ரத்தக்காட்டேரி 1

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
100
1
18
InShot_20250621_204435451.jpg

1
செல்வி வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தாள். பொழுது நன்றாக இருட்டி இருந்தது. இருட்டுவதற்குமுன் எப்படியும் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று முயற்சி செய்தும் அவளால் முடியவில்லை. கிளம்பும் நேரத்தில் முதலாளியம்மா கூப்பிட்டு விட்டார்.
' தலை சுற்றுவது போல் இருக்கிறது'
என்று அவர் சொல்ல அவருக்கு காப்பி போட்டுக் கொடுத்துவிட்டு கொஞ்ச நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பினாள்.
அது ஒரு கிராமம். இரவு ஏழு மணி ஆகிறது என்றால் எல்லோரும் வீட்டில் அடைந்து விடுவர். ஏழு மணிக்கு மேல் ஆண்கள் உட்பட தெருவில் யாரும் இருக்க மாட்டார்கள். அதற்கு காரணம் இருந்தது.
பொழுது சாய்ந்த பிறகு ரத்தக்காட்டேரி ஊருக்குள் நடமாடும் என்று அனைவருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது முதலில் இதை கேள்விப்படும் எவரும் நம்ப மறுத்தனர்.
பத்திரிகைகளுக்கும் இந்த செய்தி பரவியது. பெரும்பான்மையான பத்திரிகைகள் இது கட்டுக்கதை என்று தள்ளிவிட ஒரு பத்திரிகையாளர் மட்டும் உள்ளே வந்தார்.
இரண்டு கேமராக்களை ஆங்காங்கே மறைவான இடங்களில் பொருத்திவிட்டு ரத்தக்காட்டேரி வந்தால் படம் பிடிக்கட்டும் என்று காத்திருந்தார்.
மறுநாள் காலை பார்த்தவருக்கு அதிர்ச்சி தாக்கியது.
கேமராவில் ஏதோ ஒரு உருவம் ஓடுவதும் நடப்பதும் நிற்பதும் பதிவாகியிருந்தது. அது மனிதனைப் போலவோ மிருகத்தை போலவோ அல்லாமல் வேறு வகையாக இருந்தது. அதன் முகத்தை குளோசப்பில் பார்த்தவர் அதிர்ந்தார். வாயில் ரத்தக்கறை உறைந்திருந்தது. உடனடியாக ஊர் பெரியவர்களிடம் சொல்லி எல்லோரையும் எச்சரிக்கை செய்தார்.
ஊரில் பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது. மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன இரவு ஏழு மணிக்கு மேல் யாரும் வெளியில் நடமாடக் கூடாது காலையில் ஏழு மணி வரை வெளியில் வரக்கூடாது சிறுவர்-சிறுமிகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் இரவு நேரத்தில் எதுவும் சந்தேகத்திற்கிடமான சத்தம் வந்தால் எந்தக் காரணத்தையும் கொண்டும் வெளியில் வரக்கூடாது. இப்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
முதலில் சிலர் நம்ப மறுத்தனர்
தர்மகர்த்தாவின் பையன் சந்திரன் இதெல்லாம் ஒரு கட்டுக்கதை என்று எல்லோரிடமும் சொல்லிவிட்டு கிராமத்தில் இயல்பாக நடக்க தொடங்கினான்.
எல்லோரும் எச்சரித்தும் அவன் கேட்கவில்லை. ஒரு பௌர்ணமி நாளின் இரவுப்பொழுதில் வீட்டிலிருந்து எதற்கோ வெளியே போனான்
அடுத்த நாள் காலையில் ஊருக்கு நடுவில் இருந்த வேப்பமரத்தின் அடியில் பிணமாகக் கிடந்தான். கழுத்தில் ஒரு மிருகம் கடித்த தடம் இருந்தது. ரத்தம் கழுத்திலிருந்து தரையில் வழிந்தபடி உறைந்திருந்தது.
அந்த சம்பவத்திற்கு பிறகு மக்கள் கடுமையாக கட்டுப்பாடுகளை பின்பற்ற தொடங்கினர்.
காவல் நிலையத்தில் புகார் செய்தனர். ஏற்கனவே சந்திரன் இறந்தது எப்படி என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்த காவல்துறை ஒன்றும் செய்ய இயலாமல் கைவிரித்தது. வனத்துறையிடம் சொல்லி அது ஏதோ மிருகம் ஆக இருக்குமோ என்று சோதித்து பார்க்க மக்கள் நடவடிக்கை எடுத்தனர் வனத்துறை முதலில் அவர்களது புகாரை நம்ப மறுத்தது.
இந்த நூற்றாண்டில் இப்படிப்பட்ட ஒரு புகாரா என்று சிரித்தனர்.
முதல்வரின் புகார் பெட்டிக்கு ஊர்மக்கள் ஒன்றுகூடி புகார் அனுப்பினர். முதல்வரிடமிருந்து மனு தலைமை செயலாளருக்கு மாறியது அவரிடமிருந்து மாவட்ட ஆட்சியருக்கு பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து காவல்துறைக்கும் வந்து சேர்ந்த புகார் மனு அவர்கள் ஊர் காவல் நிலையத்திற்கு வந்த பின் வழக்கம்போல் காவல்துறை
