துடியலூர். மாலை வேளைக்குரிய பரபரப்புடன் விற்பனை அந்த ஹோட்டலில் சூடுபிடித்திருந்தது.
வரதராஜன் தன் ஹோண்டா ஆக்டிவாவை ஸ்டாண்ட் இட்டு நிறுத்திவிட்டு ஹோட்டலுக்குள் நுழைந்தான். காலையில் பணிக்கு கிளம்பும்போது மகள் வான்மதி அவனிடம் சொல்லியிருந்தாள்.
“அப்பா சாயங்காலம் வரும்போது சில்லி மஸ்ரூம் புரோட்டா வாங்கிட்டு வந்துருங்க”
வான்மதி எது சொன்னாலும் வரதராஜன் நிறைவேற்றுவான். ஒரே மகள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறாள். நல்லசுட்டி. நன்கு படிப்பாள். ஆசிரியர்களுக்கு அவளிடம் தனிப் பாசம். பிறந்தவுடன் அவள் அம்மா இந்த உலகைவிட்டுப் போய்விட வரதராஜனுக்கு தன் மகள் தான் தன் வாழ்க்கை என்றானது.
சொந்தக்காரர்கள் பலரும் பலவிதமாக அவனிடம் ஒரு கைக்குழந்தை வைத்துக்கொண்டு தனியாக இருப்பது முடியாத விஷயம் அது மட்டுமல்ல அவனுக்கு ஒரு துணை வேண்டும் என்று பலமுறை பலவிதமாக சொல்லியும் அவன் மனம் மாறவில்லை.
இதோ ஒரு வழியாக வருடங்கள் ஓடிவிட்டன. வான்மதியை கல்லூரியில் சேர்த்தவன் அவள் சிறு வயதிலிருந்து அவள் படிப்பிற்கும் திருமணத்திற்கும் தனித்தனியாக சேமித்துக் கொண்டிருக்கிறான்.
சில்லி மஸ்ரூம் புரோட்டா வாங்கிக்கொண்டு சீட்டின் அடியில் வைத்தவன் வண்டியை ஸ்டார்ட் செய்யும் போது மழை பெய்ய ஆரம்பித்தது. லட்சியம் செய்யாமல் பயணித்தான்.
இன்னும் அரை மணி நேரத்தில் வான்மதி வீட்டில் இருப்பாள் அவள் வீட்டிற்கு வந்தவுடன் இதை சூடாக சாப்பிடக் கொடுக்க வேண்டும்.
தனக்குள் எண்ணிக்கொண்ட வரதராஜன் பயணத்தைத் தொடர்ந்தான்.
டீச்சர்ஸ் காலனியை அடைந்தவன் இடதுபுறம் திரும்பி பத்து நிமிடம் பயணிக்க அவன் வீடு வந்தது.
“மதி” அழைத்தவன் அப்போதுதான் கவனித்தான் அவன் மகள் வான்மதி இன்னும் வரவில்லை என்பதை.
‘ஏன் மதி இன்னும் வரவில்லை? ஒரு வேலை வகுப்புகள் இன்னும் முடிந்திருக்காதோ?’ தனக்குள் யோசித்தவன் வீட்டைத் திறந்து உள்ளே நுழைந்தான். டவலை எடுத்து தலை துவட்டியபடி அடுப்பைப் பற்ற வைத்தான்.
பாலைக் காய்ச்சி காபி கலந்து எடுத்துக் கொண்டுவந்து சோபாவில் அமர்ந்தான்.
மழை இன்னும் வலுக்க மனம் வான்மதியை குறித்து கவலைப்பட்டது.
தன் மொபைலை எடுத்து அவளுக்கு அழைத்தான். ரிங் போனது. போய்க்கொண்டே இருந்தது. வான்மதி எடுக்கவில்லை. அவன் மனம் துணுக்குற்றது. மணி பார்த்தான். வழக்கமாக வரும் நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் தான் அதிகமாகியிருக்கிறது. அதற்குள் ஏன் இவ்வளவு பதட்டப்பட வேண்டும்? பதட்டப்பட்டுத்தான் ஆக வேண்டும். காலம் அப்படிக் கெட்டுக் கிடக்கிறது. எந்த செய்தியைத் திறந்தாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்.
