Monday, December 23, 2024
Google search engine
HomeHorrorLove You Jeni 2

Love You Jeni 2

லவ் யூ ஜெனி 2

டேனியல் இறந்து கிடந்த பாலா மாணிக்கம் இருவரின் உடல்களையும் ஏளனமாய் பார்த்தார்.

“முனியா”

“அய்யா”

“இவங்க ரெண்டு பேரையும் டாஸ்மாக் கடைக்குப் பக்கத்துல போடணும். இவங்க மேல கொஞ்சம் பிராந்திய ஊத்திடுங்க. ரெண்டு பேரும் குடிச்சிட்டு வேற யார் கூடயாவது சண்டை போட்டு அதனால இப்படி நடந்திருக்குன்னு எல்லாரும் நம்பட்டும். “

“சரிங்கய்யா” முனியன் சொல்ல அப்போது ஒரு இளைஞன் கூப்பிட்டான்.

“வேண்டாங்கய்யா அப்படி பண்ணா நாம மாட்டிக்குவோம் “

“என்ன ராசு சொல்ற?” டேனியல் புரியாமல் கேட்க ராசு தொடர்ந்தான்.

“ஐயா இவங்க டாஸ்மாக் பக்கத்துல செத்துக்கிடந்தா போலீஸ் வரும். போலீஸ் இவுங்க உடம்ப போஸ்ட்மார்ட்டம் பண்ணிப் பார்க்கும். அப்படி பண்ணிப் பார்க்கிறப்ப இவங்க வயித்துல பிராந்தி இல்லனா யாரோ வேணும்னே இவங்க மேல பிராந்திய ஊத்தி இருக்காங்கன்னு போலீஸ்க்கு ஈசியா சந்தேகம் வந்துடுங்கய்யா. “

ராசு சொல்ல டேனியல் அவனை வியப்பாய் பார்த்தார்.

“யாருடா நீ ? இவ்வளவு அறிவோட ஒருத்தன் நம்ம கூட்டத்துல இருக்கானா ? “ டேனியல் கேட்க ராசு வெட்கமாய் புன்னகைத்தான்.

“அப்ப நீ சொல்லு ராசு என்ன பண்ணலாம்?”

“இவங்க உடம்பு கிடைச்சே ஆகணும்னு ஏதாவது நிர்ப்பந்தம் இருக்குங்களா ஐயா?”

“அப்படி ஒன்னும் இல்ல”

“அப்படின்னா இவங்க ரெண்டு பேரையும் ராத்திரி ஊர் அடங்குனதுக்கு அப்புறம் அவங்க வீட்டுக்கு கொண்டு போயிட்டு வீட்டோடு சேர்த்து கொளுத்திடலாம். தீ விபத்துல ரெண்டு பேரும் செத்துப் போயிட்டாங்கன்னு ஊரை நம்ப வச்சுடலாம். ரெண்டு பேரும் எரிஞ்சு சாம்பலா போய்ட்டா போஸ்ட்மார்ட்டம் பண்ண வேண்டிய அவசியமும் இல்லை “

ராசு சொல்ல டேனியல் யோசித்தார். திட்டம் சரியாக தான் இருக்கிறது எங்கேயும் ஓட்டை இருப்பதாகத் தெரியவில்லை.

“முனியா நீ என்ன சொல்ற?”

“எனக்கும் அதுதாங்க சரியாப்படுது “

“சரி அப்படியே பண்ணிடலாம். சம்பந்தியையும் மாப்பிள்ளையையும் பேக் பண்ணிடுங்கப்பா “ டேனியல் சொல்ல அனைவரும் சிரித்தனர்.

***

“இல்ல நான் நம்ப மாட்டேன் “ ஜெனி பெருங்குரல் எடுத்து கதறியழ டேனியல் சோகமாய் அருகில் நின்றார்.

“அப்பா ஏன்பா எனக்கு மட்டும் இப்படி நடக்குது?”

“கவலைப்படாதம்மா நானும் இதை எதிர்பார்க்கல. என் பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை. அவ மனசுக்குப் பிடிச்ச வாழ்க்கை கிடைச்சிருச்சுன்னு ரொம்ப சந்தோஷமா இருந்தேன் கடவுள் இப்படி சதி பண்ணிட்டானேம்மா “ சொன்னவர் கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டார்.

“ஜெனி”

“அப்பா”

“எனக்கு மயக்கமா வருதும்மா” சொன்னபடி அவர் சோபாவில் சாய ஜெனி பதறினாள்.  வேகமாக உள்ளே சென்று தண்ணீர் கொண்டு வர அதை வாங்கிக் குடித்தார். 

