ஒரு ரகசிய குற்றம் 2

gavudham

Administrator
Staff member
Jan 14, 2025
109
1
18
கண்ணாடியில் தெரிந்த அதிர்ச்சி அடைந்த நீரஜாவை எதிரில் நின்ற நீரஜா பார்த்தாள்.



நீல நிற பூக்கள் தெளித்த, மஞ்சள் நிற நைட்டியில் தூக்கலாகத் தெரிந்தாள்.



விசேஷமாக, நைட்டியின் கூர்மையில் இரண்டு தாமரைப் பூக்களை வடிவமைத்திருந்ததுதான்.



கழுத்தில் இருந்து சரிந்து இறங்கிய தங்கச் சங்கிலி. சங்கிலியில் கோர்க்கப்பட்ட தாலி, அவளின் ஏராளமான மார்புகளின் தொட்டிலில் பதுங்கி இருந்தது.



"என்ன, பேச்சையே காணோம்?"



எதிர்முனை எகத்தாளமாக கேட்டது.



"சரி, விக்ரம் கமல்ஹாசன் நடிச்ச படம்! அதுக்கு என்ன இப்போ?"



நீரஜாவின் குரலில் இப்போது சுருதி குறைந்திருந்தது. அவளாலேயே அதை உணர முடிந்தது. தொண்டை குழிக்குள் 'ஆதம் ஆப்பிள்' ஏறி இறங்கியது.



"விக்ரம் படத்துக்கோ, கமல்ஹாசனுக்கோ ஒரு பிரச்சனையும் இல்லை. விக்ரமுக்கும் உனக்கும் நடுவுல இருக்கிற விஷயம் தான் முக்கியம். அதுதான் கவனிக்க வேண்டியது."



"அப்படியா? விக்ரம் யார்?"



"ரொம்ப நல்ல கேள்வி! விக்ரம் யாருன்னு உனக்குத் தெரியாதா?"



"முதல்ல நீ யார்?"



"சரிதான். இது பார் நீரஜா, பாசாங்கு வேணாம். நிஜமாவே விக்ரம் யாருன்னு தெரியாதா உனக்கு?"



"தெரியாது, முதல்ல போனை வை!"



"ஓகே! விக்ரம் யாருன்னு உனக்கு தெரியாது இல்ல? அப்புறம் எதுக்கு அநாவசியமா என் கிட்ட பேச்சு? போனை நீயே கட் பண்ணிட்டு உன் வேலையை பாக்க…"



அழைப்பை துண்டித்தாள் நீரஜா.



இதயத் துடிப்பு திரண்ட இரண்டு பருமனுக்கு மேலே கேட்டது. கண்ணாடியில் பார்த்தாள். முகம் வெளிறிப் போயிருந்தது. அப்பட்டமான பீதி முகத்தில் ஒட்டியிருந்தது.



ராஸ்கல்! யாரவன்? விக்ரமை தெரியும் என்கிறான்! என்ன தெரியும் அவனுக்கு? அவன் குரலை ஞாபகப் படுத்தி பார்த்தாள். லேசான கரகர குரல். அந்தக் குரலை இது வரை அவள் கேட்டதாக ஞாபகம் இல்லை. அவன் குரலில் ஓர் அதிகாரம் இருந்தது.‌ மிரட்டல் இருந்தது. அலட்சியம், ஆணவம் எல்லாம் இருந்தது.



ஒரு வேளை விக்ரமை தெரியுமோ? என்னைத் தெரியுமோ? என்னையும் விக்ரமையும் ஒன்றாய்த் தெரியுமோ?



அதைத்தான் அவன் சொல்ல வந்தானா? அதைச் சொல்வதால் என்னிடமிருந்து அவன் என்ன எதிர்பார்க்கிறான்?



'போனை நீயே கட் பண்ணிட்டு உன் வேலையைப் பார்க்க வேண்டியதுதானே?' என்று தான் அவன் சொல்ல வந்தான்.



போனை துண்டிக்கச் சொன்னதில் 'துண்டித்துப் பார்!' என்று சொல்லாமல் விடப்பட்ட மிரட்டல் தொனி இருந்தது. போனை துண்டித்து விட்டு உன்னால் சும்மா இருக்க முடியாது என்ற ஏளனம் இருந்தது. மீண்டும் நீயே எனக்கு போன் செய்யத்தான் போகிறாய் என்ற உறுதி இருந்தது, அவன் பேச்சில்.



நீரஜா யோசித்தாள்.



மீண்டும் அவனுக்கு, அதே எண்ணுக்கு போன் செய்யலாமா?



செல்போனை எடுத்தாள். அதே சமயம் அவள் செல்போன் ரிங்டோனை அதிர்ச்சியுடன் வெளியிட்டது. திரையில் சுவாமிநாதனின் பேர் ஒளிர்ந்தது.



'இவர் எதற்காக இந்த நேரத்தில் போன் செய்கிறார்? ஏதாவது முக்கியமான செய்தி இருந்தால் தவிர, மற்றபடி அநாவசியமாக ஆபீஸ் நேரத்தில் போன் செய்ய மாட்டார்.'



"ஹலோ!" என்றாள் - சற்று முன்னர் இருந்த பதட்டம் சிறிதுமின்றி.



"ஹாய், நீரஜ்! என்ன பண்ணிக்கிட்டு இருக்கே?"



"ஹனி டார்லிங்! என்ன ஆச்சரியம்! இந்த நேரத்துக்கு எனக்கு போன் பண்ணணும்னு தோணிச்சே! ம்ம்ப்ச்சு!" என்று செல்போனை சுவாமிநாதனாக பாவித்து ஒரு போலியான அழுத்த முத்தம் வைத்தாள்.



