6
பாய்க்கு என்ன செய்வதென்று தெரியாமல் தன்னைப் பார்த்தபடி நிற்கும் அதையே பார்த்தார். உடல் முழுதும் நடுங்க வேர்த்துக் கொட்டியது.
அது என்ன செய்யப் போகிறது? தாக்குமா? ஓடி விடலாமா?
வேண்டாம். இந்த மாதிரி நேரங்களில் ஓடினால் மரணம் நிச்சயம். துரத்தி வந்து கொன்றுவிடும்.
பாய் கண்களை மூடிக்கொண்டார்
என் மரணம் உறுதி செய்யப்பட்டுவிட்டது. இறைவா என்னை ஏற்றுக்கொள்.
கண்கள் திறந்தார். அவர் ஆச்சர்யமானார். அது அங்கில்லை.
எங்கே மறைந்தது? தேடினார்.
எங்கும் இல்லை.
ஏன் என்னை ஒன்றும் செய்யாமல் போய் விட்டது? இத்தனைக்கும் இரு முறை அதன் வழியில் குறுக்கிட்டிருக்கிறேன்.
பாய் கடவுளுக்கு நன்றி சொன்னார்.
அதே நேரத்தில் அவருக்குத் தோன்றியது.
இங்கில்லாவிட்டால் நிச்சயம் ராசாத்திக்குள் நுழையும். எதற்காக இப்படி அலைகிறது? யார் அது? ராசாத்திக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? அந்த வெளியூர்காரன் யார்? எதற்கு அவனை கொன்றிருக்கிறது?
பாய் முன் வரிசையாய் கேள்விகள் அணிவகுத்தன.
விடை தெரியா கேள்விகள்.
மண்டையோட்டைப் பார்த்த இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வைத்தியநாதனை பொருள் பொதிந்த பார்வையுடன் பார்க்க அவர் புன்னகைத்தார்.
“இவன் வில்லங்கமானவனா இருப்பான் போலிருக்கே.”
“நானும் அப்படித்தான் சார் யோசிச்சேன்.”
“அப்ப ஃபாரன்சிக் டிபார்ட்மெண்ட் கூப்பிடறது வேஸ்ட். அப்படித்தானே?” சொன்னவர் புன்னகைத்துவிட்டுத் தொடர்ந்தார்.
“நம்ம கடமையை நாம செய்வோம்”
“யெஸ் சார்”
“வைத்தியநாதன் எனக்கு ஒரு டவுட்”
“சொல்லுங்க சார் “
“அன்னைக்கு அந்த ரெண்டு பேர் செத்துக் கிடந்தாங்களே?”
“ஆமா சார்’
“அது எந்த இடம்?”
“கூளிக்காடு சார்.”
“அதென்ன பேரு கூளிக்காடு?”
“தெரியல சார்”
“ம் இது மூலிகைக்காடு?”
“ஆமா சார்”
“இதுவரைக்கும் மூணு கொலை நடந்திருக்கு. எதுக்காக இந்த ஊரில் இப்படி நடக்குது? இந்த கொலை இதோட நிக்குமா? இல்ல இன்னும் யாராவது செத்துப் போவாங்களா? “
கேட்ட இன்ஸ்பெக்டருக்கு பதிலொன்றும் சொல்லாமல் மௌனமாய் பார்த்தார் வைத்தியநாதன்.
“சார்”
“சொல்லுங்க”
“எனக்குத் தெரிஞ்சு ஒரு பணிக்கர் இருக்காரு.”
“பணிக்கர்னா ?”
“கேரளா நேட்டிவ் சார். இங்கிருந்து அஞ்சு கிலோமீட்டர்ல அவரோட வீடிருக்கு.”
“ம்”
“அவர் இந்த மாதிரி விஷயம்னா கரெக்டா சொல்லுவார்.”
“வைத்தியநாதன்”
“சொல்லுங்க சார்”
“நாம போலீஸ்காரங்க. “
“யெஸ் சார்”
“இந்த வழியில போக எனக்குத் தயக்கமா இருக்கு.”
