4
“என்னோட கணக்கு சரின்னா அந்த கோடாங்கியைக் கொன்னதும் பூனையைக் கொன்னதும் ராசாத்தி தான்.”
பாய் சொல்ல பூசாரி அதிர்ந்தார்.
“என்ன பாய் சொல்றீங்க?”
“இது என்னோட கெஸ்தான். பெரும்பாலும் உண்மையா இருக்க வாய்ப்பிருக்கு.”
“அப்ப ராசாத்திக்கு ஏதோ ஒரு பெரிய ஆபத்து இருக்குன்னு சொல்றீங்களா?”
“கண்டிப்பா.”
“அப்படி ஒரு ஆபத்து அவளுக்கு ஏற்படுத்தத்தான் அந்த ஆவி அவளுக்குள்ள இறங்கியிருந்தா அது ஏன் இன்னும் ஏற்படுத்தாமக் காத்திருக்கணும்?”
பூசாரி கேட்க பாய் சிரித்தார்.
“நல்ல கேள்வி. ஆனா பதில் அந்த ஆவிக்குத்தான் தெரியும்.”
பூசாரி ஒன்றும் சொல்லாமல் பாயை பின்தொடர்ந்தார்.
“பாய்”
“சொல்லுங்க”
“நம்மளால ஏதாவது பண்ண முடியுமா?”
“முடியுமான்னு தெரியாது ஆனா முயற்சி பண்ணலாம் அதுக்கும் நமக்கு யாரால ராசாத்திக்கு பாதிப்பு வரப்போகுதுன்னு தெரியணும். அது யாராலன்னு உங்களால சொல்ல முடியுமா?”
பாய் கேட்க பூசாரிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
காளிங்கன் ராசாத்தி வீட்டை அடைந்தான்.
சுற்று முற்றும் பார்த்தான். எவருமில்லை.
“வீட்ல யாரு?” குரல் கொடுத்தான்.
காத்தான் வெளியில் வந்தார்.
“யார் வேணுங்க?”
“இங்க ராசாத்தின்னு”
“என் பொண்ணுதான். நீங்க?”
“நாட்டாமை அனுப்பிச்சார்.”
“ஓ மூலிகைக்கா?”
“ஆமாங்க.”
“ஆடுதீண்டாப்பாளையும் சிரியாநங்கையும் வேணுங்க.”
“பாம்பு ரொம்ப அதிகமா?”
“ஆமாங்கய்யா”
காத்தான் உள்ளே திரும்பி குரல் கொடுத்தார்.
“அம்மா ராசாத்தி”
ராசாத்தி வெளியில் வந்தாள். காளிங்கனை புரியாமல் பார்த்தாள்.
“என்னப்பா?”
“மூலிகைக்காக வந்திருக்காரு. ஆடுதீண்டாப்பாளை சிரியாநங்கை ரெண்டும் வேணுமாம்.”
“சரிப்பா”
காளிங்கன் பார்வை ராசாத்தி மீதே நிலைத்திருந்தது.
“தம்பி”
“அய்யா” காளிங்கன் சுதாரித்துக் கொண்டான்.
“ராசாத்தி கூட போங்க. ரெண்டு மூலிகையும் எடுத்துக் கொடுக்கும்.”
காத்தான் சொல்ல காளிங்கன் தனக்குள் மிகவும் மகிழ்ந்தான்.
வேலை இவ்வளவு எளிதாக நிறைவேறும் என்று எதிர்பார்க்கவில்லை.
மூலிகை காட்டில் எவரும் இல்லை என்றால் இவளை அப்படியே தூக்கிக்கொண்டு சுடுகாட்டிற்குச் சென்று விட வேண்டியதுதான். நாளை பௌர்ணமிக்கு அன்னம்மாளுக்குப் பலி கொடுத்து விட்டால் அன்னம்மாள் என் சக்தியைக் கூட்டுவாள்.
