Sunday, December 22, 2024
Google search engine
HomeHorrorராசாத்தீ 13 (Horror) கவுதம் கருணாநிதி

ராசாத்தீ 13 (Horror) கவுதம் கருணாநிதி

13 எழுந்த ராசாத்தி செண்பகத்தையே பார்த்தாள். செண்பகத்திற்கு பயம் ஊடுருவியது. ராசாத்திக்கு ஏதோ ஆகிவிட்டது கடவுளே என்ன இது இப்படி ஒரு சோதனை தனக்குள் எண்ணியவள் ராசாத்தியின் அருகில் செல்ல முயன்றாள். ராசாத்தி அவளைப்பார்த்து குரூரமாக சிரித்தாள். “வா செண்பகம் ரொம்ப நாளா உன்னத்தான் பார்க்கக் காத்துட்டிருக்கேன்.” “ரொம்ப நாளாவா?” செண்பகம் உஷாரானாள் ராசாத்திக்குள் வேறு ஏதோ இருக்கிறது. ராசாத்தியுடன் பேசியபடியே கதவைப் பார்த்தாள் செண்பகம். ராசாத்தி சிரித்தாள். “என்ன செண்பகம் எப்படித் தப்பிக்கலாம்னு பார்க்கறயா? இன்னைக்கு எனக்கு ரொம்ப சந்தோஷமான நாள். ஏன்னு கேளு.” ராசாத்தி புன்னகையுடன் சொல்ல செண்பகம் மெலிதான பயத்துடன் “ஏன்?” என்று கேட்டாள். “ஏன்னா நீ இன்னிக்கு சாகப்போறே” “என்ன சொல்றே?” “உண்மையத்தான் சொல்றேன் செண்பகம். நான் செத்த மாதிரியே நீயும் சாகப் போறே.” “யார் நீ?” “உனக்கு ஒண்ணும் தெரியாது இல்ல? ஆள் அனுப்பிட்டு ஓடி ஒளிஞ்சவதானே நீ?” “என்ன சொல்ற?” “அந்த பாய் வீட்டுக்கு வந்திருந்தான். என் தம்பியக் கொன்னான். என்னைத் தூக்குப் போட வெச்சான்.” ராசாத்தி சொல்ல செண்பகம் அதிர்ந்து போய் பார்த்தாள். “நீ..நீ?” “ஆமாண்டி நான் தான் அன்னம்மா.” ராசாத்தி உரத்த குரலில் சொல்ல செண்பகம் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தாள். “என்னடி தப்பிச்சு ஓடப பார்க்கறியா? தாராளமா செய். ஆனா உன் ராசாத்திய நான் கொன்னுடுவேன்.” “சித்தி” “சீ என்ன அப்படி கூப்பிடாத. யாரையோ கூப்பிட்டு வந்து என்னை கொலை பண்ணவ தானே நீ?” “சித்தி அப்படி நடக்கும்னு எனக்குத் தெரியாது.” “போதும் நிறுத்துடி. செய்றதெல்லாம் செஞ்சிட்டு நாடகமாடறியா?” “சித்தி என்ன நம்புங்க” ராசாத்தி செண்பகத்தைப் பார்த்தாள். “அந்த கத்தி நல்லா வெட்டுமா?” “சித்தி” “சொல்லுடி உன் கிட்ட தான் கேட்கறேன் அந்த கத்தி நல்லா வெட்டுமா?” ராசாத்தி கேட்க தன்னையும் மீறி தலையாட்டினாள் செண்பகம். “ம்” “எடு அந்தக் கத்திய” “சித்தி” “எடுடி” செண்பகம் எடுத்தாள். “அதக்கொடு இப்படி” “சித்தி” “கொண்டா” செண்பகம் நடுங்கும் கரங்களில் கத்தியை ராசாத்தியிடம் கொடுத்தாள். வாங்கிய ராசாத்தி புன்னகைத்தாள். “இப்ப நான் என்ன பண்ணப் போறேன் தெரியுமா?” “சித்தி” “என் கழுத்தை நானே அறுத்துக்குவேனாம். அப்ப என்ன நடக்கும்?” ராசாத்தி குரூரமாக சிரித்தபடி கேட்க செண்பகம் அலறினாள். “வேண்டாம் சித்தி.” “வேண்டாமா?” “ப்ளீஸ் அவள