தனக்குள் கேள்வி கேட்டு தானே பதில் சொல்லிக் கொண்டான்.
ஏன் இந்த பெண் மொபைலை எடுக்க மாட்டேங்கிறது? தாமதமானால் அழைத்து தகவல் சொல்ல வேண்டும் என்று பலமுறை சொல்லி இருந்தும் கேட்பதில்லை. இன்று வரட்டும் நன்றாக உரைக்கும் படி நான்கு வார்த்தை சொல்ல வேண்டும். வழக்கமாக எண்ணுவதை அன்றும் எண்ணினான். வான்மதியின் முகத்தைப் பார்த்ததும் அவனால் எதுவும் கடிந்து கொள்ள முடியாது.
தவிப்பாய் அமர்ந்திருந்தான். நேரம் கடந்தது. இருட்டத் தொடங்கியது.
வெளியே எதுவும் சத்தம் கேட்கிறதா வான்மதி வருகிறாளா என்று வாசலையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த வரதராஜனின் மொபைல் அடித்தது.
“ஹலோ?”
“வரதராஜன்?”
“யெஸ் நான்தான் பேசறேன்”
“வான்மதி யாரு?” மறுமுனையில் வான்மதியைப் பற்றி கேட்கப்பட வரதராஜன் பதறினான்.
“என் பொண்ணுதான். நீங்க?”
“பி டூ ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ராஜவேல்”
“சார்”
“நீ உடனே கிளம்பி ஜிஹெச்சுக்கு வா “
இன்ஸ்பெக்டர் சொல்ல வரதராஜன் பதட்டமாய் கேட்டான்.
“சார் என் பொண்ணுக்கு…”
“கிளம்பி ஜிஹெச்க்கு வா நேர்ல பேசிக்கலாம்” ராஜவேல் அழைப்பைத் துண்டித்திருந்தார்.
வரதராஜனுக்கு ஒரு நிமிடம் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.
‘கடவுளே வான்மதிக்கு என்ன ஆச்சு அவளுக்கு எதுவும் ஆயிருக்கக்கூடாது ப்ளீஸ்’
யோசித்தவன் மழையைப் பொருட்படுத்தாது ஹோண்டா ஆக்டிவாவில் ஏறி அமர்ந்தான்.
செலுத்தப்பட்டவன் போல் ஜி ஹெச் நோக்கி விரைந்தான்.
அரை மணி நேரத்தில் அரசு மருத்துவமனையை அடைந்தான். எங்கு செல்வதென்று தெரியாமல் திணறியவன் இன்ஸ்பெக்டருக்கு அழைத்தான்.
“சார்”
“என்னய்யா வந்துட்டியா?”
“வந்துட்டேன் சார்”
“ஐசியூக்கு வா”
ஐசியுவா? கடவுளே.
வரதராஜன் கிட்டத்தட்ட ஓடினான். வாசலில் இன்ஸ்பெக்டர் ராஜவேல் இரண்டு கான்ஸ்டபிள்களுடன் நின்றார்.
“சார்”
“வா நீதான் வரதராஜனா?”
“ஆமா சார்”
“உன் பொண்ணு உள்ளதான் இருக்கு”
“சார்”
“என்ன?”
“என்னாச்சி?”
இன்ஸ்பெக்டர் ஒன்றும் சொல்லாமல் அவனை பரிதாபமாய் பார்த்தார். ஒரு கான்ஸ்டபிள் வரதராஜனைத் தனியாக அழைத்துச் சென்றார்.
“காலேஜ் முடிச்சு வந்துட்டிருந்த பொண்ணு மழை பெய்ததால் பஸ் ஷெல்டர்ல நின்னுட்டு இருந்திருக்கா. அப்ப ஒருத்தன் கார்ல வந்து வலுக்கட்டாயமா…” கான்ஸ்டபிள் முடிக்கவில்லை வரதராஜன் காதுகளைப் பொத்திக் கொண்டான்.
