பகவான் ரிட்டர்ன்ஸ் 1

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
91
1
18
InShot_20251116_060518594.jpg
பகவான் ரிட்டர்ன்ஸ் 1

திருவண்ணாமலை.
அதிகாலை மூன்று மணி.

வாழைத்தார் ஏற்றி வந்த அந்த லாரியை இருட்டை கிழித்துக்கொண்டு செலுத்திய தர்மனைப் பார்த்து கேட்டாள் அவன் அக்கா நல்லம்மாள்.

“தர்மா”

“சொல்லுக்கா”

“தூக்கம் வருதா?”

“இல்லக்கா”

“தூக்கம் வந்தா சொல்லு. எங்கயாவது வண்டியை நிறுத்தி டீ சாப்பிடலாம்”

“சரிக்கா” சொன்னவனின் பார்வை நல்லம்மாளின் அருகில் அமர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அவள் மகள் பார்வதி மேல் நிலைத்தது.

“பார்வதி தூங்கிடுச்சா?”

“ம்” சொன்ன நல்லம்மாள் பெருமூச்சு விட்டபடி தொடர்ந்தாள்.

“வைகாசி வந்தா இவளுக்கு இருபத்து நாலு முடிஞ்சிடும். அந்த அண்ணாமலையார் எப்பதான் நமக்கு விடிவு காலத்தைத் தருவாரோ?”

“கவலைப்படாதக்கா இப்ப என்ன வயசு ஆயிடுச்சு? சின்ன வயசு தானே?”

“என்னோட பயம் எனக்கு”

“ம்”

லாரியை ஓட்டிக் கொண்டிருந்த தர்மன் பார்வைக்கு சாலையில் நின்று கொண்டிருந்த அந்த இரண்டு கான்ஸ்டபிள்கள் பட்டனர்.

ஒரு கான்ஸ்டபிள் தன் டார்ச் லைட்டால் நிறுத்தும்படி காட்ட தர்மன் லாரியை நிறுத்தினான். இறங்கினான்.

ஒரு கான்ஸ்டபிள் கேட்டார்.

“எங்க இருந்துடா வர்றீங்க?”

“சார் நான் ஆந்திரா. சித்தூர்”

“இது யாரு? கூட ரெண்டு பேரைத் தள்ளிட்டு வந்திருக்க?” கான்ஸ்டபிள் நல்லம்மாளையம் பார்வதியையும் பார்த்து கேட்க தர்மன் ஆத்திரமானான்.

“சார் கொஞ்சம் மரியாதையா பேசுங்க அவங்க என்னோட அக்காவும் அக்கா பொண்ணும். “

சொன்ன தர்மனை பளார் என்று அறைந்தார் ஒரு கான்ஸ்டபிள் .

“என்னடா எங்களப் பார்த்தா கேனயனுங்க மாதிரி இருக்கா? உன்ன மாதிரி எத்தனை பேரை பார்த்திருக்கோம்? தள்ளிட்டு வந்துட்டு அக்காவும் அக்கா பொண்ணும்னு கதை பேசறியா?” சொன்ன கான்ஸ்டபிள் லாரியை பார்த்து குரல் கொடுத்தார் “ ரெண்டு பேரும் கீழே இறங்குங்கடி”

அவர்கள் இருவரும் பயத்துடன் இறங்க ஒரு கான்ஸ்டபிள் பார்வதியை ஏறிட்டார்.

“பரவால்ல நல்லாத்தான் இருக்கா. எவ்வளவுடா கொடுத்தே?”

அவர் கேட்க தர்மன் கத்தினான்.

“சார் உங்களுக்கு அவ்வளவு தான் மரியாதை . அவங்க ரெண்டு பேரும் பௌர்ணமிக்கு கிரிவலத்துக்கு வந்திருக்காங்க .எங்களை போக விடுங்க “

சொன்ன தர்மனின் கன்னங்களில் மாறி மாறி அறைந்தார் ஒரு கான்ஸ்டபிள் . தர்மன் நிலைகுலைந்து விழ அவன் இடுப்பில் ஓங்கி மிதித்தார்.

“ராஸ்கல் லாரில பிராஸ்டிட்யூசன் பண்ணிட்டு இங்க வந்து ரொம்ப நல்லவன் மாதிரி சீன் போடறியா?”
கேட்டவரிடம் மற்றவர் ரகசியமாய் கண் காட்ட புரிந்து கொண்டு தலையாட்டினார்.

பார்வதியை பார்த்தவர் கேட்டார்.

