Sunday, December 22, 2024
Google search engine
HomeHorrorLove You Jeni 3

Love You Jeni 3

லவ் யூ ஜெனி 3

சில மாதங்களுக்குப் பிறகான ஒரு நாளில் ..

“ஜெனி” டேனியல் அழைத்தார்.

“அப்பா”

“உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் நீ எப்படி எடுத்துக்குவேன்னு எனக்குத் தெரியல “

“பரவால்ல சொல்லுங்கப்பா”

“கொஞ்ச நாள் முன்னாடி எனக்கு நெஞ்சுல ஒரு வலி வந்தது.” டேனியல் சொல்ல ஜெனி பதறினாள்.

“என்னப்பா சொல்றீங்க?” 

“பதட்டப்படாதம்மா. டாக்டர் ரகு கிட்ட கன்சல் பண்ணேன். ஒரு ஆபரேஷன் பண்ணா சரியாகும்னு சொன்னார் “

“அப்புறம் என்னப்பா ? அதப் பண்ணிட வேண்டியதுதானே?”

ஜெனி கேட்க டேனியல் பதில் ஒன்றும் சொல்லாமல் மௌனமாய் நின்றார்.

“என்னப்பா சொல்லுங்க”

“இல்லம்மா அது வேண்டாம் விடு”

“என்னமோ சொல்ல வர்றீங்க சொல்லுங்கப்பா “

“ஜெனி அந்த ஆபரேஷன் கொஞ்சம் காம்ப்ளக்ஸ் . எனக்கு ஆபரேஷன் பண்ணிக்கிறதுல எந்த பயமும் இல்லை. ஆனா…”

“சொல்லுங்கப்பா”

“உனக்கு ஒரு நல்லது நடத்திப் பார்க்காம எனக்கு ஏதாவது ஆயிடுமோன்னு பயமா இருக்கும்மா “

டேனியல் சொல்ல ஜெனி வெறுமையாக சிரித்தாள்.

“என்னோட வாழ்க்கை முடிஞ்சு போன ஒன்னுப்பா”

“என்னம்மா இப்படி சொல்ற?”

“என் நிலைமை அப்படிப்பா”

“அப்படின்னா நான் ஆபரேஷன் பண்ணிக்கலம்மா. என்னோட விதிப்படி எனக்கு என்ன நடந்தாலும் சரி அதை பத்தி எனக்கு எந்த பிரச்னையும் இல்லை “ டேனியல் சொல்ல ஜெனி அவர் கைகளை பிடித்துக் கொண்டு கவலையாய் கேட்டாள்.

“ஏன்பா ?”

“என்னோட விருப்பத்துக்கு யாருமே மதிப்பு கொடுக்காத பட்சத்துல நான் மட்டும் எதுக்காக ரொம்ப நாள் உயிரோடு இருக்கணும்?”

கேட்டவரை ஜெனி பெருமூச்சுடன் பார்த்தாள்.

“சரிப்பா இப்ப நான் என்ன பண்ணனும்?”

“பண்ணுவியாம்மா?”

“பண்றேன்பா”

“உனக்கு ஒரு நல்லது பண்ணிப் பார்க்க எனக்கு விருப்பம் “

“சரிப்பா”

“நிஜமாத்தான் சொல்றியா?”

“ஆமாப்பா”

சொன்ன ஜெனி தன் அழைத்துச் செல்ல டேனியல் உள்ளே உற்சாகமாய் உணர்ந்தார்.

தன் மொபைலை எடுத்து தன் நண்பன் பீட்டருக்கு அழைத்தார்.

“டேய் பீட்டர்”

“என்ன டேனியல் எப்படி இருக்க உன் கூட பேசி ரொம்ப நாளாச்சு?”

“ரொம்ப சந்தோசமா இருக்கேன் உன்னோட பையன் என்ன பண்றான் இப்ப?”

“அவன் தான் இப்ப என்னோட கம்பெனிய பார்த்துக்கறான். வெரி ரெஸ்பான்சிபில் ஃபெல்லோ “

“சூப்பர். என்னோட பொண்ணு எம் பி ஏ முடிச்சிருக்கா. “

“எனக்கு புரியுது.”

“எப்ப பொண்ணு பார்க்க வர்றே?”

“அந்த கஸ்டம்லாம் நமக்கு வேணுமா டேனியல் ? என்னிக்கு இருந்தாலும் என்னோட பையன் உன்னோட பொண்ணுக்குத்தான்னு நாம ஏற்கனவே பேசி வச்சது தானே?”

