவு திறக்கப்பட்டது.
ராசாத்தி வெளியில் வந்து நிற்க ஃபாத்திமா அவளை அழைத்தாள்.
“ராசாத்தி காப்பாத்து. “
ராசாத்தியைப் பார்த்த பூனை பாத்திமாவை தாக்காமல் ஒரு நிமிடம் நின்றது. ராசாத்தியைப் பார்த்தது.
ராசாத்தி புன்னகைத்தாள்.அந்தப் புன்னகையில் குரூரம் கலந்திருக்க ஃபாத்திமாவிற்கு ஏதோ வில்லங்கம் என்று மட்டும் புரிந்தது. சட்டென்று எழுந்து ஓட முயன்றாள். ராசாத்தி பூனையைப் பார்த்து தலையசைக்க பூனை புரிந்து கொண்டது.
ஓடிய ஃபாத்திமாவின் முதுகின் மீது பாய்ந்தது. தன் கால் நகங்களால் அவள் கழுத்தை அழுத்தமாகப் பற்றியது. ஃபாத்திமா தவித்தாள். பூனையிடம் இருந்து விடுபட முயற்சித்து முடியாமல் திணறினாள்.
பூனை தன் பிடியை இறுக்கியது.
“அய்யோ செண்பகம் “
பலங்கொண்ட மட்டும் கத்தினாள்.
ஃபாத்திமாவின் குரல் தூரமாக எங்கோ ஒலிப்பதைக் கேட்ட செண்பகம் சத்தம் வந்த திசை நோக்கி ஓடினாள்.
ஓடும்போது கீழே கிடந்த உருட்டுக்கட்டை ஒன்று பார்வைக்குத் தென்பட அதை எடுத்துக்கொண்டே ஓடினாள்.
அவள் கண்ட காட்சி அவளை உச்சமாய் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஃபாத்திமா கீழேக் கிடந்து துடிக்க பூனை தன் கூரிய பற்களால் அவள் கழுத்தைக் கடிக்க முயன்ற அந்த நொடியில் செண்பகம் தன் பலம் கொண்டமட்டும் உருட்டுக்கட்டையை ஓங்கி பூனை மீது வீசினாள். குறி தவறவில்லை. பூனை எகிறிப்போய் காம்பவுண்ட் சுவரில் அடிபட்டு விழுந்தது. தீனமாய் அலறியது
ஃபாத்திமாவை கைகொடுத்து எழுப்பினாள் செண்பகம். பாத்திமா முகம் கழுத்தில் ரத்தம் வடிந்த நிலையில் ராசாத்தியை பயமாய் பார்த்தாள்.
‘நடந்ததை செண்பகத்துக்கிட்டே சொன்னே உன்னைக் கொன்னுடுவேன்’
ராசாத்தி சைகையில் சொன்னதைப் புரிந்துகொண்டாள்.
செண்பகம் அறியாவண்ணம் ராசாத்தியிடம் தலையசைத்தாள்.
“என்னாச்சுக்கா? அந்தப் பூனை எப்படி வந்துச்சு?” செண்பகம் கேட்க
“தெரியலம்மா”. நடுங்கியபடி சொன்னவளை அவள் அறைக்கு அழைத்துப்போய் காயங்களுக்கு மருந்து போட்டாள் செண்பகம்.
அப்பொழுதுதான் அவளுக்குத் தோன்றியது. இவ்வளவு நடந்திருக்கிறது. ஏன் ராசாத்தி ஒன்றும் சொல்லாமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றாள்?
ஏதோ சரியில்லை.
ஃபாத்திமா கொஞ்ச நேரத்தில் எடுத்துக்கொண்ட மாத்திரையின் விளைவால் தூங்கிவிட செண்பகம் மெல்ல தன் அறைக்கு நடந்தாள்.
சுற்றுமுற்றும் பார்த்தபடி கவனமாய் அடியெடுத்து வைத்தாள். அவள் பயந்தபடி ஒன்றும் சம்பவிக்கவில்லை. அறையில் ராசாத்தி அமைதியாக அமர்ந்திருந்தாள்.
“ராசாத்தி”
செண்பகம் அழைக்க ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்தாள்.
“உன்னத்தாண்டி? என்னடி ஆச்சு உனக்கு?”
கேட்ட செண்பகத்தை பதில் ஒன்றும் சொல்லாமல் வெறித்தாள்.
வழக்கமாக மூச்சுக்கு முன்னூறு தடவை அக்கா என்று அழைக்கும் ராசாத்தி இன்று இப்படி இருந்தது செண்பகத்தை நடுங்கச் செய்தது.
“ஒண்ணு சொல்லவா? “
ராசாத்தி கேட்க சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள் செண்பகம்.
“சொல்லும்மா”
“தூக்கு மாட்டிக்கறதெல்லாம் ரொம்ப கஷ்டம். அதுவும் எலும்பு உடைஞ்சதுக்கப்புறம் உள்ள காத்துக்காகப் போராட்டமே நடக்கும். வெளிய அவ்வளவு காத்து இருக்கும். உள்ள கொஞ்சம் காத்து கிடைக்குமான்னு துடிக்கும். எவ்வளவு பெரிய ரண வேதனை தெரியுமா?”
செண்பகம் ராசாத்தி சொன்னதை அதிர்ந்து போய் பார்க்க அவள் செண்பகத்தைப் பார்த்து புன்னகைத்தாள். எழுந்தாள்.
தொடரும்