மலரினும் மெல்லியது காமம் 8

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
91
1
18
அனிதா தன் வீட்டில் அசைன்மென்ட் எழுதிக் கொண்டிருந்தாள். வாசலில் நிழலாட நிமிர்ந்து பார்த்தாள். அலமேலு நின்றிருக்க உற்சாகமாய் எழுந்து வந்தாள்.

“வாங்கத்த”

“அப்பா இருக்காராம்மா?”

“இருக்கார் அத்த. இதோ கூப்பிடறேன் “ சொன்னபடி “அப்பா” என்று உரக்க அழைத்தாள்.

“என்னம்மா?” என்று உள்ளே இருந்து குரல் வர

“அத்தை வந்திருக்காங்கப்பா” என்றாள். அடுத்த இரண்டாவது நிமிடத்தில் மாரிமுத்து வெளியே வந்தார். அலமேலுவை புன்னகையுடன் பார்த்தார்.

“வாக்கா உட்காரு”

“சரிப்பா”

மாரிமுத்து அனிதாவிடம் திரும்பினார்.

“அத்தைக்கு குடிக்கிறதுக்கு ஏதாவது கொண்டு வாம்மா”

அனிதா எழுந்து உள்ளே சென்றாள்.

“சொல்லுக்கா என்ன விஷயம்?”

“எல்லாம் நம்ம கணேஷ் கல்யாண விஷயம்தான்”

“அவனுக்கு என்ன? அதெல்லாம் கல்யாணம் நல்லபடியா நடக்கும்.”

“எங்க? நானும் பொண்ணு பார்த்துட்டுத் தான் இருக்கேன். ஒண்ணும் அமைய மாட்டேங்குது”

“கவலைப்படாதக்கா நேரம் காலம் வரும் போது எல்லாமே தன்னால கூடி வரும்.”

மாரிமுத்து சொல்ல அலமேலு பெருமூச்சு விட்டாள்.

“அப்படித்தான் நானும் நினைக்கிறேன் ஆனா இவனுக்கு எப்பத்தான் அந்த நேரம் வரும்னு தெரியல”

சமையலறையில் காபி போட்டுக் கொண்டிருந்த அனிதாவிற்கு அவர்கள் பேசியது தெளிவாகக் காதில் கேட்டது.

நான் ஒருத்தி இங்கே இருக்கும்போது இவர்கள் எதற்காக தேவையில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்?

உள்ளே வருத்தம் வந்தது.

என்னோட மாமா எனக்கு கண்டிப்பா கிடைக்கணும் . கடவுளே நீ தான் துணையிருக்கணும்.

யோசித்தவள் காஃபியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

அலமேலுவிற்கு காபியை கொடுக்க அலமேலு அனிதாவின் முகத்தைப் பார்த்தாள்.

“என்னாச்சு அனிதா ஏன் உன்னோட கண்ணு கலங்கியிருக்கு?”

“தெரியல அத்தை ஏதாவது தூசு பட்டிருக்கும்” அனிதா சொல்ல அலமேலு விடவில்லை.

“வா இங்க இப்படி உட்காரு” சொன்னவள் அனிதாவை தன் முன் உட்கார வைத்து அவள் கண்களில் மெதுவாக ஊத மாரிமுத்து நெகிழ்ந்து போய் பார்த்தார்.

“என்ன அப்படி பார்க்கிறே?”

“இல்லக்கா அனிதாவை குழந்தையா அவ பிறந்ததும் முதன்முதல்ல நீதான் கையில வாங்கினே. ஞாபகம் இருக்கா?”

“அது எப்படி மறக்கும் எனக்கு ? இவ உனக்கு மட்டுமா குழந்தை? எனக்கும் குழந்தைதான் “

அலமேலு சொல்ல மாரிமுத்து பாசமாய் பார்த்தார்.

“எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குக்கா”

“ஏன்பா ?”

“எல்லாருக்கும் நமக்கப்புறம் நம்ம குழந்தைகளை யார் பார்த்துக்குவாங்கன்னு ஒரு பயம் எப்பவும் உள்ள ஓடிட்டேயிருக்கும். ஆனா எனக்கு அந்த பயம் இல்ல. எனக்கு ஏதாவது நடந்தாக் கூட நீ இருக்கே. கணேஷ் இருக்கான்னு மனசுல ஒரு நிம்மதி இருக்கு எப்பவுமே எனக்கு” சொன்ன மாரிமுத்துவை அலமேலு கோபமாய் பார்த்தாள்.

