3
ராசாத்தி பதட்டமாய் பார்த்துக்கொண்டிருக்க பூனையின் கழுத்தில் ரத்தம் வடிந்தது. பூனை எதையோ பார்த்து நடுங்கியபடி சீற ராசாத்தி காத்தானை பயமாய் பார்த்தாள்.
“அப்பா”
“ம்”
“என்னப்பா இது ?”
“தெரியலம்மா” காத்தான் பரிதாபமாய் பார்த்தான்.
பூனை எதை நோக்கியோ பாய யாரோ பிடித்து தூக்கி எறிந்தது போல் தரையை நோக்கி செங்குத்தாய் பாய்ந்தது.
ரத்தம் சிதறத் துடித்தது.
ராசாத்தி நடுங்கினாள். மரத்திலிருந்த பறவைகள் சடசடவென்று இறக்கைகள் படபடக்க நான்கு திசைகளிலும் பறந்தன.
ராசாத்தி தவித்தாள். பூனை அடங்கியது. அருகில் சென்று பார்த்தாள். வெட்டுக்காயம் வித்தியாசமாக இருப்பது போல் உணர்ந்தவள் காத்தானை அழைத்தாள்.
“அப்பா”
“சொல்லும்மா”
“இந்த பூனையைக் கொஞ்சம் பாருங்க”
காத்தான் பார்த்தான். அதிர்ந்தான். மிகக் கூரிய நகங்கள் பூனையின் கழுத்தைத் துளைத்திருந்தன.
“அய்யா”
“என்னய்யா சொல்றே? நீ சொல்றது நிஜம் தானா?” தன் முன் நடுங்கியபடி நின்று கொண்டிருந்த காத்தானிடம் பூசாரி கேட்டார்.
“சத்தியமாங்கய்யா”
“அந்தப் பூனை வேற எங்கயும் சண்டை போட்டு வந்திருக்கும்.”
“அப்படியே சண்டை போட்டிருந்தாலும் அது கழுத்தில் இருந்த காயம் வேற மாதிரி இருக்குங்க.”
“வேற மாதிரின்னா ?”
“எப்படிங்க சொல்றது? காத்துக் கருப்பு மாதிரி”
“காத்தான் நீ என்ன சொல்ற?”
“பாத்துட்டு எனக்குள்ள நடுங்கிடுச்சுங்க.”
பூசாரி ஒரு நிமிடம் யோசித்தார்.
“எதுக்கும் நம்ம பாயைக் கூப்பிட்டுப் போலாம். ஏதாவதுன்னா அவர் கண்ணுக்குத் தெரியும்.”
“சரிங்கய்யா”
“வா போலாம்”
பூசாரி முன்னே நடக்க காத்தான் அவரைத் தொடர்ந்தார்.
அவர்கள் இருவரும் காதர் பாய் வீட்டை அடையும் பொழுது அவர் வெளியே கிளம்பத் தயாராக இருந்தார்.
“வாங்க பூசாரி “
“பாய் எங்கயும் அவசரமா கிளம்பறீங்களா?”
“இல்ல சொல்லுங்க.”
“நம்ம காத்தான் வீடு வரைக்கும் போலாமா?”
“என்ன கோடாங்கி செத்ததுல பயந்துட்டாங்களா?”
“அது மட்டும் இல்ல”
“பின்னே?”
“இப்ப என்ன நடந்ததுன்னா” பூசாரி சொன்னார்.
பாயின் முகம் மாறியது.
காத்தானிடம் கேட்டார்.
“அந்த நகம் வேறெங்கயும் இதுக்கு முன்னப் பார்த்ததில்லயா?”
“இல்லங்கய்யா. புதுசா இருக்கு. ஆழமா இருக்கு.”
“அந்தப் பூனை எங்க இப்போ?”
“அதக் குழி தோண்டி புதைச்சிட்டேனுங்க.”
“இப்ப என்ன வேணும்?”
