Monday, December 23, 2024
Google search engine
HomeHorrorலவ் யூ ஜெனி 6

லவ் யூ ஜெனி 6

லவ் யூ ஜெனி 6

ராசுவிற்கு அந்த மனோரஞ்சித மணம் எங்கிருந்து வருகிறது என்று புரியவில்லை. சுற்று முற்றும் பார்த்தான்.  எதிரில் கருப்புப் பூனை ஒன்று தன் பளபளக்கும் விழிகளில் அவனையே பார்க்க ஏற்கனவே பயத்தில் இருந்தவன் இது பாலாவாக இருக்குமோ என்று யோசித்தான்.

அது சட்டென்று மதிலைத் தாவி குதித்து வெளியேற நிம்மதிப் பெருமூச்சு விட்டவன் காதருகில் அந்தக் குரல் கேட்டு திக்கென்று அதிர்ந்தான்.

“ரா…சு…”

“யாரு? “ கேட்டபடி எல்லா இடங்களிலும் பார்த்தான். யாரும் இல்லை. மனோரஞ்சித மணம் அவனை சூழ்ந்தது. ராசுவிற்கு மூச்சு திணறியது. அங்கிருந்து ஓட எத்தனித்தான். ஆனால் முடியவில்லை.

“யாராவது காப்பா…த்…து…ங்க “ கத்த முயற்சித்து முடியாமல் சோர்ந்தான். சட்டென்று அந்த மணம் அவனை விட்டு விலகியது போல் அவனுக்குத் தோன்ற நம்ப முடியாமல் பார்த்தவன் எதிரில் ஜெனி நின்றிருந்தாள். 

ராசுவிற்கு புரிந்தது. பாலாதான் தன்னைத் தொடர்ந்திருக்கிறான். ஜெனியைக் கண்டதும் அவன் நோக்கம் மாறிவிட்டது. இது தற்காலிகம்தான். பாலாவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் கொஞ்சம் கூட தாமதிக்காமல் சாத்தான் பூஜை நடத்துபவர்களை போய் உடனடியாகப் பார்க்க வேண்டும். தீர்மானித்தவன் அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக வெளியேறினான்.

***

“இல்லப்பா என்னால முடியாது” ஜான் பீட்டர் செல்ல பீட்டர் அவனை கவலையாய் பார்த்தார்.

“ஏன்டா ஏன் உனக்கு அவளைப் பிடிக்கல?”

“அவளுக்கு என்னைப் பிடிக்கலைப்பா “

“அது எப்படி உனக்கு தெரியும்?”

“என்னப்பா பேசறீங்க ஒவ்வொரு தடவையும் அவ கிட்ட பேசறப்ப அவ மூஞ்சி கொடுத்து பேசறது இல்ல. அவ மனசுல சதா ஏதோ ஒரு எண்ணம் ஓடிட்டே இருக்கு. அவளக் கல்யாணம் பண்ணிக்கிட்டா கண்டிப்பா என்னோட வாழ்க்கை நல்லா இருக்காது.”

சொன்ன ஜானை பீட்டர் ஒரு கோணலான புன்னகையுடன் பார்த்தார்.

“ஏன்டா அவளை கல்யாணம் பண்ணிக்க. அவ நாளைக்கு முரண்டு பிடிச்சா நம்ம வீட்ல ஒரு மூலைல கிடக்கட்டும். வேற எவ கூடயாவது குடும்பம் நடத்து. நல்ல ஞாபகம் வச்சுக்கோ ஜெனிய விட ஜெனியோட சொத்துக்கு மதிப்பு ரொம்ப அதிகம் “

“அதுக்காக எப்படிப்பா?”

“ஏண்டா”

“பா”

“நீ எனக்குத்தான் பொறந்தியா ?”

“ஏன்பா ?”

“உன்னோட கல்யாணத்தைவச்சு நான் நிறைய திட்டம் போட்டிருக்கேன். எல்லாத்தையும் பாழாக்கிடாத “ சொன்ன பீட்டர் ஜான் ஒன்றும் சொல்லாமல் மௌனமாய் இருப்பதைப் பார்த்து “புரிஞ்சு நடந்துக்க “ சொன்னபடி தன் அறைக்குள் சென்று விட ஜான் பெருமூச்சு விட்டான்.

***

ராசு தன் பைக்கில் பேய் வளைவை அடையும் போது மணி இரண்டு. வயிறு பசி என்பதை அறிவிக்க அருகில் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தான்.