“ஓகே பீட்டர் அப்ப நான் ஒன்னு பண்றேன் என் பொண்ணோட போட்டோவ அனுப்பறேன். நீ அங்க எல்லாருக்கும் காட்டு. பையனோட போட்டோவ எனக்கு அனுப்பி விடு “

“ஓகே டேனியல் அப்படியே ஆகட்டும்”

***

ஜான் நல்ல உயரமாக இருந்தான். அணிந்திருந்த ஆடையில் நேர்த்தி தெரிந்தது. பேசும்போது இயல்பாக வெளிப்பட்ட ஆங்கிலம் அவன் மேல் இருக்கும் மதிப்பை எல்லோருக்கும் எளிதில் உயர்த்தும்.

தன் முன்னால் நின்ற ஜெனியைப் பார்த்து கேட்டான்.

“ ஆர் யூ கம்ஃபர்ட்டபிள்?”

“யெஸ்”

“இல்ல ஒரு மாதிரியா ஃபீல் பண்ண மாதிரி தோணுச்சு எனக்கு.”

“நான் எங்கேயும் யார் கூடயும் வெளியில வந்தது இல்லை இந்த மாதிரி. இதுதான் எனக்கு ஃபர்ஸ்ட் டைம் “ ஜெனி சொல்ல ஜான் சிரித்தான். 

“நான் மட்டும் பத்து பொண்ணுங்கள வெளியில் கூப்பிட்டுப்போய் எக்ஸ்பீரியன்ஸ் ஆகி அதனால ரொம்ப ஃப்ரீயா இருக்கேன்னு நினைக்கறீங்களா?”

“நோ நான் அப்படி மீன் பண்ணல”

“இட்ஸ் ஓகே ஜஸ்ட் ஃபார் ஜோக் “

“ம்”

ஜான் மேற்கொண்டு தன்னைப் பற்றி அதிகம் பேசினான் தன் ஆம்பிஷன் தன் கனவு தன் நிறுவனம் அனைத்தையும் அதிகமாக பேசினான் ஆனால் ஜெனிக்கு மனது ஒட்டவில்லை. கடமைக்கு தலையசைத்தாள். மனம் ஜானோடு பாலாவை ஒப்பிட்டுப் பார்த்தது. 

பாலா அவனிடம் சுயநலம் சுத்தமாக இருக்காது. அவன் எதை செய்தாலும் அதில் என் மீதான காதல் வெளிப்படும். என்னை மனதிற்குள் வைத்து கொண்டாடி மகிழ்ந்தவன் அவன். அவனுடன் இருக்கும் பொழுது அவன் அப்பாவித்தனம் என்னை ரசிக்க வைத்தது. அதுவே என் மனதை அவனுக்கு கொடுக்கத் தோன்றியது.

ஆனால் இவன் எல்லாவற்றையும் பிசினஸ் ஆகப் பார்க்கிறான். நன்றாக ஸ்டைலாக இருந்து கொண்டு நன்கு ஆங்கிலம் பேசினால் ஒரு பெண் மனதை எளிதில் வெல்ல முடியும் என்று தவறாக யோசிக்கிறான். இவனுடன் தான் இனி என் வாழ்க்கையா? எப்படியாவது தப்பிக்க வேண்டும் எப்படி?

ஜெனி தனக்குள் யோசிக்க ஜான் அவள் மேல் மெலிதாய் கோபப்பட்டான்.

“ஜெனி இன்னிக்கு நான் இங்க உன் கூட டைம் ஸ்பென்ட் பண்றேன். அதுக்கு நீ வேல்யூ கொடுக்கணும். ஏன்னா என்னோட டைம் ரொம்ப மதிப்பானது. அதை நான் உனக்காக ஸ்பென்ட் பண்றேன் அப்படிங்கிற பட்சத்தில் உனக்கு அதோட முக்கியத்துவம் என்னன்னு புரிஞ்சிருக்கணும் ஆனா நீ உனக்குள்ளேயே என்னமோ நினச்சுக்குற. சிரிச்சுக்கிற . ஐ அம் சாரி இது நான் உன்கிட்ட இருந்து எதிர்பார்க்கலை “

ஜான் சொல்ல ஜெனி ஒன்றும் பேசாமல் மௌனமாய் அவனைப் பார்த்தாள்.

***

“சாரி டாடி அவளை எனக்கு பிடிக்கல.” ஜான் பீட்டரிடம் சொல்ல பீட்டர் மகனை சமாதானப்படுத்தினார்.

