ஒரு ரகசிய குற்றம் 5

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
109
1
18
நான் அத்தனை உன்னதமான ஆப்பிளைப் போன்ற பளபளப்பான ஒரு பெண்ணை இதுவரை பார்த்ததில்லை. அவள் நுழைவதற்கான தகுதி என் அலுவலகத்துக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், அவள் என் அலுவலகத்திற்குள் நுழைந்தாள். அவள் நுழைந்த உடனே பிரகாசமான வெளிச்சம் பரவியது. அநேகமாக அவள் நடந்து வந்திருக்க முடியாது. நடப்பதற்கு உகந்த பாதம் அல்ல அவள் பாதங்கள். என் அலுவலகத்துக்கு திரும்பும் முட்டுச் சந்து வரை அவள் ஏதாவது ஒரு வாகனத்தில் வந்திருக்க வேண்டும். அவள் அடிபட்ட ஒரு புறாவை போல் பயந்திருந்தாள். பார்த்த உடனே தெரிகிறது. அவள் படபடக்கும் கண்களில் அந்த பயம் தெரிந்தது. ஐஸ் கட்டி போன்ற பளிங்கு கண்களில் ஒருவித மிரட்சயைப் பார்க்க முடிந்தது. அவள் உள்ளே நுழையும் போது என் அலுவலகம் குப்பையாக இருந்தது. காலையில் வந்தவுடன் துப்புரவாய்த் துப்புரவு செய்திருக்க வேண்டும். செய்யவில்லை. என்னை நான் சபித்துக் கொண்டேன். திடீரென்று பரபரப்படைந்து அனைத்தையும் ஒதுக்கி அவளுக்கு உட்கார இடம் செய்து கொடுத்தேன். நளினமாக அமர்ந்தாள்.



"இங்க.. 'ப்ரா' அப்படிங்கிறது…?"



"இதுதான்; இந்த ஆபீஸ் தான்."



"நீங்க?"



"மாதவன். மாஸ் மாதவன்! வாட் ஹெல்ப் டூ ஐ நீட் ஃபர் யு?" குலுக்குவதற்கு கை நீட்டலாமா என்று யோசித்தேன். கை குலுக்குவதை அவள் ஒன்றும் வெறுக்கிறவளாகத் தெரியவில்லை. இருந்தும் அந்த எண்ணத்தைக் கைவிட்டு அவளைப் பார்த்தேன்.



அவள் உடலில் இருந்து நழுவும் ஒரு வழவழப்பான புடவையை அணிந்திருந்தாள். என் மனம் நழுவியது. நான் தவித்தேன்.



"என் பெயர் நீரஜா." என்றாள். தேன் குடித்த பின் பேசுவது போல் குரல் இனிமையாக இருந்தது.



"நைஸ்!" என்றேன். எனக்கே ஒரு சந்தேகம், ஜொள்ளு வழிகிறதா என்று. தேவையில்லாமல் வாயைத் துடைத்துக் கொண்டேன்.



"எனக்கு ஒரு பிரச்சனை!"



"என்ன பிரச்சினை?"



அவள் சொன்னாள்:



முதல் அத்தியாயத்தில் இருந்து அனைத்தையும் சொல்லி முடித்தாள்.



"இப்ப நான் என்ன செய்யணும்னு நீங்க நினைக்கறீங்க?"



என் கேள்வி முட்டாள்தனமானது என்று தெரியும்; இருந்தாலும் கேட்டேன்.



"அந்த ரெண்டு போன் நெம்பரும் யாருடையது ன்னு எனக்கு கண்டுபிடிச்சு சொல்லணும்."



"அதாவது, உங்களுக்கு போன் பண்ணி மிரட்டல் விடுத்த ஆசாமி, மெசேஜ் பண்ண ஆசாமி!"



"ஆமாம்."



"கவலைப்படாதீங்க. அது ஒரு பெரிய மேட்டர் இல்லை. எல் கே ஜி சமாச்சாரம். கண்டுபிடிச்சிடலாம். நீங்க விக்ரம் மேல சந்தேகப்படறீங்களா?"



"தெரியலை. எனக்கு வந்த மெசேஜ் பார்த்தா அவன் மேல சந்தேகமா தான் இருக்கு. ஆனா, அதுக்கு ஆதாரம் இல்லை. அந்த ஆதாரத்தை தேடித்தான் இப்ப நான் வந்திருக்கேன்."



"குட். கண்டுபிடிச்சிடலாம். நீங்க எப்படி சுவாமிநாதனை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? லவ் மேரேஜா? இல்லை…"



"லவ் மேரேஜ் எல்லாம் இல்லை. அரேஞ்சிடு மேரேஜ் தான். சொல்லப் போனா நான் ஏன் சுவாமியை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு எனக்கே தெரியலை. ஒரு புயல் மாதிரி வந்து என்னை சுருட்டி இழுத்துட்டு வந்துட்டார். கல்யாணத்துக்கு பின்னாடி தான் நான் யோசிச்சேன். எப்படி நாம இவரை கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு பலமுறை யோசிச்சு பார்த்திருக்கேன். எனக்கே அதுக்கு காரணம் தெரியலை. அந்த நேரத்துல என் புத்தி ஏதோ மழுங்கிப் போச்சு. மந்திர வசியத்துக்கு கட்டுப்பட்ட மாதிரி சுவாமி சொல்றதை எல்லாம் வேதவாக்கா கேட்டுக்கிட்டேன். சுவாமியை தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு பிடிவாதமா தீர்மானிச்சிட்டேன்."



