Sunday, December 22, 2024
Google search engine
HomeHorrorராசாத்தீ 9 (Horror) கவுதம் கருணாநிதி

ராசாத்தீ 9 (Horror) கவுதம் கருணாநிதி

9

இருளன் ராசாத்தியின் வாயில் நெல்மணிகளை போட எடுத்தான். அதிர்ந்தான். செண்பகம் நின்றுகொண்டிருந்தாள்.

“அப்பா “

செண்பகத்தின் குரல் கேட்ட சின்னான் அதிர்ச்சியானான்.

“இங்க என்னமா பண்ற? போய் தூங்கு.”

செண்பகம் சின்னானைப் பார்த்தாள்

“அப்பா”

“ம்”

“பாப்பாவை எங்கிட்ட கொடுத்துடுங்கப்பா “

செண்பகம் கேட்க சின்னான் கண்டு கொள்ளாமல் அமைதியாக நின்றான்.

செண்பகத்தின் கண்களில் கண்ணீர் வழிந்தது. சட்டென்று சின்னான் கால்களில் விழுந்தாள்.

“அப்பா பாப்பா உங்களுக்கு எந்த தொந்தரவும் தராமல் நான் பார்த்துக்கறேன் பாப்பாவ எதுவும் பண்ணிடாதீங்கப்பா. என்கிட்ட கொடுத்துடுங்கப்பா தயவு செஞ்சு கொடுத்துடுங்கப்பா”

செண்பகம் அழ சின்னான் பெருமூச்சு விட்டான். செண்பகத்தின் அழுகை அவனை அசைத்தது.

இருளன் சின்னானைப் பார்க்க சின்னான் ஒன்றும் சொல்லாமல் ராசாத்தியை வாங்கிக்கொண்டான்.
மீண்டும் தொட்டிலில் போய் படுக்கவைத்தான்.

செண்பகம் சின்னானை நன்றியுடன் பார்த்தாள். நடந்தது எதுவும் தெரியாத ராசாத்தி இன்னும் உறங்கிக் கொண்டிருக்க செண்பகத்திற்குள் மட்டும் பயம் போகவில்லை.

எங்கே நான் தூங்கினால் அப்பா மீண்டும் பாப்பாவை எடுத்துச் சென்று விடுவாரோ? என்று நினைத்து தூங்காமல் இருந்தாள்.

விடியற்காலையில் தன்னையும் மீறி தூங்கிப் போனாள்.
எழுந்தவுடன் ராசாத்தி எங்கே என்று தேடினாள். தொட்டிலில் அவளைப் பார்த்த பிறகுதான் செண்பகத்திற்கு நிம்மதியானது.

இப்படியே நாட்கள் போய்கொண்டிருக்க ஒருநாள் சின்னான் செண்பகத்தை அழைத்தான்.

“ஏங்கண்ணு எத்தனை நாளைக்குத்தான் பாப்பாவை நீயே பாத்துக்குவே?”

“நான் பார்த்துக்கறேன் பா”

“அதில்ல கண்ணு. அம்மா இருந்திருந்தா அம்மா பாத்துக்கும் இல்லையா?”

“அம்மாதான் சாமிகிட்ட போயிடுச்சே.”

“அதனால் என்ன? உனக்கு புதுசா ஒரு அம்மா வரும். உன்னையும் பாப்பாவையும் பாத்துக்கும். உனக்கு சம்மதமா?”

சின்னான் கேட்க செண்பகம் மகிழ்ந்தாள்.

“நிஜமாவாப்பா ?”

“ஆமாம் கண்ணு”

“எப்பப்பா வருவாங்க?”

“கூடிய சீக்கிரம்”

“சரிப்பா”


சின்னான் இரண்டாம் கல்யாணம் செய்து கொண்டு ஒரு வாரம் கழிந்த ஒரு நாள்.

“சித்தி” செண்பகம் தயங்கித் தயங்கிக் கூப்பிட்டாள்.

“என்ன?” என்று நாற்காலியில் உட்கார்ந்த நிலையில் இருந்து அசையாமல் கேட்டாள் அன்னம்மாள்.

“பாப்பாக்கு உடம்பு சுடுது”

“அதுக்கு நான் என்ன பண்ண?”

“ஹாஸ்பிடலுக்குப் போகணும்”

“என்னால எங்கயும் வர முடியாது.”

“நான் கூட்டிட்டுப் போறேன் சித்தி”

“எங்க வேணாலும் போய்த் தொலை”

“சித்தி”

“என்ன?”

“காசு?”

“காசெல்லாம் தர முடியாது.”