"ரோந்து வருகிறோம் போங்கள்" என்று சொல்லி அனுப்பி வைத்தனர்.
காவலர்களுக்கும் பயம்தான் அந்த ஊருக்குச் செல்வது. இரண்டு கான்ஸ்டபிள்கள் ஊரின் எல்லை வரை மட்டும் போய் வந்தனர்.
இப்படியாக நிலைமை இருக்க மக்கள் ஒரு முடிவெடுத்தனர் நம்மை நாம் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்
'வரும் சித்திரை மாதத்தில் கோவில் திருவிழாவை நல்லபடியாக நடத்தி அம்மன் மனதை குளிர வைத்து எப்படியாவது ஊரை மிரட்டும் அந்த பிரச்சினையிடமிருந்து தப்பிக்க வேண்டும்' என்று முடிவெடுத்தனர்.
சித்திரை மாதத்திற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருந்தன இந்த இரண்டு மாத காலமும் ஊர்மக்கள் யாரையும் பலி கொடுக்கக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தனர்
செல்வி பொழுது சாய்வதற்கு முன்னரே முதலாளியம்மாவின் வீட்டில் இருந்து கிளம்ப வேண்டும் என்று முயற்சி செய்தும் அவளால் முடியாமல் போய்விட்டது. அவள் மெல்ல படியும் இருட்டை பயத்துடன் பார்த்தபடி நடந்தாள். யாராவது இப்போது தெருவில் இருந்தால் அவர்களுடன் சேர்ந்து நடந்து போய்விடலாம் தவித்தபடி தெருவைப் பார்க்க யாரும் இல்லை
அரைகிலோ மீட்டர் தொலைவில் நடந்தபின் ஒரு குறுக்குச் சந்து வரும். அந்த குறுக்குச் சந்து வழியாக ஒரு காட்டுப் பாதையில் பத்து நிமிடம் நடந்தால் அவள் வீடு வந்து விடும். பகல்பொழுது என்றால் அவளுக்கு சுத்தமாக எதுவும் தோன்றாது.
ஊரில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் எடுத்த கட்டுப்பாடுகள் சந்திரனின் கொடூர மரணம் தழுவிக்கொண்ட இருட்டு எல்லாமே அவளுக்குள் ஒரு திகிலான உணர்வை கொண்டு வந்தன.
தெருவில் பயந்து பயந்து திரும்பி திரும்பிப் பார்த்தபடியே நடந்தாள்.
' இன்னும் கொஞ்ச நேரத்தில் குறுக்கு சந்து வந்துவிடும்' தனக்குள் நினைத்த செல்வியின் அலைபேசி அடித்தது. அந்த சத்தம் நிசப்தமான இருட்டில் பயங்கரமாய் இருக்க பயந்து போன செல்வி அவசரமாய் அலைபேசியை எடுத்தாள்.
"ஹலோ" அவள் குரல் நடுக்கமாய் வெளிப்பட்டது.
"செல்வி நான் அம்மா பேசறேன்"
அவள் அம்மா பார்வதியின் குரலில் பதட்டம்.
"சொல்லும்மா"
"என்னம்மா இன்னும் வீட்டுக்கு வரல எங்கம்மா இருக்க இப்போ?"
"வந்துட்டு இருக்கேன்மா கொஞ்சம் லேட்டாயிடுச்சு பத்து நிமிஷத்துல வீட்ல இருப்பேன்"
"சீக்கிரம் வாம்மா பயமா இருக்கு"
"சரிமா" என்றவள் அலைபேசியின் டார்ச்சை ஆன் செய்தாள். குறுக்குச் சந்து வர உள்ளே நுழைந்தாள்.
இருட்டு முழுமையாய் ஈஷிக்கொள்ள மொபைல் டார்ச் வெளிச்சத்தை இங்குமங்கும் அடித்தாள். ஏதேனும் சத்தம் கேட்கிறதா உன்னிப்பாய் கவனித்தாள்.
ஒன்றும் வித்தியாசமாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்தபடி நடந்தாள்
'இன்னும் ஐந்து நிமிடம் தான் இந்த சந்து முடிந்துவிடும்'
நினைத்த அவளின் காதில் கேட்டது அந்த சத்தம்.
பின்னால் சருகுகள் மிதிபடும் சத்தம்.
செல்வியின் இருதயத்தில் துடிப்பு எகிறியது.
வியர்த்துக் கொட்டினாள்.
'யாரோ இருக்கிறார்கள்' நினைத்தவள் எந்த அசைவும் இன்றி நின்றாள்.
சத்தமும் நின்றது மொபைல் டார்ச்சை எல்லா திசைகளிலும் அடித்தாள் ஒன்றும் அவளுக்குப் புலப்படவில்லை.
'ஓடிவிடலாமா?' யோசித்தவள் மீண்டும் மெல்ல நடந்தாள்.
பின்னால் எதுவும் சத்தம் கேட்கிறதா? கவனித்த செல்விக்கு நிச்சயமாய் கேட்டது பின்னால் சருகுகள் மிதிபடும் சத்தம்.
சட்டென்று டார்ச் வெளிச்சத்தை அந்த திசையில் செலுத்திய செல்வி வீறிட்டாள்.
'கடவுளே என்ன இது என்னைக் காப்பாத்து'
ஓடினாள்.
பின்னால் அந்த உருவம் துரத்தியது. ஓடிய செல்வி கால் இடறி கீழே விழ அந்த உருவம் வந்தது.
அவளுக்கு முன் நின்றது
விநோதமாய் கத்திய அந்த உருவம் தன் கோரப் பற்களைக் காட்டியபடி செல்வியை நெருங்கியது.

தொடரும்.

அடுத்த எபி நாளை மாலை 6 மணிக்கு


ரத்தக்காட்டேரி முழு கதையும் கேட்டு மகிழுங்கள்

 
Last edited: