Monday, December 23, 2024
Google search engine
HomeHorrorLove You Jeni 1

Love You Jeni 1

லவ் யூ ஜெனி 1

“சார்” பாலா தயக்கமாய் அழைத்தான்.

“சொல்லுப்பா”என்றார் டேனியல். அருகில் அவர் மகள் ஜெனி பாலாவை பாசமுடன் பார்த்தாள்.

“நான் ரொம்ப பயந்துட்டேன் சார் நீங்க இவ்வளவு நல்லவரா இருப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கல சார் “

“கமான் இன்னும் எவ்வளவு நேரம்தான் அதையே பேசிட்டு இருப்பே. என் பொண்ணுக்கு உன்னைப் பிடிச்சிருக்கு உனக்கும் என் பெண்ணைப் பிடிச்சிருக்கு இதுக்கு நடுவுல நான் யாரு? இது என்ன தமிழ் சினிமாவா? பொண்ணோட அப்பா எப்பவுமே வில்லனாக இருக்கிறதுக்கு?” டேனியல் சிரித்தபடி கேட்க பாலா நெகிழ்ந்தான்.

“ரொம்ப தேங்க்ஸ் சார்”

“தேங்க்ஸ் சொல்லி என்னைத் தள்ளி  வைக்க வேண்டாம். நாமெல்லாம் ஒரே குடும்பமாகப் போறவங்க “

“ஸாரி சார்”

“பாலா இயல்பா இருங்க நீங்க ஒரே ஒரு காரியம் தான் பண்ணனும்”

“சொல்லுங்க சார்”

“உங்க வீட்ல யாரு இருக்காங்க?”

“நானும் அப்பாவும் மட்டும்தான் சார்”

“அப்பா மேல ரொம்ப பாசமா?”

“ஆமா சார் அவருக்கு ஏதாவது ஒண்ணுன்னா நான் துடிச்சுப் போயிடுவேன். அவரும் அப்படிதான் சார். என் மேல உயிரா இருக்காரு”

“வெரி குட் வெரி குட் எனக்கு நம்பிக்கை இருக்கு பாலா அப்பா மேல இவ்வளவு பாசமா இருக்கிற நீ என் பொண்ண கண்டிப்பா நல்லபடியா வச்சுக்குவே “

“சார்”

“சொல்லு பாலா”

“ஜெனி எனக்கு சாமி மாதிரி சார்” பாலா சொல்ல ஜெனியின் விழிகளில் கண்ணீர் துளிர்த்தது. 

“என்ன பாலா இது என்னோட பொண்ண கண்கலங்க வச்சிட்டியே?” டேனியல் புன்னகைத்தபடி கேட்க பாலா பதறினான்.

“அய்யோ சாரி சார்”

“சரி விடு. உன்னோட வீடு எங்க இருக்கு?”

“அரசம்பாளையம் பிரிவில் இருந்து உள்ள போகணும் சார்”

“அங்க இருந்து எத்தனை கிலோமீட்டர்?”

“நாலு கிலோமீட்டர் உள்ள போகணும் சார் “

“அங்க பஸ் வராதே. எப்படி போவே?”

“அரசம்பாளையம் பிரிவில சைக்கிள் நிறுத்தி வச்சிருவேன் சார் “

“கார் ஓட்டத் தெரியுமா பாலா?”

“தெரியாது சார்”

“கத்துக்கலாம் விடு.  ஜெனியை கல்யாணம் பண்ணதுக்கு அப்பறம் எங்க போனாலும் கார்ல தானே போகணும்? ” டேனியல் கேட்க பாலா மௌனமாய் அவரைப் பார்த்தான்.

“காபி சாப்பிடு பாலா. ஆறுது பாரு”

“தேங்க்ஸ் சார்”

“சரி பாலா. நீ உங்கப்பாவக் கூட்டிட்டு வா. நானும் உங்கப்பாவும் நேர்ல பேசி கல்யாண தேதியை முடிவு பண்றோம் ” டேனியல் சொல்ல பாலா நெகிழ்ந்தான்.

“எப்பக் கூட்டிட்டு வர்றே?” 

“நாளைக்கு கூட்டிட்டு வரவா சார்?”

“நாளைக்கு நான் ரைஸ்மில்ல இருப்பேன். வீட்டுக்கு வர்றதுக்கு கொஞ்சம் லேட் ஆகும். இல்லன்னா நீ ஒன்னு பண்ணு”

“சொல்லுங்க சார்”

“நீங்க ரெண்டு பேரும் ரைஸ் மில்லுக்கு வந்துடுங்க அங்கயே பேசலாம். “

“சரிங்க சார்” சொன்னவன் கேட்டான்.

