லவ் யூ ஜெனி 7
ராசு அதிர்ச்சியாய் ஒன்றும் சொல்ல முடியாமல் அவரையே பார்க்க அவர் அவனை அமரச் சொன்னார்.
“ஜன்னல் எல்லாத்தையும் சாத்து “ சொன்னவர் தன் முன் அந்த பழைய கால பலகையை வைத்தார். அதன் இரு முனையிலும் இருந்த திரியைப் பற்ற வைத்தார். பலகைக்கும் தனக்கும் இடையில் கட்டத்தில் மனதில் ஏதோ நினைத்தபடி எலுமிச்சம் பழத்தை வைத்தார்.
“உன்னோட முதலாளி பொண்ணோட பேர் என்ன ?” அவர் கேட்க ராசு வியர்த்தான். அவன் ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருக்க பூசாரி அவனை கோபமாய் பார்த்தார்.
“காது கேக்கலையா? அந்தப் பொண்ணோட பேர் சொல்லு”
“ஜெனிங்க”
“ம்” ஏதோ மனதில் நினைத்தவர் சத்தமாகச் சொன்னார்.
“ஜெனிக்காக ஆத்மஹத்தி செய்த பாலா… உன் நல்லதுக்காக இங்க வா”
சொன்னபடி அவர் விழிகள் சுற்று முற்றும் அலைந்தன. எந்த எதிர்வினையும் இல்லை.
மீண்டும் அழைத்தார்.
“பாலா நீ இப்ப வரலன்னா இனிமே நீ எந்த லோகத்திலும் இல்லாம க் கூட போகலாம். “
எலுமிச்சம்பழம் நகராமல் இருந்தது. பலகையின் இரு முனைகளிலும் ஏற்றி வைக்கப்பட்ட தீபங்கள் எந்த அசைவும் இன்றி எரிந்தன.
பாலா வரவில்லை என்று அவருக்கு புரிந்தது.
வழக்கமாக தற்கொலை செய்து கொள்பவர்கள் வருவார்களே.. இவனுக்கு வேறு ஏதாவது நடந்திருக்குமோ? யோசித்தவர் பார்வை ராசு மீது விழுந்தது.
இவன் சொல்வது பொய் இவனை நம்பக்கூடாது.
யோசித்தவர் அதே நேரத்தில் பாலாவை வரவழைக்க என்ன வழி என்று யோசித்தார். அவருக்கு யோசனை உதயமானது.
“பாலா உன்னோட ஜெனிக்கு ஏவல் வைக்கிறதுக்கு இங்க ஒருத்தன் வந்திருக்கான். நீ இங்க வரலைன்னா உன்னோட ஜெனி சர்வ நிச்சயமா பாதிக்கப்படுவா “
அவர் சொல்ல காற்று எங்கிருந்தோ வந்து அங்கே சுழன்றது. பலகையின் தீபங்கள் இரண்டும் சட்டென்று அணைந்தன. எலுமிச்சம்பழம் ஆவேசமாய் சுழன்றது. பூசாரி பிரமித்தார்.
சுதாரித்துக் கொண்டவர் மெல்ல தொண்டையை கனைத்த படி பேச ஆரம்பித்தார்.
“பாலா “
மௌனம்.
“பாலா இப்ப நீ பேசணும் இது உனக்கான நேரம்”
மௌனம்.
“என்ன நடந்தது பாலா ? நீ எப்படி செத்துப்போனே?” பூசாரி கேட்க ராசு பயத்துடன் எழுந்தான்.
அவனை உட்காரும்படி கையசைத்தார்.
அவன் பயத்தில் என்ன செய்வதென்று அறியாமல் ஜன்னல் கதவைத் திறக்க முற்பட்டான்.
பூசாரி பதறியபடி “வேண்டாம் “ என்று கத்தியும் அவன் ஜன்னலை திறந்து விட வெளியே முழு வேகத்தில் இருந்த காற்று அவன் மேல் மோதியது. ராசு தூக்கி எறியப்பட்டு சுவரில் மோதி தரையில் விழுந்தான்.
மனோரஞ்சித மணம் அறையெங்கும் பரவியது.
“ஐயா காப்பாத்துங்க அவன் என்னை விட மாட்டான். முனியனைக் கொன்ன மாதிரி என்னையும் கொல்லப் போறான் “ ராசு கதறினான்.
