14
நகரை விட்டு வெளியில் வந்திருந்த பீட்டர் ஃபாத்திமாவிடம் கேட்டான்.
“மேடம் எங்க போகணும்?”
அவன் கேட்கும் பொழுது தான் ஃபாத்திமா விற்கு எங்கு போவதென்று தெரியாமல் வெளியில் கிளம்பியது தெரிந்தது.
செண்பகத்தைப் பார்த்தாள்.
“கூளிக்காட்டுக்குப் போலாம் மேடம்”
சொன்ன செண்பகத்தை ஃபாத்திமா புரியாமல் பார்க்க
“அங்க என்னோட ஃப்ரண்ட் ஒருத்தர் இருக்கார் மேடம்” என்றாள்.
தற்சமயம் வேறு வழி ஒன்றும் இல்லாததால் ஃபாத்திமா தலையசைத்தாள்.
“கூளிக்காட்டுக்குப் போங்க”
ஃபாத்திமா செல்ல டிரைவர் காரைத் திருப்பினான். தகவல் பலகை கூளிக்காடு 18 கிலோமீட்டர் என்று காட்டியது.
செண்பகம் தன் அலைபேசியை எடுத்தாள். அழைத்தாள்.
“ஹலோ நான் செண்பகம் பேசறேன். ரவி இருக்காரா?”
“நான் ரவிதான் பேசறேன். சொல்லுங்க “
“ரவி எனக்கு ஒரு சிக்கல். “
“என்ன சொல்லுங்க? என்ன பண்ணனும் நான்?”
“நாங்க உங்க அவுட் ஹவுஸ்க்குத் தான் வந்திட்டிருக்கோம்.”
செண்பகம் சொல்ல மறுமுனையில் இருந்த ரவிக்கு ஏதோ சிக்கல் என்று புரிந்தது.
“சரி கவலைப்படாதீங்க வாட்ச்மேன் இருப்பார். நீங்க எத்தனை பேர் இருக்கீங்க?”
“மூணு பேர். லேடீஸ்.”
“டோன்ட் வொரி. நீங்க வாட்ச்மேன் கிட்ட சாவியை வாங்கிக்கங்க. அங்க தங்கி இருங்க. நான் வரேன்.”
“ரொம்ப தேங்க்ஸ் ரவி”
“இட்ஸ் ஓகே.”
பேசி முடித்த செண்பகத்தைப் பார்த்த பாத்திமாவிடம்
“என்னோட கொலீக் கம் ஃப்ரண்ட் கா ” செண்பகம் சொல்ல பாத்திமா தலையசைத்தாள்.
ராசாத்தி ஒன்றும் பேசாமல் அமைதியாகப் பயணித்தாள். மனம் முழுவதும் பயம் மேலோங்கியிருந்தது.
கூளிக்காடு பெயருக்கு தகுந்தாற்போல் காட்டுப்பகுதியாக இருந்தது.
மற்ற நாட்களில் இப்படி ஒரு காட்டுப்பகுதியை பார்த்திருந்தால் செண்பகம் பயந்திருப்பாள். இன்று எப்படியாவது அன்னம்மாளிடம் தப்பித்தாக வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் மற்ற எந்த காரணிகளையும் நோக்காது எதிலும் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலையில் தன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தாள்.
“பீட்டர்”
“மேடம்”
“அது என்ன பேர் கூளிக்காடு? ” பாத்திமா கேட்க பீட்டர் தயங்கினான்.
“பரவாயில்ல சொல்லு”
“மேடம் அந்த காலத்தில் ராஜாக்கள் ஆட்சி பண்ணும்போது ஜெயில் நிறைஞ்சிடுச்சுன்னா அதிகமா இருக்குற குற்றவாளிகளை இந்த மாதிரி காட்டுக்கு கொண்டு வந்து கொன்னுடுவாங்க.”
பீட்டர் சொல்ல மூவரும் அதிர்ந்தனர்.
பீட்டர் தொடர்ந்தான்.
“கொல்லப்பட்டவங்க பலரும் பேயா அலைஞ்சிருக்காங்க. கூளின்னா பேய்னு அர்த்தம். அதான் கூளிக்காடு மேடம்.”
ஃபாத்திமாவிற்கு ஏன் கேட்டோம் என்று ஆகிவிட்டது.
செண்பகத்தை பார்க்க செண்பகத்தின் பார்வையில் பயம் இருந்தது.
“மேடம் கூளிக்காடு வந்துருச்சு. இங்கயிருந்து எப்படி போகணும்? ” பீட்டர் கேட்க செண்பகம் சொன்னாள்.
“லெஃப்ட் திரும்பி உள்ள போகணும்”.
கார் இடதுபுறம் திரும்பி உள்ளே நுழைந்தது.
சாலை என்று சொல்ல முடியாமல் மரங்களும் செடிகளும் ஆங்காங்கே விழுந்து கிடந்தன. பீட்டர் காரை மெதுவாக ஓட்டினான். கார் ஹாரன் சத்தத்தில் சிறிய விலங்குகளும் பறவைகளும் அங்குமிங்கும் ஓடின.
