Sunday, December 22, 2024
Google search engine
HomeHorrorலவ் யூ ஜெனி 8

லவ் யூ ஜெனி 8

லவ் யூ ஜெனி 8

ஜான் தன்னைச் சுற்றி ஏதோ நடக்கிறது என்பதை உணர்ந்தவன் என்ன நடக்கிறது என்பது புரியாமல் திகைத்தான். 

புகை ஜானை சூழும் முன் பாத்ரூம் கதவைத் திறந்து வெளிப்பட்ட ஜெனியின் முகம் ஜானைப் பார்த்ததும் மாறியது.

“இங்க எதுக்கு வந்தே?”

“இல்ல நீ மேல இருப்பேன்னு…”

“அதுக்காக ?”

“ஸாரி வந்தது தப்புன்னா மன்னிப்பு கேட்டுக்கறேன்.”

“ஜான் ஒண்ணு சொல்றேன் கேளு. எனக்கும் உனக்கும் கல்யாணம் நடக்காது. உன்னை எனக்குப் பிடிக்கல. அப்பாக்காக வேற வழி இல்லாம அமைதியா இருக்கேன். அப்பாகிட்ட சமயம் பார்த்து இதைப் பத்தி பேசிடுவேன். நீ இனிமே இங்க வராத. எனக்கு சுத்தமாப் பிடிக்கல. இதுக்கு மேல உன்கிட்ட பேசறதுக்கு என்கிட்ட எதுவுமே இல்ல “ ஜெனி சொல்ல ஜான் அவளை முறைத்தான்.

“தெரியும் உன்னோட மனசுல யாரு இருக்கான்னு தெரியும்”

“என்ன சொல்ற ஜான்?”

“அவன் தானே?” ஜான் பாலாவின் போட்டோவைப் பார்த்து கேட்க ஜெனி ஜானைப் பார்த்தாள். சொன்னாள்.

“கண்டிப்பா எனக்கு அவனைத்தான் ரொம்ப பிடிச்சிருக்கு. அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? கண்ணு தாண்டி அவனோட பார்வை  எங்கயும் போகாது. ரொம்ப அப்பாவி. ஒரு சின்ன தப்பு பன்றதுக்கு ரொம்ப பயப்படுவான். அவனுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். நான் தான் அவனுக்கு உயிர். ஆனால் இப்போ அவன் உயிரோட இல்ல. “ ஜெனியின் கண்களில் கண்ணீர் துளிர்க்க காற்று உள்ளே சுழன்றது. அவளுக்குப் புரிந்தது. புன்னகைத்தாள்.

“இப்ப கூட உன்னால எனக்கு ஏதாவது ஆபத்து வந்திருமோன்னு இங்க தான் இருக்கான். “

ஜெனி சொன்னதை நம்பாமல் அவளுக்கு மூளை கோளாறு எதுவும் ஏற்பட்டிருக்குமோ என்று சந்தேகத்துடன் பார்த்தான் ஜான்.

“என்ன ஜான் அப்படி பார்க்கிறே?”

“நீ சொல்றது நம்பறபடியா இருக்கு?”

“வேண்டாம் நீ என்னை நம்ப வேண்டாம் நான் உன்னை நம்ப சொல்லல. ஆனா ஒரு விஷயம் இனிமே நீ இங்க வராத “

“வந்தா…?” கோணலாய் புன்னகைத்தபடி ஜெனியை நோக்கி நடக்க முயன்றவன் கன்னத்தில் மோசமாய் அறை வாங்கினான். திடுக்கிட்டான். 

“ஏய் என்னடி மேஜிக் பண்றியா?”

கன்னத்தில் கை வைத்து தடவியபடி கேட்டவனை புன்னகையுடன் பார்த்தாள் ஜெனி

“வேகமா இங்க இருந்து போகப்பாரு இல்லன்னா உனக்குத்தான் சிக்கல் “

ஜான் ஒரு நிமிடம் யோசித்தான். அப்போது அவன் மொபைல் அடித்தது.

பீட்டர்.

“அப்பா”

“எங்க இருக்கே ஜான் ?”

“சொல்லுங்கப்பா”

“உடனே வந்து என்னைப் பாரு ஒரு வேலை இருக்கு “

“சரிப்பா”

***

“அப்பா ஒரு விஷயம் ஆனா உங்க கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல” ஜான் தயங்க பீட்டர் அவன் அருகில் வந்தார்.