"ஓ… நோ பேபி! ஐ'ம் நாட் இன் ரொமான்டிக் மூட்! ஒரு விஷயம் சொல்லத்தான் போன் பண்ணினேன். இன்னும் அரைமணி நேரத்தில் வீட்டுக்கு வர்றேன். உனக்கு வெளியே போற ஐடியா இருந்தா கொஞ்ச நேரம் தள்ளி வெச்சுட்டு வீட்ல இரு!"



"என்ன சுவாமி, நீ வர்றதா இருந்தா எமன் கிட்ட இருந்து கூட தப்பிச்சு வந்துடுவேன். என்ன விஷயம் சுவாமி!"



"முக்கியமான ஒருத்தர் இறந்துட்டார். அவருக்கு ஒரு மலர் மாலை சாத்திட்டு வீட்டுக்கு வந்து குளிச்சுட்டு மறுபடியும் ஆபீஸ் போகணும்."



"சரி, நான் வீட்லதான் இருக்கேன்." என்று இணைப்பை துண்டித்து விட்டு, சற்று முன் வந்த செல்போன் பற்றி யோசித்தாள்.



திரையைத் தொட்டு அலட்சியமாய் தேய்த்து அந்த எண்ணைப் பார்த்தாள். கடைசி மூன்று எண் 420 தானே? ஃபோர் டிவெண்டி! ஏதோ ஒரு ஐபிசி செக்சன் தானே இது?



அவனுக்கு போன் செய்யலாம் என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டு விக்ரமுக்கு செய்தாள்.



"ஹலோ விக்ரம்!" என்றாள் நீரஜா.



***



"ஹலோ! நான் விக்ரம் தான் பேசறேன். நீங்க?" என்றான் விக்ரம்.



விக்ரம், விக்ரமில் நடித்த கமல்ஹாசன் போல் இருந்தான். ஜிம் பாடி! அடக்கமாக வெட்டப்பட்ட தலைமுடி. கண்களில் ஒரு கத்தியின் கூர்மை இருந்தது. அந்த கூர்மை, இளம் பெண்களின் இதயத்தைக் குத்துவதாக இருந்தது. கருகரு மீசைக்கு கீழே நிகோடின் படிந்த உதடுகள். சிவந்த வெல்வெட் நிற உடலுக்கு அடர்த்தியான நீல கலரில் ஜீன்ஸும், சாம்பல் நிற டெனிம் ஷர்டும், ஷர்ட்டை ஜீன்சுக்குள் நுழைத்து, பெல்ட்டும் அணிந்திருந்தான்.



"ஹலோ! யாரு?" என்றான் மீண்டும்.



"என் பேர் அநாவசியம். நான் சொல்லப் போற விஷயம் தான் அவசியம்!"



"நீங்க யாரு? நீங்க என்ன பேசறீங்கன்னு புரியலை!"



"விஷயத்தைச் சொன்னதும் புரியும்!"



"விஷயமா? என்ன விஷயம்?"



"நீரஜாவுக்கும் உனக்கும் இருக்கிற உறவைப் பத்தி சொன்னா, எனக்கும் நீரஜாவுக்கும் அண்ணன் தங்கை உறவுதான்னு சொல்ல மாட்டேன்னு நினைக்கிறேன்."



"ஏய்! யார் நீ? யார்கிட்ட என்ன பேசிட்டிருக்கே?"



"விக்ரம் கிட்ட, விக்ரமுக்கும் நீரஜாவுக்கும் இடையில் இருக்கிற அக்மார்க் கள்ளக் காதல் பத்தி பேசிட்டு இருக்கேன். கரெக்டா?"



"யூ… யூ...ப்ளடி…"



"பாஸ்டர்ட் னு திட்டப் போறியா? அதுக்கெல்லாம் உனக்கு அருகதையே இல்லை."



"டேய்! இது உன் நெம்பர்தானே? இப்பவே… இப்பவே உன்னைக் கண்டுபிடிச்சு… உன்னை என்ன செய்யறேன் பார்!"



"ஹாஹாஹா!"



"எதுக்குடா சிரிக்கிற, ப்ளடி…!"



"என் நெம்பரை போலீஸ்ல கொடுத்து, 'சார்! சார்! என்னை ஒருத்தன் போன் பண்ணி மிரட்டுறான் சார்!'னு ஒண்ணாங் கிளாஸ் பையன் மாதிரி சொல்வேன்னு நினைச்சேன். என்ன ஜெர்க் அடிக்குதா? ரொம்ப நியாயமானவன்தானே நீ? போலீசுக்கு போக வேண்டியதுதானே? எதுக்கு என்கிட்ட அநாவசியமா பேசிட்டிருக்க? போனை நீயே கட் பண்ணிட்டு உன் வேலையைப் பாக்க வேண்…"



போனை துண்டித்தான் விக்ரம்.



காலை பத்து மணிக்கு மனநிலையை குலைக்கும் விதமாக இப்படி ஒரு போன் வந்ததை அவன் விரும்பவில்லை.



இரவு முழுக்க இன்பத்தில் தோய்ந்திருந்த நினைவுகள், காலை வரை இருந்தது. எழுந்து சூடாக ஒரு காபி அருந்தி விட்டு, குளித்து விட்டு, வெளியே கிளம்பத் தயாரான போது, இப்படி ராத்திரி இன்ப நினைவுகளைக் கலைக்கும் விதமாக போன் செய்தவன் யாராக இருக்கும்?