“இங்க பாரு நான் சொல்றதக் கேட்டா உனக்கு நல்லது. இல்லன்னா ஜெயில்ல தான் இருக்கணும். எப்படி வசதி?”

“சார் நாங்க நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணுங்க இல்ல எங்கள விட்டுருங்க சார் ப்ளீஸ்” நல்லம்மாள் சொல்ல ஒரு கான்ஸ்டபிள் அவளை பிடித்து கீழே தள்ளினார். நல்லம்மாள் தடுமாறி விழ பார்வதி பயந்து அலறினாள். ஒரு கான்ஸ்டபிள் பார்வதியைப் பிடித்து இழுத்தபடி அருகில் இருந்த மறைவான பகுதிக்கு செல்ல நல்லம்மாள் கதறினாள்.

“யாராச்சும் காப்பாத்துங்க”

அவள் கதறியதை கேலியாகப் பார்த்த ஒரு கான்ஸ்டபிள் கேட்டார்.

“எவ்வளவு வேணாலும் சத்தம் போடு உன்னக் காப்பாத்த யாரும் வர மாட்டாங்க”

அவர் சொல்லி வாய் மூடவில்லை பார்வதியை இழுத்துக் கொண்டு சென்ற கான்ஸ்டபிள் எகிறி வந்து தரையில் விழ மற்றவர் புரியாமல் திகைத்துப் பார்த்தார்.

“சோமு என்னாச்சு?” அவர் கேட்க அந்த இரண்டு பேரும் அவர் பார்வைக்கு தென்பட்டனர்.

“யார்றா நீங்க? போலீஸ் மேலயே கை வச்சுட்டீங்களா?” அவர் கோபமாய் கேட்க நின்று கொண்டிருந்த இரண்டு பேரில் ஒருவன் சொன்னான்.

“நீங்க ரெண்டு பேரும் போலீஸ் மாதிரி நடக்கலையே”

“நீங்க யாருங்கடா அதக் கேக்க ?”

கான்ஸ்டபிள் கோபமாய் கத்த ஒருவன் புன்னகையுடன் சொன்னான்.

“நாங்க யாருன்னு சொன்னதுக்கு அப்புறம் இந்த கோபம் உன்கிட்ட இருக்குமா?”

“யாருடா நீங்க?”

“பீப்பிள் வெல்ஃபேர்” அவன் சொல்ல இரண்டு கான்ஸ்டபிள்களின் முகமும் சட்டென்று மாறியது.

“சாரி சார் நாங்க தெரியாம..” ஒரு கான்ஸ்டபிள் சொல்ல முடியல வந்தவர்களில் ஒருவன் கேலியாக சிரித்தான்.

“எதுக்கு நடிக்கிறீங்க? இரண்டு பேரும் சாகப் போறீங்கன்னு தெரிஞ்சு போச்சு. நடிச்சா மட்டும் வாழ்க்கையில ஏதாவது எக்ஸ்டென்சன் கிடைக்குமா என்ன?” ஒருவன் கேட்டபடி பிஸ்டலை லோட் செய்தான். அதைப் பார்த்த ஒரு கான்ஸ்டபிள் பதட்டமாய் கத்தினார்.

“டேய் போலீஸ கொன்னுட்டு நீங்க தப்பிச்சிடுவீங்களா?” கேட்டவரை பார்த்து சிரித்தவன் சொன்னான்.

“எமனே எங்க பக்கத்துல நின்னாலும் எங்களுக்கு எல்லாமே எங்க பகவான் தான். பகவான் என்ன தெரியுமா சொல்லியிருக்கார்? எல்லா ஊர்லயும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துலல்லாம் நம்ம இயக்கத்தோட தோழர்கள் கண்காணிக்கணும். யார் எந்த பொறுக்கித்தனம் பண்ணாலும் குறிப்பா குழந்தைங்க பொண்ணுங்க கிட்ட தப்பா நடக்க யார் முயற்சி பண்ணாலும் அவங்கள சுட்டுக்கொன்னுட்டுப் போயிட்டே இருக்கணும்னு.. பாடிய போலீஸ் வந்து கலெக்ட் பண்ணிக்குவாங்கன்னு சொல்லியிருக்கார். இவ்வளவு தைரியமா எல்லாமே சொல்றேன்னு பார்க்கறியா? மனுசனா பொறந்தா சாவு நிச்சயம். அது ஒரு நாள் வந்தே தீரும். அது எங்க பகவானுக்காக நல்லதப் பண்ணிட்டு செத்துப்போனா அதுல ஒரு அர்த்தம் இருக்கு அது போதும் எனக்கு.”