“அய்யா வந்து ஒருமுறை பார்த்தா நல்லாயிருக்கும்னு”
“வேற ஏதாவது இருக்கான்னு தெரிஞ்சுக்கணுமா?”
“ஆமாங்கய்யா”
“வாங்க போலாம்.”
மூவரும் காத்தான் வீட்டை நோக்கி நடந்தனர்.
“யாரு… யாரு வேணும்?”
தன் முன் வந்து நின்ற காளிங்கனை சந்தேகமாகப் பார்த்தபடி கேட்டார் நாட்டாமை மாணிக்கம்.
“அய்யா நம்ம மூலிகைக் காட்டிலருந்து ஒரு செடி வேணுங்க.”
“நீ யாரு எங்க இருந்து வர்றே?”
“அய்யா என் பேரு காளிங்கன். பழையகோட்டைங்க.”
“உன்னை யார் அனுப்பிச்சாங்க?”
“யாரும் அனுப்பலங்க. நானாத்தான் இங்க இருக்கிற மூலிகைக் காடு பத்தி கேள்விப்பட்டு வந்தேனுங்க.”
“என்ன செடி வேணும்?”
“அய்யா எங்க ஊர்ல பாம்பு ஜாஸ்தி. போன வாரம் காட்டுக்குப் போன என் மச்சான் பாம்பு தீண்டி இறந்துட்டாருங்க” சொன்னவன் கண்களைத் துடைத்துக் கொண்டான்.
“சரி சரி கண்ணத் தொடச்சுக்க.”
“அய்யா”
“ம்”
“எனக்கு ஆடு தீண்டாப் பாளையும் சிரியா நங்கையும் வேணுங்கய்யா”
“வாங்கிக்க”
“அய்யா”
“ம்”
“எவ்வளவுன்னு சொன்னா?”
“காளிங்கா”
“அய்யா”
“நாங்க எங்க மூலிகைக்கு யார் கிட்டயும் பணம் வாங்க மாட்டோம்”.
“நன்றிங்கய்யா.”
“இப்படியே நேராப் போனா ஒரு சின்ன காடு வரும். அந்த காட்டிலருந்து இடது பக்கம் திரும்பினா ஒரு கோயில் வரும். அங்க போய் காத்தான் வீடு எதுன்னு கேளு. சொல்வாங்க.”
“சரிங்கய்யா”
“அங்க காத்தானோட பொண்ணு ராசாத்தி இருக்கும். நான் அனுப்பிச்சேன்னு சொன்னா மூலிகைக் காட்டுக்கு கூப்பிட்டுப் போய் நீ கேட்கற செடிய கொடுப்பா.”
மாணிக்கம் சொல்ல காளிங்கன் போலி பவ்யத்துடன் வணங்கினான்.
காத்தான் வீட்டிற்குள் செல்ல பூசாரியும் காதர் பாயும் அவரைத் தொடர்ந்து சென்றனர்.
பாய்க்கு அந்த இடத்தில் ஏதோ சரியில்லை என்று தோன்றியது. எல்லாவற்றையும் கவனமாய் பார்த்தார்.
அது எங்கேயோ மிக அருகில்தான் இருக்கிறது.
இங்கே நடக்கும் விபரீதங்களுக்கு அது தான் காரணம்.
பாயின் முகம் மாறியதை பூசாரி கவனித்தார்.
“பாய்” பூசாரி ஏதோ சொல்ல முயல
‘உஷ்’ சைகையில் வேண்டாமென்று பாய் சொல்ல தலையசைத்தார்.
பாய் கண்களை மூடியபடி தரையில் அமர்ந்தார்.
யார் நீ? எதற்காக இங்கே வந்திருக்கிறாய்? என்ன வேண்டும் உனக்கு?
உள்ளே அந்த உருவம் புகையாய் தென்பட அதை உற்று நோக்கினார்.
உருவம் ஆக்ரோஷமானது. அவரை முறைத்தது.
பாய் புன்னகைத்தார்.
உருவம் அவரை நெருங்கியது.