விட்டுடுங்க.” “விடணுமா? ” “ப்ளீஸ் சித்தி” “அப்போ நீ ஒண்ணு பண்ணனுமே” “சொல்லுங்க சித்தி என்னவேணாலும் பண்றேன்.” “தூக்கு மாட்டிக்க” ராசாத்தி சொல்ல செண்பகம் அதிர்ந்து போய் பார்த்தாள். “என்னடி பார்க்கிற? என்ன மாதிரியே நீயும் துடிச்சு சாகணும் அதை நான் பார்க்கணும்.” “சித்தி” “தூக்கு மாட்டிக்கடி” சொன்ன ராசாத்தி கத்தியைத் தன் கழுத்தில் வைக்கப் போனாள். “அய்யோ வேண்டாம் சித்தி நான் தூக்கு மாட்டிக்கறேன்.” ராசாத்தி குரூரமாய் சிரித்தாள். செண்பகம் சூட்கேசில் இருந்து சேலை ஒன்றை எடுத்தாள். அதைக் கயிறு போல் முறுக்கி ஒரு முனையை உத்திரத்தில் வீச அது உத்திரத்தின் மறுவழியே வந்தது. அதைப் பிடித்து இரு முனைகளையும் சேர்த்து முடிச்சிட்டாள். ஸ்டூல் ஒன்றைப் போட்டு அதன் மீது ஏறி நின்றாள். ராசாத்தி செண்பகத்தை இமைக்காமல் பார்த்தாள். “சித்தி” “சொல்லுடி” “என்னோட ராசாத்திய ஒருமுறை நான் தொட்டுப் பார்த்துக்கவா?” “என்னடி டிராமா பண்ற?’ “நான் கண்டிப்பா தூக்கு மாட்டிக்கறேன் சித்தி ப்ளீஸ் ஒரே ஒரு முறை மட்டும்.” ராசாத்தி அருகில் வந்தாள். “சீக்கிரம்” செண்பகம் ராசாத்தியின் முகத்தைத் தொட்டாள். “குட்டிமா உன்ன விட்டுட்டு அக்கா போறேன். நீ ரொம்ப நாள் நல்லா இருக்கணும்.” செண்பகத்தின் கண்களில் கண்ணீர் வழிந்தது. “ம் சீக்கிரம்” ராசாத்தி சொல்ல செண்பகம் சேலையின் முடிச்சைத் தன் கழுத்தில் மாட்டிக் கொண்டாள் ஸ்டூலைத் தட்டிவிட ராசாத்தி முயல அப்போது மாதா கோவில் மணியோசை எங்கிருந்தோ கேட்டது. “அக்கா” குரல் கேட்ட செண்பகம் அதிர்ந்தாள். ராசாத்தி கண்களில் நீருடன் நின்றிருந்தாள். “என்னக்கா பண்றே? இங்க என்னக்கா நடக்குது?” செண்பகம் சுதாரித்தாள். சேலை முடிச்சிலிருந்து கழுத்தை விடுவித்துக் கொண்டு கீழே இறங்கினாள். “ராசாத்தி” “அக்கா” “அவ இங்கதான் எங்கயோ இருக்கா அவ திரும்ப உன்னைப் பிடிக்கிறதுக்குள்ள நாம வெளிய போகணும். வா சீக்கிரம்.” “யாருக்கா?” “அதெல்லாம் இப்ப பேசிட்டிருக்க நேரமில்ல சீக்கிரம் வா” செண்பகத்தின் பதட்டம் ராசாத்தியையும் தொற்றியது. இருவரும் அறையிலிருந்து வெளியே வந்தனர். ரிஷப்சன் நூறடி. அதற்குப் பக்கத்தில்தான் பாத்திமாக்கா இருக்கிறார். அவரையும் அழைத்துக்கொண்டு மூவரும் முதலில் இங்கிருந்து வெளியே போகவேண்டும். முடியுமா? செண்பகம் தன்னுள் யோசித்தபடியே சுற்று முற்றும் பார்த்தாள். ஓடி விடலாமா? யோசித்தவள் ராசாத்தியின் கையைப் பிடித்தாள் “அக்கா” “ம்” “பயமாயிருக்கு” “பயப்படாதே எது நடந்தாலும் என் கைய விட்டுறாத” “சரிக்கா” “ஓடு” இருவரும் அதிக வேகத்தில் அங்கிருந்து ஓடினர். ரிசப்ஷனை அடைந்தனர். மூச்சு