“முனியா” அழைத்தார்.

“அய்யா “

“அந்தப் பையனை கடைசியா என் பொண்ணு பார்க்கணும் “ டேனியல் சொல்லு ஜெனி அவரை நெகிழ்ந்து போய் பார்த்தாள்.

“இல்லைங்க வேண்டாம் அங்க ஒண்ணுமே இல்ல எல்லாமே எரிஞ்சு முடிஞ்சிடுச்சு. “ முனியன் சோகமாய் சொல்ல ஜெனி தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.

“அய்யோ பாலா இனிமே நான் உன்னை எப்ப பார்ப்பேன்? கடவுளே “ 

கண்ணீர் விட டேனியல் சற்று நகர்ந்து வந்தார். முனியன் அவரைத் தொடர்ந்தான்.

“ஏன்டா”

“அய்யா”

“அங்க என்ன நிலவரம்?”

“போலீஸ் வந்துட்டு பார்த்துட்டுப் போய்ட்டாங்க “

“வேற ?”

“அக்கம் பக்கத்தில் விசாரிச்சாங்க”

“ம்”

“அய்யா”

“சொல்லு”

“யாராச்சும் நம்ம பாப்பாவுக்கும் அவனுக்கும் …” முனியன் முடிக்காமல் தயக்கமாய் பார்க்க டேனியல் மௌனமாய் தலையாட்டினார்.

“கண்டிப்பா சொல்வாங்க”

“அய்யா”

“போலீஸ் இங்க வரும். ஜெனி கிட்ட விசாரிப்பாங்க என்கிட்டயும் விசாரிப்பாங்க. என்னதான் நான் அவங்க காதலுக்கு சம்மதிச்சிட்டேன்னு சொன்னாலும் என்னை சந்தேகத்தோடத் தான் பார்ப்பாங்க.”

டேனியல் சொல்ல முனியன் பதறினான்.

“என்னய்யா சொல்றீங்க?”

“ஆமா முனியா. என்னை மட்டும் இல்லாம என்கிட்ட வேலை செய்ற எல்லாரையும் சந்தேகப்படுவாங்க. ஆனா பொணம் எரிஞ்சு சாம்பல் ஆனதால அவங்களால ஒன்னும் பண்ண முடியாது. சும்மா விசாரிச்சிட்டு போயிடுவாங்க அவ்வளவுதான். எதுக்கும் பயப்படாத நம்ம ஆளுங்ககிட்டேயும் சொல்லி வை. “

“சரிங்கய்யா”

டேனியல் உள்ளே சென்றார். முகத்தை சோகமாய் மாற்றிக் கொண்டார்.

வாசலில் போலீஸ் ஜீப் வந்து நின்றது.

ஒரு சப் இன்ஸ்பெக்டர் இரண்டு கான்ஸ்டபிள்கள் இறங்கினர்.

டேனியல் அவர்களை எதிர் கொண்டார்.

“சொல்லுங்க “

“இங்க டேனியல் யாரு?”

“நான்தான்”

“ஜெனி உங்க பொண்ணா?”

“ஆமா”

“அரசம்பாளையம் பிரிவில பயர் ஆக்சிடென்ட் ஆனது தெரியுமா?”

“ஆமா இப்பத்தான் கேள்விப்பட்டேன்”

“அங்க எரிஞ்சு போன பாலாக்கும் உங்க பொண்ணுக்கும் என்ன சம்பந்தம்?”

“ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர்  பிடிச்சிருக்கு.”

“உங்களுக்கு எப்படி தெரியும்? “

“அந்தப் பையன் வீட்டுக்கு வந்து பேசினான்”

“எப்ப வந்தான்?”

“முந்தா நேத்து வந்து பேசினான்”

“நீங்க என்ன சொன்னீங்க?”

“எனக்கு சம்மதம்தான். அந்தப் பையனோட அப்பாவ கூட்டிட்டு வந்து என்கிட்ட பேச சொன்னேன்”

“ம்”

“ஆனா அவங்க வரல அதுக்குள்ள இப்படி ஒரு சம்பவம் நடந்துடுச்சு”

“அப்படியா சொல்றீங்க?”

“ஆமா”

“ஆனா பாலாவோட பக்கத்து வீட்டுல அவனோட மாமா ஒருத்தர் இருக்கார். அவர் சொன்னது என்னன்னா பாலாவும் அவனோட அப்பாவும் உங்களப் பார்க்கறதுக்காக நேத்து காலையில கிளம்பியிருக்காங்க. “

சப் இன்ஸ்பெக்டர் சொல்ல டேனியலுக்கு உள்ளே தூக்கிவாரிப் போட்டது. வெளியே காண்பித்துக் கொள்ளாமல் மிக இயல்பாகக் கேட்டார்.