“என்ன விஷயம் எதுவாயிருந்தாலும் வெளிப்படையா சொல்லு”

“மனசுங்க செத்துப்போனதுக்கப்புறம் திரும்ப பூமிக்கு வர முடியுமா?” ஜான் கேட்க பீட்டருக்கு எங்கோ இடறியது.

“என்ன நடந்தது ஜான்?”

“நான் ஜெனி வீட்டுக்கு போயிருந்தேன்”

“ம்”

ஜான் அங்கே நடந்ததைச் சொல்ல பீட்டர் ஒன்றும் சொல்லவில்லை. மௌனமாய் நிற்க ஜான் திகைத்தான்.

“அப்பா”

“ம்”

“நான் சொன்னதை நீங்க நம்பலையா?”

“எதுக்கு அப்படி கேக்கறே?”

“ஒண்ணும் சொல்லலையே நீங்க அதான். “

“நீ சொல்றதுக்கு முன்னாடியே அப்படி ஒரு பிரச்சனை இருக்குன்னு எனக்கு தெரியும்” பீட்டர் சொல்ல ஜான் திடுக்கிட்டான்.

“என்னப்பா சொல்றீங்க?”

“டேனியல் என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டான்”

“அப்பா…”

“நீ என்ன சொல்ல வர்றேன்னு எனக்கு தெரியும். ஜெனி வேண்டாம்னு கரெக்டா ?”

“இல்லப்பா இப்படி ஒரு பிரச்சனை இருக்குன்னு தெரிஞ்சு எதுக்கு நாம போய் தலையை கொடுத்துட்டு…”

“பிரச்னை எதுல தான் இல்ல?”

“அது இல்லப்பா..” ஏதோ சொல்ல வந்த ஜானைப் பார்வையால் அடக்கிய பீட்டர் தொடர்ந்தார்.

“அவன் எனக்கு சின்ன வயசுல இருந்து ஃப்ரெண்ட் அது ஒரு காரணம். இன்னொரு காரணம் ஜெனி அவனுக்கு ஒரே ஒரு பொண்ணு. ஒட்டுமொத்த சொத்தும் நமக்குத் தான் கிடைக்கும். அதனால எவ்வளவு ரிஸ்க் இருந்தாலும் சரி. நாம எடுக்கறோம் புரியுதா ? “ பீட்டர் தீர்மானமான குரலில் சொல்ல ஜான் வேறு வழியில்லாமல் தலையசைத்தான்.

***

“நான் பீட்டர் பேசறேன் “

“சொல்லுங்க சார்”

“நான் கேட்டது என்ன ஆச்சு?”

“சாத்தான் பூஜை தானே சார்?”

“ம்”

“இல்ல சார் அவங்க வெளியில வந்து யாரையும் பார்க்க மாட்டாங்க. அவங்களப் பார்க்கணும்னா நாம தான் போகணும். அதுவும் அவங்க இஷ்டப்பட்டா மட்டும் தான் நாம அவங்க கூட பேச முடியும்.”

“பணம் எவ்வளவு வேணாலும் செலவு பண்ணத் தயார்னு சொன்னேனே”

“சார் என்கிட்ட சொன்ன மாதிரி அங்க போய் சொல்லிடப் போறீங்க. நீங்க சொன்னீங்கன்னு நான் எதார்த்தமா பணம் எவ்வளவு வேணாலும் செலவு பண்ணலாம்னு சொன்னதுக்கு உயிர் போனதுக்கப்புறம் பணத்தை வச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னு கேக்கறாங்க சார் “

“வேற வழி ஒன்னும் இல்லையா? “

“நிச்சயமா இல்லை சார் நீங்க டைரக்ட்டா சாத்தான்காட்டுக்குப் போய் பூஜை பண்றவங்க யாரையாவது பார்க்கணும். அவங்க ஒருவேளை சம்மதிச்சா நீங்க நினைக்கிறது நடக்கும் ஆனா கவனமா இருங்க சார் சில நேரம் சாத்தான் நம்மள அடிக்கிறதுக்கும் வாய்ப்பிருக்கு “

“சரி நான் பார்த்துக்கிறேன் இந்த விஷயமா நான் உன்கிட்ட கேட்டேன்னு நீ யார்கிட்டயும் சொல்லிக்க வேண்டாம்”

“கண்டிப்பா சொல்ல மாட்டேன் சார்”

“ம்”

***

பீட்டர் சொன்னதைக் கேட்டு டேனியல் யோசித்தார்.

