Sunday, December 22, 2024
Google search engine
HomeHorrorராசாத்தீ 5 (Horror) கவுதம் கருணாநிதி

ராசாத்தீ 5 (Horror) கவுதம் கருணாநிதி

5

“அந்த வெளியூர்க்காரன் செத்துக் கிடக்கிறான்”

நாட்டாமை கத்திய சத்தம் கேட்டு பாய் பூசாரி இருவரும் அங்கே ஓடினர்.

காளிங்கன் கழுத்து முழுவதும் ரத்தமாய் கிடக்க பார்வை கோரமாய் எங்கோ நிலைத்திருந்தது.

பூசாரி கண்களை மூடிக்கொண்டார். பாய் மட்டும் இன்னும் சற்று நெருங்கிப் பார்க்க காளிங்கனின் கழுத்தில் கூரிய நகங்கள் கழுத்து முழுவதும் துளைத்திருந்தது தெரிந்தது. பாய் அதிர்ந்தார்.

காத்தான் வீட்டில் அந்த பூனை கூட இப்படித்தான் கூரிய நகங்கள் குத்தி இறந்து கிடந்ததாய் காத்தான் சொல்லியிருந்தான்.

பாயின் உடம்பு மெலிதான நடுக்கத்திற்குட்பட்டது.

“பூசாரி” அழைத்தார்.

பூசாரி பாயைப் பார்க்க வெளியே வரும்படி கண் காட்டினார். நாட்டாமைக்கு தெரியாமல் ஏதோ ஒரு விஷயம் சொல்ல முற்படுகிறார் பாய் என்பதை உணர்ந்த பூசாரி வெளியில் வந்தார்.

“என்ன பாய் சொல்லுங்க?”

“அவன் எப்படி செத்தான்னு தெரியுமா?”

“தெரியலையே. எப்படி?”

“ராசாத்தி.”

பாய் சொல்ல பூசாரி அதிர்ந்தார்.

“என்ன பாய் சொல்றீங்க?”

“நடந்த உண்மையை சொல்றேன்.”

சொன்ன பாய் ஒரு நிமிடம் யோசித்தார்.

“பூசாரி”

“சொல்லுங்க பாய்.”

“இப்போ நீங்க ஒண்ணு பண்ணுங்க.”

“சொல்லுங்க என்ன பண்ணனும்?”

“அங்க நின்னுட்டிருக்கிற ராசாத்தி கிட்ட போயிட்டு கோயிலுக்கு இப்ப வாம்மான்னு கூப்பிடுங்க. “

“கூப்பிட்டா?”

“ஏதாவது சாக்கு போக்கு சொல்லி தட்டிக் கழிப்பா. அதையும் மீறி நீங்க கூப்பிடுங்க. நீ பயந்திருக்க அங்க உனக்கு திருநீறு வைத்துவிடறேன் அப்படி ஏதாவது சொல்லிக் கூப்பிடுங்க.”

“ம்”

“பூசாரி”

“சொல்லுங்க பாய்”

“அப்படி கூப்பிடும் போது கொஞ்சம் தள்ளியே நில்லுங்க.”

பாய் சொல்ல பூசாரிக்கு திடுக்கென்றது. காட்டிக்கொள்ளாமல் ராசாத்தியிடம் நெருங்கினார்.

ராசாத்தி பயந்திருந்தாள்.

“அய்யா”

“கவலைப்படாதம்மா இனி பயமில்லை”. சொன்ன பூசாரி மெதுவாய் அவளைப் பார்த்துக் கொண்டே கேட்டார்.

“என்னம்மா நடந்துச்சு?”

“அய்யா அது வந்து”

“ம் சொல்லு”

“அவன் கேட்ட மூலிகையை பறிக்கறதுக்கு நான் உள்ள போனேன். “

“ம்”

“அப்ப திடீர்னு அவன் என் பின்னாடி நின்னான். “

“ம்”

“கையில மண்டை ஓட்டை வச்சுட்டு பக்கத்துல வந்தான்.”

“ம்”

“அதான் அவனப் புடிச்சு தள்ளி விட்டுட்டு வெளியே ஓடி வந்துட்டேன்”

“கவலைப்படாத ராசாத்தி இனி ஆபத்தில்ல.”

ராசாத்திக்கு இன்னும் நடுக்கம் முழுதாகப் போகவில்லை. பூசாரி சொன்னதற்கு தலையாட்டினாள்.

“ராசாத்தி”

“அய்யா”

“கோயிலுக்கு வா விபூதி குங்குமம் கொடுக்கிறேன். எல்லாம் சரியாப் போயிடும்”

பூசாரி மனதிலிருந்த கலக்கம் தெரியாதபடி அவளிடம் சொன்னார்.