ஒரு கிலோமீட்டர் போனபின் சூரிய நிவாஸ் என்ற அவுட் ஹவுஸ் வர “இங்கேதான் நிறுத்துங்க” என்றாள் செண்பகம்.
கார் நின்றது அனைவரும் இறங்கினர்.
கேட் பூட்டப்பட்டிருக்க வாட்ச்மேன் அங்கில்லை.
“செண்பகம் நாம் இங்கயா தங்கப் போறோம்?” கேட்ட பாத்திமாவின் கண்களில் அதிர்ச்சி இருந்தது.
செண்பகத்திற்கு ஒன்றும் சொல்ல இயலாத நிலை.
“நான் வேணும்னா வாட்ச்மேன் எங்க இருக்கான்னு பார்த்துட்டு வரவா?” பீட்டர் கேட்கும்போதே சைக்கிளில் வந்து இறங்கினான் வாட்ச்மேன்.
“வாங்க வாங்க டீ சாப்பிடப் போயிட்டேன்.”
வாட்ச்மேன் கரகரப்பான குரலில் சொல்ல அவனையே பார்த்த செண்பகம் ஒன்றும் சொல்லாமல் தலையசைத்தாள்.
பாத்திமா செண்பகம் ராசாத்தி மூவரும் உள்ளே நுழைந்தனர். வாட்ச்மேன் அவர்களுக்கு தங்கும் அறையைக் காட்டினான்.
“அம்மா உங்களுக்கு சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரவா?”
“இப்போதைக்கு எங்களுக்கு எதுவும் வேண்டாம்” ஃபாத்திமா சொல்ல தலையசைத்து வெளியேறினான்.
நடந்த சம்பவங்களின் அதிர்ச்சியிலிருந்து மூவரும் இன்னும் முழுமையாக வெளிவராத நிலையில் அவர்களுக்குள் மௌனம் நிலை கொண்டிருந்தது.
அந்த மௌனத்தைக் கலைத்தபடி வெளியே பைக் சத்தம் கேட்டது.
செண்பகம் ஜன்னல் வழியாக பார்க்க ரவி உள்ளே நுழைந்து கொண்டிருந்தான். செண்பகம் மலர்ந்தாள்.
“ரவி இங்க இருக்கோம்.”
“வாங்க வாங்க” சொன்னவன் அனைவரையும் பார்த்து புன்னகைத்தான்.
தான் வாங்கி வந்திருந்த பார்சலை அவளிடம் நீட்டினான். அதில் மூவருக்கும் தேவையான உணவு பழங்கள் ரொட்டிகள் என்றிருந்தன.
நன்றியுடன் பார்த்த செண்பகத்தை ரவி தனியாக அழைத்தான்.
“ஒரு நிமிஷம் அக்கா பேசிட்டு வந்திடறேன்.”
“சரிம்மா”
செண்பகம் தனியாக வந்தாள்.
“சொல்லுங்க ரவி”
“செண்பகம் என்ன பிரச்னை?” கேட்டவன் விழிகளைப் பார்த்தாள். அவற்றில் நேர்மை இருந்தது.
“ரவி”
“ம்”
“நான் உங்ககிட்ட என்னோட எல்லா பிரச்சினையும் சொல்றேன். எனக்கு ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுமான்னு பாருங்க”
“கண்டிப்பா பண்றேன் சொல்லுங்க”
செண்பகம் தான் சிறுவயதில் இருந்து பட்ட கஷ்டத்தை சொன்னாள். அப்பாவின் பாராமுகம் சித்தியின் கொடுமை காளிங்கன் தன்னிடம் மோசமாக நடக்க முயன்றது அவர்களிடம் இருந்து தப்பித்து ரயில்வே ஸ்டேஷன் சென்றது அப்பொழுது பாய் செண்பகத்தை யும் ராசாத்தியையும் காப்பாற்றியது அதன்பிறகு இந்த இல்லத்திற்கு வந்தது இத்தனை வருடங்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்ட அன்னம்மாள் மீண்டும் ஆவியாகத் துரத்துவது எல்லாவற்றையும் அவனிடம் சொன்னாள்.
ரவியின் முகம் மாறியது. செண்பகத்தை ஆதரவாய் பார்த்தான்.
“கவலைப்படாதீங்க செண்பகம் முதல்ல சாப்பிடுங்க நான் ஒரு இடத்துக்கு கூட்டிட்டுப் போறேன் அங்க உங்களுக்குத் தீர்வு கிடைக்கும்.”
“எந்த இடம் அது?”
“முதல்ல சாப்பிடுங்க.”
செண்பகம் தயக்கமாய் உள்ளே செல்ல ரவியும் தொடர்ந்தான்.
“இங்க எந்த தயக்கமும் வேண்டாம் உங்களுக்கு எதுனாலும் வாட்ச்மேன் கிட்ட சொல்லுங்க அவர் வாங்கிக் கொடுத்திருவார். கேஸ் இருக்கு. திங்ஸ் இருக்கு. சமைக்கிறதுனாலும் சமைச்சுக்குங்க “
சொன்ன ரவி மீது ஃபாத்திமாவிற்கு நல்லெண்ணம் வந்தது.