ஒரு டீக்கடை மட்டும் இருக்க அங்கே சென்றான்.

“ஒரு டீ. பன் எடுத்துக்கிறேன்” சொன்னபடி பன்னை எடுத்துக் கொண்டான்.

“தம்பி யாரு வெளியூரா?” டீக்கடைக்காரர் கேட்க ராசு டீயை வாங்கியபடி பதில் சொன்னான்.

“குத்தூர்”

“ம் இங்க எங்க?”

“சாத்தான் காட்டுக்குப் போலாம்னு “ 

ராசு சொல்ல டீக்கடைக்காரர் முகம் மாறியது.

“சாத்தான் காடா?”

“ஆமா” சொன்ன ராசு கேட்டான்.

“என்னாச்சு?”

“இல்ல கொஞ்ச நாளா யாரும் அங்கப் போயி நான் பார்க்கல அதான் கேட்டேன்”

“என்ன சொல்றீங்கன்னு..”

“இப்ப நிறைய காவு விழ ஆரம்பிச்சுடுச்சு. யாருக்கோ குறி வச்சு  ஏவி விடுவாங்க ஆனா அது குறுக்க வர்றவங்களையும் காவு வாங்கிடுது. அதனால முடிஞ்ச வரைக்கும் அந்தப் பக்கம் போகாம இருக்கிறது தான் ரொம்ப நல்லது “

டீக்கடைக்காரன் சொல்ல ராசுவின் முதுகு சில்லிட்டது.

திரும்பிப் போய் விடலாமா? இவர் சொல்வதைப் பார்த்தால் நிச்சயம் ஏதோ ஒரு வில்லங்கம் உள்ளே இருக்கிறது.

குழம்பியவன் முகத்தைப் பார்த்து டீக்கடைக்காரர் கேட்டார்.

“தம்பி என்ன விஷயமா வந்து இருக்கீங்க?”

“அது வந்து…”

“பரவால்ல சொல்லுங்க”

“ஒரு ஆவி எங்களை தொந்தரவு பண்ணுது அந்த ஆவிய ஆவி லோகத்தில் இருந்து அப்புறப்படுத்தணும். அதுக்கு சாத்தான் பூஜை பண்றவங்களோட ஹெல்ப் எங்களுக்கு வேணும். அதான்”

“என்ன தம்பி இவ்வளவு சாதாரணமா சொல்லிட்டீங்க? அது எவ்வளவு பெரிய ரிஸ்க் தெரியுமா? ஒருவேளை நாம ஏவி விடறது அந்த ஆவிய கட்டுப்படுத்த முடியாமப் போச்சுன்னா நம்ம ஏவல் நம்மள யே ரெண்டு மடங்கு மோசமா வந்து தாக்கும். “

டீக்கடைக்காரர் சொல்ல ராசுவின் முகம் பயத்தில் வெளிறியது.

“அண்ணா”

“சொல்லுங்க தம்பி”

“நீங்க சொல்றதெல்லாம்…”

“என்னோட அனுபவத்துல நான் கண்டதை உங்களுக்கு சொல்றேன். “

“அண்ணா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?”

“சொல்லுங்க என்ன பண்ணனும்?”

“சாத்தான் பூஜை பண்றவங்க யாராவது தெரியுமா?”

“இல்ல தம்பி எனக்கு யாரையும் தெரியாது.”

“எனக்கு யாராவது ஒருத்தர் கிடைச்சா ரொம்ப உதவியா இருக்கும்”

“அதுக்கு நீங்க சாத்தான்காட்டுக்கு போய்த்தான் ஆகணும். ஆனா அங்க போறதுக்கு முன்னாடி சாத்தான் கோவில் ஒண்ணு ஊர் எல்லையில் இருக்கு. அங்க யாரும் போகாததால அதப் பூட்டி வச்சுருக்காங்க. அந்த கோயிலுக்கு பக்கத்துல ஒரு வீடு இருக்கும் அந்த வீட்டில சாத்தான் கோயிலோட பூசாரி நாச்சியப்பன் இருப்பார். அவரப் போய் பாருங்க நீங்க எதுக்காக சாத்தான் காட்டுக்குள்ள போகணும்னு அவர்கிட்ட சொல்லணும். அவர் ஒருவேளை சம்மதிச்சா நீங்க உள்ள போவதற்கான வழிவகைகளை உங்களுக்கு சொல்லித் தருவார். “

அவர் சொல்ல ராசு அவரை நன்றியுடன் பார்த்தான்.

