2
காளியம்மன் கோவில்.
“அய்யா எனக்கு ரொம்ப பயமா இருக்குங்கய்யா. என் பொண்ணுக்கு ஏதாவது நடந்திடுமா? கோடாங்கி சொன்னதா கேள்விப்பட்டதில் இருந்து மனசு சரியில்லங்கய்யா”
காத்தான் கோவில் பூசாரியிடம் இடைவிடாமல் புலம்பிக் கொண்டிருக்க பூசாரி சமாதானப்படுத்தினார்.
“யாரோ ஏதாவது சொன்னா அப்படியே நடந்திடுமா? “
“இல்லங்கய்யா அந்த கோடாங்கி இதுவரை சொன்னது எல்லாமே நடந்திருக்கு.”
“அது சரிதான்.”
“அதுமட்டும் இல்லங்கய்யா. உயிர் போற நேரத்துல தேடிவந்து சொல்லிட்டு செத்துப்போயிருக்காரு. அப்படின்னா ஏதோ நடக்கப் போகுது. என் பொண்ணக் காப்பாத்துங்கய்யா.”
“காத்தான் மொதல்ல கவலைப்படாத. பயப்படாத நிதானமா யோசி. கோடாங்கி என்ன சொன்னாரு?”
“தாயி அவன் உன்னைத் தேடி வந்துட்டான் எங்கயாவது போய் உயிர் பொழச்சுக்கோ.
இதாங்க அவர் சொன்னது.”
“இது படி பார்த்தா யாரோ ஒருத்தன் உன் பொண்ணத் தேடி வருவான். அப்படித்தானே?”
“என்னய்யா சொல்றீங்க?”
“நெருப்புன்னா வாய் வெந்துடாது. சொல்லு”
“சரிதாங்க”
“அப்படின்னா உன் பொண்ணுக்கு ஆபத்து உள்ளுர்காரன் மூலமா கிடையாது. வெளியிலிருந்து வர்ற யாரோ ஒருத்தன். இந்த நிமிஷத்துல இருந்து வெளியூரிலிருந்து யார் யார் வர்றாங்கன்னு கவனமா இருப்போம். சந்தேகப்படுற மாதிரி யார் வந்தாலும் கவனிச்சிடலாம். கவலையை விடு காத்தான்.”
பூசாரி சொன்னது அவனுக்கு நம்பிக்கையை அளித்தது
“காத்தான்”
“அய்யா”
“கருப்புக்கு எலுமிச்சம்பழம் வச்சு சாமி கும்பிடு. கெட்டது ஒண்ணும் நடக்காது.”
“சரிங்கய்யா.”
காத்தான் தலையாட்டினான்.
அப்பொழுது ஊருக்குள் அலறியபடி ஓடி வந்தாள் காய்கறி விற்கும் செல்வி..
பூசாரி வெளியே வந்தார். காத்தான் பயந்து போய் பார்த்தான்.
“என்னாச்சு செல்வி?” பூசாரி கேட்க செல்வி மூச்சு வாங்கியபடி சொன்னாள்.
“அய்யா அய்யா”
“ம் சொல்லு”
“காட்டுப்பாதையில”
“என்ன சொல்லு?”
“செல்லமுத்துவும் கந்தனும் செத்துக கிடக்கிறாங்கய்யா” அவள் மூச்சு வாங்க பதட்டமாய் சொன்னாள்.
பூசாரி அதிர்ந்து போய் பார்த்தார்.
காத்தான் உள்ளே நடுங்கினான்.
அவன் மனசாட்சி மட்டும் இடைவிடாமல் சொன்னது.
‘ஏதோ நடக்கப்போகிறது’.
செல்லமுத்து கந்தன் இருவரின் உடல்களும் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டன.
சீன் ஆஃப் க்ரைம் பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனுக்கு தவறாக ஒன்றும் தோன்றவில்லை.
ஏதேனும் தடயம் இருக்கிறதா என்று பார்த்தார். சைக்கிள் மட்டும் உடைந்த நிலையில் இருந்தது.