“நீ என்கிட்ட சொன்னது பொய் தானே?”
“ஆமாங்கய்யா என்ன மன்னிச்சிடுங்க காப்பாத்துங்க “ அவன் பயமாய் அலற பூசாரி சட்டென்று ராசுவைத் தன் பக்கம் இழுத்து தன்னைச் சுற்றி வளையம் போட பாலா ஆக்ரோஷமாய் கத்தினான்.
“பாலா எதுக்கு இவனக் கொலை பண்ணப் பார்க்கிறே? என்ன நடந்தது?” பூசாரி கேட்க மீண்டும் சத்தம் மட்டும் வர பூசாரி கண்கள் மூடி சாத்தானை வேண்டினார்.
பாலாவின் ஆக்ரோஷம் தணிந்தது.
அங்கே புகையாய் நின்றான். ராசு பயந்து போய் பார்க்க பூசாரி மிகவும் இயல்பாக அவனிடம் பேசினார்.
“சொல்லு பாலா உனக்கு என்ன நடந்தது?”
“அ…ய்…யா”
“சொல்லு”
“எங்கப்பா என்னோட உயிருங்க …”
“ம்”
“நம்ப வச்சு கழுத்தறுத்துட்டாங்கய்யா. எங்க அப்பா அப்பவே சொன்னார். எனக்கு உலக அனுபவம் இல்லன்னு. அவர் சொன்னதை கேட்காத பாவியாயிட்டேனுங்க. அவரையும் காவு கொடுத்துட்டு நிக்கறேனுங்க. “
“ம்”
“என் பொண்ண உனக்கு கட்டித்தர்றக்கு இஷ்டம் இல்லன்னு அவங்க அப்பா ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நான் மேற்கொண்டு ஒரு வார்த்தை கூட பேசாம போயிருப்பேனுங்க. என் கண்ணு முன்னாடியே எங்க அப்பாவ குத்திப் போட்டாங்கய்யா. “
“ ம்”
“என்னையும் கொன்னுட்டாங்கய்யா “
“ ம்”
“இங்க வந்து கூட என்னால ஒண்ணுமே பண்ண முடியலைங்க. என்னோட ஜெனிய சுத்தி எல்லாமே தப்பா நடக்குதுங்க. நான் எந்த லோகத்தில இருந்தாலும் ஜெனிக்கு ஏதாவதுன்னா நிச்சயமா நான் வருவேனுங்க. “
“ ஜெனிய உனக்கு அவ்வளவு பிடிக்குமா?”
“ஆமாங்கய்யா ஜெனி எனக்கு சாமி மாதிரி “
பூசாரி பாலாவை நெகிழ்ந்து போய் பார்த்தார்.
“நான் உனக்கு என்ன பண்ணனும் பாலா ?”
“எனக்குன்னு எதுவும் வேண்டாம் ஐயா”
“இவன என்ன பண்ணப் போறே?”
“ஐயா “
“இவன் சாத்தான் பூஜை பண்றவங்கள பார்த்து உன்னை நிரந்தரமா அழிக்கணும்னு திட்டம் போட்டிருக்கான். அது தெரியுமா?”
“தெரியாதுங்க “
“உனக்கு பயமா இருக்கா?”
“இல்லைங்க ஐயா”
“சரி பாலா உனக்கு ராசு வேணும்னா எடுத்துக்க “ பூசாரி சொல்ல ராசு பயங்கரமாய் அலறினான்.
“வேண்டாங்கய்யா “
“எங்கிட்ட இங்க வந்துட்டு இதுவரைக்கும் பொய் பேசிட்டு திரும்பிப் போனவங்க யாருமே இல்ல ராசு “
சொன்ன பூசாரி புகையை பார்த்து சொன்னார்.
“நான் உனக்கு தடையா இருக்க மாட்டேன். உனக்கு என்ன விருப்பமோ அதை நீ பண்ணிக்கலாம்” பூசாரி சொல்ல மனோரஞ்சித மணம் ராசுவை சூழ்ந்தது. ராசு கதவை திறந்து கொண்டு வெளியே ஓடினான். அவன் இரண்டு கால்களையும் யாரோ பற்றுவது போல் உணர்ந்து கதறினான்.