“ஒரு விஷயம் தம்பி நீங்க அவர்கிட்ட உண்மையை மட்டும் தான் சொல்லணும் தப்பித்தவறி பொய் சொன்னா  அது உங்களுக்கு நல்லது இல்லை. ஞாபகம் வச்சுக்கங்க “

டீக்கடைக்காரர் சொல்ல ராசு மனதில் அதிர்ந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் தலையசைத்தான்.

வெளிய வந்த ராசு யோசித்தான்.

‘இப்போது என்ன செய்வது? அந்த பூசாரியை சந்தித்தால் தான் அடுத்து என்ன செய்யலாம் என்று தீர்மானிக்க முடியும். ஆனால் அதே நேரத்தில் எதற்காக ஒரு ஆவியை அந்த லோகத்தில் இருந்து விரட்ட வேண்டும் என்று அவர் கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்வது நாங்கள் தான் அவர்களை கொன்றோம் என்றா? அதை எப்படி வெளியே சொல்ல முடியும்? 

பொய் சொன்னால்  தானே பிரச்னை என்றார் டீக்கடைக்காரர் ? உண்மையை சொல்லாமல் விட்டு விட்டால்…?

அந்த பூசாரியை சந்தித்து தேவையானவற்றை மட்டும் சொல்லி உதவி கேட்டுப் பார்ப்போம்.

தனக்குள் யோசித்த ராசு சாத்தான் கோவிலை நோக்கி நடந்தான். சற்று தூரம் நடந்திருப்பான். ஸ் என்ற சத்தம் கேட்டு சத்தம் வந்த திசையில் பார்க்க ஒரு நாகம் படமெடுத்து நின்றது. ராசுவிற்கு உள்ளே நடுங்க அசையாமல் நின்றான். 

“யாரு?” குரல் கேட்டு நிமிர்ந்தான்.

“நான் சாத்தான் கோயிலுக்குப் போறேன் “

“சாத்தான் கோயிலா ? அங்க வழிபாடு ஏதும் நடக்கிறது இல்லை ரொம்ப நாளா பூட்டியிருக்கு. “

“தெரியும் நான் கோவிலோட பூசாரியை பார்க்க வந்திருக்கேன்”

“நான் தான் அது” அவர் சொல்ல ராசு அவரை நிமிர்ந்து பார்த்தான். 

“வணக்கம் ஐயா”

“ம் என்ன விஷயமா என்னைப் பார்க்கணும்?” அவர் கேட்க ராசு தயக்கமாய் நாகத்தைப் பார்த்தான். புரிந்து கொண்டவர் நாகத்திடம் கண்களால் உத்தரவு பிறப்பிக்க அது அங்கிருந்து சென்றது. ராசு அவரை பிரமிப்பாய் பார்க்க அவர் சாதாரணமாக சொன்னார்.

“இந்த காட்டுல நிறைய பாம்பு இருக்கு. பழகிட்டோம்னா ஒண்ணும் பண்ணாது புதுசா யாராவது தெரியாம வந்தாங்கன்னா இதுங்கள மீறி அவங்களால் எங்கயுமே தப்பிக்க முடியாது “

ராசு அதிர்ச்சியாய் பார்க்க அவனிடம் கேட்டார்.

“இப்ப சொல்லு யார் நீ? என்ன உன்னோட பிரச்னை? எதுக்காக என்னைப் பார்க்க வந்திருக்கே?”

பூசாரி கேட்க அவரிடம் சொல்வதற்காக நடந்து வரும் போது ஏற்கனவே தயார் செய்திருந்த கதையை சொன்னான்.

“எங்க முதலாளி பொண்ண ஒருத்தன் பணத்துக்காக லவ் பண்ணான். அவனுடைய உண்மையா குணம் புரிஞ்சிட்டு எங்க முதலாளி அவனை வேணாம்னு சொல்லிட்டாரு. அதுல தீ வச்சு தற்கொலை பண்ணிக்கிட்டான். இப்ப அவன் முதலாளியையும் எங்களையும் பழிவாங்க ரொம்ப முயற்சி பண்றான். எங்க ஆளுங்கள்ல ஒருத்தன ரொம்பக் கொடூரமா கொன்னுட்டான். முதலாளியையும் அவர் பொண்ணையும் காப்பாத்தணும். சாத்தான் காட்டுக்கு போய் சாத்தானுக்கு பூஜை பண்றவங்க யாரையாவது பிடிச்சு இவன நிரந்தரமா அழிக்கணும்கிறதுக்காகத்தான் இங்கே வந்தேன் “

சொன்ன ராசு அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு அவரைப் பார்க்க அவர் கவலையாய் யோசித்தார்.