இருவரும் சினிமா முடித்து விட்டு வந்திருக்கிறார்கள். நள்ளிரவு நேரம். குறுக்கில் இருந்த கல்லை கவனிக்காமல் சைக்கிளில் இருந்து விழுந்திருக்கிறார்கள். ஆனால் எப்படி இறந்திருக்க முடியும்? யோசித்தவருக்கு விடை அங்கே இருந்த கருங்கல் சொன்னது. இந்த கருங்கல்லில் இருவரின் தலையும் இடித்திருக்கிறது. அதுதான் மரணத்திற்குக் காரணமாக இருக்க முடியும். எதற்கும் போஸ்ட்மார்ட்டம் முடிந்தபின் தான் அதை உறுதிப்படுத்த முடியும்.
“சார்”
ராஜேந்திரன் நிமிர்ந்து பார்க்க கான்ஸ்டபிள் வைத்தியநாதன் நின்றிருந்தார்.
“சொல்லுங்க”
“இந்தப் பக்கம் வேற மாதிரி கொஞ்சம் நம்பிக்கை இருக்கு”.
“வேற மாதிரின்னா ?”
“காத்து கருப்புன்னு”
“ஸ்டாப் இட் “
“அதில்ல சார். ஜனங்களுக்கு நம்பிக்கை இருக்கு.”
“வைத்தியநாதன்”
“சார்”
“நாம போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கோம். அண்டர்ஸ்டாண்ட்?”
“யெஸ் சார்”
“நடந்தது ஒரு விபத்து.”
“யெஸ் சார்”
வைத்தியநாதன் தள்ளிப்போக ராஜேந்திரன் எதார்த்தமாக திரும்பியவர் யாரோ அவரை கூர்மையாக கவனிப்பது போல் உணர்ந்தார். அவர் மனதிற்குள் பதட்டம் அதிகரித்தது. யாரோ ஒளிந்திருந்து என்னை வேவு பார்க்கிறார்கள். இப்பொழுது கண்டுபிடிக்கிறேன் யாரென்று. ராஜேந்திரன் சுற்றுமுற்றும் கூர்மையாகக் கவனித்தார். செல்லமுத்து கந்தன் இருவரின் உறவினர்களும் கண்ணீரை அடக்கியபடி சோகமாக நின்றிருந்தனர். ஒருவர் மட்டும் துண்டு போட்டபடி அமர்த்தலாய் நின்று கொண்டிருக்க நான்கு பேர் அவரை சுற்றி நின்றனர்.
ராஜேந்திரனுக்கு அவர்கள் எவர் மீதும் சந்தேகம் வரவில்லை. இவர்களெல்லாம் தங்கள் வேலைகளைத் தான் பார்க்கிறார்கள். ராஜேந்திரன் கண்களை மூடி நீண்ட பெருமூச்சு வாங்கினார். நன்கு யோசிக்க மீண்டும் அவருக்கு அதே உணர்வு. யாரோ அவருக்கு மிக அருகில் நின்று அவரையே பார்ப்பது போல் உணர்ந்தார். சுற்றி முற்றிலும் பார்த்தவர் கண்களுக்கு எவரும் தட்டுப்படாமல் போக ராஜேந்திரனுக்கு முதன் முதலில் மனதில் பயம் உண்டானது
“அன்னம்மா கண்டுபிடிச்சிட்டேன். அவளைக் கண்டுபிடிச்சுட்டேன்”
அவன் உரக்கக் கத்தினான். அவன் நின்றுகொண்டிருந்தது ஒரு சுடுகாடு. அவன் அன்னம்மா என்று அழைத்தது தனக்கு எதிரில் வைக்கப்பட்டிருந்த சிறிய சிலையை. சிலையின் கண்கள் கொடூரமாக அவனையே பார்த்தபடி இருந்தன.
தனக்கு ரத்தத்தாகம் எடுத்து விட்டது என்பதை அவை புலப்படுத்த அவன் சிரித்தான்.