“அவ எக்கச்சக்கமான சொத்துக்கு ஒரே வாரிசு அது யோசித்துப் பார் எல்லாமே பிடிக்கும்.” பீட்டர் சொல்ல ஜான் யோசித்தான்.

“நம்மகிட்டத்தான் தேவைக்கு அதிகமாவே பணம் இருக்கே. இன்னும் என்ன?”

“ஜான் பணத்தைப் பொறுத்தவரைக்கும் பணம் வருதுன்னா அதுக்கு என்ன வழியோ அது நாம செஞ்சிட்டே இருக்கணும் பணம் போதும்னு எப்பவுமே நினைக்கக் கூடாது. ஏதாவது ஒரு தேவை எப்பவுமே இருந்துட்டேதான் இருக்கும். அதனால பணத்தைப் பொறுத்த வரைக்கும் போதும்னு எப்பவும் நினைக்காத”

பீட்டர் ஜானிடம் சொல்ல அவன் தலையசைத்தான்.

***

“என்னம்மா ஜானைட் பார்த்து பேசினியா ? உனக்கு ஓகே தானே?  “ டேனியல் ஜெனியிடம் ஆர்வமாகக் கேட்டார்.

தன் முகத்தையே ஆர்வமாய் பார்த்த அவருக்கு ஏமாற்றத்தைத் தர விரும்பாத ஜெனி “ஓகேப்பா” என்றாள். டேனியல் பரவசப்பட்டார்.

“நான் பீட்டர்கிட்ட பேசிடறேன். சீக்கிரமா கல்யாணத்தைப் பண்ணிட்டா  உனக்கும் ஒரு நல்ல மாற்றம் வரும்”

டேனியலிடம் பேசிவிட்டு ஜெனி தன் அறைக்குச் சென்றாள்.

ஜன்னல் வழியே வெளியே வானத்தைப் பார்த்தாள்.

“பாலா எதுக்கு என்னோட வாழ்க்கையில வந்தே? நீ ஒரு நாளில் எரிஞ்சுப் போயிட்டே. நான் ஒவ்வொரு நாளும் எரிஞ்சிட்டே இருக்கேன் பாலா. ரொம்ப வேதனையா இருக்கு பாலா. என்னோட அனுமதி இல்லாமயே நான் என்னென்னமோ பண்ணிட்டு இருக்கேன். எனக்கு கல்யாணம் நடக்கப் போகுதாம் பாலா. உனக்கு ஞாபகம் இருக்கா? ஒரு நாள் நம்ம கல்யாணத்தப் பத்தி நாம பேசுனது. அப்ப உன் கண்ல இருந்த வெட்கத்தை நான் ரசிச்சேன் பாலா. அப்பா நினைச்சுட்டு இருக்கார். உன்ன மறந்துட்டு நான் இன்னொருத்தர் கூட என் வாழ்க்கைய வாழ முடியும்னு. ஆனா என்னால முடியுமா பாலா அது? எனக்கு கஷ்டமா இருக்கு பாலா. ஒவ்வொரு நாளும் என்னை பார்க்கிறப்ப நீ ரோஸ் கொண்டு வந்து கொடுப்பியே எனக்கு அந்த ரோஸ் வேணும் பாலா “

மனதிற்குள் எதையெதையோ புலம்பியபடி வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஜெனி.

எப்போது தூங்கினாள் என்று தெரியாமல் தூங்கி விட்டாள்.

பொழுது விடிந்தது.

ஜெனி தூக்கம் கலைந்து எழுந்தவள் அறையில் புதிதாக ஒரு மணம் வீசுவது போல் உணர்ந்தாள்.

என்ன மணம் இது? யோசித்தவள் பார்வை ஜன்னல் மீது விழ ஜன்னல் திட்டில் வைக்கப்பட்டிருந்த அந்த ரோஜா அவள் பார்வைக்குக் கிடைத்தது.

ஜெனி பயந்து போய் பார்த்தாள்.

இங்கே யாரோ வந்திருக்காங்க. இது பாலா கொடுத்த அதே ரோஸ். இது எப்படி இங்கே ? 

சட்டென்று வெளியில் வந்து டேனியல் அறையை எட்டிப் பார்த்தாள். அவர் இன்னும் உறங்கிக் கொண்டிருக்க குழம்பினாள்.

‘யார் வந்திருப்பாங்க?’

வெளியில் வந்து நின்றவள் ஜன்னலின் வெளிப்புறமாக வந்து பார்த்தாள்.

