லவ் யூ ஜெனி 5
டேனியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஜான் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தான். ஜெனி அவனை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை.
ஜான் பீட்டர்க்கு அழைத்தான்.
“அப்பா ஒரு சின்ன விஷயம்”
“என்ன ஜான் சொல்லு”
“ஜெனிய பிக்கப் பண்ண வந்தேன் வந்த இடத்துல கார் கண்ட்ரோல் இல்லாமப் போயிடுச்சு மாமா மேல மோதிட்டேன் “
முதலில் அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் யோசித்த பீட்டர் திகைத்தார். விஷயம் புரிந்து அதிர்ந்தார்.
“ஜான் நீ என்ன சொல்ற? டேனியல் இப்ப எப்படி இருக்கான்?”
“ஹாஸ்பிடல் இருக்கார் பா”
“நீ அங்கயே இரு நான் இப்ப வர்றேன்”
“சரிப்பா”
***
“ராசு” பதட்டமாய் ஓடி வந்த காளையனை கேள்வியாய் பார்த்தான் ராசு.
“என்ன காளையா சொல்லு “
“நம்ம முனியன் அங்க செத்துக் கிடக்கிறான் “
காளையன் சொல்ல ராசு அதிர்ச்சியாய் பார்த்தான்.
“என்ன சொல்ற வா போலாம் “ ராசு நகர முயல காளையன் தடுத்தான்.
“வேண்டாம் ராசு எனக்கு பயமா இருக்கு “
“எதுக்கு பயம் நம்மள யார் என்ன பண்ணிடுவாங்க வா போலாம். “
ராசு சொன்னபடி நடக்க காளையன் தயக்கமாய் பின் தொடர்ந்தான்.
இருட்டில் வழி தடுமாறியது.
சற்று நேரத்தில் முனியன் கிடந்த இடத்தை அடைந்தனர். முனியன் உடலைச் சுற்றி கூட்டம் கூடியிருக்க ராசு கூட்டத்தில் நுழைந்து உள்ளே சென்றான்.
முனியனின் தலை பல துண்டுகளாய் சிதறிக் கிடந்ததைப் பார்த்த ராசு சட்டென்று கண்களை மூடிக்கொண்டான்.
இவ்வளவு கொடூரமாக முனியனை யார் கொன்றிருக்க முடியும்?
ஒருவேளை முனியனுக்கும் இருளனின் மனைவிக்கும் உள்ள தொடர்பு இருளனுக்குத் தெரிந்திருந்து அவன் ஒருவேளை இப்படி செய்திருப்பானோ?
இருக்காதே இருளன் லோடு ஏற்றிக்கொண்டு வெளியூர் சென்றிருக்கிறானே?
அவன் யோசிக்கும்போது போலீஸ் ஜீப் வந்தது. போலீஸ் ஜீப் பார்த்தவர்கள் சட்டென்று அங்கிருந்து கலைந்து நடக்கத் தொடங்கினர்.
சப் இன்ஸ்பெக்டர் இறங்கினார்.
முனியனின் உடம்பைப் பார்த்தவர் “ஹாரிபிள் “ அதிர்ந்தார்.
“யார் பாடிய முதல்ல பார்த்தது?”
அவர் கேட்க கனகா தயக்கமாய் முன்னால் வந்து நின்றாள்.
“யார் நீ?”
“செத்துப்போன முனியனுக்கு நான் சித்திப்பொண்ணுங்க. தங்கச்சி”
சொன்னவள் விழிகளை அவர் உற்றுப் பார்க்க அதில் பொய் இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை.
“இந்நேரம் நீ எதுக்கு இங்க வந்த?”
“அது வந்துங்க “
“சொல்லு”
“என்னோட மாமா இன்னும் வரலைங்க அதான் ஒரு எட்டு பார்த்துட்டு வரலாம்னு அப்படியே நடந்தேன் “
“உன் மாமா என்ன பண்றான்?”