“ஏன் இந்த பசங்க ஒரு பொண்ணு இல்லன்னா தற்கொலை பண்ணிக்கிறாங்க? அதனால என்னென்ன விளைவுகள் வருது. எனக்கும் ஒரு பொண்ணு இருக்கு. உன்னோட முதலாளி பொண்ணக் காப்பாத்த  நான் உனக்கு உதவி பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன். “

சொன்னவரை கையெடுத்து கும்பிட்டான் ராசு.

“ரொம்ப நன்றிங்க ஐயா”

“ம்” சொன்னவர் தொடர்ந்தார்.

“பின்னாடி கிணறு இருக்கு குளிச்சிட்டு செருப்ப அங்க வெச்சிட்டு வெறும் காலோட வா “

அவர் சொல்ல ராசு கிணற்றை நோக்கி சென்றான். 

வாளியில் நீர் இறைத்து தன் மேல் ஊற்றிக்கொண்டான். செருப்பை கிணற்றடியில் கழற்றி வைத்துவிட்டு வெறுங்காலுடன் நடந்தான்.

“டேய் “ என்ற பெருங்குடலுடன் பூசாரி கத்த ராசு பயந்து போய் பார்த்தான்.

“சீக்கிரம் வாடா இந்தப் பக்கம்” பூசாரி சொல்ல அவர் அருகில் போய் நின்றான்.

“ஐயா”

“உனக்கு பின்னாடி நீ எதையும் கவனிக்கலையா?” அவர் கேட்க அவன் திடுக்கிட்டு அவரைப் பார்த்தான். சொன்னான்.

“இல்லைங்க ஐயா”

“ஏவல் உன்னப் போட்டு இந்நேரம் அமுக்கியிருக்கும் “

அவ சொல்ல அவன் எக்கச்சக்கமாய் அதிர்ந்தான்.

“என்னய்யா சொல்றீங்க?”

“இந்த இடத்தில எங்க போனாலும் ஜாக்கிரதையா இருக்கணும். ஏவல் கிட்ட மாட்டிக்கிட்டா உனக்கு வாழ்க்கை அவ்வளவுதான் புரிஞ்சிக்க. “

“ஐயா”

“உன்னோட கண்ணுல பயம் தெரியுது பயப்பட்டா கண்டிப்பா உன்னால ஜெயிக்க முடியாது. யாருக்கு பயம் அதிகமா இருக்கோ அவங்களை ஏவல் ரொம்ப சுலபமாத் தாக்கிடும். “

“எனக்கு நீங்க சொல்றதெல்லாம் புதுசா இருக்கு”

“அப்படித்தான் இருக்கும் ஆனா இருக்குறதத்தான் நான் சொல்றேன் “

சொன்னவர் உள்ளே வரும்படி அழைத்தார்.

“வா இப்படி உட்காரு”

அமர்ந்தான்.

“ஆமா உன்னோட முதலாளி பொண்ணுக்காக தற்கொலை பண்ணிக்கிட்டு செத்தானே அவனோட பேர் என்ன?”  அவர் செப்புத் தகடை எடுத்தபடி அவன் கண்களைப் பார்த்து கேட்க தடுமாறிய ராசு சுதாரித்துக் கொண்டு சொன்னான்.

“அவன் பேர் பாலா “

“சாந்தி இல்லாம அலையறான்னா கண்டிப்பா அவன் இங்க வர்றதுக்கு வாய்ப்பு அதிகம். நான் அவனைக் கூப்பிட்டு பார்க்கறேன் “ அவர் சொல்ல அதை எதிர்பாராத ராசு அதிர்ந்தான். கேட்டான்.

“அவனை இங்க எதுக்கு ..” ராசு கேள்வியை முடிக்கவில்லை. அவர் அவனை புன்னகையுடன் பார்த்தபடி சொன்னார். 

“நீ சொன்னதெல்லாம் சரியான்னு அவன்கிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுக்கறேன் “

தொடரும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

error: Content is protected !!