"சரி, நடந்து முடிஞ்சதைப் பத்தி விடுங்க. உங்க பேர்ல எவ்வளவு சொத்து இருக்கு?"



"இல்லை. இது முக்கியமான கேள்வி. உங்க சொத்தை அடையறதுக்காக விக்ரம் சதித்திட்டம் போட்டிருக்கலாம் இல்லையா? அதுக்காகத்தான் கேட்டேன்."



"எவ்வளவு இருக்கும்னு தெரியலை. எல்லாத்தையும் சுவாமிதான் பார்த்துக்கறார். அவருக்குத்தான் எல்லாம் தெரியும். எனக்கு தெரிஞ்சு மூணு கம்பெனி இருக்கு. ஸ்டீல்ஸ், மோட்டார்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ்னு… ஒவ்வொரு கம்பெனி; ஒவ்வொரு கம்பெனிக்கும் கிளைகள் இருக்கு. ஐநூறு பேருக்கு மேல ஒர்க்கர்ஸ் வேலை செய்யறாங்க. ஏழெட்டு இடத்துல ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டி வாடகைக்கு விட்டிருக்கு. அதுல, அஞ்சு காம்ப்ளக்ஸ் எனக்காக எங்க அப்பா கொடுத்தது. யோசிச்சு பார்த்தா எங்க அப்பாவுக்காகத்தான் நான் சுவாமியை கல்யாணம் பண்ணிக்கிட்டேனோன்னு கூட தோணுது."



"ஏன் அப்படி சொல்றீங்க?"



"எங்கப்பாவும் சுவாமியோட அப்பாவும் சின்ன வயசுல இருந்து க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். ரெண்டு குடும்பமும் ஒரே தெருவுல இருந்தது. எனக்கும் சின்ன வயசிலே சுவாமியைப் பிடிச்சிருந்தது. ஆனா, கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு பிடிச்சிருந்ததான்னு சொல்ல தெரியலை. ஆனாலும் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்."



"உங்க ஹஸ்பண்ட் அடிப்படையில் - ஐ மீன், பரம்பரை பணக்காரரா?"



"எனக்குத் தெரிஞ்சு அப்படி ஒண்ணும் இல்லை. அவர் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். ஆனா, படு புத்திசாலி; நல்ல படிப்பு; திறமைசாலி. அதனால்தான் எங்கப்பா சுவாமியைப் பிடிச்சு போய் கல்யாணம் பண்ணிக் கொடுத்தார்."



"உங்க கணவருக்கு நிறைய பாராட்டுச் சான்றிதழ் தர்றீங்க; ஆனா, அவரை விவாகரத்து பண்ணலாமான்னும் ஒரு பக்கம் யோசனை பண்றீங்க. ஏன்?"



நீரஜா மௌனமாக தலைகுனிந்து பிங்க் கலர் நெயில் பாலிஷ் போட்ட வெண்டை விரல்களின் நகங்களை பார்த்தாள். இப்படி ஒரு கேள்வியை அவள் விரும்பவில்லை என்பதை அவள் மௌனம் எனக்குச் சொன்னது. வாழ்க்கையில் பணம், நகை, கார், பங்களா மட்டும் ஒரு பெண்ணுக்கு திருப்தி தருவதில்லை. அந்தரங்கமான சில தங்கப் புள்ளிகளின் மாயாஜாலங்கள் அவர்கள் வாழ்க்கையில் அவர்களுக்கு கிடைப்பதில்லை. அது கிடைக்கும் போது, அதை விட்டு விட அவர்கள் ஒருகாலும் சம்மதிப்பதில்லை.



"ஸாரி!" என்றேன். "இனிமே தர்மசங்கடமான கேள்விகள் கேட்கிறதில்லை."



"இட்ஸ் ஓகே!" என்றாள் நீரஜா. ரோஜா மொக்கு வெடித்தது போல் புன்னகைத்தாள்.



"இப்போ, இந்த போன் நம்பர் ரெண்டையும் யாருடையதுன்னு கண்டுபிடிச்சு கொடுக்கணும். அவ்வளவுதானே?"



"ஆமாம். அவ்வளவுதான். உங்க பீஸ் எவ்வளவுன்னு சொல்லுங்க. உங்க அக்கவுண்ட்ல போட்டு விட்டுடறேன்."



"பணம் எங்க போறது, வாங்கிக்கலாம். உங்களை மாதிரி அழகான பெண்களுக்கு எல்லாம் இலவச சேவையா கூட செய்யலாம்."