“நேத்து எதுக்காக என்னைப் பார்க்க வந்தாங்கன்னு எனக்கு தெரியல “

“அப்பா அவங்க உங்களை நேத்து பார்க்கலயா?” சப் இன்ஸ்பெக்டர் டேனியலை உன்னிப்பாய் பார்த்தபடி கேட்க டேனியல் தீர்மானமாக சொன்னார்.

“இல்ல “

“உங்க பொண்ணு இருக்காங்களா?”

“இருக்கா”

“கொஞ்சம் கூப்பிடுங்க”

“ஜெனி “ டேனியல் அழைக்க ஜெனி வெளியே வந்தாள்.

சப் இன்ஸ்பெக்டரை வெறுமையாகப் பார்த்தாள்.

“சாரி உங்க சிச்சுவேஷன் புரியுது இருந்தாலும் எங்க கடமைய நாங்க செஞ்சுதான் ஆகணும் “ அவர் சொல்ல ஜெனி தலையசைத்தாள்.

“பாலாவை எப்படி தெரியும்?”

“நாங்க ரெண்டு பேரும் ஒரே காலேஜ்ல படிச்சோம்”

“ம் நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப் போறதா ?”

“ஆமா”

“கொஞ்சம் தனியா வர முடியுமா?” சப் இன்ஸ்பெக்டர் அழைக்க ஜெனி டேனியலிடம் இருந்து தள்ளி வந்தாள்.

“உங்க அப்பா உங்க காதலுக்கு ஆதரவா எதிர்ப்பா?”

“எங்கப்பா சம்மதம் சொல்லிட்டார்”

“ஒருவேளை உங்ககிட்ட சம்மதம் சொல்லிட்டு உங்களுக்கு தெரியாம வேற ஏதாவது..?”

“ஸாரி சார் எங்க அப்பா அப்படிப்பட்ட கேரக்டர் இல்ல.”

“உங்களுக்கு தெரியாம…”

“ப்ளீஸ் எங்க அப்பாவ அப்படிப்பட்ட கேரக்டரா நினைச்சுக்கூட பார்க்க என்னால முடியாது. சச் எ ஜென்டில்மேன் “

“ஓகே. தேங்க்ஸ் மிஸ் ஜெனி” சொன்ன சப் இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிள்களுக்கு கண்கள் காட்ட புரிந்து கொண்டவர்கள் ஜீப்பில் ஏறி அமர்ந்தனர். சப் இன்ஸ்பெக்டர் ஏறிக் கொள்ள ஜீப் கிளம்பியது.

இரண்டு வீடு தள்ளி ஜீப் நின்றது. 

சப் இன்ஸ்பெக்டர் இறங்கினார்.

எதிரில் இருந்த வீட்டை அலசினார்.

காலிங் பெல்லை அழுத்த.ஓர் இளம் பெண் வந்து கதவைத் திறந்தாள்.

“யாரு?”

“வீட்ல வேற யாரு இருக்காங்க ?”

“அப்பா அம்மா ரெண்டு பேரும் வேலைக்குப் போயிட்டாங்க. நான் மட்டும்தான் சார் இருக்கேன்”

“என்ன பண்றீங்க? உங்க பேர் என்ன?”

“அர்ச்சனா இன்ஜினியரிங் பைனல் இயர் இப்ப வெக்கேஷன் சார்”

“நைஸ்.ஒரு சின்ன என்கொயரி “

“கேளுங்க சார் “

“ஜெனியத் தெரியுமா?”

“தெரியும் சார்”

“உங்க வீட்ல சிசிடிவி கேமரா வச்சிருக்கிறதப் பார்த்தேன். கொஞ்சம் விஷூவல்ஸ் செக் பண்ணிக்கலாமா? “

“ வாங்க சார் “

சப் இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைந்தார். அர்ச்சனா சிசிடிவி விஷுவல்ஸைக் கம்ப்யூட்டரில் ஓடவிட அவர் உன்னிப்பாய் பார்த்தார்.

“சார் அந்தப் பையன் “ கான்ஸ்டபிள் சொல்ல தேதி பார்த்தார். 

“முந்தாநாள் அவங்க வீட்டுக்கு போயிருக்கான்”

“ஆமா சார்” 

மேற்கொண்டு அனைத்தையும் பார்த்து முடித்தார்.