“உனக்கு எப்பவுமே எதுவுமே தப்பா நடக்காது இந்த மாதிரி பேசறத நிறுத்து”

அலமேலுவின் கண்டிப்பு மாரிமுத்துவிற்கு சிரிப்பை வரவழைத்தது.

“சரிக்கா”

***

“நீ என்ன சொல்ற?” சத்யா அனிதாவிடம் கேட்டாள்.

இடம்: அனிதாவின் காலேஜ் கேண்டீன்.

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல”

“பேசாம உன்னோட மாமா கிட்ட போய் வெளிப்படையா நான் உங்கள லவ் பண்றேன்னு சொல்லிட வேண்டியதுதானே?”

“இல்ல சத்யா என்னால் அப்படி என் மாமா கிட்ட ஒரு நாளும் சொல்ல முடியாது. நான் அவர்கிட்ட அந்த மாதிரி பேசினதே கிடையாது. அவர் எப்ப என்னைப் பார்த்தாலும் ஒரு குழந்தையைப் பார்க்கற மாதிரி தான் பார்ப்பாரு.”

அனிதா சொல்ல சத்யா சிரித்தாள்.

“ஏன்?”

“இல்ல குழந்தை வளர்ந்துடுச்சுன்னு உன்னோட மாமாக்கு தெரிய மாட்டேங்குது. அதான் பிரச்னை “

“எனக்கு ஏதாச்சும் சொல்லுடி”

“உன்னோட மாமா கிட்ட உன்னால சொல்ல முடியலன்னா வேற ஒரு வழி இருக்கு”

“என்ன அது?”

“உன் அத்தை கிட்ட போய் அவங்க கால்ல விழுந்துடு. உங்க பையனுக்கு வேற எங்கயும் பொண்ணு தேடாதீங்க எங்க வீட்டுக்கு வாங்கன்னு” சத்யா சிரித்தபடி சொல்ல அனிதா அவளை முறைத்தாள்.

“சரி சரி முறைக்காத. ஏதாவது ஐடியா வருதான்னு யோசிப்போம்”

“ம்”

“அவர் தோட்டத்தில பம்ப் செட் இருக்கா?”

“இருக்கே”

“அவர் வர்ற நேரமா ப் பார்த்து அங்க போய் குளி” சொன்ன சத்யா அனிதா தன்னை முறைப்பதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள்.

“என்னோட லவ் உனக்கு விளையாட்டா இருக்கா?”

“நான் என்ன பண்றது சொல்லு. தமிழ் படம் பார்த்து வளர்ந்த பொண்ணு நான். ஹீரோவை கரெக்ட் பண்ண ஹீரோயின் பம்ப் செட்டில் குளிக்கிற சீன் வந்தா ஹீரோ அவ அழகில் மயங்கிடுவார்னு சில படத்துல பார்த்திருக்கேன். அதான் சொன்னேன். “

“நீ ஒரு ஐடியாவும் சொல்ல வேண்டாம் கஷ்டமோ நஷ்டமோ நானே பார்த்துக்கறேன் “ சொன்ன அனிதா வகுப்பறைக்குள் செல்ல சத்யா அவளைத் தொடர்ந்தாள்.

பேராசிரியர் வகுப்பெடுக்க அனிதாவின் கவனம் முழுவதும் கணேஷ் மீது இருந்தது.

“அனிதா” பேராசிரியர் தன்னை அழைக்க எழுந்து நின்றாள்.

“ஸார்”

“நான் சொன்னது புரிஞ்சதா?”

அவர் என்ன சொன்னார் என்று தெரியாமலேயே “ புரிந்தது சார் “ என்றாள்.

உணவு இடைவேளையில் சாப்பிட செல்லாமல் தனியாக அமர்ந்த அனிதாவின் அருகில் வந்தாள் சத்யா.

“வாடி சாப்பிடலாம்”

“இல்ல எனக்கு வேண்டாம்”

“இப்ப நீ சாப்பிடாம இருந்து என்ன பண்ணப் போறே?”

“என்னமோ பண்றேன் போ” சொன்ன அனிதாவை பாவமாய் பார்த்தாள் சத்யா

“நீ இவ்வளவு சீரியஸா இருப்பேன்னு நான் நினைச்சுப் பார்க்கல அனிதா”

“ஒவ்வொரு நாளும் எனக்கு டென்ஷனா இருக்கு. அத்தை நேத்து வீட்டுக்கு வந்துட்டுப் போனாங்க. “

“ம்”

“எங்க ஏதாவது பொண்ணு ஓகே ஆயிடுமோ என்னோட மாமாக்கு வேற யார் கூடயாவது கல்யாணம் ஆகிடுமோன்னு பயந்து பயந்து வாழ்ந்துட்டிருக்கேன் டி”

“புரியுது”

“மாமா பொண்ணு பார்க்கப் போறாருன்னு தெரிஞ்சா அன்னிக்கு ஃபுல்லா விரதம் இருந்து சாமி கும்பிடுவேன். அந்த பொண்ணு செட் ஆக கூடாதுன்னு” அனிதா சொல்ல சத்யா சிரித்தாள்.