“என்ன டேனியல் பண்ணலாம்?”

“நம்ம டைரக்டா அங்க போலாம்”

டேனியல் சொல்ல பீட்டர் அதிர்ந்தார்.

“அது கொஞ்சம் ரிஸ்க் இல்லையா?”

“நிறைய ரிஸ்க் இருக்கு ஆனா நம்மளோட எதிர்காலம் நல்லா இருக்கும்.  நம்ம எதிர்காலம் நல்லா இருக்கணும்னா பாலா எந்த உலகத்திலயும் இருக்கக் கூடாது. அவன முழுசா அழிக்க சாத்தான் பூஜை பண்றவங்களால மட்டும் தான் முடியும் *

டேனியல் சொல்ல பீட்டர் பயமாய் பார்த்தார்.

“என்ன பீட்டர் பயமா இருக்கா?”

“கொஞ்சம்”

“பயமா இருந்தா நீ வர வேண்டாம் நான் மட்டும் பார்த்துக்கிறேன்”

“இல்ல டேனியல் நானும் உன் கூட வர்றேன்”

“ம்”

“எப்ப போகணும்?”

“அம்மாவாசை அல்லது பௌர்ணமி இப்படி ஏதாவது ஒரு தினத்துல அங்க போகணும். “

“ஹாஸ்பிடல்ல இருந்து எப்ப டிஸ்சார்ஜ் ஆகப் போற?”

“நான் டாக்டர் கிட்ட சொல்லிட்டேன் நான் நார்மல் ஆயிட்டேன்னு வீட்டுக்கு போகணும்னு”

***

“அப்பா” 

தன் முன் வந்து நின்ற ஜெனியை ஏறிட்டார் சேரில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த டேனியல்.

“சொல்லும்மா”

“நீங்க என்னப்பா மனசுல நினைச்சுட்டு இருக்கீங்க?”

“ஏன்மா?”

“டாக்டர் சொன்ன டைம்க்கு முன்னாடியே டிஸ்சார்ஜ் ஆகி வீட்டில் வந்துட்டீங்க. சரி வீட்ல ரெஸ்ட் எடுப்பிங்கனு பார்த்தா இப்ப எங்கயோ போகணும்னு சொல்லிட்டு இருக்கீங்க”

ஆதங்கமாய் சொன்ன ஜெனியை அன்பாய் பார்த்தார் டேனியல்.

“எனக்கு ஒன்னும் இல்லமா நான் நல்லாத்தான் இருக்கேன். எனக்கும் பீட்டருக்கும் விக்டர் ரொம்ப வருஷ ஃப்ரண்ட். பாவம் அவன் செத்துட்டான்னு தெரிஞ்சிட்டு எப்படிம்மா நாங்க சும்மா இருக்க முடியும்? போய் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடறோம். “

அவர் கோபம் இல்லாமல் தன்மையாய் கேட்டது ஜெனியை அசைத்தது.

“சரிப்பா பார்த்து ஜாக்கிரதையா போய்ட்டு வாங்க”

“சரிம்மா”

டேனியல் காரில் ஏறினார். டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த காளையன் “போலாமா சார்? “ என்று கேட்டான். 

“ஸ்டார்ட் பண்ணு. நம்ம பீட்டர் சர்ச் பக்கத்துல இருப்பான். அவனையும் பிக்கப் பண்ணிக்கனும் “

“சரி சார்”

கார் கிளம்பியது. 

சர்ச் அருகில் பீட்டர் நிற்க காளையன் காரை நிறுத்தினான்.  பீட்டர் ஏறிக்கொண்டார். 

“காளையா” 

“சார்”

“அந்த இடத்தைப் பத்தி உனக்கு எதுவும் தெரியுமா?”

“எப்படி போறதுன்னு மட்டும் தெரியுங்க. வேற எதுவும் தெரியாது”

“எப்படி போகணும்?” பீட்டர் கேட்டார்.

