8
பாய் குழம்பினார்.
“நீ என்ன சொல்ற? எனக்கு காத்தான் குடும்பத்தை நல்லாத் தெரியும். அவனுக்கு ராசாத்தி ஒரே ஒரு பொண்ணு தான்.”
பாய் கேட்க எதிரில் மங்கலாய் அந்த உருவம் அவர் முன் தோன்றியது. கைகளில் கூரிய நகங்கள்.
பாய்க்கு ஒரு நிமிடம் நடுக்கம் வர என்ன செய்வதென்று புரியாமல் பார்த்தார்.
அது தொடர்ந்தது.
“நான் சொன்னது இந்த ஜென்மத்தில் இல்ல.”
பாய் அதிர்ந்தார்
“என்ன சொல்ற?”
“போன ஜென்மத்துல ராசாத்திதான் என் தங்கச்சி. “
பாய் மௌனமாக இருக்க அது தொடர்ந்தது.
“ராசாத்தியக் கொண்டுவந்து என் கையில கொடுத்தது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு.”
அரசு மருத்துவமனை
பிரசவ வார்ட்.
சின்னான் மகள் செண்பகத்துடன் வெளியில் காத்திருந்தான்.
“அப்பா” செண்பகம் அழைத்தாள்
“ம்”
“தம்பி எப்பப்பா பொறப்பான்?”
“பொறப்பான் மா”
“அப்பா”
“ம்”
“தம்பிக்கு போட்டு விட இது கொண்டுவந்திருக்கேன் பா “
ஒரு மாலையை எடுத்துக் காண்பித்தாள் செண்பகம்.
“இதெல்லாம் இப்பப் போடக்கூடாதும்மா. “
“ஏன் பா?” செண்பகம் கேட்க உள்ளேயிருந்து சின்னானின் மனைவி வள்ளி அலறும் சத்தம் கேட்டது.
கூடவே ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்க சின்னான் மலர்ந்தான்.
“செண்பகம் உனக்குத் தம்பிப் பாப்பா பொறந்துட்டான்.”
சொன்னவன் பார்வையில் வெளியே வந்த நர்ஸ் பட விரைந்தான்.
“உனக்குப் பெண் குழந்தை பொறந்திருக்கு” நர்ஸ் சொல்ல கடும் ஏமாற்றமாய் உணர்ந்தான்.
நர்ஸ் தொடர்ந்தாள்.
“குழந்தைய மட்டும்தான் எங்களால காப்பாத்த முடிஞ்சது.”
ஒரு வாரம் வேகமாக ஓடிப்போனது.
வள்ளியை அடக்கம் செய்து வந்தாகிவிட்டது. வந்தவர்கள் எல்லாம் புறப்பட்டுச் சென்று விட சின்னான் மட்டும் தனித்திருந்தான்.
குழந்தையை செண்பகம் கவனித்துக்கொண்டாள். அதற்கு பாலுக்கு பசும்பால் ஏற்பாடு செய்தாள். அதைக் குளிப்பாட்ட பக்கத்து வீட்டக்காவை உதவிக்கு வைத்து குளிப்பாட்டக் கற்றுக் கொண்டாள்.
குழந்தையை கவனித்துக்கொள்ள ஐந்தாம் வகுப்பில் படித்து வந்த பத்து வயது செண்பகம் படிப்பை நிறுத்திக் கொண்டாள்.
குழந்தை அழுதால் தூக்கத்தில் கூட சட்டென்று முழித்து குழந்தையைக் கவனித்தாள்.
ஆனால் சின்னானின் திட்டம் வேறாக இருந்தது.
“என்ன சொல்ற சின்னா?” இருளன் கேட்டான்.
“எனக்கு வேண்டாம் முடிச்சு விட்டுடுங்க.”
“சரி நாங்க பார்த்துக்கறோம்.”
“ஒண்ணும் பிரச்னை வராதுதானே?”
“அதெல்லாம் ஒண்ணும் பிரச்னை ஆகாது. நாலே நாலு நெல்மணி பாப்பா வாய்ல போடறோம். நல்ல குளிரா தலைக்குத் தண்ணி ஊத்திட்டா சோலி முடிஞ்சிடும்.”
சொன்ன இருளனைப் பார்த்து தலையசைத்தான் சின்னான்.
“அப்ப இன்னிக்கு ராத்திரிக்கு வரவா?”
“ம் வாங்க”
“விஷயம் முடிஞ்சவுடனே சட்டுன்னு எடுத்து புதைச்சுடு சின்னா. அதுக்கு ஏற்பாடு பண்ணிக்க யாராவது கேட்டா காணாமப் போயிடுச்சுன்னு சொல்லு.”
“யார் கேக்கப் போறாங்க?”
“செண்பகம் கேக்கும். அதான் பாப்பா மேல உயிராத் திரியுதே.”
“அந்தக் கழுதைய நான் தட்டி வச்சுடறேன்.”
“சரி பார்த்துக்க ஆமா கேக்க மறந்துட்டேன். என்ன திடீர்னு வந்து இப்படி சொல்ற?”
இருளன் கேட்க சின்னான் சிரித்தான்.
“வேடப்பட்டில பொண்ணு கொடுக்கிறோம்னு சொன்னாங்க.”
“அடி சக்கை. அதச் சொல்லு முதல்ல”.
இருளன் சொல்ல சின்னான் சிரித்தான்.
“போனவள நினைச்சுட்டு வாழ்க்கைய போக்கிக்க முடியுமா?”
“வாஸ்தவம்.”
“அதான் சின்னவள முடிச்சு விட்டோம்னா வர்றவளுக்குத் தொல்லையிருக்காது.”
“புரியுது. பெரியவளுக்கும் ஏதாச்சும் வழி பண்ணிட வேண்டியது தானே?”
“அவளையும் கொன்னுடச் சொல்றியா?”
“நல்ல ஆளுப்பா நீ. நான் அப்படி சொல்வேனா?”
“வேறென்ன சொல்ல வந்தே?”
“வெளிநாட்டில் வீட்டு வேலைக்கு இந்த மாதிரி சின்னவயசுப் பொண்ணுங்க வேணுமாம்.”
“ம்”
“செண்பகத்தை அங்க அனுப்பிட்டா காசுக்கு காசுமாச்சு. தொல்லை இல்லாமயும் இருக்கும். என்ன சொல்றே?”
“நல்ல யோசனை. சொல்றேன்.”
“ம் சரி சின்னான். அப்ப நைட் பார்க்கலாம்.”
இருளன் சொல்ல சின்னான் தலையசைத்தான்.
“செண்பகம் செண்பகம்”
பால்காரம்மா குரல் கொடுக்க செண்பகம் வெளியில் வந்தாள்.
“இந்தாக் கண்ணு பால்”
பாத்திரத்தை வாங்கிக் கொண்டு புன்னகைத்த செண்பகத்தை தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார் பால்காரம்மா.
“நீ நல்லா இருக்கணும் கண்ணு”
செண்பகம் புன்னகைத்தாள்.
“தங்கச்சி என்ன பண்றா?”
“தொட்டில்ல தூங்கறா”
செண்பகம் சொல்ல பால்காரம்மா உள்ளே வந்து பார்த்தார்.
“அட அட என்ன அழகா இருக்கா குட்டிப் பாப்பா. பேரென்ன கண்ணு வச்சிருக்கீங்க?”
அப்போதுதான் செண்பகத்திற்கு உரைத்தது. பேர் ஒன்றும் வைக்கவில்லை என்பது.
அப்பாவிடம் ஒரு முறை அதைப்பற்றி கேட்க கழுதைக்குப் பேர் தான் குறைச்சலாயிருக்கா? என்று கேட்டு விட செண்பகத்திற்கு கஷ்டமாகிவிட்டது.
அப்பாக்கு ஏன் பாப்பாவைப் பிடிப்பதேயில்லை?
எப்பொழுது பாப்பாவைப் பற்றி பேசினாலும் எரிந்து விழுகிறார்.
ஒருவேளை அம்மாவை சாமிகிட்ட அனுப்பிட்டு பாப்பா பிறந்ததால இருக்குமா? அதுல பாப்பா என்ன தப்பு பண்ணுச்சு? பாவம் பாப்பா.
அதோட ரோஸ் கலரும் குண்டுக் கண்ணும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.