எதையோ யோசித்தபடி நின்று கொண்டிருந்த காளிங்கனை காத்தான் சந்தேகமாகப் பார்த்தார்.
“தம்பி”
“அய்யா”
“என்ன பலமான யோசனை?”
“ஒண்ணுமில்லங்கய்யா”
“ம்”
காத்தான் யோசிக்க ராசாத்தி முன்னால் வந்தாள்.
“போயிட்டு வரேன்பா”
“சரிம்மா”
“வாங்க” சொன்ன ராசாத்தி முன்னே நடக்க காளிங்கன் கபடப் புன்னகையுடன் பின்தொடர்ந்தான்.
போலீஸ் ஸ்டேஷன்.
ராஜேந்திரன் தன் சேம்பரில் அமர்ந்திருந்தார். எதிரில் செல்லமுத்து கந்தன் இருவர் கொலை வழக்கு ஃபைல்
அன்று என்னை ஏதோ கண்காணித்தது. ஆனால் அது நிச்சயம் மனிதன் அல்ல.
அது எதுவாக இருக்கும்? கண்டிப்பாக மனிதன் அல்ல என்பது மட்டும் நிச்சயம்.
ஒருவேளை வைத்தியநாதன் சொன்னதுபோல் காத்து கருப்பு ஏதாவது? சீ என்ன பைத்தியக்காரத்தனமான யோசனை?
செல்லமுத்து கந்தன் இருவரும் திடகாத்திரமானவர்கள். இவர்களைத் தூக்கி வீசி கொல்வது என்பது சாதாரண மனிதனால் செய்யக்கூடியது அல்ல. அப்படியே கொல்ல வேண்டுமென்றாலும் இரண்டிற்கு மேற்பட்ட நபர்களால் மட்டுமே முடியும் அங்கே எந்த தடயமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் மனிதர்கள் இதில் சம்பந்தப் பட்டதாகவே தெரியவில்லை.
யோசித்த ராஜேந்திரன் அருகில் நின்றிருந்த வைத்தியநாதனை அழைத்தார்.
“வைத்தியநாதன்”
“சார்”
“அன்னிக்கு நீங்க சொன்னீங்களே?”
“புரியலை சார்”
“அதான். காத்துக் கருப்புன்னு”
“ஆமா சார்”
“நிஜமாவே காத்து கருப்பு ஏதாவது இருக்கா?”
“நிச்சயமா இருக்கு சார்.”
“எப்படிய்யா அடிச்சு சொல்றே?”
“என்னோட அனுபவத்தில் நானே பார்த்திருக்கேன் சார்”
“எங்கே?”
“எங்க ஊர்ல மிராசுவோட பையன் பொம்மின்னு ஒரு பொண்ணக் கெடுத்துக் கொன்னுட்டானுங்க.”
“ம் “
“அவனை அரெஸ்ட் பண்ண வந்த போலீஸ்கிட்ட மிராசுவோட வேலைக்காரன் சரண்டர் ஆயிட்டான்”.
“அப்புறம்?”
“மிராசுதார் பையனை வெளிநாட்டுக்கு அனுப்பிட்டாரு.”
“ஓ”
“போனவன் பல வருஷத்துக்கு அப்புறம் கல்யாணம் பண்ணிட்டு குடும்பத்தோட ஊருக்கு வந்திருக்கான். அந்த குடும்பத்தில் யாருமே மிஞ்சலைங்க. எல்லாருமே சோளக்கொல்லைல கை வேற கால் வேறயா தனித்தனியா செத்துக் கிடந்தாங்க. பொம்மி அடிச்சிடுச்சுங்க.”
“அது பொம்மிக்கு வேண்டிய யாராவது கொன்னிருந்தா?”
“பொம்மி ஒரு அனாதைப் பொண்ணுங்கய்யா”
வைத்தியநாதன் சொல்ல ராஜேந்திரன் அவரை நிமிர்ந்து பார்த்தார்.