அவன் சொன்னது சரிதான்! துல்லியமான போன் நம்பர் இருக்கிறது. அதை கொடுத்தால் போலீஸ் மூளை பத்து நிமிடத்துக்கு எல்லாம் அவன் ஜாதகத்தை எடுத்து, இன்ன பெயர்; இத்தனை வயது; இந்த விலாசம்; இந்த ராசி; இந்த நட்சத்திரம் என்று அனைத்தையும் கண்டுபிடித்து சொல்லி விடுவார்கள்.



நான் ஏன் போகவில்லை?



என்னால் போக முடியாது. ஏனெனில், எல்லாமே அடக்கமானது. எல்லாமே ரகசியமானது. அப்படியானால்? அப்படியானால்? அவன் அந்த ரகசியங்களைத் தெரிந்து வைத்திருக்கிறான். தெரிந்து கொண்டுதான் போன் செய்கிறான். அவன் குரலில் அபரிமிதமான திமிர் இருந்தது. உன் கழுத்துக்கு ஒரு சென்டிமீட்டர் அருகாமையில் கத்தியை வைத்து இருக்கிறேன் என்ற பயமுறுத்தும் தோரணை இருந்தது.



அப்படியானால்? அவன் என்னிடம் இருந்து எதையோ எதிர்பார்க்கிறான்.



டீப்பாயின் மீதிருந்து பாக்கெட்டை எடுத்தான் விக்ரம். ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான். புகையை ஆழமாக இழுத்து பிறகு மெதுவாக வெளியே விட, கனமற்ற புகை மிதந்து, சுவற்றில் இருந்த ஆடையற்ற ஒரு பெண்ணின் ஓவியத்தை நோக்கி நகர்ந்தது. அந்த அபார்ட்மெண்ட்டின் இரண்டாம் மாடியில் திறந்திருந்த ஜன்னல் வழியாக நகரும் மேகங்களை பார்த்துக் கொண்டு யோசித்தான், விக்ரம்.



அவனுக்கு என்ன தெரியும் என்று எனக்குத் தெரிய வேண்டும் என்று நினைத்தான். நானே ஜித்தன்! எனக்கே கண்ணாமூச்சி ரே ரே விளையாட்டு காட்றானா? கோபத்தில் அவன் மூக்கு நுனி சிவந்து, உதடுகள் நடுங்கின. யார் அவன்? அவனை எப்படி தெரிந்து கொள்வது?



அதற்கு ஒரே வழி அவனுக்கு மீண்டும் போன் செய்வதுதான்.



தன் செல்போனை எடுத்தான். அதே நேரம் நீரஜாவின் அழைப்பு வந்தது. ரசிக்கும் மனநிலையற்ற நிலையில் இனிய இசையை காற்றில் சிதற விட்டது செல்போன்.‌ மூளைக்குள் நியூரான்களின் ஜாலத்தில் நினைவு நரம்புகளின் வழியாக அடிவயிற்றுக்கு கீழ் ஓர் உணர்வு பரவியது.‌ ஒரு புன்சிரிப்பை உதிர்த்தான்.‌ செல்போன் திரையை நீரஜாவாக பாவித்து செல்லமாக தேய்த்து, "ஹலோ!"



"ஏண்டா துரோகி!" என்று எரிமலையில் இருந்து கிளம்பிய வார்த்தைகள் வந்து விழுந்தது - செல்போனைத் தேய்த்த அடுத்த வினாடி.



விக்ரம் அதிர்ந்து, "என்ன நீரஜா?" என்றான்.



"பிளாக் மெயிலா பண்ற? நான் எவ்வளவு நம்பினேன், உன்னை?"



விக்ரம் சர்வமும் அதிர்ந்தவனாய், "பிளாக்மெயிலா? என்ன சொல்றே நீரஜா?" என்றான்.



"வாயை மூடு விக்ரம்! உனக்கு பணம் வேணும்னா என்கிட்ட கேட்டிருக்கலாம் இல்ல? எதுக்கு நம்ம ரெண்டு பேருக்குள்ளே இருக்கிற உறவை வெச்சு பிளாக்மெயில் பண்ற?"



"நீரஜா, நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளு!"



"சொல்லுடா, இன்னும் என்ன சொல்ல போற? வாழ்க்கையில சில உன்னதமான சந்தோஷங்களை நான் உன்கிட்ட இருந்து தான் அனுபவிச்சேன். என்னுடைய பலவீனத்தை பயன்படுத்திக் கிட்ட இல்ல?"



"நீரஜா, ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்! நான் ஒண்ணும் உன்னை பிளாக்மெயில் பண்ணலை!"



"நடிக்காதே விக்ரம்! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எவனோ ஒருத்தன் எனக்கு போன் பண்ணி, நம்ம ரெண்டு பேரைப் பத்தியும் பேசறான். நம்ம ரெண்டு பேரைப் பத்தி நம்ம ரெண்டு பேரைத் தவிர வேற யாருக்கு தெரியும்? நீ தானே ஆள் வெச்சு எனக்கு போன் பண்ண சொன்னே? சொல்லு விக்ரம், எதுக்கு இப்படி பண்ண?"



"அய்யோ நீரஜா! நான் உனக்கு போன் பண்ண சொல்லல! எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை! நான் யாரையும் ஏற்பாடு பண்ணலை! முதல்ல நான் சொல்றதை நம்பு!"



"இன்னும் என்ன நீ சொல்றதை கேட்கணும்? இவ்வளவு சீப்பா நடந்துக்குவேன்னு…"



"நீரஜா, உனக்கு வந்த போன் எனக்கும் வந்தது!"