கவலைப்படாத பாப்பா உனக்கு யாருமில்லன்னு நினைக்காத அக்கா நான் இருப்பேன். என் ஆயுசு பூரா இருப்பேன். என் ஆயுசு முடிஞ்சாக் கூட உன் கூட இருப்பேன் பாப்பா.
குழந்தையைப் பார்த்து அடிக்கடி சொல்லிக் கொள்வாள் செண்பகம்.
பால்காரம்மா மீண்டும் கேட்டார்.
“கண்ணு பேரென்ன வெச்சிருக்கீங்க? “
“இன்னும் எதுவும் வைக்கல.”
“என்ன இந்தத் தங்கத்துக்குப் பேர் இல்லயா? ராசாத்தி மாதிரி இருக்கா. செண்பகம் “
“அக்கா”
“ராசாத்தின்னே பேர் வை”
“சரிக்கா”
குழந்தையின் காதில் செண்பகம் ராசாத்தி என்று சொல்ல அது புன்னகைத்தது.
பால்காரம்மா கொஞ்சினார்.
“நீங்க தான் ராசாத்தியா? சிரிக்கறீங்களா? சிரிங்க”
செண்பகம் புன்னகையுடன் பார்த்தாள்.
இரவு.
சின்னான் ரகசியமாய் உள்ளே வந்து பார்த்தான்.
தொட்டிலில் ராசாத்தி தூங்கிக் கொண்டிருக்க கீழே பாயில் செண்பகம் தூங்கிக் கொண்டிருந்தாள்.
எங்கே இருளன் இன்னும் காணோம்? தனக்குள் நினைத்த சின்னான் வெளியே வந்து காத்திருந்தான்.
மின்னல் வெட்டியது. காற்று குளிராய் வீச மழை வரும் போல் தோன்றியது.
வீட்டின் பின்னால் சென்று வெட்டி வைத்திருந்த குழியைப் பார்த்தான்.
மழைத் தண்ணீர் குழிக்குள் போய்விட்டால் ராசாத்தியைப் புதைப்பதில் சிக்கல் ஆகிவிடும் என்று அவனுக்குத் தோன்ற ஒரு பாலித்தீன் கவர் கொண்டு குழியை மூடினான். இனி மழைத் தண்ணீர் உள்ளே போகாது.
திருப்தியாய் உணர்ந்தான்.
மழை தூற ஆரம்பித்தது.
எங்கே இந்த இருளனை இன்னும் காணோம்?
யோசித்தவன் பார்வை வெங்கடேஸ்வரா கூல்ட்ரிங்க்ஸ் கடையில் இருந்து வாங்கி வந்திருந்த ஐஸ் கட்டிகளின் மேல் விழுந்தது. ஐஸ் கட்டி உருகத் தொடங்கியிருந்தது.
தட்டிப் பக்கத்தில் சத்தம் கேட்க சின்னான் எழுந்து பார்த்தான்.
இருளன்தான். தலையில் முக்காடு போட்டிருந்தான்.
“என்ன சின்னா ரெடியா?”
இருளன் கேட்க தலையசைத்தான்.
“ஐஸ்கட்டி வாங்கிட்டியா?”
“ம்”
“நெல்மணி நான் கொண்டாந்துட்டேன்”
“ம்”
“போய் பாப்பாவைத் தூக்கிட்டு வா போ”
இருளன் சொல்லத் தலையசைத்த சின்னான் உள்ளே போனான்.
தொட்டிலின் ஒரு முனையைத் தன் கையோடு சேர்த்து செண்பகம் கட்டியிருக்க அவள் உறங்குகிறாள் என்பதை உறுதி செய்தவன் ராசாத்தியை மெதுவாகத் தொட்டிலில் இருந்து வெளியே எடுத்தான். பூனைபோல் நடந்து வெளியில் வந்தான்.
இருளன் ராசாத்தியை வாங்கிக்கொண்டான்.
“சின்னா”
“ம்”
“ஐஸ்கட்டியத் தண்ணில போடு”
“ம்”
சொன்ன சின்னான் ஐஸ்கட்டியை எடுத்து நீரில் போட்டான்.
இருளன் நெல் மணிகளை எடுத்தான்.
“சின்னா” இருளன் அழைக்க சின்னான் குளிர்ந்த நீரை பக்கெட்டோடு எடுத்துக்கொண்டான். தயாரானான்.
தொடரும்