அவள் மீண்டும் ஒரு ரோஜா மொக்கை விரித்தாள். "உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?" என்றாள்.



"இல்லை. ஏன் கேக்கறீங்க?"



"உங்க கண்கள் ரொம்ப அலைபாயுது!"



"ஒரு துப்பறிவாளனின் கண்கள் அப்படித்தான் அலைபாயும்!"



"சரி, எனக்கு எப்போ ரிப்போர்ட் வருவீங்க?"



"அதிகபட்சம் ரெண்டு நாள்! குறைந்த பட்சம், அதுக்கும் ரெண்டு நாள் ஆகும். இது, என்னோட விசிட்டிங் கார்டு. வெச்சுக்கோங்க. உங்க அழகான போன் நம்பர் சொல்லுங்க."



அவள் பூக்கள் போல் உதிர்ந்து சிரித்தாள். விசிட்டிங் கார்ட்டை வாங்கிக் கொண்டு அவள் போன் நம்பரை - ஒரு சிறிய லெட்ஜரை அவள் முன் நகர்த்தி, அதில் அவள் கைப்பட எழுதச் சொன்னேன். எழுதினாள்.



"கையெழுத்து அழகா இருக்கு - உங்களைப் போலவே!"



மீண்டும் பூக்கள் உதிர்ந்தது. நான் கொடுத்த விசிட்டிங் கார்டை பார்த்து விட்டு, "உங்களை ஒண்ணு கேக்கலாமா?" என்றாள்.



"தாராளமாக!"



"அது என்ன, "ப்ரா" ன்னு பேர் வெச்சிருக்கீங்க?"



"ப்ளாக் ரோஸ் ஏஜென்சியின் (black rose agency) சுருக்கம்."



" 'O…!'' வடிவில் உதடுகள் குவித்தாள்.



"பிராக்கெட்ல - பிரைவேட் டிடெக்டிவ்!"



"O' என்றாள் மீண்டும்.



"சரி, நான் வர்றேன்." நீரஜா எழுந்து கொண்டாள்.



"யு ஆர் ஆல்வேஸ் வெல்கம்!"



நீ ராஜா சென்ற பிறகும் அவள் விட்டுச் சென்ற பர்ஃப்யூம் வாசனையும் நீரஜாவின் பிரத்தியேகமான வாசனையும் என் அலுவலக அறையில் அமானுஷ்யமாக உலவியது.



நான் நாற்காலியில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டு கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் அப்படியே இருந்தேன். நீரஜா சொன்னதை எல்லாம் மனதுக்குள் ஒரு முறை ஓடவிட்டுப் பார்த்தேன்.‌ என் உள்ளுணர்வு என்னை எச்சரித்தது.



இது ஒரு விபரீதத்தில் தான் போய் முடியப் போகிறது.‌



நான் என் செல்போனை எடுத்து ஒரு எண்ணை தேடினேன். எண்ணுக்குரிய பெயர் நினைவில் இருந்தது. ஆம்; அந்தப் பெயர் ஷாலினி! ஷாலினி டெலிபோன் டிபார்ட்மெண்டில் ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவள். என்னுடன் படித்தவள். அழகானவள் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.‌ அவளுக்கு போன் செய்தேன். உடனே எடுத்தாள். "ஹாய்! ப்ரோ!" என்றாள்.



"ஷாலு! எனக்கு உன்னோட உதவி தேவையா இருக்கு!" என்றேன்.



"அதானே பார்த்தேன்!" என்றாள். "உன் கிட்ட மாட்டிகிட்டு எவன் பலியாகப் போறானோ, நம்பர் சொல்லு! அதுக்குத்தானே போன் பண்ணே?" என்று சரியாக என் மனதின் எண்ணங்களை பிடித்து கேட்டாள்.



நான் அசடு வழிந்தேன்.



"வழியாதே, சொல்லு!" என்றாள்.



"போன்ல அசடு வழியறது கூட தெரியுதா?"



"நீ என்கிட்ட உதவி கேட்கும் போதே எனக்குத் தெரியும்! ஏதோ போன் நம்பர் கண்டுபிடிச்சு கொடுக்கச் சொல்லித்தான் போன் பண்றன்னு!"



"ஆமாம். என்கிட்ட ரெண்டு போன் நம்பர் இருக்கு. அந்த நம்பரோட அட்ரஸ் வேணும்."



"நான் இன்னிக்கு லீவு ப்ரோ! நாளைக்குதான் உனக்கு தகவல் கிடைக்கும்."



"பரவாயில்லை." என்று இரண்டு செல்போன் எண்களையும் சொன்னேன்.



மறுநாள், ஷாலினி எனக்கு அந்த இரண்டு எண்களில் ஒன்றை பற்றி சொன்னபோது நான் அதிர்ச்சிக்கு உள்ளானேன்.
 

Author: gavudham
Article Title: ஒரு ரகசிய குற்றம் 5
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.