நீரஜா திகைத்தாள். இது என்ன புதுக் குழப்பம்! குழப்பமா; இல்லை, விக்ரம் குழப்புகிறானா? அவளுக்கு புரியவில்லை.



"நீ என்ன சொல்ற விக்ரம்?" என்றாள்.



"உன் கிட்ட பேசின ஆள் என்கிட்டயும் போன்ல பேசினான்!"



"என்ன பேசினான்? நீ என் கிட்ட பொய் சொல்லலையே? விக்ரம், உண்மையை சொல்லு!"



"அய்யோ, நீரஜா! உன் கிட்ட நான் எதுக்கு பொய் சொல்லணும்?"



"சரி, போன்ல அவன் என்ன சொன்னான்?"



"உனக்கும் எனக்கும் இருக்கும் உறவைப் பத்தி எனக்கு தெரியும்னு சொன்னான். உனக்கு போன் பண்ணவன்தான் எனக்கும் போன் பண்ணி மிரட்டுற மாதிரி பேசினான். உன்கிட்ட என்ன சொன்னான், நீரஜா?"



"என் கிட்டயும் அதையேதான் சொன்னான்!"



"வேற எதுவும் சொல்லலையா?"



"வேற எதுவும் சொல்லலை! அப்போ நீ இல்லையா? நீ ஏற்பாடு பண்ணலையா?"



"முட்டாள் நீரஜா! நான் எதுக்கு இப்படி ஒரு ஏற்பாட்டை செய்யணும்? நீ என் தங்கம்டி! கோல்ட்! நான் கேட்டா நீ கொடுக்கப் போறே! நான் எதுக்கு உன்னை பிளாக்மெயில் பண்ண போறேன்? தங்க முட்டையிடும் வாத்தை எவனாவது கழுத்தை அறுப்பானா?"



"என்னது, தங்க முட்டையிடும் வாத்தா? அப்போ... நீ என்னை முட்டை போடுற வாத்தாதான் நினைச்சுட்டு இருக்கியா?"



"ஏய்! ஏய்! செல்லம்! நான் ஒரு உதாரணத்துக்குச் சொன்னேன்! கோவிச்சுக்காதே, நீரஜா. உனக்கு புரியணும்ங்கிறதுக்காக அப்படி சொன்னேன்."



"சரி! சரி! அப்போ, நீயும் இல்லன்னா வேற யாரா இருக்கும்?"



"நம்ம ரெண்டு பேரையும் தெரிஞ்ச யாரோ ஒருத்தனா தான் இருக்கணும்."



"நம்ம ரெண்டு பேரையும் தெரிஞ்சவன்னா யாரு? எனக்கு ஒரே குழப்பமா இருக்கு. பயமா இருக்கு."



"என்னைக் கொஞ்சம் யோசிக்க விடு நீரஜா! திரும்பவும் அவன் போன் பண்றானான்னு பார்க்கலாம்."



"சரி, அவன் மறுபடியும் எனக்கு போன் பண்ணா நான் என்ன செய்யறது? நானா ஏதாவது உளறி வைக்க கூடாது இல்லையா? அதுக்கு தான் கேட்கிறேன். அவன் மறுபடியும் போன் பண்ணா நான் என்ன பேசட்டும் அவன்கிட்ட?"



"நான் கொஞ்சம் யோசிக்கிறேன் நீரஜா. முதல்ல நம்மைப் பற்றி அவனுக்கு என்ன தெரியும்? எவ்வளவு தெரியும்னு நமக்கு தெரியணும். நம்ம கிட்டயிருந்து அவன் என்ன எதிர்பார்க்கிறான்னு தெரியணும்.‌ அதுவரைக்கும் நாம பொறுமையா இருந்துதான் ஆகணும்."



"என்ன எதிர்பார்க்க போறான்? பணம்தான் அவன் குறிக்கோளா இருக்கும்!"



"பார்க்கலாம், மறுபடியும் அவன் போன் பண்ணட்டும்!"



"மறுபடியும் போன் பண்ணுவான்னு என்ன நிச்சயம் விக்ரம்?"



"பண்ணுவான்; அவனுக்குத் தேவை இருக்குன்னா நிச்சயம் போன் பண்ணுவான்!"



"அது வரைக்கும் வெயிட் பண்ணலாம்ங்கிறியா?"



"ஆமாம்."



நீரஜா பேசிக் கொண்டிருக்கும் போதே கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.



"சரி, 'அது' வருது! நான் அப்புறம் பேசுறேன்."



நீரஜா போன் இணைப்பைத் துண்டித்தாள்.



***



நீரஜா 'அது' என்று விக்ரமிடம் போனில் சொன்ன அது என்பது சுவாமிநாதன்.



சுவாமிநாதன் ஆறடிக்கு சற்று குறைவான உயரம் இருந்தான். போஷாக்குப் போதாத ஒரு குழந்தை போல இருந்தான். ஓவல் முகத்தில் பெண் தன்மை இருந்தது.



அவனுடன் நடந்து வந்த உதவியாளனிடம், "தங்கராஜ்! நீ இங்கேயே வெயிட் பண்ணு. அரை மணி நேரத்தில் நான் வந்துடறேன்!" என்று சொல்லிவிட்டு பால்கனியில் நின்று அவன் காரிலிருந்து இறங்கி வருவதை பார்த்து கொண்டிருந்த நீரஜாவிடம், "என்ன நீரஜா, காலையிலேயே ரொம்ப சந்தோசமா இருக்க போலிருக்கு!" என்றான்.