“பேய் வளைவு வரைக்கும் கார் போகும். அங்க இருந்து சாத்தான் காட்டுக்கு நடந்து போகணும்னு சொல்வாங்க. “

கார் மெயின் ரோட்டை அடைந்தது. காளையன் வேகத்தை அதிகப்படுத்தினான்.

சரியாக அரை மணி நேரத்தில் பேய் வளைவை கார் அடைந்தது. 

“காளையா என்ன இந்த இடம் இப்படி இருக்கு? ஒரு ஹோட்டல் இல்ல ஒரு கடை இல்ல “

“அங்க ஒரு டீக்கடை இருக்கு அங்க போலாங்களா? “

“ சரி போ “

காளையன் டீக்கடைக்கு அருகில் சென்றான்.

“சார் டீக்கடை பூட்டியிருக்கு “

“சரி நம்ம நேரம் . இறங்கு “ சொன்ன டேனியல் இறங்கினார். அவரைத் தொடர்ந்து காளையனும் பீட்டரும் இறங்கினார்கள்.

பீட்டர் அந்த இடத்தை உற்றுப் பார்த்தார். 

“டேனியல்”

“சொல்லு”

“எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு. நாம இந்த இடத்தைப் பத்தி சரியா தெரிஞ்சுக்காம வந்துட்டோமோன்னு “

பீட்டர் சொல்ல டேனியல் சிரித்தார்.

“தைரியமாக இரு பீட்டர். இங்க இருந்து ஒரு கிலோ மீட்டர்தான் சாத்தான் காடு “ 

டேனியல் சொல்ல பீட்டர் தலையசைத்தார்.

காளையன் முகத்திலும் பய ரேகைகள் ஓடின.

“அந்த மஞ்ச போர்டு தெரியுதா உங்களுக்கு ?  “ டேனியல் கேட்டார். அவர் கைகாட்டிய திசையில் பீட்டரும் காளையனும் பார்த்தார்கள். கொஞ்சம் சிதிலமடைந்திருந்த மஞ்சள் வண்ண போர்ட் பார்வைக்குக் கிடைத்தது.

சாத்தான் காடு 0.9 KM .

“நடக்கலாமா ?  “ என்று மற்ற இருவரையும் பார்த்து கேட்ட டேனியல் மஞ்சள் போர்டின் கீழ் இருந்த மற்றொரு போர்டைக் கவனிக்கத்தவறியிருந்தார். அதில் மலையாளத்தில் எழுதப்பட்டிருந்தது 

அந்நியர்கள் ஆரும் பிரவேசிக்கருது.

மூவரும் பாதையை கவனமாய் பார்த்தபடி நடந்த ஐந்தாவது நிமிடத்தில் சட்டென்று எங்கும் இருட்டானது. வெளிச்சம் துளிக்கூட இல்லை. பீட்டர் பயமாய் கத்தினார்.

“டேனியல் என்னாச்சு? “

“பயப்படாத பீட்டர் காட்டுல இது ரொம்ப சகஜம். அடர்ந்த காட்டுக்குப் போகப்போக அங்க வெளிச்சம் ஒன்னும் இருக்காது “ டேனியல் சொல்லும்போது அங்கே ஒரு வெளிச்சக் கீற்று வர காளையன் பயங்கரமாய் அலறினான்.

“சார் ஓடுங்க சார் அது ஏவல் “ அவன் சொல்லும்போது வெளிச்சக் கீற்று மிக வேகமாய் அவர்களை நோக்கிப் பாய டேனியல் பீட்டரை பிடித்து தள்ளியபடி தானும் வேறு எங்கோ குதிக்க வெளிச்சம் காளையன் மீது பாய்ந்தது.

அவன் கதறித் துடித்தான். எவரிடமோ அடி வாங்கியது போல் கை, கால்களை பரப்பிக் கொண்டு விழுந்தான். நடப்பதை டேனியல் பீட்டர் இருவரும் பயமாய் பார்த்துக் கொண்டிருக்க காளையன் தலையை யாரோ பிடித்து இழுப்பது போல் காளையன் கழுத்தில் கை வைத்து அலறினான். 

“அ…ய்…யோ…”

தலை உடம்பிலிருந்து பிய்த்துக்கொண்டு தனியாக விழ உடல் மட்டும் துடித்தது. டேனியல் பீட்டர் இருவரும் உறைந்து போய் பார்த்தனர்.

தொடரும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

error: Content is protected !!