“நான் ஒண்ணு கேட்கவா ?”

“ம்”

“உன்னோட மனசுல இப்படி ஒரு எண்ணம் இருக்குன்னு தெரிஞ்சா உன் அப்பாவும் அத்தையும் உன்னை உன்னோட மாமா கூட சேர்த்து வைக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு தானே?”

“தெரியல”

“ஏன்?”

“அத்தைக்கு மாமா மேல ரொம்ப பாசம் ஜாஸ்தி. ஒரே பையன். ஹஸ்பண்ட் சின்ன வயசுலயே தவறிட்டார். அத்தைக்கு என்னைப் பிடிக்கத்தான் செய்யும். ஆனா என்னை அவங்க குழந்தையாத்தான் பார்க்கறாங்க. அதான் எனக்கு பெரிய பிரச்னை.”

“ம்”

“நீ சாப்பிடு சத்யா”

“எனக்கும் சாப்பாடு வேண்டாம்”

“ஏன்?”

“உனக்கு மட்டும் தான் ஒரு லவ் ஸ்டோரி இருக்குமா? எங்களுக்கெல்லாம் இருக்காதா?” சத்யா குறும்பாய் கேட்க அனிதா சிரித்தபடி சொன்னாள்.

“சரி வா சாப்பிடலாம்”

***

கலைமகள் ஜோதிட நிலையம்.

ஜோதிடர் ரத்தினம் கணேஷ் ஜாதகத்தை உன்னிப்பாய் பார்த்தபடி ஒரு தாளில் கணக்கு போட்டார்.

தனக்குள் எதையோ சொன்னபடி தாளில் எழுதி இருப்பதைப் பார்த்தார்.

“இந்த ஜாதகருக்கு இன்னும் கல்யாணம் ஆகலையே?” அவர் கேட்க அவருக்கு எதிரில் அமர்ந்திருந்த அலமேலு “இன்னும் ஆகலைங்க “ என்றாள்.

“நல்லது”

“என்ன சாமி சொல்றீங்க?”

“இவருக்கு கிரகப்பலன் இப்ப சரியா இல்ல . மாந்தி லக்னத்தில இருக்கு. எட்டாம் இடத்துக்குரிய ஆயுள் காரகன் இப்ப இவருக்கு சரியா இல்லை”

அவர் சொல்ல அலமேலு பதறினாள்.

“என்ன சொல்றீங்க சாமி?”

“இவருக்கு ஜாதகப் பலன்படி ஒரு மாரக தோஷம் இருக்கு.”

“மாரகம்னா?” அலமேலு புரியாமல் கேட்க ஜோதிடர் அவளை உன்னிப்பாய் பார்த்தபடி சொன்னார் “மரணம்”.

“அய்யோ என்ன சொல்றீங்க சாமி?”

“ஜாதகருடைய ஜாதகத்துல அப்படித்தான்மா இருக்கு”

“என் பையனுக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்துட்டிருக்கேன்”

அலமேலு சொல்ல ஜோதிடர் மீண்டும் ஒருமுறை கணக்கு போட்டார்.

“கல்யாணம் இந்த ஜாதகருக்கு நிச்சயமா நடக்கும் ஆனா..”

“ஆனா ?”

“அதுவே கூட மாரகத்துக்கும் காரணமாகலாம்”

ஜோதிடர் சொல்ல அலமேலு நொந்து போனாள். அவருக்கு தட்சணை வழங்கி விட்டு வெளியே வந்தாள்.

மனம் முழுவதும் அவர் சொன்னதே யோசனையாக இருந்தது.

கணேஷ்க்கு நிச்சயமாக கல்யாணம் நடக்கும் ஆனால் அதே நேரத்தில் அந்த கல்யாணம் தான் மரணத்துக்கும் காரணமாக இருக்கும். அப்படி என்றால் அவனுக்கு இப்போதைக்கு கல்யாணம் நடக்காமல் இருப்பதுதான் நல்லது.

இப்படி எண்ணிய அதே வேளையில் வேறு மாதிரியும் யோசித்தாள்.