"அப்படியா தெரியறேன்?" என்றாள் நீரஜா, மேல் மாடியில் இருந்து.



"ஆமாம். முகம் ரொம்ப பிரைட்டா இருக்கே! சாக்லேட்டை பார்த்த குழந்தை மாதிரி!"



"ஹாஹாஹா!" என்று சிரித்தாள் நிரஜா. "ஆமா, யாரோ ஒருத்தர் இறந்து போனதா சொன்னீங்க; சாவுக்குப் போயிட்டு வந்துடீங்களா?"



"போயிட்டு தான் வர்றேன். பீரோவிலிருந்து எனக்கு வேற ட்ரஸ் எடுத்து வைக்கிறியா? நான் பின்பக்கமா பாத்ரூம் போய் குளிச்சிட்டு வர்றேன்."



"சரி." என்று பால்கனியிலிருந்து மறைந்தாள் நீரஜா. சுவாமிநாதன் வீட்டின் பக்கவாட்டு சந்தில் நடந்து பின்புறம் இருந்த குளியல் அறைக்குச் சென்றான்.



இந்தக் குளியலறை பிரத்யேகமாக இந்த மாதிரி அசம்பாவிதமான சம்பவங்களுக்குப் பிறகு உபயோகப்படுத்துவதற்கு என்று வீடு கட்டும்போதே தீர்மானித்து கட்டப்பட்டது. எப்போதாவதுதான் அவர்களுக்கு உபயோகப்படும். மற்ற நேரங்களில் வீட்டில் வேலை செய்பவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.



சாமிநாதன் குளித்துவிட்டு பின்புறமாக தனது பங்களாவிற்குள் நுழைந்தான். நுழைந்ததும் மாடிக்குப் போகும் உள் படிக்கட்டுகள் வழியாக மேலேறி, ஹாலில் நடந்து, வரிசையான அறைகளில் ஒன்றில் நுழைந்தான்.



விஸ்தாரமான அறையில் வேறு மூன்று அறைகளுக்கான வாசல்கள் இருந்தன. அவன் நுழைந்த முதல் அறை வரவேற்பறை போன்றிருந்தது. சுவரோரம் ஆட்களை புதைத்துக் கொள்ளும் சோபாக்கள் போடப்பட்டு இருந்தது. சுவாமிநாதன் மற்றொரு அறையில் நுழைந்தான். அது அவனின் படுக்கையறை. அங்கே கட்டிலில் நீரஜா காத்திருந்தாள்.



"இந்த கலர் டிரஸ் பரவாயில்லையா?" என்றாள். கிரே கலர் பேண்ட்டும், மெருன் கலர் சர்ட்டும் கட்டிலின் மீது இருந்தன. "உங்க நிறத்துக்கு இது நல்லா இருக்கும்." என்றாள். அவனைப் பார்த்தாள். சிவந்த உடலில் சதைப்பற்று குறைந்தவனாக, ஆனால், தசைகள் இறுகி, நரம்புகள் முறுக்கி, சிக்ஸ் பேக்ஸ் அவனுக்கு இயற்கையாகவே வடிவமைந்திருந்தது.



"ஓகே. நீ எதை செலக்ட் பண்ணாலும் பெஸ்ட்டாதான் இருக்கும். உனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லையே?" என்று நீரஜாவை பார்த்தான் சுவாமிநாதன்.



"எதுக்கு ஆட்சேபனை?"



"டிரஸ் மாத்திக்கிறதுக்கு." என்று இடுப்பில் கட்டியிருந்த லுங்கியை தளர்த்தினான்.‌ அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவளை நெருங்கினான். ஐஸ்கட்டி போல் மின்னிய கண்களுடன் நீரஜா அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவளை அணைத்தான் சுவாமிநாதன்.



"சுவாமி! ப்ளீஸ், இப்ப வேணாம்!" என்றாள் நீரஜா. அவள் உடல் ஒரு மரக்கட்டை போல் விறைத்திருந்தது.



"ஏன்?" நீரஜாவின் நீண்ட கழுத்தில் தன் முகம் புதைத்து வாசனை பிடித்தான். காதோரத்தில் லேசான வியர்வையில் தலைமுடிகள் ஒட்டியிருந்தன. காதில் அணிந்திருந்த தங்க கம்மல் அவனை ஆட்சேபிக்கிறதா, அனுமதிக்கிறதா என்று தெரியாமல் மெதுவாக ஆடியது.



"தங்கராஜ் உங்களுக்காக கீழே வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கான்." என்றாள்.



"யார் தங்கராஜ்?"



"உங்க பி. ஏ."



"அவன் கிடக்கிறான்!" என்று நீரஜாவின் மென்மையான கன்னங்களை தன் இரண்டு கைகளாலும் ஏந்திக் கொண்டு, தேனில் ஊறிய பலாச்சுளை போல் இருந்த அவள் உதடுகளை நெருங்கியபோது, இன்டர்காம் ஒலித்தது.



நீரஜா அவனை செல்லமாக பிடித்து தள்ளினாள். "போங்க, உங்க பி.ஏ.வா தான் இருக்கும்." அடைப்பு கொண்ட குழாயைத் திறக்கும் போது தண்ணீர் சுர்ரென்று சீறிச் சிதறுவது போலச் சிரித்தாள்.



"கிராதகன்!" என்றான் சுவாமிநாதன். நீரஜாவின் சிரிப்பு இன்னும் அதிகமானது. இன்டர்காம் பட்டனைத் தட்டினான்.



"சார், டைமாச்சு! பதினொன்றரை மணிக்கு உங்களுக்கு ஒரு மீட்டிங் இருக்கு. ஞாபகப்படுத்தச் சொன்னீங்க!"



"நாசமாப் போச்சு!"



"சார்! பர்டன் மீ!"



"நாசமாப் போச்சு! வர்றேன்யா!"

இ. காம். பட்டனைத் தட்டி அதன் வாயை மூடினான். உடையை அணிந்து கொண்டான். கிளம்பும்போது செல்போன் ஒலித்தது. எடுத்து, "ஹலோ!" என்றான். கண்ணாடி பார்த்து தலை முடியை சீப்பால் இடது கையால் வாரிக் கொண்டான்.



"ஹலோ! விக்ரமா?" என்றது செல்போன்.



"உங்களுக்கு யார் வேணும்?" கண்ணாடியில் தன் மீசையை நீவி விட்டுக் கொண்டான். அவனையே நீரஜா பார்த்துக் கொண்டிருந்தாள் - கண்ணாடியில்.



"நீங்க விக்ரம் தானே?"



"நான் விக்ரம் இல்லை; சுவாமிநாதன். உங்களுக்கு யார் வேணும்?"



விக்ரம் பெயரை கேட்டதும் நீரஜாவின் முகம் கறுத்தது.



"நான்சென்ஸ்!" என்றான் சுவாமிநாதன். கண்ணாடி வழியாகத் தலை சீவிக் கொண்டே நீரஜாவை பார்த்தான்.



நீராஜாவுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. தண்ணீரில் விழுந்த பூனைக்குட்டி மாதிரி பயத்துடன் அவனைப் பரிதாபமாக பார்த்தாள் நீரஜா. அவசர புன்னகை ஒன்றை தன் உதடுகளில் அணிந்து கொண்டாள்.



"யார்?" என்றாள். குரலில் நடுக்கத்தை மறைத்துக் கொண்டு.



"யாரோ விக்ரமாம்! என்ன விக்கிறோம்? எதை விக்கிறோம்? ம்?"



"நீங்கதான் சொல்லணும்; எதை விக்கிறோம்னு."



நீரஜா போலியாகச் சிரித்தாள்.



"எதையும் விக்கலை. உங்க அப்பா - என் மாமா - எனக்கு கொடுத்த கோடிக்கணக்கான சொத்தை பாதுகாப்பா பார்த்துகிட்டாலே போதும். நீ என்ன சொல்ற நீரஜா?"



"நான் என்னங்க சொல்ல போறேன்? உங்கள் நிர்வாகத் திறமைக்கு நீங்க எதையும் விக்க மாட்டீங்க!"



"ஓகே, டார்லிங்! நான் கிளம்பறேன். கீழே ஒரு ராட்சசன் எனக்காக காத்திருக்கான். அப்புறம் டார்லிங்! நீ ஏன் ஆபிசுக்கு வரக்கூடாது?"



"அதான் நீங்களே பார்த்துக்கறீங்களே, அப்புறம் நான் எதுக்கு?"



"இது என்ன கேள்வி? நீதான் நீரஜா சீஃப்! கம்பெனியோட எழுபது சதவீத ஷேர் ஹோல்டர் நீதான். முக்கியமான ஃபைல்ல எல்லாம் நீதான் கையெழுத்துப் போடணும்."



"அதான் தேவையாய் இருக்கும் போதெல்லாம் ஃபைல்ஸ்ஸை வீட்டுக்கு எடுத்துட்டு வந்து கையெழுத்து வாங்கிக்கறீங்களே! நான் வேற எதுக்கு வரணும்?"



"என்னதான் ஃபைல்ல கையெழுத்து போட்டாலும் அப்பப்போ ஆபீசுக்கு வந்து கம்பெனி எப்படி போகுதுன்னு பார்க்கணும் நீரஜா!"



"இந்த கம்பெனி, ஆபீஸ், ஒர்க்கர்ஸ், இதெல்லாம் பார்க்கறதுக்கு தான் நீங்க இருக்கீங்களே, அப்புறம் நான் எதுக்கு? இந்த ஆபீஸ் தலைவலி எல்லாம் என் தலையில வைக்காதீங்க! கிளம்புங்க, முதல்ல!"



"மகாராணியின் உத்தரவு!" என்று நாடக பாணியில் தலைவணங்கி விட்டு, நீரஜா சிணுங்க சிணுங்க அவள் உதடுகளை மென்று விட்டு, மாடிப்படி இறங்கினான்.



நீரஜா, 'அப்பாடா!' என்று பெருமூச்சு விட்டு நெஞ்சில் கை வைத்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்தாள். கொஞ்ச நேரத்தில் அவள் இதயம் குபுக்கென்று வெளியே துள்ளி குதிப்பது போல் அடித்துக் கொண்டது.



தன்னை சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு, அந்த செல்போன் உரையாடலை மீண்டும் மனதில் ஒரு முறை ரீவைண்ட் செய்து பார்த்தாள்.



யார் அவன்? முதலில் எனக்கு போன் செய்தான்; நான் குழம்பிப் போய் விக்ரம்தான் ஒருவேளை இப்படி பிளாக்மெயில் செய்கிறானோ என்று விக்ரமுக்கு போன் செய்தால்… அவன் விக்ரமுக்கும் போன் செய்திருக்கிறான்.



இப்போது, நேரடியாய் சுவாமிக்கு போன் செய்து, "விக்ரமா?" என்று கேட்கிறான்.



அவன் நோக்கம்தான் என்ன? எனக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே சுவாமியும் நானும் ஒன்றாய் இருக்கும் போது, சுவாமிக்கு போன் செய்து, "விக்ரமா பேசுவது?" என்று கேட்டு… "நான் விக்ரம் இல்லை! உங்களுக்கு யார் வேணும்?" என்று சுவாமியின் வாயாலேயே விக்ரம் பெயரை உச்சரிக்க வைத்து… அதை நான் கேட்குமாறு சரியாக திட்டம் போட்டு ஒருவன் போன் செய்கிறான் என்றால்...



சுவாமி இப்போது வீட்டுக்கு வந்தது தெரிந்த யாரோ ஒருத்தன்தான் போன் செய்திருக்க வேண்டும்.



யாராய் இருக்கும்? போன் செய்தவனின் திட்டம் இப்போது நீரஜாவுக்கு மெல்ல புரிய ஆரம்பித்தது.



விக்ரமுக்கும் எனக்கும் உள்ள ரகசிய உறவைத் தெரிந்த யாரோ ஒருவன் முதலில் எனக்கு போன் செய்தான்.‌



போன் செய்து என்ன சொன்னான்?



கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தை பற்றி சொல்ல ஆரம்பித்தான். அதன் மூலம் விக்ரம் என்ற பெயரை கேட்டதும் நான் அதிர்ச்சி அடைய வேண்டும் என்று அவன் நினைத்தான்.



அவன் நினைத்தது சரிதான். விக்ரம் பெயரை கேட்டு நான் உண்மையில் அதிர்ந்துதான் போனேன்.‌



அப்புறம்?



விக்ரமுக்கும் எனக்கும் உள்ள உறவைப் பற்றி சொன்னான்.



நான், "விக்ரம் யார்?" என்று கேட்டேன்.



அவன், "பாசாங்கு பண்ண வேணாம்; விக்ரம் யாருன்னு தெரியாதுன்னா நீயே போனை கட் பண்ணிட்டு வேலையைப் பாரு"ன்னு சொன்னான்.



நான் போன் இணைப்பைத் துண்டித்தேன்.



அவனுடைய நோக்கம், நான் மீண்டும் அவனுக்கு போன் செய்து அவனுடன் பேச வேண்டும் என்பது. ஆனால், நான் அவனுக்கு போன் செய்யவில்லை. விக்ரமுக்கு போன் செய்தேன்.



அதற்குள் அவன், விக்ரமுக்கும் போன் செய்திருக்கிறான். விக்ரமும் போனைத் துண்டித்து விட்டான். அதனால் கோபம் கொண்டு சுவாமியும் நானும் ஒன்றாக இருக்கும் போது விக்ரமைப் பற்றி கேட்டு, சுவாமிக்கு போன் செய்கிறான்.



அப்படியானால் அவன் நோக்கம் நானும் விக்ரமும் திரும்பவும் அவனுக்கு போன் செய்து பேச வேண்டும் என்பதுதான். என்னை பயமுறுத்துவதுதான்!



சரி, அவனுக்கு போன் செய்து பேசினால் அவன் என்ன பேசுவான் என்று யோசித்தாள் நீரஜா. என்ன பேசுவான்?



உங்களைப் பற்றிய ரகசியம் எனக்குத் தெரியும் என்பான். எனக்குத் தெரிந்த ரகசியத்தை உன் கணவன் சுவாமிநாதனுக்கு சொல்லி விடுவேன் என்பான். சொன்னால் என்ன நடக்கும்? சுவாமியால் நிச்சயம் இதை தாங்கிக் கொள்ள முடியாது. சுவாமி உடனே உணர்ச்சிவசப்பட கூடியவன்.‌ சமூகத்தில் அந்தஸ்து உள்ளவன்.‌ அந்த அந்தஸ்தை காப்பாற்ற கடுமையாக போராடுபவன். மனைவி இன்னொருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருக்கிறாள் என்று தெரிந்த உடனே அவன் எப்படி ரியாக்ட் பண்ணுவான் என்று சொல்ல முடியாது. சுவாமி ஒன்றும் புத்தனோ, இயேசுவோ, காந்தியோ கிடையாது. முற்போக்குவாதியும் கிடையாது.



அப்படியா? நீ விக்ரமைதான் விரும்புகிறாயா? சரி, அவன்தான் உனக்கு வேண்டுமென்றால், டிவோர்ஸ் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டு கொடுக்கிறேன்; நீ போய் அவனுடன் சந்தோசமாக வாழ்க்கை நடத்து என்று சொல்லி அனுப்பி வைக்கும் அளவுக்கு முற்போக்குவாதி அல்ல.



சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு, கோபப்பட்டு, தன் அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடும். என்ன வேண்டுமானாலும் என்றால்? என்ன வேண்டுமானாலும்!



கொலையும் கூட செய்யக்கூடும்!



நான் கொலையுண்டு செத்துப் போவதில் நிச்சயம் எனக்கு விருப்பமில்லை என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.



விக்ரமிடம் இதற்கு ஏதாவது யோசனை இருக்கும் என்று நினைத்தாள். தன் செல்போனை எடுத்து விக்ரமை அழைத்தாள். அவன் வேறு யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான். நீரஜாவுக்கு எரிச்சலாக வந்தது. சிறிது நேரம் கழித்து அவனே கூப்பிட்டான்.



போனை எடுத்ததுமே, "விக்ரம்! யார் கிட்ட பேசிக்கிட்டு இருந்தே?" என்றாள் கோபமாக.



"ஏன், என்னாச்சு நீரஜா? மறுபடியும் அவன் போன் பண்ணினானா?"