“வேண்டாம் பாலா”
“எங்க அப்பா சாகறப்ப அவரோட கண்ணு ரெண்டும் என்னையே பார்த்துச்சு. இப்படி அப்பாவியா இருந்துட்டியே பாலான்னு. ராசு .கொஞ்சம் நல்லவனா இருக்கிறது தப்பா ராசு ? “
பாலாவின் குரல் ராசுவின் காதுகளில் ஒலிக்க அவன் “இல்லை “என்று கதறியபடி விடுபட போராடினான். ஆனால் முடியவில்லை.
ராசுவைப் பக்கவாட்டில் தூக்கிய பாலா அருகிலிருந்த மரத்தில் ஓங்கி அடிக்க இடுப்பெலும்பு சத்தமாய் உடைந்து வலியில் ராசு கதறினான்.
“ஐயோ என்னை விடு” அழுதான். பாலா மீண்டும் அடித்தான். ராசு துவண்டான். மரத்தின் இரண்டு கிளைகளுக்கும் இடையில் ராசுவின் தலையை நுழைத்த பாலா முழு வேகத்தில் அவன் கால்களைப் பற்றியிழுக்க வலி உயிர் போக உயிர் போனது.
பாலா ராசுவின் உடலை பாம்புப் புற்றின் அருகில் எறிந்தான். அங்கிருந்து மறைந்தான்.
***
“ஜான்”
டேனியல் அழைத்தார்.
“சொல்லுங்க மாமா”
“என்னோட ஆள் ஒருத்தன் ஒரு சின்ன வேலையா அனுப்பிச்சேன். இன்னும் வரல. அவனுக்கு என்னோட மொபைல் ல இருந்து போக மாட்டேங்குது.”
“நான் கால் பண்ணவா மாமா ?”
“பண்ணிப்பாருங்க “
“நம்பர் சொல்லுங்க மாமா”
டேனியல் ராசுவின் நம்பரை கொடுத்தார்.
ஜான் அந்த நம்பருக்கு அழைக்க நீங்கள் தொடர்பு கொள்ளும் எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்று ரெக்கார்டட் மெசேஜ் வர டேனியல் யோசித்தார்.
‘எங்கயோ தப்பு நடந்திருக்கு, இல்லன்னா ராசு போன் பண்ணாம இருக்க மாட்டான். என்ன பண்றது?’ யோசித்தவர் ஜானை அழைத்தார்.
“ஜான்”
“மாமா “
“என்னை எப்ப டிஸ்சார்ஜ் பண்ணுவாங்க?”
“அதுக்கு இப்ப என்ன மாமா அவசரம்?”
“அவசரம் தான் ஜான். சீக்கிரமா உங்களுக்கும் ஜெனிக்கும் கல்யாணத்தப் பண்ணனும் “ டேனியல் சொல்ல ஜான் மகிழ்ந்தான்.
முதலில் ஜெனி மீது ஆர்வம் இல்லாதவனுக்கு அவள் மீதான மோகம் திடீரென்று அதிகமாகியிருந்தது. அதற்குக் காரணம் ஜெனி அவனை கண்டுகொள்ளாமல் இருந்ததுதான்.
‘எங்கிட்டயா முகம் கொடுத்துப் பேச மாட்டேங்கற? கல்யாணம் முடியட்டும். உன்னை இழுத்துப் போட்டு..’
“என்ன ஜான் யோசனை?”
“இல்ல மாமா உங்களுக்கு இன்னும் முழுசா உடம்பு சரியாகல. இப்ப கல்யாணத்துக்கு என்ன அவசரம்னு யோசிச்சேன்”
ஜான் சொல்ல டேனியல் நெகிழ்ந்தார்.
“பீட்டர் எப்ப வருவான்?”
“அப்பா சாயங்காலம் வந்து உங்களை பார்க்கிறதா இருக்காரு “
“ ம் “
***
“என்ன டேனியல் சொல்ற?” பீட்டர் என் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது.
“ஆமா இதுவரைக்கும் என்ன நடந்ததோ அதை நான் உன்கிட்ட சொல்லிட்டேன்.”
“கவுதம் கருணாநிதி ஹாரர் கதை படிக்கிற மாதிரி இருக்கு நீ சொல்றது.”
“எனக்கு இப்போ உதவி பண்றதுக்கு வேற யாரும் இல்ல நீ தான் என்னோட ஒரே நண்பன் அதான் உன்கிட்ட எல்லாமே சொல்லிட்டேன் இந்த கல்யாணத்தை கண்டிப்பா அவன் நடத்த விட மாட்டான். “
“ஏன் அப்படி நினைக்கிறே?”