“இல்ல சார் அப்படி நடந்திருக்காது…”
இன்ஸ்பெக்டரிடம் ஓடினான்.
“சார் அவர் சொல்றது…?”
“ஆமா உண்மைதான். கார்ல வச்சு உன் பொண்ணுக்கிட்ட தப்பா நடந்து இருக்கான். “
“சார் என் பொண்ணு…?”
“ஹெவி ப்ளீடிங். உள்ள ட்ரீட்மெண்ட் போயிட்டிருக்கு.”
“அய்யோ மதி…” முகத்தில் அறைந்துகொண்டு வரதராஜன் அழ ஆரம்பிக்க ராஜவேல் அவனை பரிதாபமாய் பார்த்தார். சொன்னார்.
“உன் பொண்ணு சுய நினைவில்லாம இருக்கா. கான்சியஸ் வந்தா ஸ்டேட்மெண்ட் வாங்கணும்.”
சொல்லிவிட்டு நகர ஒன்றும் சொல்லாமல் அவரையே வெறித்தான் வரதராஜன். உலகம் மொத்தமும் இருட்டாய் தோன்றியது அவனுக்கு.
இதற்காகவா? இந்த ஒரு நாளுக்காகத்தான் இத்தனை நாட்கள் தவம் போல் வாழ்க்கை மேற்கொண்டேனா?
யாரவன்? எங்கிருக்கிறான்? அவனைத் தேடிக் கண்டுபிடித்து கருவறுக்கிறேன். கூடாது முதலில் என் மகள் குணம் பெற வேண்டும். அவனை போலீஸ் நிச்சயமாக கைது செய்யும். சட்டப்படி அவனுக்கு தண்டனை கிடைக்கட்டும்.
வரதராஜன் மெல்ல ஐசியூ கதவைத் தள்ளினான். உள்ளே இருந்து ஒரு சிஸ்டர் எட்டிப் பார்த்தார்.
“யாரு?”
“என் பொண்ணு…” அதற்கு மேல் எதுவும் பேசத் தோன்றாமல் அவனுக்கு அழுகை வர நர்ஸ் அவன் நிலைமையைப் புரிந்து கொண்டார்.
“அந்தப் பொண்ணு உங்க பொண்ணா?” நர்ஸ் கேட்க தலையசைத்தான்.
“பாருங்க உள்ள வாங்க”
மெல்ல நுழைந்தான். வான்மதி மயங்கிய நிலையில் ஆங்காங்கே தையல் போடப்பட்டிருக்க வரதராஜன் வெளியே வந்து நின்றான். தலை சுற்றிக்கொண்டு வர அப்படியே அமர்ந்தான்.
எவ்வளவு நேரம் என்று தெரியாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.
“வரதா” யாரோ அழைக்க நிமிர்ந்து பார்த்தான். அவனுடன் வேலை செய்யும் தண்டபாணி நின்றிருந்தான்.
“என்னாச்சு வரதா?”
“எல்லாம் போச்சு”
“என்னடா பேசற? நம்பிக்கையோட இரு. ஒண்ணும் தப்பா நடக்கல விடு “
“இல்லடா என்னால முடியல”
“தளர்ந்து போகாத. மதிக்கு மயக்கம் தெளிஞ்சா தைரியம் சொல்றது நீ தான் சொல்லணும். நீயே இப்படி இருந்தா மதி நிலைமைய யோசிச்சுப் பாரு”
சொன்னவன் வரதராஜன் கைகளைப் பற்றிக்கொண்டான். கேட்டான்.
“சாப்பிட்டியா?”
“வேண்டாம்”
“இந்தா தண்ணி குடி” தண்டபாணி கொடுக்க வாங்கிக் குடித்தான்.
அன்று இரவு முழுவதும் உறங்காமல் விழித்திருந்தான்.
விடிகாலைப் பொழுதில் ஒரு நர்ஸ் வெளியே வந்தாள்.
“வான்மதி அப்பா யாருங்க?”
சட்டென்று எழுந்து முன்னால் போய் நின்றான்.