பாய் சட்டென்று கண்களைத் திறந்து பார்க்க ராசாத்தி நின்று கொண்டிருந்தாள்.
பாய் குழப்பமானார். நம்ப முடியாமல் பார்த்தார்.
நீயா? உன்னுள்ளா? பாய் கூர்மையாய் அவளைப் பார்க்க அவள் அவரைப் புன்னகையுடன் பார்த்தாள்.
கடவுளே ஏதோ மிகப்பெரிய விபரீதம் நடக்கப்போகிறது. காத்தானிடம் இதை எப்படி சொல்வது?
காதர்பாய் பூசாரியை தவிப்பாகப் பார்த்தார். பாயின் பார்வையின் பொருள் பூசாரிக்குப் புரியவில்லை.
காத்தான் பாய் முகத்தைப் பார்த்தான்.
“அய்யா”
“ம்”
“ஏதாச்சும் பிரச்சினை இருக்குங்களா?” கேட்ட காத்தான் முகத்தை பரிதாபமாகப் பார்த்த பாய் ஒன்றுமில்லை என்று தலையசைத்தார்.
“ரொம்ப சந்தோஷங்க இப்பத்தான் நிம்மதியா இருக்கேன்.”
காத்தான் சொல்ல பாய் பூசாரியின் கையைப் பிடித்தார்.
இருவரும் விடைபெற்று வெளியில் வந்தனர்.
“பாய்”
“ம்”
“ஏதோ பெரிய பிரச்சனை போல?”
“ஆமா”
“ம்”
“அந்த பொண்ணுக்குள்ள ‘அது’ இருக்கு.”
பாய் சொல்ல பூசாரி உறைந்தார்.
“எப்படி சாத்தியம்?”
“தெரியல.
“வழக்கமா ஒரு துஷ்ட ஆவி பிடிச்சா ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு விடாது.
ஆனா இங்க?” பெருமூச்சு விட்டவர் தொடர்ந்தார்.
“தேவைப்படற நேரத்துல அந்த பொண்ணுக்குள்ள போயிடுது. மத்த நேரங்கள்ல அது வெளிய அலையுது.”
“அது சாத்தியமா?”
“கண்டிப்பா சாத்தியம்தான்.”
“ஏன் அந்த மாதிரி பண்ணனும்?”
“ஒரு ஆவி யாருக்காவது பிரச்சினை கொடுக்க நினச்சு வருதுன்னு வைங்க. அப்போ அந்த ஆவியை அங்கிருந்து யாராலயும் விரட்ட முடியாமப் பண்ணனும்னா யாருக்குப் பிரச்னை கொடுக்கணும்னு அந்த ஆவி நினைக்குதோ அவங்க உடம்பிலேயே புகுந்துக்கும். அது நினைக்கிறத அந்த உடம்பு மூலம் செய்யும். அப்போ அந்த ஆவியை அங்கிருந்து யாராலயும் விரட்ட முடியாது. அப்படி விரட்ட நினைச்சா அந்த ஆவி யார் உடம்பில இருக்கோ அவங்கள தயவு தாட்சண்யம் இல்லாமக் கொன்னுடும். அதனால் யாரும் பயந்துட்டு அந்த ஆவிய விரட்ட நினைக்க மாட்டாங்க.ஆவி நினைச்சத சாதிக்கும்.”
“அப்படி அது என்ன நினைச்சிருக்கும்?”
“அது தெரிஞ்சிக்க ஒரே வழிதான் இருக்கு.”
“என்னது?”
“அது நடந்ததுக்கப்புறம்தான் தெரிஞ்சுக்க முடியும்.”
“அப்போ?”
“ம்”
“கோடாங்கி சாவுக்கும் அங்கிருக்கிற ….?”
“என்னோட கணக்கு சரின்னா அந்த கோடாங்கியைக் கொன்னதும் பூனையைக் கொன்னதும் ராசாத்தி தான்.”
தொடரும்.
அடுத்த பதிவு நாளை (29/06/2024)