"எனக்கு பண்ணலை; சுவாமிக்கு போன் பண்ணி இருந்தான்." "



"சுவாமி? யூ மீன் உன் ஹஸ்பண்ட்?"



"ஆமாம்!"



"போன் பண்ணி என்ன சொன்னான்?"



"ஒண்ணும் சொல்லலை. 'நீங்க விக்ரம்தானே?ன்னு கேட்டான்.



"அப்புறம்?"



"விக்ரமா உங்களுக்கு யார் வேணும்னு சுவாமி திருப்பி கேட்டார். அவன் மறுபடியும், 'விக்ரம்தானே நீங்க?'ன்னு கேட்டான். சுவாமி, 'இல்லை; ராங் நம்பர்'னு போனை வெச்சுட்டார்."



"அப்படியா? அப்புறம், சுவாமி என்ன சொன்னார்?"



"நான்சென்ஸ்!'னு சொன்னார். ஏதோ ஒரு ராங் கால்னு தான் அவர் நினைச்சுகிட்டு இருக்கார். நான்தான் ரொம்ப பயந்துட்டேன். எங்கே அவன் சுவாமி கிட்ட ஏதாவது உளறி வைக்க போறானோன்னு. இப்ப என்ன பண்றது விக்ரம்? இதை இப்படியே நீட்டிக்க விடறதுல எனக்கு விருப்பம் இல்லை. இதுக்கு ஏதாவது ஒரு முடிவு கட்டணும் விக்ரம். நீ ஏதோ யோசிக்கிறன்னு சொன்னியே?"



"ஆமா. எனக்கும் ஒரு யோசனை இருக்கு நீரஜா."



"என்ன யோசனை?"



"அவன் செல்போன் நம்பரை வெச்சு அவனைக் கண்டுபிடிக்க முடியுமான்னு யோசிக்கிறேன்."



"நாம ஒண்ணும் போலீஸ் இல்லையே! அவங்கன்னா, பத்து நிமிஷத்துல போன் நம்பரை வெச்சு, ஆதார் எடுத்து, கண்டுபிடிச்சுடுவாங்க. தனி நபரால அப்படி செய்ய முடியுமா?"



"நம்பரை வெச்சு ஏர்டெல்லா, ஜியோவா, பிஎஸ்என்எல்-லா, கண்டு பிடிக்கலாம். ஆனா, அட்ரஸை கண்டுபிடிக்கணும்னா அந்த செல்போன் கம்பெனியில் தெரிஞ்சவங்க யாராவது இருந்தால்தான் முடியும்! அப்படியே தெரிஞ்சவங்க இருந்தாலும் ஏன், எதுக்குன்னு ஆயிரம் கேள்விகள் கேட்பாங்க. நம்மகிட்ட சரியான பதில் இல்ல."



"அப்படின்னா என்னதான் செய்யப் போறீங்க? அவனுக்கே திரும்பவும் போன் பண்ணி உனக்கு என்னதான் வேணும்னு கேட்டுடலாமா?"



"எனக்கும் ஒரு யோசனை அப்படித்தான் பேசிப்பார்க்கலாம் னு தோணுது."



"சரி, பேசிப் பாருங்க. என்னதான் சொல்றான்னு தெரிஞ்சுக்கலாம்."



"சரி பண்றேன்."



"பார்த்து பேசு விக்ரம்! வார்த்தையை அளந்து பேசு! முதல்ல அவனுக்கு நம்மைப் பத்தி என்னென்ன தெரியும்னு நமக்குத் தெரியணும். அவன்கிட்ட பேசிட்டு எனக்கு கால் பண்ணு."



"சரி, நீரஜா!"



"எனக்கென்னவோ ரொம்ப பயமா இருக்கு விக்ரம்!"



"எதுக்கு பயப்படற?"



"சுவாமிக்கு தெரிஞ்சா என்னாகும்னு என்னால கற்பனை பண்ணி கூட பார்க்க முடியலை!"



"அப்படியெல்லாம் ஒண்ணும் ஆகாது நீரஜா. நீ மனசைப் போட்டு குழப்பிக்காம இரு!"



"இல்லை, விக்ரம். அவனோட மிரட்டலை சாதாரணமா எடுத்துக்க முடியாது. ஒரு வேளை சுவாமிக்கு தெரிஞ்சா…"



"நீ அநாவசியமா பயப்படற நீரஜா. நமக்கு போன் பண்ணவன் அவ்வளவு சீக்கிரம் உங்க ஹஸ்பண்ட் கிட்ட சொல்ல மாட்டான்."



"எப்படி சொல்ற விக்ரம்?"



"ஆமா நீரஜா. அவன் நம்மகிட்ட இருந்து எதையோ எதிர்பார்க்கிறான். அவனுக்கு அவன் காரியம் ஆகற வரைக்கும் எதையும் சொல்ல மாட்டான். நான் அவனுக்கு போன் பண்ணி பேசறேன். அதுவரைக்கும் நீ அமைதியா இரு, என்ன?"



"சரி, விக்ரம்."



அழைப்பை துண்டித்தாள் நீரஜா.



***



அழைப்பு துண்டிக்கப்பட்டதும் ஒரு வித பதட்டத்துடன் அந்த நம்பருக்கு போன் செய்தான் விக்ரம்.



"நீங்கள் டயல் செய்த எண் தற்போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது!" என்று ஒரு பெண்ணின் கம்ப்யூட்டர் குரல் ஒலித்தது.
 

Author: gavudham
Article Title: ஒரு ரகசிய குற்றம் 2
Source URL: Gk Tamil Novels-https://gktamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.