“உங்க பொண்ணுக்கு நினைவு திரும்பியிருக்கு. வந்து பேசுங்க.”
வரதராஜன் பதறியபடி உள்ளே சென்றான்.
வான்மதி தனக்குள் ஏதோ சொல்லியது போல் தோன்ற அருகில் சென்று பார்த்தான். எப்போதும் புது மலராய் வளைய வரும் வான்மதி துவண்டு கிடப்பதைக் காணச் சகியாதவன் மெல்ல அவள் கைப் பற்றினான்.
“மதி…அப்பா வந்திருக்கேன்டா”
வான்மதி மிகவும் சிரமப்பட்டு இமைகளைப் பிரித்தாள். அவள் விழியோரம் கண்ணீர் வழிய வரதராஜன் மெதுவாய் சொன்னான்.
“கவலைப்படாதம்மா. உனக்கு ஒண்ணுமில்ல. சீக்கிரம் வீட்டுக்குப் போயிடலாம்”
வான்மதி ஒன்றும் சொல்லாமல் அவன் முகத்தையே பார்த்தாள். மீண்டும் மயக்கத்திற்குப் போக நர்ஸ் அருகில் வந்தாள்.
வரதராஜன் புரிந்துகொண்டான்.
வெளியே சென்றான்.
காலையில் மீண்டும் வந்த தண்டபாணி சொன்னான்.
“அவனை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.”
வரதராஜன் உள்ளே வெகுண்டான்.
“யாரவன்?”
“ப்ரைவேட் டாக்ஸி டிரைவர். ஜோஸ்னு பேர்”
“ம்”
“அவனை நாமளே கொன்னுடணும் வரதா.” தண்டபாணி சொல்ல அவனை இமைக்காமல் பார்த்தான் வரதராஜன்.
மறுநாள் வான்மதிக்கு மீண்டும் நினைவு வந்தது.
வரதராஜனிடம் ஏதோ சொல்ல முயற்சித்தாள். மிகவும் சிரமப்பட்டு வார்த்தைகள் வெளியிட முயன்று முடியாமல் சோர்ந்தாள்.
“எல்லாம் சரியாயிடும்மா. கவலைப்படாத. உனக்கு ஒண்ணுமில்ல ” அவன் சொல்ல அவள் விழிகள் அவனையே பார்த்தன.
“அ…ப்….பா.”
“சொல்லுமா. எனக்கு கேட்குதும்மா…சொல்லுமா”
“அந்த…ரெண்டு பேரை விட்றாதீங்கப்பா” வான்மதி சொல்ல வரதராஜன் அதிர்ந்தான்.
“ரெண்டு பேரா? “
“ஆமாப்பா”
வரதராஜனுக்கு தண்டபாணி சொன்னது நினைவிற்கு வந்தது.
‘அவனை அரெஸ்ட் பண்ணிட்டாங்க. ப்ரைவேட் டாக்ஸி டிரைவர். செபாஸ்டியன்’
வரதராஜன் சட்டென்று தன் மொபைலை எடுத்தான்.
இளம் பெண் உயிருக்குப் போராட்டம் கற்பழிப்பு குற்றவாளி கைது. என்ற செய்தியை எடுத்தவன் அதில் இருந்த செபாஸ்டியன் போட்டோவை வான்மதியிடம் நீட்டினான். கேட்டான்.
“மதி இவன் இல்லாம இன்னொருத்தனும் இருக்கானா?”
வரதராஜன் காண்பித்த போட்டோவை மதி உன்னிப்பாய் பார்த்தாள். மறுப்பாய் தலையாட்டினாள்.
வரதராஜனுக்கு ஒன்றும் புரியவில்லை. மீண்டும் கேட்டான்.
“என்னமா சொல்றே? ரெண்டு பேருன்னு சொன்னே?”
“ஆமாப்பா. அவங்க ரெண்டு பேருப்பா”
“அப்போ இவன் யாரும்மா?”