“ராசாத்திக்கு பாதிப்பு யாரால் வரும்னு உங்களால் சொல்ல முடியுமா?” பாய் கேட்டதும் முதலில் மௌனமாக இருந்த பூசாரியின் முகம் மலர்ந்தது.
“பாய்”
“சொல்லுங்க”
“இந்த ஊருக்கு புதுசா வர்ற ஒருத்தனால தான் அவளுக்கு ஏதோ கெடுதல் நடக்கபோறதா அவங்கப்பா என்கிட்ட காலையில் சொன்னாரு.”
“ம் இதுவரைக்கும் அந்த மாதிரி யாரும் வரலையே?”
“ஆமா பாய். ஆனா காத்தான் சொல்றதைப் பார்த்தா ராசாத்தியத் தேடி யாரோ ஒருத்தன் நிச்சயமா வருவான். அது யாருன்னு நாம பிடிச்சுட்டா ராசாத்தியைக் காப்பாத்திடலாம்.”
பூசாரி சொல்ல எதிரில் நாட்டாமை மாணிக்கம் நடந்து வந்தார்.
“வணக்கம் அய்யா”
“வணக்கம் என்ன இந்தப் பக்கம்?”
“நம்ம ராசாத்தி வீடு வரைக்கும் போயிட்டு வந்தோம்.”
“ம் விஷயத்தை நான் கேள்விப்பட்டேன். அந்தக் கோடாங்கி எந்த ஊருன்னு ஏதாவது தெரிஞ்சதா?”
“இல்லங்கய்யா”
“அவன் குறி ஏதாவது சொன்னானா?”
“ஆமாங்கய்யா”
“என்ன சொன்னான்?”
“அவன் வந்துட்டான் தாயி உன்னைத் தேடி வந்துட்டான் தாயி. எங்கயாவது போய் உயிர் பொழச்சுக்க தாயின்னு சொல்லிட்டு செத்துட்டான்.”
“ஓ யாரைச் சொல்லியிருப்பான்?”
“அது தெரியலய்யா. ஆனா உள்ளுர்காரன் இல்லைன்னு மட்டும் தெரியும். யாரோ ஒரு வெளியூர்காரனாத்தான் இருக்கணும். வெளியூரில் இருந்து யார் வந்தாலும் கண்காணிக்கணும்னு பேசிட்டிருந்தோம்.”
பூசாரி சொல்லச் சொல்லவே நாட்டாமை முகம் மாறியது.
“சீக்கிரம் வாங்க நான் எதோ பெரிய தப்பு பண்ண மாதிரி தோணுது.”
“என்ன சொல்றீங்கய்யா?”
“ஒரு வெளியூர்க்காரன் என்கிட்ட வந்து பாம்புக்கடிக்கு மூலிகை வேணும்னு கேட்டான். நான் ராசாத்தியப் போய்ப் பாருன்னு அனுப்பிவச்சிட்டேன்.”
நாட்டாமை பதட்டமான குரலில் சொல்ல பூசாரி முகம் மாறியது.
“அய்யோ பாய்”
“ம்”
“அவன்தான்.”
“வாங்க முதல்ல போய் ராசாத்தியக் காப்பாத்தணும்” சொன்ன பாய் மூலிகைக்காட்டை நோக்கி ஓடினார். பூசாரி உடன் விரைந்தார்.
மூலிகைக்காடு.
“வாங்க” அழைத்த ராசாத்தி கேட்டைத் திறந்து உள்ளே சென்றாள்.
காளிங்கன் அவளைப் பின் தொடர்ந்தான்.
“என்ன மூலிகை சொன்னிங்க?” ராசாத்தி கேட்க காளிங்கன் பதில் ஒன்றும் சொல்லாமல் அவளைப் புன்னகையுடன் பார்த்தான்.
“உங்களைத்தான் கேட்கிறேன் என்ன மூலிகை சொன்னீங்க?”