“நான் போய்ட்டு வரவா சார்?”

“சரி பாலா”

வெளிய வந்த பாலா மிகவும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் உணர்ந்தான்.

“ஜெனி ப்ளீஸ் இது வேண்டாம்”

“ஏன்டா?”

“இது சரியா வராது நீங்க ரொம்ப பெரிய ஆளுங்க நாங்க ரொம்ப சாதாரணமானவங்க”

“என்ன பெரிய ஆளுங்க ? பணமா?”

“ஆமா”

“உனக்கு ஒரு நல்ல வேலை கிடைச்சா நீ சம்பாதிக்க மாட்டியா?”

“அது வந்து”

“சொல்லுடா சம்பாதிப்பியா மாட்டியா?”

“சம்பாதிப்பேன்”

“எங்களுக்கு பிசினஸ்ல லாஸ் வந்தா பணம் எங்களை விட்டுப் போகுமா போகாதா?”

“வேண்டாம் நீங்க எப்பவும் இப்படியே இருங்க. ஒரு லாஸ் ம் வர வேண்டாம் “

“ம் வேற என்ன தயக்கம் உனக்கு?”

“நாங்க ஹிந்து. நீங்க கிறிஸ்டின்”

“கண்டிப்பா நாங்க யாரும் உன்னை மதம்மாற சொல்ல மாட்டோம் ஓகேவா?”

“அதில்ல ஜெனி..”

“சொல்லுடா”

“எனக்கு எல்லாமே என்னோட அப்பா தான் நாளைக்கு அவர் சங்கடப்படற மாதிரி ஏதாவது நடந்தா என்னாலத் தாங்க முடியாது “

“பாலா”

“ம்”

“வாழ்க்கையில ஒரு கட்டத்துக்கு மேல பிளான் பண்ண முடியாது எந்த பிரச்ன எப்ப வருதோ அதை அப்பதான் பார்த்துக்கணும். சால்வ் பண்ணனும். எதுக்காகவும் கவலைப்படாத ஓகே எப்பவும் உன் கூட நான் இருப்பேன்” ஜெனி சொல்ல பாலா முகம் மலர்ந்தது.

“ஜெனி”

“ம்”

“எப்பவும் என் கூட இருப்பியா?”

“நிச்சயமா இருப்பேன் “

“அரசம்பாளையம் பிரிவு கேட்டது இறங்கு” கண்டக்டர் குரல் கேட்டவன் சட்டென்று பஸ்ஸில் இருந்து இறங்கினான்.

ஜெனியின் ஞாபகங்களில் எப்பொழுது பஸ் பிடித்தான் ஏறி அமர்ந்தான் எதுவும் அவனுக்கு நினைவில் இல்லை.

“என்ன பாலா வேலை முடிஞ்சதா?” 

பாலா யார் என்று பார்த்தான். அவனுக்கு மாமா முறை வேண்டும். பக்கத்துக் காட்டுக்காரர்.

“முடிஞ்சிடுச்சு மாமா”

“சரி “

பாலா டீக்கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன் சைக்கிளை எடுத்தான். ஏறி அமர்ந்து மிதித்தான்.

பத்து நிமிடப் பயணத்தில் வீடு வந்தது.

சைக்கிள் சத்தம் கேட்ட மாணிக்கம் நிமிர்ந்து பார்த்தார். மலர்ந்தார்.

“வா பாலா. கை கால் கழுவிட்டு வா சாப்பிடலாம்”

“சரிப்பா”

முகம் கழுவி விட்டு வந்து அமர்ந்தான்.

குழம்பு வாசனை மூக்கைத் துளைக்க அப்பாவிடம் கேட்டான்.

“என்ன குழம்புப்பா?”

“மொச்சைக்காய் கத்திரிக்காய் போட்டு குழம்பு வச்சேன். இந்தா” சாப்பாடு போட்டு குழம்பை ஊற்றித் தந்தார். பாலா ஒரு ரூபாய் எடுத்து சாப்பிட்டான். அவன் முகம் மலர அதை மகிழ்வாய் பார்த்தார் மாணிக்கம். அவருக்கு பாலாதான் உலகம். மனைவி வள்ளி பாலாவை கொடுத்துவிட்டு கண்களை மூடிக்கொள்ள அனைவரும் ஒரு ஆண் தனியாக இருக்க முடியாது நிச்சயமாக வேறு துணை வேண்டும் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் முடியாது என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார். 