“புரியுது சார்”
தன்னையே வெறித்துக் கொண்டு நின்றிருந்த அன்னம்மாளைப் பார்த்த பூசாரி திகைத்தார்.
“யாரும்மா நீ? எந்த ஊரு?” பூசாரி மீண்டும் கேட்க அதை கண்டுகொள்ளாத அன்னம்மாள் அவரை நோக்கி வந்தாள்.
பூசாரி அவளையே பார்த்துக்கொண்டு அதே இடத்தில் நிற்க அருகில் வந்த அன்னம்மாள்
“நீ யாரு?” உறுமினாள்.
“நான் கோவில் பூசாரி”
“அந்தப் பொண்ணுக்கு நீ என்ன வேணும்?”
“எந்தப் பொண்ணுக்கு?”
“இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி பேசிட்டிருந்தியே அந்தப் பொண்ணுக்கு”
ராசாத்தியை சொல்கிறாள் என்பது பூசாரிக்குப் புரிந்தது.
“ராசாத்தி”
“ம் அவளுக்கு நீ என்ன வேணும்?”
“கோயில் பூசாரி அவ்வளவுதான்.”
“நீ சொன்னா அந்தப் பொண்ணு கேட்குமா?”
“எந்த விஷயத்துல?”
“கோவில் விஷயத்தில்தான்”
“ம் கேட்கும்.”
“அதான் வேணும்”
“புரியல”
“எனக்கு உன்னோட உடம்பு வேணும்”
அன்னம்மாள் சொல்ல பூசாரி திகைத்தபடி பார்த்தார்.
“என்ன சொல்ற? யார் நீ?”
“ஒரு தடவை சொன்னா புரியாதா உனக்கு? எனக்கு உன் உடம்பு வேணும். “
அன்னம்மாளின் முகத்தை மிக அருகில் பார்த்த பூசாரி பயந்து நடுங்கினார். ஏதோ விபரீதம். தெரியாமல் வந்து மாட்டிக் கொண்டு விட்டோம்.
அங்கிருந்து நகர முற்பட்டவரை வாசலில் இருந்த ஒரு கரும்புகை மறித்தது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்.
அன்னம்மாள் சிரித்தாள்.
“வா மாயா “
அந்தப் புகை அன்னம்மாள் அருகில் வந்தது.
“விடிந்தால் பெளர்ணமி அவளை எனக்கு பலி கொடுப்பதாகச் சொன்ன காளிங்கன் இறந்து போய் விட்டான். அவளைப் பார்த்துக்கொள்ள உன்னை அனுப்பியிருந்தேன். உன்னை ஏதோ ஒரு சக்தி அவளை அண்ட விடுவதில்லை என்றாயே. என்னதான் நடக்கிறது அங்கே மாயா? “
அன்னம்மாள் கேட்க கரும்புகை ஒரு நிமிடம் மௌனமாக இருந்தது.
அங்கே ஒரு பேச்சுக் குரல் கேட்க பூசாரி பயந்து போய் பார்த்தார்.
யார் பேசுகிறார்கள்? இது என்ன குரல் இப்படி? தகரத்தை அறுத்தாற்போல். துண்டுதுண்டாக.
“நானும் என்னால் முடிந்தவரை ராசாத்தியின் மன உறுதியை குலைக்க பலவிதமாக முயன்று பார்த்தேன் ஒன்றும் நடக்கவில்லை”
“என்ன சொல்கிறாய் மாயா?”
“கோடாங்கியை விட்டு பயமுறுத்திப் பார்த்தேன். அவன் உள்ளே நுழைந்து கதவை தொட்டது தான் தெரியும். அந்த சக்தி அவனை தூக்கி அடித்தது. கலங்கிப் போய் விழுந்தான். அப்பொழுது ராசாத்தி கதவைத் திறக்க அந்த நிலையிலும் கோடாங்கி சொல்லவேண்டியதை சொல்லிவிட்டுத்தான் இறந்துபோனான்.”