“ஸ்பின்னிங் மில்ல வேலைங்க. செகண்ட் ஷிப்ட் போயிருக்காரு”
சப் இன்ஸ்பெக்டர் அங்கு இருந்த அனைவரையும் உற்றுப் பார்த்தார் உற்றுப் பார்த்தார்
ஓர் இளம்பெண் மட்டும் தன் கண்ணீரைத் துடைத்தபடி நிற்க சப் இன்ஸ்பெக்டர் அவளை அழைத்தார்.
அவள் தயங்கினாள்.
“வா இப்படி “
“சார்”
“உன் பேர் என்ன?”
“வசந்தி சார்”
“முனியனை எப்படி தெரியும்?”
அவர் கேட்க அவள் கண்களில் மீண்டும் கண்ணீர் வர அவருக்கு அவள் மீதான சந்தேகம் அதிகரித்தது.
“என்ன இங்க பதில் சொல்றியா இல்ல ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போகணுமா?” அவர் கேட்க அவள் பதறினாள்.
“வேண்டாம் சார் நான் சொல்லிடறேன் “
“ சொல்லு”
“சார் கொஞ்சம் தனியா …” வசந்தி சொல்ல புரிந்து கொண்ட சப் இன்ஸ்பெக்டர் “ வா அப்படி போலாம் “ என்றார்.
இருவரும் சற்று தள்ளி நடந்தார்கள்.
“இப்ப சொல்லு”
“சார் எனக்கும் அவருக்கும் …”
“தொடர்பா?”
“ஆமா சார்”
“உன் புருஷன் என்ன பண்றான்?”
“லோடு வண்டி ஓட்டறார் சார் “
“முனியனை எப்ப பார்த்தே?”
“ரெண்டு மணி நேரம் முன்னாடி எங்க வீட்டுக்கு வந்திருந்தார் சார்”
“ம்” யோசித்த சப் இன்ஸ்பெக்டர் கேட்டார்.
“அவனை யார் கொன்னிருப்பாங்கன்னு நீ நினைக்கிற?”
“தெரியல சார் அவர் ரொம்ப நல்லவர் சார்” அவள் அழுகையை அடக்கியபடி சொல்ல சப் இன்ஸ்பெக்டர் மேற்கொண்டு அவரிடம் பேசுவதால் எந்த பயனும் இல்லை என்று உணர்ந்தார்.
“சரி நீ போ ஏதாவது தகவல் தெரிஞ்சா வந்து சொல்லு “
“சரிங்க சார்”
கான்ஸ்டபிள் அருகில் வந்து நின்றார்.
“சார்”
“சொல்லுய்யா”
“ஆம்புலன்ஸ் வந்திடுச்சு “
“பாடிய ஏத்திடுங்க “
“சரி சார்”
சப் இன்ஸ்பெக்டர் முனியனின் உடைந்து போன தலையின் ஒரு பகுதியைப் பார்த்தார். அவன் கண்கள் எதையோ பார்த்து பயந்திருப்பதாய் அவருக்குத் தோன்றியது.
***
“சார் “ ராசு அழைக்க டேனியல் அருகில் வா என்பதாக சைகை செய்தார்.
ராசு அவருக்கு அருகில் சென்றான்.
என்ன விஷயம் என்று கண்களால் கேட்டார்.
“நம்ம முனியன் செத்துப் போய்ட்டாங்க “ ராசு சொல்ல டேனியல் கண்களில் அதிர்ச்சி தெரிந்தது.
“ராசு”
“சார்”
“ரூம் கதவை மூடிட்டு வா”
ராசு அறையின் கதவை சாத்திவிட்டு அவர் அருகில் மீண்டும் சென்றான்.
“சொல்லுங்க சார்”
“வேற யாரும் பக்கத்துல இல்லையே?”
“இல்ல சார் நானும் நீங்களும் மட்டும்தான் இருக்கோம். உங்க பொண்ணு உங்களுக்கு சாப்பாடு வாங்கறதுக்காக ஹாஸ்பிடல் கேண்டீன் க்குப் போயிருக்காங்க “
“ ம் “ சொன்ன டேனியல் தொடர்ந்தார்.