“தெரியலப்பா”
வரதராஜன் அதிர்ந்தான். உண்மையான ரெண்டு குற்றவாளிகளுக்குப் பதிலாக வேறு யாரோ ஒருவனை போலீஸ் கைது செய்திருக்கிறது ஏதோ மிகப்பெரிய சதி நடக்கிறது. அது என்ன?
வான்மதி பெரிதாய் மூச்சிறைத்தாள். மிகவும் சிரமப்பட்டாள். உடம்பு தூக்கிப் போட வரதராஜன் அதிர்ந்தான்.
“ஐயோ மதி” அவன் அலறியதைக் கேட்டு நர்ஸ் அருகில் ஓடி வந்தாள்.
மானிட்டரைப் பார்த்தவள் அதிர்ந்தாள். நேர்கோடு ஓடியது.
வான்மதியின் விழிகள் வரதராஜன் மேல் நிலைத்திருந்தன.
***
போலீஸ் ஸ்டேஷன்.
ராஜவேல் கண் முன் கண்கள் கலங்க நின்ற வரதராஜனை அலட்சியமாய் பார்த்தார்.
“என்னய்யா சொல்ற? குற்றவாளி குற்றத்தை ஒத்துக்கிட்டான். இப்ப வந்து புதுசா கதை சொல்றே. “
“சார் என்னோட பொண்ணு கிட்ட தப்பா நடந்தது இப்ப நீங்க அரெஸ்ட் பண்ணி இருக்கிற ஆள் இல்லை. ரெண்டு பேர் என் பொண்ணு கிட்ட தப்பா நடந்திருக்காங்க. அவங்க யாருன்னு தயவு செய்து கண்டுபிடிங்க. ப்ளீஸ் உங்களை நான் கெஞ்சி கேட்டுக்கறேன் “
சொன்னவனை ராஜவேல் ஏறிட்டார்.
“உனக்கு அவ்வளவுதான் மரியாதை இங்க எங்களுக்கு என்ன வேற வேலை இல்லன்னு நினைச்சுட்டிருக்கியா? மரியாதையா வெளிய போயிடு. இல்லன்னா நடக்கிறதே வேற”
“சார்”
“என்னய்யா?”
“என் பொண்ணு சாகும்போது என்னோட கை பிடிச்சிட்டு செத்துப்போனா சார். என் பொண்ணு சாவுக்கு ஒரு நீதி வேணும் சார்”
“நீ பேசறதுல கொஞ்சமாவது அர்த்தம் இருக்கா? ரெண்டு பேர் உன் பொண்ணு கிட்ட தப்பா நடந்துருக்காங்கன்னு சொல்ற அதை சொல்ல வேண்டிய உன்னோட பொண்ணு செத்துப் போயிட்டா உன்கிட்ட எந்த ஆதாரமும் இல்லை போலீஸ்கிட்ட குற்றத்தை ஒத்துக்கிட்டு ஒருத்தன் வந்திருக்கான். அவன் குற்றவாளி இல்லன்னு சொல்றே. மரியாதையா எங்க டைம் வேஸ்ட் பண்ணாம வெளியில போயிடு”
“சார் வந்து…” ஏதோ சொல்ல முயன்ற வரதராஜனை ராஜவேல் கோபப்பார்வை பார்த்தார்.
“நிறுத்துய்யா போய்யா வெளிய”
வரதராஜன் நொந்து போனான்.
கடவுளே என்னோட பொண்ணுக்கு ஒரு நல்ல வழி காமி.
போலீஸ் ஸ்டேஷனிலிருந்து வெளியே வந்தான்.
தலை சுற்றியது.
எதிரிலிருந்த கணபதி கோயிலுக்குச் சென்றவன் கற்பூரம் ஏற்றினான்.
‘விநாயகரே என் குழந்தை இந்த உலகத்துல இப்ப இல்ல. அவ கடைசியா என்கிட்ட கேட்டது அந்த ரெண்டு பேரை விட்றாதீங்க. அவங்க யாரு? எங்க போய் தேடுவேன்? எனக்கு நீ தான் வழி காட்டணும்’
கண்கள் மூடி வேண்டியவன் கண்கள் திறக்க எதிரில் அசோக்.
தொடரும்.