ராசாத்தி மீண்டும் கேட்க அவன் தன்கையில் ஒரு சிறிய மண்டை ஓட்டை எடுத்தான். ராசாத்தி அதிர்ந்து போய் பார்த்தாள்.
“என்ன பயமா இருக்கா?”
“யார் நீ?” ராசாத்தி நடுங்கினாள்.
“சொல்றேன். நான்தான் காளிங்கன்.”
ஏதோ விபரீதம் என்றுணர்ந்த ராசாத்தி வெளியே செல்ல முயன்றாள்.
அவன் குறுக்கே நின்றிருந்தான்.
“எங்க தப்பிக்க நினைக்கிறே? உன் விதி முடிஞ்சிடுச்சு. உன்ன நாளைக்கு அன்னம்மாக்குப் பலி கொடுக்கப் போறேன்.”
காளிங்கன் குரலில் குரூரம் தெறிக்க இதற்குமேல் இவனிடம் பேசிக்கொண்டிருந்தால் மாட்டிக்கொள்வோம் என்றுணர்ந்த ராசாத்தி அங்கிருந்து ஓடினாள்.
“நில்லுடி” வெறியுடன் கத்திய காளிங்கன் அவளைத் துரத்தினான்.
நான்கே எட்டில் ராசாத்தியை பிடிக்க முயல அவள் தரையில் உருண்டாள்.
“நேரமாகுது எந்திரி உன்னை சுடுகாட்டுக்கு கொண்டு போகணும்”
காளிங்கன் கத்தினான்.
ராசாத்தியின் கைகளைப் பிடிக்க முயன்ற காளிங்கன் கழுத்தை ராசாத்தியின் கைகள் பிடித்திருந்தன. காளிங்கன் விடுபட முயற்சிக்க முடியவில்லை. அதிர்ந்தான்.
ராசாத்தியின் கையிலிருந்த நீளமான கூரிய நகங்கள் அவன் கழுத்தை அழுத்தின. வலி பொறுக்க முடியாமல் கதறிய காளிங்கனைப் பார்த்து சிரித்த ராசாத்தியின் கண்கள் சிவந்தன.
“ஏண்டா நாளைக்கு நீ என்னை பலி குடுக்கறியா இன்னைக்கு நான் உன்னை பலி கொடுக்கறேன். செத்துப்போடா”
நகங்களை இன்னும் அழுத்த அவை காளிங்கனின் கழுத்தைத் துளைத்து ரத்தம் பீறிட்டது. காளிங்கன் துடித்தான். விடுபடப் போராடிய அவனால் விடுபட முடியவில்லை.
ரத்தம் வழிய அவன் இறப்பதை வேடிக்கை பார்த்த ராசாத்தி வெளியில் ஏதோ சத்தம் கேட்க அவனை விட்டாள்.
யாரோ வருகிறார்கள்.
வெளியில் ஓடினாள்.
எதிரில் பூசாரி பாய் நாட்டாமை மூவரும் நின்றிருக்க
அய்யா காப்பாத்துங்கய்யா நடுங்கியபடி சொன்னவளைப் பார்த்த பூசாரி
“பயப்படாதம்மா நாங்க வந்துட்டோம்ல? இனி ஒண்ணும் நடக்காது” சொல்ல
உள்ளே சென்ற நாட்டாமை கத்தினார்.
“பூசாரி அந்த வெளியூர்க்காரன் செத்துக் கிடக்கிறான்”
நாட்டாமையின் குரலைக் கேட்டு பூசாரி பாய் இருவரும் உள்ளே ஓடினார்கள்.
ராசாத்தி தன் கூரிய நகங்களில் இருந்த ரத்தக்கறையை துடைத்தபடி புன்னகைத்தாள்.
தொடரும்.
அடுத்த பதிவு திங்கட்கிழமை (01/07/24)
வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொடரும். அடுத்த பதிவு திங்கட்கிழமை 01/07/2024. வாசகர்கள் தங்கள் மேலான கருத்துக்களை பதிவிடும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
க