“நன்றிப்பா” என்றாள்
“அய்யோ எனக்கு எதுக்கு நன்றி சொல்றீங்க? நான் உங்க செண்பகத்தோட ஃப்ரெண்ட்தான்.”
சொன்னபடியே மூவருக்கும் சாப்பாடு வெளியில் எடுத்து வைத்தான்.
மூவரும் சாப்பிட்டு முடிக்க ரவி செண்பகத்தைப் பார்த்தான்.
“போலாமா?”
“ம்”
“அக்கா நான் போய்ட்டு வந்திடறேன்” செண்பகம் சொல்ல ஃபாத்திமா தலையசைத்தாள். எங்கே என்று கேட்கவில்லை.
வெளியே வந்த செண்பகத்திடம் ரவி கேட்டான்.
“ராசாத்தி ஜாதகம் இருக்கா கையில?”
“எனக்கு அவளோட கட்டம் எல்லாமே தெரியும்.”
“அது போதும். ஏறுங்க” பைக்கை ஸ்டார்ட் செய்தான்.செண்பகம் ஏறிக்கொள்ள பைக் கிளம்பியது.
வழியில் இருந்த அடர் காடுகளைப் பார்த்த செண்பகம் அவனிடம் கேட்டாள்.
“ரவி”
“ம் சொல்லுங்க”
“இங்க இந்த மாதிரி இருக்கே உங்களுக்கு பயமா இல்லையா?”
“ஒரு பயமும் இல்லைங்க. “
எங்கோ கோட்டான் கத்தியது காடு முழுவதும் எதிரொலித்தது. செண்பகத்திற்கு ஏதோ தவறாக நடக்கப் போகிறது என்றே உள்ளுணர்வு தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தது.
இருபது நிமிடங்களுக்குப் பிறகு பைக் ஒரு இடத்தில் நின்றது.
எந்த இடம் என்று பார்த்தாள் செண்பகம்.
மேலே மாடியில் ஒரு குடில் போல் தெரிந்தது.
“வாங்க செண்பகம்” ரவி அழைக்க அவனைத் தொடர்ந்தாள்.
செருப்பை வெளியில் கழற்றிவிட்டு இருவரும் குடிலுக்குள் நுழைந்தனர்.
உள்ளே நீண்ட முடியுடைய ஒரு வயதானவர் கண்களை மூடி அமர்ந்திருந்தார். அவர் அருகில் காளி படம் ஒன்று பெரிதாக இருந்தது.செண்பகம் அவரைப் புரியாமல் பார்க்க ரவி கண்களால் அமைதிப்படுத்தினான்.
ஐந்து நிமிடங்கள் கடந்த பின் அவர் கண்களைத் திறந்தார். அவர் பார்வை செண்பகத்தின் மேல் நிலைத்தது.
“நீ இன்னிக்கு இங்க வருவேன்னு எனக்குத் தெரியும். ஏன்னா உன்னோட விதி அப்படி.”
அவர் சொல்ல செண்பகம் ஆச்சரியப்பட்டாள்.
“அய்யா”
“நீ யார ரொம்ப நேசிக்கறியோ அவளுக்கு இப்ப நேரம் சரியில்லை”
அவர் சொல்ல செண்பகத்திற்கு தூக்கி வாரிப் போட்டது.
“அய்யா “
“இரு சோழி பார்க்கிறேன்” சொன்னவர் சோழிகளை உருட்டினார் கண்களை மூடிக்கொண்டார். அவர் முகத்தில் திருப்தியின்மை தெரிந்தது மீண்டும் சோழிகளை உருட்டினார்.
“இந்தா பொண்ணு”
“அய்யா”
“அவளை மறந்துடு.”
“அய்யா”
“அவ ஆயுசு முடிஞ்சுடுச்சு” அவர் சொல்ல செண்பகம் பதறினாள். அவள் கண்களில் கண்ணீர்
ரவி இடைமறித்தான்.
“அய்யா உங்களை நம்பி வந்துட்டோம்”
“ஜாதகம் இருக்கா?”
“இருக்குங்கய்யா” சொன்ன ரவி ஒரு பேப்பரை எடுத்து செண்பகத்திடம் எந்த கட்டத்தில் எந்த கிரகங்கள் என்பதைக் குறித்தான்.
அவரிடம் பவ்யமாகக் கொடுத்தான்.
அதை வாங்கிப் பார்த்தவர் மீண்டும் உன்னிப்பாகப் பார்த்தார்.
கண்களை மூடி யோசித்தார்.
“இருக்கு ஒரு வழி இருக்கு.”
அவர் சொல்ல செண்பகம் மலர்ந்து போய் பார்த்தாள். அவர் தொடர்ந்தார்
“இந்த ஜாதகத்துக்குப் பதிலா வேற யாராவது தன்னைத்தானே பலி கொடுக்க முன்வந்தா இவ காப்பாத்தப்படுவா.”
தொடரும்