“எவனோ ஒருத்தி வந்து என்னோட குழந்தையை சித்ரவதை செய்யறத என்னால் அனுமதிக்க முடியாது “

“ஏன் அப்படி தப்பா நினைக்கிற? வாழ்க்கையில எவ்வளவு நல்லது இருக்கு?”

“என்னோட புள்ள வாழ்க்கையில நான் எந்த வித ரிஸ்க் எடுக்க விரும்பலங்க”

பாலா சாப்பிடுவதை மாணிக்கம் பாசமாய் பார்த்தார்.

“நீயும் சாப்பிடுப்பா”

“நீ சாப்பிடு முதல்ல நான் அப்புறம் சாப்பிடறேன் “

இருவரும் சாப்பிட்டு முடித்தனர். மாணிக்கம் பாயைப் போட பாலா தயக்கமாய் அழைத்தான்.

“அப்பா”

“என்ன பாலா?”

“ஜெனி இன்னைக்கு வீட்டுக்கு கூப்பிட்டிருந்தா” 

பாலா சொல்ல மாணிக்கம் அமைதியாகக் கேட்டார்.

“என்னாச்சு?”

“ஜெனியோட அப்பா என்கூட பேசினார் “ பாலா சொல்ல மாணிக்கத்தின் முகத்தில் பயத்தின் ரேகைகள் படர்ந்தன.

“ என்ன பாலா சொல்ற?”

“அவருக்கு சம்மதம் பா”

“என்னால இதை நம்ப முடியல”

“இல்லப்பா அவர் ரொம்ப நல்லவர் ரொம்ப தன்மையா பேசினார் உங்களையும் கூட்டிட்டு வர சொன்னார்”

“எதுக்கு?”

“இது விஷயமா உங்க அப்பா கிட்ட பேசிட்டு கல்யாண தேதி முடிவு பண்ணிக்கலாம்னு சொன்னார் பா”

“பாலா”

“அப்பா”

“உனக்கு உலகத்தை நான் கத்துக் கொடுக்காம விட்டுட்டேனோன்னு எனக்கு பயமா இருக்கு பாலா”

“ஏன்பா அப்படி சொல்றீங்க?”

“நீ ரொம்ப அப்பாவியா இருக்கே பாலா. யாரு என்ன சொன்னாலும் அது நிஜம்னு நம்பறே”

“இல்லப்பா அவர் நிஜமாவே சொன்னார் பா”

“சரி பாலா”

“நாளைக்கு அவரைப் பார்க்க நாம் ரெண்டு பேரும் போலாமாப்பா?” 

“ம்”

***

ஜெனி அரிசி ஆலை. 

டேனியல் வேலைகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்தார்.

“முனியா”

“அய்யா”

“இன்னிக்கி எல்லாரும் வேலைக்கு வந்துட்டாங்களா?”

“சங்கர மட்டும் லீவ் போட்டுருக்கான் மத்த எட்டு பேரும் வந்துட்டாங்கய்யா “

“சங்கரன் ஏன் வரல?”

“அவனுக்கு குழந்தை பிறந்திருக்காம்”

“அவன் பொண்டாட்டிதானே பெத்திருக்கா? இவன் எதுக்கு லீவ் போட்டிருக்கான்?” டேனியல் கேட்க முனியன் சிரித்தான்.

“சார்” வாசலில் இருந்து குரல் வர டேனியல் திரும்பிப் பார்த்தார்.

பாலாவும் மாணிக்கமும் நின்றனர்.

“வாங்க வாங்க உங்களைத்தான் எதிர்பாத்துட்டிருக்கேன் “ சொன்ன டேனியல் கேட்டார் “ என்ன சாப்பிடறீங்க? “

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாங்க” மாணிக்கம் சொல்ல டேனியல் மாணிக்கத்தை ஏறிட்டார்.

“நாளைக்கு சம்பந்தியாகப்போறீங்க எதுவும் சாப்பிடலன்னா மனசுக்கு சங்கடமா இருக்குல்ல? “ டேனியல் நக்கலாகச் சொல்ல முனியன் புன்னகைத்தான்.

மாணிக்கம் உஷாரானார்.

“பாலா வா போலாம் “

“அப்பா”

“சீக்கிரம் வா பாலா” அவர் பரபரப்பாக சொல்ல அதற்குள் நான்கு பேர் அவர்களை சூழ்ந்தனர்.

டேனியல் பாலாவின் அருகில் வந்தார்.