“எப்ப பாப்பாக்கு முடியலன்னாலும் அப்பா பீரோல இருந்து காசு எடுத்துக்கச் சொல்லிருக்காரு.”

“இல்லேன்னு சொல்றேன்ல? போடி. அப்புறம் எனக்குக் கெட்ட கோபம் வந்துடும்.”

செண்பகம் தயங்கியபடி வெளியே வந்தாள்.

இதுவா இன்னொரு அம்மா? அம்மா எங்கே? இவள் எங்கே?

செண்பகத்திற்கு அவள் அம்மா வள்ளியின் நினைவு வந்தது.

அம்மா அதுக்குள்ள ஏம்மா எங்களை விட்டுட்டுப் போனே? எல்லாமே தப்பா நடக்குதும்மா. ரொம்ப பயமா இருக்கும்மா.

செண்பகத்தின் கண்களில் கண்ணீர் வந்தது. துடைத்துக் கொண்டாள்.

“கண்ணு பால்” பால்காரம்மா குரல் கேட்க எழுந்து வெளியில் வந்தாள்.

செண்பகம் அழுதிருந்தது பால்காரம்மாவுக்குத் தெரிந்துவிட பதறினாள்.

“கண்ணு என்னாச்சு?”

“பாப்பாக்கு ஜுரம் அடிக்குது.”

“என்ன கண்ணு சொல்ற? பாப்பாவத் தூக்கு. வா ஹாஸ்பிடலுக்குப் போலாம்.”

“அக்கா”

“என்னம்மா?”

“காசில்லக்கா”

“சீ என்ன கண்ணு பேசற? நானில்லையா? வா கண்ணு.”

செண்பகத்தின் விழிகளில் மீண்டும் கண்ணீர். கையெடுத்து பால்காரம்மாவை வணங்கியவள் ராசாத்தியைத் தூக்கிக்கொண்டாள். கிளம்பினாள்.

ராசாத்தி காய்ச்சலில் துவண்டபடி அனத்தினாள்.

டாக்டரைப் பார்த்துவிட்டு மருந்து வாங்கிக் கொண்டு வீட்டில் நுழைந்த செண்பகத்தைப் பார்த்து முறைத்தான் சின்னான்.

“எங்க போய்ட்டு வரே?”

“ஹாஸ்பிடலுக்குப்பா பாப்பாக்கு உடம்பு சரியில்ல”

“சித்திக்கிட்ட சொல்லியிருந்தா அவ கூப்பிட்டுப் போயிருப்பா. அவ கிட்ட சொல்லாமப் போயிருக்கே. அவ பதட்டத்தில எல்லா இடமும் தேடியிருக்கா”

“அப்பா”

“என்ன?”

“நான் சித்திக்கிட்ட சொன்னேன் பா”

செண்பகம் சொல்ல அன்னம்மாள் செண்பகத்திடம் கேட்டாள்.

“என்ன கண்ணு சொல்ற? தங்கச்சிக்கு இப்படின்னு சொன்னா என் தலையக் கூட அடமானம் வச்சுக் கூட வர்ற என்கிட்டயே பொய் சொல்லலாமா கண்ணு?”

“நான் பொய் சொல்லல.”

“அப்ப யாரு நான் பொய் சொல்றனா? கடவுளே இதுக்குத்தான் குழந்தை இருக்கிற வீட்ல ரெண்டாந்தாரமாப் போகக்கூடாதுங்கிறது. யாரும் என்ன நம்பலன்னா நான் என்ன பண்ணுவேன்?”

அன்னம்மாள் சின்னானுக்கு அம்பெய்ய அம்பு குறி தவறவில்லை.

“அன்னம்மா நான் உன்னை நம்பறேன்”. என்றான்.

செண்பகம் சின்னானையே பார்க்க

“என்ன பார்க்கிற? போ உள்ளே” என்று கத்தினான்.

அதற்குப் பிறகு வந்த நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக அன்னம்மாளின் கை ஓங்கியது. சின்னான் கிட்டத்தட்ட அன்னம்மாளின் அடிமையாகவே மாறி விட்டான்.

செண்பகம் எல்லாவற்றையும் தாங்கப் பழகியிருந்தாள் தினசரி காலையில் காபி போடுவது முதல் சமைப்பது வரை செண்பகத்தின் தலையில் பொறுப்புக்கள் சுமத்தப்பட்டன.

பால்காரம்மா மட்டும் செண்பகத்திற்கு அனுசரணையாக இருந்தார். ஒரு பத்து வயது பெண் இப்படி கஷ்டப் படுகிறாளே என்று அவ்வப்பொழுது கண்ணீர் வடித்தார்.

எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும் அதைக் காட்டிக் கொள்ளாத செண்பகம் எப்பொழுதும் புன்னகை முகத்துடன் வளைய வந்தாள். அதற்கு ஒரே காரணம் ராசாத்தி. எவ்வளவு துயரம் என்றாலும் ராசாத்தியின் மழலை சிரிப்பில் செண்பகம் தன்னையே தொலைத்து விடுவாள்.

அன்று பால்காரம்மா வரும்பொழுது செண்பகத்தின் கையில் எண்ணெய் கொட்டியிருந்த காயத்தைப் பார்த்து பதறிப் போனாள்.

“என்னம்மா ஆச்சு?”

“எண்ணெய் கொட்டிடுச்சு”

“டாக்டர்கிட்ட போனியா?”

“இல்லக்கா ஆயின்மெண்ட் போட்டேன்.”

“எப்படி இருக்கு இப்போ?”

“பரவால்லக்கா”

அப்போது அன்னம்மாள் அங்கு வர பால்காரம்மா அவளிடம் கேட்டாள்.

“ஏம்மா சின்னப்பொண்ண சமைக்க வச்சு எண்ணெய் கொட்டி காயமாயிருக்கே? இதெல்லாம் பார்க்கிறதில்லையா நீ?”

பால்காரம்மா கேட்டதற்குப் பதில் சொல்லாத அன்னம்மாள் செண்பகத்தை ஏறிட்டாள்.

“ஏண்டி ஊரெல்லாம் நான் கொடுமைப்படுத்தறதா சொல்லிட்டு அலையறியா?”

அன்னம்மாள் கேட்க பால்காரம்மா வெகுண்டெழுந்தாள்.

“அதிலென்னடி சந்தேகம்? கொழுப்பெடுத்து சும்மா இருந்துட்டு சின்னப் பொண்ண வேலை வாங்கறியா?”

பால்காரம்மா கேட்க அன்னம்மாள் கண்களில் சீற்றம்.

அப்போது வெளியே போயிருந்த சின்னான் வீட்டில் நுழைந்தான்.

“பார்த்தீங்களா இந்த கொடுமையை?” அன்னம்மாள் கபடமாய் அழுதாள்.

“என்னாச்சு? என்ன நடக்குது இங்க?”

“வாய்யா பெரிய மனுஷா. உன் பொண்ணுக்குக் கையில எண்ணெய் கொட்டி காயம் இருக்கு. உனக்குத் தெரியுமா? தெரியாதா?”

பால்காரம்மா கேட்க சின்னான் அதில் கவனம் செலுத்தாமல் அழுது கொண்டிருக்கும் அன்னம்மாளை சமாதானப்படுத்துவதில் குறியாக இருந்தான்.

பால்காரம்மாவுக்கு அவனை அடித்துத் துவைக்க வேண்டும் போலிருந்தது.

சின்னான் பால்காரம்மாவிடம் திரும்பினான்.

“வந்தா பால் கொடுத்துட்டு மரியாதையா போய்டணும். இல்லன்னா மரியாதை கெட்டுடும்”.

சின்னான் சொல்ல பால்காரம்மா தன் தலைவிதியை நொந்தபடி ஒன்றும் சொல்லாமல் கிளம்பினாள்.

அன்னம்மாள் கோபமாய் இருப்பது போல் நடித்தபடி அறைக்குள் சென்று கொள்ள அவள் பின்னாலேயே போனான் சின்னான்.

செண்பகம் வழக்கம்போல் அமைதியாக ராசாத்தியின் முகத்தில் ஆறுதல் தேடிக்கொண்டாள்.

அடுத்துவந்த ஞாயிற்றுக்கிழமையில் காலை வேளையில் கதவை யாரோ தட்டினார்கள்.

செண்பகம் கதவைத் திறக்க எதிரில் அவன் நின்றிருந்தான். செண்பகத்தை அவன் பார்க்கக் கூடாத இடங்களில் பார்க்க செண்பகத்துக்கு அவன் தப்பானவன் என்பது எளிதில் புரிந்தது.

யாரென்று புரியாமல் பார்த்தாள்.

கதவைத் தட்டும் சத்தம் கேட்டு வெளியில் வந்த சின்னானிடம் பின்னாலேயே வந்த அன்னம்மாள் மலர்ந்து சொன்னாள்.

“என்னங்க அது என்னோட தம்பி “

வந்தவன் “அக்கா” என்றபடி நுழைய அன்னம்மாள் மகிழ்ந்து சொன்னாள்

“வா காளிங்கா”

தொடரும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

error: Content is protected !!