“ராசு ஒரே நேரத்துல எனக்கு இப்படியும் முனியனுக்கு அப்படியும் நடந்திருக்கு. “
“ புரியலைங்க”
“நல்லா யோசிச்சுப் பாரு புரியும் “
“என்ன சொல்றீங்கன்னு எனக்கு தெரியல”
“முனியன் எப்படி செத்துப் போனான்னு சொன்னே?”
“யாரோ அவனோட தலைய பல துண்டா உடைச்சு சாவடிச்சிருக்காங்க “
“ ராசு”
“சார்”
“அது மனுசங்க செஞ்ச மாதிரி தெரியுதா இல்ல வேற ஏதாவது….”
டேனியல் கேட்க ராசு அதிர்ந்தான்.
“சார் என்ன சொல்றீங்க?”
“கவனமா இருன்னு சொல்றேன் நீ மட்டும் இல்ல நம்ம ஆளுங்க எல்லாருமே கவனமா இருக்கணும் “
“சார் அப்படின்னா இது வேற ஏதாவதா…”
“அப்படித்தான் எனக்கு தோணுது”
“சார்”
“ம்”
“நீங்க தப்பா நினைக்கலன்னா ஒண்ணு கேட்கலாமா?”
“கேளு”
“உங்களுக்கு அப்படித் தோணக் காரணம்?”
“இருக்கு “ சொன்ன டேனியல் ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டு தொடர்ந்தார்.
“எனக்கு மாப்பிள்ளையா வரப்போற ஜான் நல்லா கார் ஓட்டத் தெரிஞ்சவன். அவன் டிரைவிங் சீட்ல இருக்கும்போது தான் அந்த கார் வந்து என் மேல மோதுச்சு. அவன் என்னை வந்து பார்த்தான். என்ன நடந்ததுன்னே தெரியல மாமா. என்னால சுத்தமா கண்ட்ரோல் பண்ண முடியல. எனக்கு மேல ஏதோ ஒண்ணு கார்ல இருந்து ஓட்டின மாதிரி இருந்துச்சுன்னு சொன்னான். அவன் சொன்னத என்னால ஆரம்பத்துல நம்ப முடியலன்னாலும் எனக்கும் சகுனம் தட்டுச்சு. அவன் சொன்னது உண்மையா இருக்குமோன்னு யோசனை பண்ணிட்டிருந்தேன். இப்ப நீ வந்து முனியன் செத்துப் போயிட்டான்னு சொன்னே. அப்ப கண்டிப்பா இது வேற ஏதோ ஒன்னு”
டேனியல் சொல்ல ராசு பயமாய் பார்த்தான்.
“இப்ப என்ன சார் பண்றது?”
“அனேகமா இது அந்த பாலா தான்”
“சார் அவனா ?”
“ஆமா. முனியனக் கொன்னவனுக்கு என்னையும் கொலை பண்றதுக்கு ரொம்ப நேரம் தேவைப்படாது ஆனால் என்னை விட்டுட்டுப் போயிருக்கான் அதுக்கு என்ன காரணம்? “
டேனியல் கேட்க ராசி யோசித்தான். அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை.
“என் பொண்ணு மேல அவனுக்கு இன்னும் பாசம் இருக்கு. எனக்கு ஏதாவது ஆயிட்டா என் பொண்ணப் பார்த்துக்கறதுக்கு யாரும் இல்லன்னு விட்டுட்டுப் போயிருக்கான் “
டேனியல் சொல்ல ராசு நம்ப முடியாமல் பார்த்தான்.
“சார் இப்படி எல்லாம் நடக்கறதுக்கு வாய்ப்பு இருக்கா? “
“ராசு மனுசங்கதான் இப்படி எல்லாம் நடக்காதுன்னு ஒரு தியரி எழுதி வச்சிட்டு அது படி வாழ்ந்துட்டு இருக்காங்க எதுவுமே நமக்குன்னு நடக்கிற வரைக்கும் நாம எதையும் நம்ப மாட்டோம். இல்லையா?”
“கரெக்ட் தான் சார்”
சற்று நேரம் இருவருக்குள்ளும் ஒரு மௌனம் நிலவியது.