“அன்னம்மா உனக்கு பலிகொடுக்க இதோ இதுதான் இப்ப இருக்கு.”
சொன்னவன் அருகிலிருந்த ஆட்டைப் பிடித்து இழுத்தான். அது கத்தியது.
“அற்ப ஜீவனே அலறாதே. அர்த்தஜாமத்தில் அன்னம்மாவுக்கு பலியாகும் பாக்கியதை உனக்கு கிடைத்திருக்கிறது. சந்தோஷப்படு.”
அவன் கண்களில் வெறி மின்னியது. ஆடு நடுக்கமாய் பார்த்தது. கத்தியை எடுத்தவன் சட்டென்று ஆட்டின் கழுத்தை வெட்டினான். ஆடு துடிப்பதை சிறிதுகூட லட்சியம் செய்யாது ஒற்றைக் கையால் அலட்சியமாக தூக்கியவன் ரத்தத்தை அன்னம்மாவின் சிலை மீது தெளித்தான்.
அன்னம்மாவின் முகம் சாந்தமான தைப்போல் உணர்ந்தான்.
“என் பலியை ஏற்றுக் கொண்டாயா? வருகிற பௌர்ணமியன்று உனக்கு அவளைப் பலியாகத் தருகிறேன். எனக்கு என் சக்தியை இன்னும் அதிகப்படுத்து. அற்ப ஜீவன்கள் என் கண்களைப் பார்க்கும் பொழுது நடுங்கிச் சாக வேண்டும். மனிதப் பதர்கள் என் முன்னே வருவதற்கு யோசிக்க வேண்டும். “
அவன் சொல்வதை அன்னம்மா கேட்காதது போல் அவன் உணர்ந்தான். அவனுக்கு கோபம் வந்தது.
“நான் கொடுத்த பலியை ஏற்றுக்கொண்டாயா இல்லையா என் முன்னே வா. வந்து சொல். நீ சொன்னால் தான் நான் நம்புவேன்.”
அவன் ஆங்காரமாய் கத்த அப்பொழுதும் சிலை அவனை அமைதியாய் பார்த்தது.
உச்சகட்ட கோபம் அடைந்து தன் உள்ளங்கையை கத்தியால் குத்திக் கொண்டான். அந்த ரத்தத்தை அன்னம்மாவின் சிலை மீது வைத்தான்.
“சொல். இன்னும் நான் என்ன செய்ய வேண்டும் சொல் உனக்காக எது வேண்டுமானாலும் செய்கிறேன்.”
திடீரென்று அவன் முன் அந்த உருவம் தோன்றியது. அதன் முகம் கோரமாக நாக்கில் இருந்து ரத்தம் வழிந்தது.
அதைப் பார்த்தவன் மகிழ்ந்தான்.
“அன்னம்மா இப்பொழுதாவது சொல் என் பலியை ஏற்றுக் கொண்டாயா? இல்லையா?”
“காளிங்கா உன் பலியை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.”
“அம்மா”
“மீண்டும் மீண்டும் மிருகங்களை கொண்டுவந்து பலியிட்டால் என் கோபத்திற்கு நீ ஆளாக வேண்டியது வரும்.”
“அம்மா”
“ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் நான் சொன்ன திதியில் நான் சொன்ன நட்சத்திரத்தில் ஒரு வீட்டின் முதல் கன்னிப்பெண் எனக்கு பலியிட வேண்டும். அது மட்டுமே எனக்கு மகிழ்ச்சி. “
“நிச்சயம் செய்கிறேன் அன்னம்மா. வருகிற பௌர்ணமியன்று உனக்கு பலியிடுவதற்கு ஒருத்தியைப் பார்த்து வைத்திருக்கிறேன்.”
“நீ யாரை சொல்கிறாய் என்பது எனக்குப் புரியும்.”
“அன்னம்மா”
“சமீபத்தில் அங்கே என்ன நடந்தது என்று உனக்குத் தெரியுமா?”