“ஏன்டா …தா பொண்ணப் பெத்து வளர்ப்போம். அதையும் இதையும் பேசி மனசக் கலைச்சிட்டு அவ கூப்பிட்டான்னு வீட்டுக்கே வந்து நீ சம்பந்தம் பேசுவே நானும் சரின்னு சொல்லி உனக்கு பொண்ணு கொடுப்பேனா? என்ன ஏத்தம்டா உனக்கு?” கேட்டபடி எட்டி உதைத்தார்.

பாலா வயிற்றைப் பிடித்துக் கொண்டு சுருண்டான்.

மாணிக்கம் கத்தினார்.

“டேய் என் புள்ளயவா அடிக்கிற? “ சொன்னவர் டேனியல் மீது பாய முற்பட இரண்டு பேர் அவரைப் பிடித்துக் கொண்டனர்.

“என்ன மாணிக்கம் உன்னோட கோபம் நியாயமானது உன் புள்ளையை உதைச்சதுக்கே உனக்கு இந்த அளவுக்கு கோபம் வருதுன்னா நான் அவனைக் கொன்னு போட்டா நீ என்ன பண்ணுவே? போலீஸ் ஸ்டேஷன்ல போய் உட்காருவே. என் புள்ளையோட பொணத்தை வாங்க மாட்டேன்னு போராட்டம் பண்ணுவே வேற வழி இல்லாம போலீஸ்காரங்க என்னை வந்து அரஸ்ட் பண்ணுவாங்க. இதெல்லாம் என் பொண்ணுக்குத் தெரிஞ்சா நாளைக்கு என் பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்காது. அப்ப நான் என்ன பண்ணனும்? நடிக்கணும். உன் மவனை அக்செப்ட் பண்ற மாதிரி நடிக்கணும். உங்க ரெண்டு பேரையும் என்னை வந்து பார்க்க வைக்கணும். ரெண்டு பேரையும் ஒரே நேரத்துல மேல அனுப்பி வைக்கணும். உன்னை விட்டுட்டு உன்னுடைய பள்ளையும் உன்னோட புள்ளைய விட்டுட்டு நீயும் இருக்க மாட்டீங்க. அதனால நான் உங்க ரெண்டு பேருக்கும் நல்லது தான் பண்றேன். நீங்க தான் புரிஞ்சுக்கணும்.

ரெண்டு பேரையும் அனுப்பி வச்சிட்டு என்னோட பொண்ணு கிட்ட போய் அய்யய்யோ எந்த படுபாவியோ இப்படி பண்ணிட்டானேன்னு அழுவேன். அவளும் உன் பிள்ளை செத்துப் போய்ட்டான்னு கொஞ்ச நாள் சோகமா இருப்பா. அப்புறம் என்னோட சோகத்தைப் பாத்துட்டு என்னோட சந்தோஷத்துக்காக நான் சொல்ற மாப்பிள்ளைக்கு அவ கழுத்து நீட்டுவா. அப்பறம் என்ன கொஞ்ச நாள் கழிச்சு அவளுக்கு அந்த வாழ்க்கை பிடிச்சுடும். என்னோட திட்டத்துல எங்கயாவது தப்பு இருக்கா நீ சொல்லு மாணிக்கம் ? “ 

டேனியல் கேட்க பாலா நொறுங்கினான்.

டேனியல் மாணிக்கம் எதிர்பார்க்காத நேரத்தில் அவர் வயிற்றில் கத்தியால் குத்த ரத்தம் பீறிட்டது. 

“அப்பா” பாலா அலறினான்.

மாணிக்கம் வலியால் தரையில் உருண்டார். 

“பாலா”

“அப்பா”

“எப்படியாவது தப்பிச்சுடு பாலா. அவன் ரொம்ப மோசமானவன் “ மாணிக்கம் திணறியபடி சொல்ல பாலா அழுதான்.

“அப்பா “

“இனியாவது உலகத்தை புரிஞ்சிக்க பாலா “ சொன்ன மாணிக்கத்தின் விழிகள் நிலைத்தன. 

“டேய்” பாலா ஆவேசமாய் எழ டேனியல் முனியனுக்கு கண்காட்ட முனியன் வீசிய கத்தி குறி  தவறாமல் பாலாவின் மார்பை ஊடுருவி இதயத்தைத் தாக்க உள்ளிருந்த ரத்தம் தெறிக்க அதில் சில துளிகள் ஜெனியின் போட்டோ மீது விழுந்தன.

தொடரும்

Previous article
Next article
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

error: Content is protected !!