ராசாத்தி அவரைப் பார்த்து தலையாட்டினாள்.

“சரிங்கய்யா”

பூசாரி திகைத்தார். சமாளித்தார்.

“சரிம்மா நீ முன்னாடி போய் கோயில்ல இரு. நான் வர்றேன்.”

“சரிங்கய்யா” சொன்ன ராசாத்தி முன்னால் நடந்தாள்.

அதைப் பார்த்த பாய் பூசாரியின் அருகில் ஓடி வந்தார்.

“என்னாச்சு?”

“ஒண்ணும் ஆகல.”

“என்ன சொல்றீங்க? என்னால நம்ப முடியல.”

“நம்பித்தான் ஆகணும். அவ ரொம்ப இயல்பாத்தான் இருக்கா”

“ம்” பாய் தனக்குள் யோசித்தார்.

எங்கயோ தப்பு நடந்திருக்கு. எங்க?

காத்தான் வீட்டில் தரையில் தான் அமர்ந்திருக்கையில் ராசாத்தி புன்னகைத்தது பாய்க்கு நினைவிற்கு வந்தது.

அந்த புன்னகையில் நிறைய பொருள். நிச்சயம் ராசாத்தி தான் கொன்றிருக்கிறாள்..அதாவது அவளுக்குள் இருக்கும் அது.

பூசாரி கோவிலுக்கு அழைத்தும் ராசாத்தி எந்த எதிர் வினையும் இல்லாமல் கோவிலுக்கு வர சம்மதம் சொல்கிறாள் என்றாள் இப்போது அது ராசாத்திக்குள் இல்லை.

அப்போ அது எங்க போயிருக்கும்? பாய்க்குள் மெலிதான பயம் ஊடுருவியது.

சுற்று முற்றும் பார்த்தார். அந்த இடம் அசாதாரண மௌனத்தில் இருந்தது.

கண்களை முடிக்கொண்டார்.

இங்கே தான் இருக்கிறாயா? யார் நீ? என் முன் வா

இடைவிடாது இதை மந்திரம் போல் உச்சரித்தார். சட்டென்று ஒரு நாய் பயங்கரமாய் குரைத்தது.
கண்களைத் திறந்து பார்த்தார். நாய் அவரை பயமாய் பார்த்தது. ஊளையிட்டது. அதன் சத்தம் அந்த இடத்தில் எதிரொலிக்க ஏதோ அசம்பாவிதம் நடத்தப்போகிறது என்பது மட்டும் பாய்க்குப் புரிந்தது.
அவர் நெஞ்சம் படபடத்தது. எதற்கு நாய் என்னைப் பார்த்து ஊளையிட வேண்டும்? மெதுவாய் திரும்பிப் பின்னால் பார்க்க அவருக்கு மிக அருகில் அது நின்றிருந்தது.

பாய்க்கு வியர்த்தது. கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தார்.

அது மங்கலாய் இருந்தது. காற்றில் மிதப்பது போன்ற உருவம். கைகளில் கூரிய நகங்கள். விழிகள் மட்டும் பாய் மீது நிலைத்திருக்க பாய் நடுங்கினார்.

தனக்கு முன்னால் இருந்த பூசாரியை அழைக்க முற்பட்டார்.

“பூ….”

குரல் வெளிவரவில்லை.


ராஜேந்திரன் தன் ஜீப்பில் மூலிகைக்காட்டிற்கு வரும்போது யோசித்துக் கொண்டே வந்தார்.

ஏற்கனவே இந்த ஊரில் நடந்த இரட்டைக் கொலை வழக்கு அப்படியே இருக்கிறது.

இப்போது யார் என்று தெரியவில்லை. ஏதோ வெளியூர்காரனாம்.

அவன் விதி. இங்கு வந்து செத்திருக்கிறான்.

தனக்குள் நினைத்த ராஜேந்திரன் வைத்தியநாதனைப் பார்த்தார்.

“சார்”

“என்ன வைத்தியநாதன்?”

“சொல்லுங்க சார்”

“இந்தக் கொலையாவது மனுசன் யாராவது பண்ணிருப்பானா?”

ராஜேந்திரன் கேட்க வைத்தியநாதன் புன்னகைத்தார்.

ஜீப் மூலிகைக்காட்டில் நுழைந்தது.

ராஜேந்திரன் உள்ளே நடந்தார்.

எதிரில் நாட்டாமையைக் கண்டார்.