“அந்த ஆள் சொல்றது கரெக்ட் மாதிரி தான் தெரியுது அந்த பையன் நேத்து இவரை வந்து பார்க்கல. உனக்கு என்னய்யா தோணுது?”

“நீங்க சொல்றது கரெக்ட் தான் சார்”

“ஆனா எதுக்கு அவனோட மாமா கிட்ட போய் பார்த்துட்டு வரேன்னு சொல்லிட்டு வரணும்? அப்ப எங்க போயிருப்பான்?”

“சார்”

“சொல்லுய்யா”

“இது ரொம்ப நோண்டாதீங்க சார் இது தலைவலி பிடிச்ச கேஸ்.”

“என்ன சொல்ற?”

“பாடி எரிஞ்சு சாம்பல் ஆயிடுச்சு இனிமே அக்யூஸ்ட் கிடைச்சாலும் நம்மளால ஒன்னும் பண்ண முடியாது “

“அப்படி சொல்ல முடியாது”

“என்ன சார் சொல்றீங்க?”

“எரிஞ்சு போன பாடியோட டிஎன்ஏ சாம்பிள் எடுத்து செத்துப் போனது அந்த பையன் தான்னு ப்ரூவ் பண்ணனும் அப்படி ப்ரூவ் பண்ணிட்டோம்னா அவனை கொலை பண்றதுக்கு யாருக்கு மோட்டிவ் இருக்கோ அவங்களுக்கு  எதிரா விட்னஸ் இல்லை எவிடன்ஸ் ஏதாவது இருந்தா நாம மேற்கொண்டு ப்ரொசீட் செய்யலாம். ஆனா அது ஈசி இல்ல ஆனா பாசிபிள்தான். “

“புரியுது சார்”

“இப்ப நாம என்ன பண்ணப் போறோம் சார்?”

“நீ சொன்னதுதான். இந்த கேஸ் க்ளோஸ் பண்ணப் போறோம் “

சப் இன்ஸ்பெக்டர் சொல்ல கான்ஸ்டபிள்கள் புன்னகைத்தனர். அவர்கள் ஏறிக்கொள்ள ஜீப் போலீஸ் ஸ்டேஷன் நோக்கிக் கிளம்பியது.

***

ஒரு வாரம் கடந்த நிலையில் ..

ஜெனி கண்களில் சோகத்துடன் மௌனமாய் தனக்கு எதிரில் இருந்த பூச்செடியை பார்த்தபடி சோபாவில் அமர்ந்திருந்தாள்.

“ஜெனி”

“சொல்லு பாலா”

“இந்தா ரோஸ். எங்க வீட்டு தோட்டத்துல பூத்தது “

“தேங்க்ஸ் பாலா”

“எங்க வீட்டு தோட்டத்துல ஒவ்வொரு ரோஜாப்பூ பூக்கறப்ப எனக்கு எல்லாமே உன்கிட்ட கொண்டுவந்து கொடுக்கணும்னு தோணும் “

“ ம்”

“சில நேரங்கள்ல நைட் 12 மணிக்கு எல்லாம் பூவெடுத்து வச்சிட்டு எப்ப விடியும்னு காத்துட்டிருப்பேன் ஜெனி” பாலா சொல்ல ஜெனி கண்கள் கலங்க அவனைப் பார்த்தாள்.

“பாலா”

“ம்”

“என் மேல நீ காட்டற பாசத்தை கொஞ்சம் குறைச்சுக்க “

“என்ன ஜெனி சொல்ற?”

“எனக்கு அழுகையா வருது பாலா. ஏ பாலாக்கு என்னை இவ்வளவு தூரம் பிடிச்சிருக்குன்னு அழுகையா வருது. அதே நேரத்தில் உள்ள ரொம்ப பெருமையா இருக்கு.”

“ஜெனி உன்னோட முகத்தில சந்தோஷத்தைப் பார்க்கத்தான் இந்த ரோஜாப்பூ கொண்டு வந்தேன். உன்னோட கண்ல கண்ணீரைப் பார்க்கறதுக்கு இல்ல “

“உண்மையாவே நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் பாலா” சொன்ன ஜெனி அவன் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னாள்.

“ஐ லவ் யூ பாலா”

ஜெனி சொல்ல பாலா புன்னகைத்தான்.

“உன் மேல நான் காட்டற பாசத்தை நானே நினைச்சாலும் என்னால குறைச்சிக்க முடியாது ஏன் தெரியுமா ஜெனி?”

“ஏன் பாலா?”

“நீ எனக்கு சாமி மாதிரி”

தொடரும்

Previous article
Next article
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

error: Content is protected !!