“மேலே சொல்”
“பௌர்ணமி அன்று கோவிலுக்கு செல்வதாக அவள் அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்த பொழுது அவளை வேறுவிதமாக பாதிக்க கறுப்புப் பூனையை அனுப்பினேன்
என்னால் நம்ப முடியவில்லை”
“என்னது?”
“தன் அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்த ராசாத்தி வெளியில் வந்தாள். அவள் முற்றிலும் வேறு ஒரு பெண்ணாக இருந்தாள்.. பூனையைக் கையில் பிடித்தவள் தன் கூரிய நகங்களால் அதன் கழுத்தைத் துளைத்து கொன்றுவிட்டாள். உடனே உள்ளே ஓடி விட்டாள். மீண்டும் பூனையின் குரல் கேட்டு வருவது போல் வந்தவள் மிகவும் இயல்பாக ஒன்றுமே நடக்காதது போல் அமைதியாக இருந்தாள். எனக்கு ஒன்றும் புரியாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
நானே அவளை ஏதாவது செய்து விடலாம் என்று எண்ணி பலமுறை முயன்றேன். என்னால் அவள் அருகில் கூட செல்ல முடியவில்லை.”
“என்ன சொல்கிறாய் மாயா?”
“என் துஷ்ட சக்தி அவளுடன் இருக்கும் அந்த சக்தியுடன் ஒப்பிட்டால் ஒன்றுமே இல்லை”.
“அப்படி என்றால்?”
“நான் தோற்றுவிட்டேன்.”
“பரவாயில்லை மாயா. நான்தான் வந்து விட்டேனே. எனக்கு பலியிடப்படுபவளை நானே வேட்டையாடிக் கொள்கிறேன்.”
“அன்னம்மா”
“சொல்”
“அது அத்தனை எளிதல்ல.”
“புரிகிறது. அதற்கு என்னிடம் ஒரு திட்டம் உண்டு.”
“என்ன திட்டம்?”
“அவளுக்கு நன்றாகத் தெரிந்த ஒருவர் சொன்னால் அவள் உடனே செய்து விடுவாள் இல்லையா?”
“ஆமாம். அது யார்?”
“ஏன் இந்த பூசாரி இருக்கிறாரே? இவர் உடலில் நானிருந்தால் அது நடக்கும் அல்லவா?”
அன்னம்மாள் கேட்க பூசாரி நடுங்கினார்.
மாயா சிரித்தாள்.
“ஆனால் இவர் உயிரோடு அல்லவா இருக்கிறார்?”
“அது பரவாயில்லை எனக்காக இவர் உயிரைத் தரப்போகிறார். இல்லையா பூசாரி?”
பூசாரிக்கு நடக்க இருக்கும் விபரீதம் புரிந்தது. அங்கிருந்து ஓட முற்பட்டவரை புகை சூழ்ந்தது.
அன்னம்மாள் அவர் அருகில் வந்தாள். பூசாரியின் தலையில் ஓங்கி அடிக்க அவர் நிலைகுலைந்து விழுந்தார். அவருக்குள் இருந்த உயிர் துடித்தது. அவர் முகத்தை அஷ்ட கோணலாக்கி துடிக்க வைத்து வெளியேறியது.
இறந்து கிடந்த பூசாரியின் உடலை பார்த்த அன்னம்மாள் சிரித்தாள். பூசாரியின் உடலில் நுழைந்தாள்.
பூசாரி எழுந்து நின்றார்.
என்ன மாயா என்னைப் பார்த்தால் யாருக்காவது சந்தேகம் தோன்றுமா என்ன?
அன்னம்மாள் பூசாரியாய் கேட்க மாயா சிரித்தபடியே சொன்னாள்.
“நாளை பௌர்ணமிக்கு உனக்கு ராசாத்தி பலியிடப்படுவது உறுதி”
தொடரும்
அடுத்த பதிவு நாளை 03/07/24