அவன் சொல்ல இரண்டு கான்ஸ்டபிள்களும் அவனை பதட்டமாய் பார்த்தனர்.

“சார் எங்கள மன்னிச்சு விட்டுடுங்க நாங்க தெரியாம பண்ணிட்டோம் இனிமே சத்தியமா இந்த மாதிரி பண்ண மாட்டோம்”

அவர்கள் சொல்ல வந்தவர்களில் ஒருவன் நல்லம்மாளை ஏறிட்டான்.

“நீங்க சொல்லுங்கம்மா இவங்கள என்ன பண்ணலாம்? “

“நீங்க ரெண்டு பேரும் இல்லன்னா என் பொண்ணோட நிலைமையை என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியாது. இன்னிக்கு எங்களுக்கு நடந்தது நாளைக்கு யாருக்குமே நடக்காம இருக்கணும். அதனால …”

“சொல்லுங்கம்மா”

“இவங்க இந்த பூமிக்கு பாரம்”

“புரியுது” சொன்னவன் பிஸ்டலை உயர்த்த இரண்டு கான்ஸ்டபர்களும் வேண்டாம் என்று பரிதாபமாய் அலற அதை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் அவன் சுட ஆளுக்கு ஒரு தோட்டாவை வாங்கியபடி இரண்டு கான்ஸ்டபிள்களும் கீழே விழுந்து துடித்தனர்.

அவர்கள் துடிப்பதை நிறைவாய் பார்த்த நல்லம்மாள் கேட்டாள்.

“தம்பி”

“சொல்லுங்கம்மா”

“அந்த பகவான் ரொம்ப நல்லா இருக்கணும் பா. அவருக்கு நான் ரொம்ப நன்றி சொன்னேன்னு சொல்லுப்பா”

“அண்ணன் கிட்ட சொல்லிடறோம் மா”

***

“சார் என்னால இப்ப எதுவுமே பண்ண முடியாது” இன்ஸ்பெக்டர் கந்தசாமி சொல்ல டாக்டர் மல்ஹோத்ரா அவரை நேர்பார்வை பார்த்தபடி கேட்டார்.

“இப்படி சொல்றதுக்கு உங்களுக்கு வெக்கமா இல்லையா? எங்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்தா அதிலருந்து காப்பாத்தறதுக்கு ஏதாவது பண்ணனும்னு சொல்லித் தானே நீங்கள் கேட்கறப்பல்லாம் உங்களுக்கு எல்லாமே கொடுத்தோம்?”

“எல்லாம் கரெக்ட் தான் சார். ஆனால் போனது குழந்தைகங்க உயிர். நீங்க இருமல் மருந்துல பண்ண கலப்படத்தில் செத்துப் போன குழந்தைங்க எண்ணிக்கை மட்டும் 17 பேர். இது நேஷனல் லெவல்ல பெரிய நியூஸ் ஆயிடுச்சு சார். அதான் எங்களால் ஒண்ணும் பண்ண முடியாது.”

“அப்ப இதுக்கு என்னதான் வழி?”

“நீங்க சரண்டர் ஆயிடுங்க. லாயர் வச்சு வெளியில் வரப் போறீங்க. அவ்வளவு தானே?”

“என்ன சொல்ற?”

“சார் நீங்க சரண்டர் ஆயிட்டா நாளைக்கே இந்த நியூஸ் எல்லாரும் மறந்துருவாங்க. யாரும் இத ஃபாலோ பண்ண மாட்டாங்க. லாயர வச்சு நீங்க வெளியில் வந்துட்டீங்கன்னா நீங்க பாட்டுக்கு உங்க லைஃப் கண்டின்யூ பண்ணுங்க”

“நீ சொல்றது நல்ல யோசனையாத் தான் இருக்கு. சரி நான் அப்படியே பண்றேன்”

இன்ஸ்பெக்டர் கந்தசாமி விடை பெற்று சென்றுவிட டாக்டர் மல்ஹோத்ரா யோசித்தார்.

தன் மொபைலை எடுத்து அமைச்சருக்கு அழைத்தார்.

“நான் டாக்டர் மல்ஹோத்ரா”

“சொல்லுங்க சார் எப்படி இருக்கீங்க?”

“என்னை அரெஸ்ட் பண்ண தான் நாள் குறிச்சிட்டீங்களே? நான் எப்படி நல்லா இருப்பேன்?”

“உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்ல அது ஒரு ஃபார்மாலிட்டி அதுவும் வேற ஸ்டேட்ல குழந்தைங்க செத்துப் போனதுனால தான் எங்களால் ஒன்னும் பண்ண முடியாமப் போச்சு. இங்க அந்த மாதிரி நடந்திருந்தா மர்ம காய்ச்சல் பேர் தெரியாத காய்ச்சல் அப்படி இப்படின்னு ஏதாவது சொல்லி மூடி மறைச்சிருப்போம்”

“இப்ப இதுக்கு வேற வழி இல்லையா?”

“நீங்க சரண்டர் ஆயிடுங்க. லாயர் வச்சு வெளியில் வந்துடுங்க”

“ம்”

டாக்டர் மல்ஹோத்ரா சோபாவில் அமர்ந்தார்.

பசித்தது. தன் மொபைலை எடுத்தவர் உணவை ஆர்டர் செய்தார்.

மணி பார்த்தார்.

இரவு 8 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.

‘நாளை வக்கீலிடம் சொல்லிவிட்டு போய் சரண்டர் ஆக வேண்டியதுதான்’ யோசித்தவர் காலிங் வேல் அடிக்கும் சத்தம் கேட்டு எழுந்தார்.

‘இவ்வளவு சீக்கிரம் உணவு வந்து விட்டதா என்ன?’ யோசித்தபடி கதவைத் திறக்க அவன் நின்று கொண்டிருந்தான். கூடவே இன்னொருவன்.

டாக்டர் மல்ஹோத்ரா அவர்கள் இருவரையும் திகைப்பாய் பார்த்தார்.

“யார் நீங்க? என்ன வேணும்?”

“சொல்றோம்”

இருவரும் உள்ளே வந்தனர்.

“எனக்கு நிறைய வேலை இருக்கு நீங்க விஷயத்தை சொல்லிட்டு உடனே கிளம்பினா ரொம்ப நல்லது”

அவர் சொல்ல இரண்டு பேரில் ஒருவன் சிரித்தான்.

“உங்களுக்கு நிறைய வேலை இருக்குன்னு எங்களுக்கும் தெரியும் அதனாலதான் உங்களுக்கு ரெஸ்ட் கொடுக்கலாம்னு வந்திருக்கோம்”

ஒருவன் சொல்ல டாக்டர் துணுக்குற்றார்.

“என்ன சொல்றீங்க?”

“நாங்க சொல்றது இருக்கட்டும். உங்களால செத்துப்போனது 17 குழந்தைங்க. இதுக்கு நீங்க என்ன பதில் சொல்றீங்க?” கேட்டவனை ஒன்றும் சொல்லாமல் பார்த்த டாக்டருக்கு கோபம் தலைக்கேறியது.

“யார்றா நீங்க ரெண்டு பேரும்? முதல்ல வெளியில போங்கடா. உங்களுக்கு நான் ஏண்டா பதில் சொல்லணும்?”

அவர் கேட்க ஒருவன் அவர் முன் வந்து நின்றான். இன்னொருவனை காட்டி சொன்னான்.

“சார் உங்களப் பார்க்கறதுக்கு யார் வந்திருக்காங்கன்னு உங்களுக்கு தெரியுமா?”

“யாரு?”

“உங்களுக்கு மோட்சத்தைக் கொடுக்கப் போற பகவான் சார்”

பகவான் என்ற பெயரை கேட்டதும் டாக்டருக்கு வியர்த்தது. தன்னையும் மீறி நாற்காலியில் இருந்து எழுந்தார்.
பயத்தில் முகம் வெளிறியது.

“தம்பி அந்த தப்புக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” வார்த்தைகள் குழறலாய் வெளிப்பட பகவான் எழுந்தான்.

“சார் அந்த 17 குழந்தைகளுக்கும் நீங்க நஷ்ட ஈடு கொடுத்திருக்கணும் அந்த மாதிரி ஒரு விஷயம் நடந்ததுக்கு மன்னிப்பு கேட்டிருக்கணும். நீங்க எதுவுமே பண்ணாம எப்படியாவது தப்பிக்கலாம்னு தானே முயற்சி பண்றீங்க?”

“இல்ல தம்பி நீங்க சொல்றபடி நான் எல்லாமே பண்ணிடறேன்”

“என்ன வேணாலும் பண்ணுவீங்களா?”

“பண்றேன்”

சொன்ன டாக்டரைப் பார்த்த பகவான் தீர்க்கமான குரலில் சொன்னான்.

“உயிர் விடணும்”

தொடரும்
 

Attachments

  • InShot_20251116_060518594.jpg
    InShot_20251116_060518594.jpg
    440 KB · Views: 1

Author: gavudham
Article Title: பகவான் ரிட்டர்ன்ஸ் 1
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.