ஜன்னலுக்கு பக்கத்தில் ஏதோ அசைவிருப்பதாக தோன்ற ராசு பயந்து போய் பார்த்தான். டேனியல் சிரித்தார்.
“அது துணி ராசு”
“இல்லைங்க நான் சும்மாதான் பார்த்தேன்”
“ம்”
“சார்”
“சொல்லு ராசு”
“இப்ப என்ன பண்றது?”
“அவன இந்த லோகத்திலிருந்து வேற லோகத்துக்கு அனுப்பி வச்சிட்டோம் அங்க போயும் அவன் நமக்கு தொந்தரவு பண்றான்னா அந்த லோகத்தில் இருந்து அவனை நிரந்தரமா எப்படி அனுப்பி வைக்கணும்னு பார்க்கணும் “
டேனியல் தீர்க்கமாய் சொல்ல ராசு அதிர்ந்தான்.
“சார் நீங்க என்ன சொல்றீங்க?”
“அவன் கண்டிப்பா என்னை ஒண்ணுமே பண்ண மாட்டான். ஏன்னா அவனுக்கு என்னோட பொண்ண ரொம்பப் பிடிச்சிருக்கு. இதுதான் எனக்கு இருக்கிற ஒரே ப்ளஸ். அவன் மேற்கொண்டு நம்ம வழியில் வராம இருக்க நாம என்ன பண்ணனுமோ அதை நாம பண்ணியாகணும். அதுவும் உடனே பண்ணனும்”
“அது முடியுங்களா?”
“கண்டிப்பா முடியும்”
“சரிங்க”
“ ராசு”
“சொல்லுங்க சார்”
“இங்க இருந்து ஒரு பத்து கிலோமீட்டர் போனா பேய் வளைவு வரும். உள்ள காட்டுல கொஞ்சம் தூரம் நடந்து போனா சாத்தான் காடுன்னு ஒரு இடம் வரும். “
“சார் நீங்க சொல்றப்பவே எனக்கு பயமா இருக்கு”
“பயப்படாத ராசு முழுசா கேளு”
“சொல்லுங்க சார்”
“அங்க போனா சாத்தானுக்கு பூஜை பண்றவங்க இருப்பாங்க. அவங்க எல்லார்கிட்டயும் அவ்வளவு ஈஸியா எதுவும் பேசிட மாட்டாங்க. ஆனா நமக்கு வேற வழியில்லை அப்படி பூஜை பண்றவங்கள்ல யாராச்சும் ஒருத்தரை நாம பேச வைக்கணும். அவங்க சில சமயம் ரொம்ப உக்கிரமா நடந்துக்குவாங்க. அதுக்கு காரணம் அவங்களுக்கு பேய்கள விரட்டி விரட்டி அப்படியே பழகிடுச்சு. அங்க நீ தான் போகப் போறே”
டேனியல் சொல்ல ராசு கண்களில் பயம் தெரிந்தது.
“சார் எனக்கு ரொம்ப பயமா இருக்கு வேற யாரையாவது இந்த விஷயமா…”
“இல்ல ராசு அது முடியாது விஷயம் தெரிஞ்சவங்கள்ல நீ தான் கொஞ்சம் விவரமானவன். எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு. அது மட்டும் இல்ல பாலாவையும் அவனோட அப்பாவையும் நாம கொன்ன விஷயம் வேற யாருக்கும் தெரியக் கூடாது. குறிப்பா என்னோட பொண்ணுக்கு அது எப்பவுமே தெரியக்கூடாது. அதனால நமக்கு வேற வழி இல்ல. நான் போய் பார்க்கலாம்னா நான் இப்படி ஹாஸ்பிடல் ல கிடக்கறேன். நீதான் போய் பார்க்கணும் “
டேனியல் சொல்ல ராசு வேறு வழியில்லாமல் தலையாட்டினான்.
அவன் வயிற்றுக்குள் பயம் பிரளயமாய் உருவெடுத்தது.
வெளியே வந்த ராசுவின் நாசியை நிரடியது மனோரஞ்சிதப் பூவின் வாசம்.
தொடரும்.