திட்டின் அருகே மண் இருந்தது. தரையிலும் மண் இருக்க அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. 

வேகமாக தன் அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டாள். அந்த ரோஜாவை பயமாய் பார்த்தாள்.

அறையில் காற்று வழக்கத்திற்கு மாறாக வேகமாக அடித்தது. ஜெனி பயமாய் பார்க்க மேஜை மீதிருந்த ஜெனியின் டைரி கீழே விழுந்தது. டைரி திறந்து கொண்டது. ஜெனி வேகமாய் எடுத்தாள். டைரியை மூட நினைத்தவள் பார்வை திறந்திருந்த பக்கத்தின் மேல் பதிந்தது. அவள் அதில் பாலா நீ தரும் ரோஜாவிற்காக நான் இன்னும் காத்திருக்கிறேன் என்று எழுதியிருந்ததைப் பார்த்தாள். குப்பென்று ஏதோ ஒரு உணர்வு அவளைத் தாக்கியது. அவள் உடல் நடுங்கியது. இதயம் வேகமாய் துடித்தது. 

பாலாவா? என் பாலாவா?  பாலா நீ வந்தாயா? எனக்காகவா?

என்ன நான் பைத்தியம் போல் உளறிக் கொண்டிருக்கிறேன். என் பாலாதான் இறந்துவிட்டாரே. பிறகு எப்படி? 

இந்த ரோஜா எப்படி இங்கு வந்திருக்க முடியும்? வேறு யாராவது கொண்டு வந்து வைத்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

அவள் அறிவு அவளுக்கு விளக்கம் கொடுத்தாலும் மனம் மட்டும் அவள் அறிவை ஏற்க மறுத்தது. அவள் மனம் பாலா வந்திருப்பதாக எண்ணி சந்தோஷப்பட்டது. 

டேனியல் வழக்கத்திற்கு மாறாக ஜெனி மிகவும் மகிழ்வாக இருப்பதைப் பார்த்தார். 

பரவாயில்லை. பீட்டர் மகன் ஜெனியின் மனதை முதல் சந்திப்பிலேயே மாற்றிவிட்டான் போல். 

நல்லது.

பீட்டரிடம் பேசி சீக்கிரமாக ஜெனியின் திருமணத்தை நடத்த வேண்டும்.

யோசித்த டேனியல் வெளியில் வந்தார். ஜெனி அங்கே வந்து நின்றாள்.

“அப்பா உங்க கிட்ட ஒன்னு கேட்கலாமா?”

“கேளும்மா”

“செத்துப் போனவங்க திரும்ப வருவாங்களாப்பா?”

“அவங்களுக்கு நிறைவேறாத ஆசை இருந்தா கண்டிப்பா இந்த பூமியில் தான் இருப்பாங்க. எதுக்கும்மா கேட்கறே?” டேனியல் கேட்க ஜெனி “இல்லப்பா சும்மா தான் கேட்டேன்” என்றபடி அங்கிருந்து சென்றுவிட டேனியல் யோசித்தார். ஆனால் அவருக்கு ஒன்றும் தோன்றவில்லை.

அன்று இரவு .

ஜெனி தன் டைரியை எடுத்து எழுதினாள்.

“பாலா இன்னிக்கு மட்டும் நான் எத்தனை பேர் கிட்ட இந்த கேள்வி கேட்டேன் தெரியுமா? செத்துப் போனவங்க கண்டிப்பா இந்த பூமியில் இருப்பாங்க ஆனா எல்லாருக்கும் தெரிய மாட்டாங்க அவங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்க யாராவது வேண்டி கூப்பிட்டாங்கன்னா அவங்களுக்கு மட்டும் தெரிவாங்க. அவங்க முன்னாடி வருவாங்கன்னு சொன்னாங்க. அது சரியா தப்பான்னு எனக்குத் தெரியாது பாலா. ஆனால் நான் உன்னை கூப்பிடறேன். எனக்கு உன்ன பார்க்கணும். நீ எந்த உலகத்தில் இருந்தாலும் சரி என் முன்னாடி வந்துட்டு போ பாலா ப்ளீஸ் “

நீண்ட நேரம் முழித்திருந்தவள் தூங்கிவிட்டாள்.

சிறிது நேரத்தில் அறையில் அந்த மனோரஞ்சித மணம் பரவியது.

மெலிதாய் ஒரு புகை அறைக்குள் ஊடுருவியது.

தொடரும்

Previous article
Next article
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

error: Content is protected !!