“வணக்கம் சார் ” நாட்டாமை சொல்ல பதிலுக்கு வணக்கம் வைத்தார்.

“நீங்கதான் போன் பண்ணீங்களா?”

“ஆமா சார்.”

“பாடி எங்க இருக்கு?”

உள்ள இருக்கு வாங்க சார்.”

ராஜேந்திரன் பார்வை இறந்து கிடந்த காளிங்கனின் மீது பட அதிர்ந்தார்.

யார் இப்படிக் கோரமாக கொன்றிருப்பார்கள்? என் சர்வீசில் இத்தகைய ஒரு மரணத்தை நான் பார்த்ததில்லை இதுவரை. ஹாரிபிள்.

தனக்குள் எண்ணியவர் வைத்தியநாதனை அழைத்தார்.

“வைத்தியநாதன்”

“சார்”

“ஆம்புலன்ஸ் வந்துடுச்சா?”

“வந்துடுச்சு சார்”

“ம்” சொன்ன ராஜேந்திரனின் பார்வை காளிங்கனின் உடல் அருகே கிடந்த அந்த மண்டையோட்டின் மீது விழுந்தது.


ராசாத்தி மாறுபாடாக நடப்பாள் என்று எதிர்பார்த்த பூசாரி அப்படி அவள் நடக்காதது கண்டு திகைத்துப் போயிருந்தார்.

ஒருவேளை கோவிலுக்கு வருவதாகச் சொல்லிவிட்டு வராமல் போய்விட்டால்?

யோசித்தவர் கோவிலுக்கு போய்க்கொண்டிருந்த ராசாத்தியின் பின் பாய் பற்றிய பிரக்ஞையின்றித் தொடர்ந்து நடந்தார்.

கருவறையை அடைந்தவர் குங்குமத்தை எடுத்து கொண்டுவர அதை ராசாத்தி நெற்றிக்கு இட்டுக்கொண்டாள்.

ராசாத்தியின் அப்பாவித்தனமான முகம் அவரை வேறு மாதிரி யோசிக்க வைத்தது.

“ராசாத்தி”

“அய்யா”

“ஒண்ணு கேக்கவா?”

“கேளுங்கய்யா”

“மூலிகைக்காட்டில உங்க ரெண்டு பேரையும் தவிர வேறு யாரும் இருந்தாங்களா?”

பூசாரி கேட்க ராசாத்தி யோசித்தாள்.

சட்டென்று நினைவிற்கு வந்தது போல் அவள் கண்கள் மலர்ந்தன.

“அவளும் இருந்தா அய்யா”

பூசாரிக்குத் தூக்கிவாரிப்போட்டது.

“யாரு?”

“அவ தான்.”

“அவன்னா யாரு?”

“கொஞ்ச நாளாத்தான் அவளைத் தெரியும் எனக்கு.”

“ம்”

“அடிக்கடி வருவா என்னையே பார்ப்பா. திடீர்னு எனக்கு முன்னாடி நின்னுட்டிருப்பா. திடீர்னு மறைஞ்சிடுவா.”

பூசாரிக்குப் புரிந்தது.

அதுதான் ராசாத்திக்குள் அவளுக்குத் தெரியாமல் வந்து போய்க்கொண்டிருக்கிறது. அந்த அது யார்?

“ராசாத்தி”

“அய்யா”

“அவ எப்படி இருப்பா பார்க்கறதுக்கு? இதுக்கு முன்னாடி எங்கயும் பார்த்திருக்கியா?”

யோசித்த ராசாத்தி சொன்னாள்.

“எப்படி இருப்பான்னு சொல்லத் தெரியலய்யா ஆனா இதுக்கு முன்னாடி அவளை நான் பார்த்ததில்லை”

பூசாரிக்குத் திகைப்பு. காட்டிக்கொள்ளவில்லை.

“நான் போகட்டுங்களா? அப்பா தனியா இருப்பாரு”

ராசாத்தி கேட்க பூசாரி தலையசைத்தார்.

ராசாத்தி கிளம்பிப் போய்விட பூசாரி வீட்டுக்கு செல்லலாம் என்று முடிவெடுத்து நடந்தார். மண்டபத்தில் யாரோ படுத்துக் கிடப்பது போல் தோன்ற அது ஒரு பெண் என்று புரிந்தது.

“யாரும்மா அது? இந்நேரம் இங்க வந்து படுத்திருக்கே?”

கேட்ட பூசாரியை வெறித்துப் பார்த்தாள் அன்னம்மாள்.

தொடரும்

அடுத்த பதிவு நாளை 02/072024

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

error: Content is protected !!