இப்போதே அனைவரும் கேட்கிறார்கள். ஏன் இன்னும் கல்யாணம் செய்யவில்லை என்று. இன்னும் தாமதித்தால் சரியாக வருமா?


ஜோதிடர் சொல்வதை நம்பலாமா? ஒரு கல்யாணம் எப்படி மரணத்திற்கு காரணமாக இருக்க முடியும்?

யோசித்தவள் தன் வீட்டை அடைந்தாள். கட்டிலில் சற்று நேரம் அமர்ந்த அலமேலுவிற்கு காபி போட்டுக் குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற கட்டிலில் இருந்த எழ முயன்றாள். முடியவில்லை. கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது.

***

“உங்களுக்கு?” புவனா கேட்க “எனக்கும் பாதாம்கீர்” என்றான் கணேஷ்.

சற்று நேரத்தில் பாதாம் கீர் வந்தது.

குடித்தனர். கணேஷ் புவனாவின் விழிகளைப் பார்க்க அவள் தலை குனிந்து கொண்டாள்.

“ஏங்க ?”

“ம்”

“இப்படி ஒரு பொண்ணோட போய் கூல் ட்ரிங்க்ஸ் குடிக்கிறது எனக்கு இதான் ஃபர்ஸ்ட் டைம்”

“ம்”

“பொதுவா எனக்கு யார் கூடயும் பழகணும்னு தோணாதுங்க நான் கொஞ்சம் ரிசர்வ் டைப் “

“ம்”

“ஆனா உங்க கூட பேசறப்ப மட்டும் எனக்கு எந்த ஒரு வித்தியாசமான உணர்வும் வந்ததே இல்லை” கணேஷ் அவள் கண்களைப் பார்த்து சொல்ல புவனா அவனைப் பார்த்து கேட்டாள்.

“ஏன்?”

“இதுக்கு நான் உண்மைய சொல்லலாமா? சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?”

“சொல்லுங்க”

“உங்க கூட ரொம்ப நாள் பழகுன ஒரு உணர்வு.. நீங்க வேற யாரோ இல்லன்னு மனசுக்குள்ள ஒரு ஃபீல். அதான் காரணம்”

“ம்”

“புவனா”

“சொல்லுங்க”

“நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா?”

“தெரியல”

“ஸாரி”

“எதுக்கு?”

“நான் சொன்னதுல ஏதாவது தப்புன்னு உங்களுக்குத் தெரிஞ்சா”

“பரவால்ல”

“ம்”

“பாதாம் கீர் அப்படியே வச்சிருக்கீங்க குடிங்க “

“ம்”

“கணேஷ்”

“சொல்லுங்க”

“எதையும் மனசுல போட்டு குழப்பிக்காதீங்க”

“ம்”

“நம்ம வாழ்க்கையை நாம ஓரளவுக்குத் தான் நம்மளால கொண்டு செல்ல முடியும்”

“அப்படின்னா?”

“நாம நினைக்கிறது மட்டும் தான் நம்ம வாழ்க்கையில நடக்கும்னு நாம சொல்ல முடியாது. சில நேரங்கள்ல நாம நினைக்காததும் நம்ம வாழ்க்கைல நடக்கும். அதுக்கு ஒண்ணும் பண்ண முடியாது. அதனால எப்பவுமே சந்தோஷமா இருங்க. எதுக்காகவும் சங்கடப்படாதீங்க”

புவனா சொல்ல கணேஷ் அவளை ஆச்சரியமாய் பார்த்தான்.

“எப்படிங்க?”

“புரியல”

“நீங்க இப்படி எல்லாம் பேசுவீங்களா?”

“பேச மாட்டேன் . யார்கிட்டயும் அதிகமா பேச மாட்டேன். ஆனா நீங்க ஏதோ ஒரு கவலையில அல்லது வருத்தத்துல இருந்த மாதிரி தோணுச்சு. அதனால சொன்னேன் சொல்லணும்னு தோணுச்சு “ புவனா சொல்ல அவளை பாசமாய் பார்த்தான் கணேஷ்.

“ ம் போலாமா?”

“போலாம்”

இருவரும் வெளியே வந்தனர். சாலையில் நடந்தனர். பஸ் ஸ்டாப்பை கடந்து செல்கையில் ஒரு பேருந்து வந்து நின்றது. பேருந்திலிருந்து இறங்கினாள் அனிதா.

தொடரும்
 

Author: gavudham
Article Title: மலரினும் மெல்லியது காமம் 8
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.