அந்த உருவம் கேட்க காளிங்கன் தெரியாது என்று தலையசைத்தான்.
“என் வேட்டைக்கு நான் காத்துக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் இருவர் என்னைப் பார்த்து விட்டார்கள். அவர்களை விட்டுவிட்டால் அவர்கள் வேறு எங்காவது போய் என்னைப் பற்றி சொல்லி என் பலி உஷாராகிவிட்டால் நான் என்ன செய்வேன்?”
“அன்னம்மா”
“இருவரின் தலையையும் பற்றி தரையில் அடித்து கொலை செய்தேன். “
அன்னம்மாள் அதை சொல்லும் பொழுது அவள் கண்கள் காளிங்கனை வெறித்தன. அவர்கள் இறந்ததை அன்னம்மாள் மனதிற்குள் உணர்ந்து மகிழ்ந்தது அவனுக்குத் தெரிந்தது.
“காளிங்கா”
“சொல் அன்னம்மா நான் என்ன செய்ய வேண்டும்?”
“என் பலி தப்பிக்காது பார்த்துக்கொள்ள வேண்டும்.”
“அதில் சந்தேகமே வேண்டாம் வருகிற பௌர்ணமியன்று அவள் பலியிடப்படுவாள்.”
“முட்டாள்”
அன்னம்மா அவனை கோபமாய் பார்த்தாள்.
“ஏன் அன்னம்மா?”
“வருகிற பௌர்ணமி தினத்தில் ஏதாவது ஒரு கோவிலுக்கு அவள் சென்று பலியிடப்படும் நேரத்தில் கோவிலில் இருந்து விட்டால் அவள் தப்பித்து விடுவாள்.”
“புரிகிறது. அது நடக்காமல் கவனமாய் இருக்கிறேன்.”
“வேண்டாம்”
“அன்னம்மா “
“சொல்”
“எனக்குப் புரியவில்லை.”
“அதற்கான ஏற்பாட்டை நான் செய்து விட்டேன்.”
“என்ன ஏற்பாடு?”
“அவள் வீட்டை துஷ்ட ஆவி ஒன்று கண்காணிக்கிறது. அவளை எச்சரிக்க முயன்ற கோடாங்கியை அது கொன்றுவிட்டது.”
“அவளுக்கு சந்தேகம் வரவில்லையா?”
“துஷ்ட ஆவி கோடாங்கியைக் கொன்றதைக் கண்ட ஆந்தை பயந்து அலறியிருக்கிறது. விவரமானவர்கள் என்றால் புரிந்திருப்பர். பாவம் அவளுக்கு நடந்தது என்னவென்று புரிவதற்கு ஒரு ஜென்மம் வேண்டும்.”
அன்னம்மா சொல்ல காளிங்கன் சிரித்தான்.
“அப்பா” ராசாத்தி காத்தானை அழைத்தாள்.
“சொல்லும்மா”
“கோடாங்கி சொன்னது ஒரு மாதிரியா இருக்குப் பா”
“கவலைப்படாதம்மா அப்பா இருக்கேன்ல விட்டுட மாட்டேன்.”
“அதில்லப்பா”
“சொல்லும்மா”
“மனசுக்கு பயமாவே இருக்குப்பா. கோயிலுக்குப் போயிட்டு வரலாமா?”
“சரிம்மா போலாம்.”
“நாகதீர்த்தத்துக்கு போய்ட்டு வருவோம்.”
“சரிம்மா. எப்ப போலாம்?”
“வர்ற பெளர்ணமிக்கு” ராசாத்தி சொல்ல வெளிய ‘க்றீச்’ சென்று ஒரு அலறல் சத்தம் கேட்டது.
ராசாத்தி பதட்டமாய் வெளியே போய் பார்க்க கருப்புப்பூனை ஒன்று ரத்தம் வழிந்தபடி எதையோ பார்த்து நடுங்கிக்கொண்டிருந்தது.
தொடரும்