“யோசிச்சுப்பாரு ஏற்கனவே ஜானோட காரை விட்டு என்னை மோத வச்சான். ஜானுக்கும் ஜெனிக்கும் இப்ப நல்ல அண்டர்ஸ்டாண்ட் இல்ல. முனியனக் கொன்னுட்டான். ராசுக்கு என்ன நடந்ததுன்னு தெரியல. “
“நாம் ஏன் வேற மெத்தட்ல போகக் கூடாது? “
“என்ன சொல்ற?”
“நீ சொல்ற சாத்தான பூஜை பண்றவங்கள நாம டைரக்டா மீட் பண்ணலாம் “
“அது முடியுமா?”
“காசு இருந்தா போதும் இந்த உலகத்தில் என்ன வேணாலும் பண்ணலாம். அது நம்ம கிட்ட ரொம்ப ஜாஸ்தியாவே இருக்கு. அதனால பூஜை பண்றவங்கள நம்மளத் தேடி வந்து மீட் பண்ண வைக்கலாம்”
பீட்டர் சொல்ல டேனியல் மலர்ந்தார்.
“எதுக்கும் கவலைப் படாத டேனியல். அவன் இந்த உலகத்தில் இல்லாம எந்த உலகத்துல இருந்தாலும் சரி அவனை ஒரு கை பார்த்துடலாம். எக்ஸார்சிஸ்ட் கூட ட்ரை பண்ணலாம் “
“ ம் “
***
ஜான் ஜெனியின் வீட்டிற்குள் நுழைந்தான். வேலைக்காரப் பெண் கூல்டிரிங்ஸ் கொண்டு வந்து கொடுக்க கேட்டான்.
“ஜெனி எங்க இருக்கு?”
“அவங்க மாடியில் குளிச்சிட்டு இருக்காங்க” சொன்ன வேலைக்காரப் பெண் சமையல் அறைக்குள் போய்விட ஜான் யோசித்தான்.
‘மாமா ஹாஸ்பிடல் இருக்காரு ஜெனி மட்டும் தான் மேல தனியா இருக்கா. நல்ல சந்தர்ப்பம்’
மெல்ல படிகளில் ஏறினான்.
ஜெனியின் அறைக்கதவு திறந்திருக்க உள்ளே நுழைந்தான்.
அவள் அறையில் நுழைந்தது அவனுக்கு ஒரு விதமான புது அனுபவத்தை ஏற்படுத்த அவள் குளித்துக் கொண்டிருப்பதை கற்பனை செய்து பார்த்தான்.
அத்துமீற முயன்ற மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு அங்கிருந்த சேரில் அமர்ந்தான். அவன் பார்வை ஜெனியின் டேபிள் மீது வைக்கப்பட்டிருந்த பாலாவின் போட்டோ மீது விழுந்தது.
‘யாரவன்?’
ஜானுக்கு கோபம் வந்தது.
ராஸ்கல் இவன்தானா ஜெனியின் மனதைக் கலைத்தவன்? இவன் மீது உள்ள பாசத்தால் தான் என்னை கண்டு கொள்ளாமல் நடக்கிறாளா?
இவன் யார் என்ன செய்கிறான் எங்கிருக்கிறான் எல்லாமே விசாரிக்க வேண்டும். எவருக்கும் தெரியாமல் இதை நான் செய்ய வேண்டும்.
ஜெனியின் போட்டோ அருகில் இருக்க அதை எடுக்க முயன்ற ஜான் திகைத்தான். அவன் கையை யாரோ பிடித்து இழுத்தாற்போல் உணர்ந்து திடுக்கிட்டுப் பின்னால் பார்த்தான். யாருமில்லை.
என்ன ஒரு பைத்தியக்காரன் நான்
அவனை அவனேத் திட்டிக்கொண்டு அருகில் இருந்த பத்திரிகையை எடுத்தான். எடுக்க முடிந்தது.
ஜெனியின் போட்டோ அருகில் கையை கொண்டு போக மீண்டும் யாரோ கையைப் பிடித்து இழுப்பது போல் உணர்ந்தவன் திடுக்கிட்டுப் பார்க்க … புகை .
தொடரும்