வாங்கியது. பின்னால் ஏதோ சத்தம் கேட்கத் திரும்பிப் பார்க்காமல் பாத்திமாவின் அறைக்குள் நுழைந்தனர். “அக்கா” “என்ன செண்பகம்?” கேட்ட ஃபாத்திமா ராசாத்தியை பயமாகப் பார்த்தாள். “அக்காக்கு என்னாச்சு?” ராசாத்தி ஃபாத்திமாவின் அருகில் வர “இல்ல இல்ல எனக்கு ஒண்ணுமில்ல.” ஃபாத்திமா நடுக்கமாய் சொல்ல அந்த சூழ்நிலையிலும் செண்பகத்திற்கு புன்னகைக்கத் தோன்றியது. “அக்கா” “சொல்லு செண்பகம்” “உடனே நாம மூணு பேரும் இங்கிருந்து கிளம்பணும்கா” “என்ன சொல்ற செண்பகம் எங்க போகணும்?” “எங்கயாவது போகணும் ஆனா இங்க இருக்க கூடாது இங்க இருந்தா நமக்கு ஆபத்து.” செண்பகம் சொல்ல பாத்திமா ஒன்றும் புரியாமல் செண்பகத்தைப் பார்த்தாள். “அக்கா நேரமில்ல ப்ளீஸ் வாங்க ” பாத்திமாவை செண்பகமும் ராசாத்தியும் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டார்கள். பாத்திமா டிரைவருக்கு போன் செய்தாள் “பீட்டர்?” “மேடம்” “கார் முன்னாடி கொண்டு வா” “யெஸ் மேடம்.” பீட்டர் வெளியில் காரைக் கொண்டு வந்து நிறுத்தும் சத்தம் கேட்டது. மூவரும் வெளியில் வந்தனர். செண்பகத்தின் பார்வை அங்கும் இங்கும் அலைந்தது. எந்த இடத்திலும் எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாக இருந்த சூழல் அவளுக்கு ஏதோ அமானுஷ்ய உணர்வைத் தந்தது. ஃபாத்திமாவைக் காரில் ஏற்றினர். இருவரும் ஏறிக்கொண்டனர். “மேடம் போலாமா?” டிரைவர் கேட்க ஃபாத்திமா தலையசைக்க கார் புறப்பட்டது. கேட்டை அடையும் போது எதிரில் கருப்பாய் உருவம் ஒன்று நின்று கொண்டிருக்க அதைப் பார்த்த டிரைவர் திகைக்க உள்ளிருந்த மூவரும் நடுங்கினர். “செ…ண்… ப… க…ம்” உருவம் கோரமாய் கத்தியது. “அக்கா” ராசாத்தி செண்பகத்தின் கைகளை இறுக்கிப் பிடித்துக்கொள்ள பாத்திமா என்ன செய்வது என்று தெரியாமல் மலங்க மலங்க விழித்தாள். டிரைவர் ஒரு நிமிடம் யோசித்தான். தன் டேஷ்போர்டில் இருந்த அந்த பாட்டிலை எடுத்தான். “மேடம்” “என்ன பீட்டர்?” “இந்த பாட்டில்ல இருக்கிறது வேளாங்கண்ணி மாதா கோயில் தீர்த்தம். மேல தெளிச்சுக்குங்க எல்லாரும் .” சொன்னவன் தன் மேல் கொஞ்சம் தெளித்துக்கொண்டு பாட்டிலை அவர்களிடம் கொடுத்தான். அவர்களும் தெளித்துக் கொண்டனர். டிரைவர் கண்களை மூடி சிலுவையிட்டுக் கொண்டான். எதிரில் அந்த உருவம் இன்னும் மாறாமல் இருக்க சட்டை செய்யாமல் காரை எடுத்தான். ஆக்சிலேட்டரை பலம் கொண்ட மட்டும் அழுத்த கார் சீறியது. அந்த உருவத்தை ஊடுருவ காற்றைக கிழித்துக்கொண்டு அன்னம்மாளின் அலறல் சத்தம் கேட்டது. தொடரும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

error: Content is protected !!