சரவெடி
1
“என்ன சொல்ற?” முருகன் அதிர்ந்தான்.
“பயப்படாத . இதை மட்டும் நீ செஞ்சு முடிச்சா உனக்கு ஒரு பெரிய தொகை கிடைக்கும்.” தாஸ் சூயிங்கம் மென்றபடி சொன்னான்.
“நினைச்சுப் பார்க்கவே பயமா இருக்கு”
“தெளிவா திட்டம் போட்டு பண்ணப் போறோம். யாருக்கும் எந்த சந்தேகமும் வராது. இது ஒரு ஆக்சிடென்ட். அவ்வளவுதான் புரியுதா ?”
“எனக்கு புரியல”
“என்ன உன்னோட சந்தேகம்?”
“உள்ள மொத்தம் 24 பேர் இருக்காங்க.”
“ம்”
“ஏதாச்சும் வில்லங்கம்னா அந்த 24 பேரும் செத்துருவாங்க”
“சரி அப்படியே நடந்தாலும் உன் மேல எப்படி சந்தேகம் வரும்? நீ தான் பண்ணேன்னு யாருக்கு தெரியப் போகுது? “
“எனக்கு பயமா இருக்கு என்னை விட்டுடு”
“இல்ல முருகா இந்த வேலையை உன்னால் மட்டும் தான் முடிக்க முடியும் வேற யார் உள்ள வந்தாலும் சந்தேகம் வரும். நீ இங்க ஒர்க் பண்ற. அதனால நல்லா யோசிச்சுப் பாரு”
“இவ்வளவு கஷ்டப்பட்டு இப்படி ஒரு விஷயத்தை பண்ணனும்னு என்ன இருக்கு?”
“விஷயம் ரொம்ப சிம்பிள் ஐசியுல இருக்கிறவங்கள்ல ரெண்டு பேர் எந்த காரணத்தைக் கொண்டும் எந்திரிச்சிடக் கூடாது”
தாஸ் சொல்ல முருகன் அதிர்ந்தான்.
“என்ன சொல்ற? யார் அந்த ரெண்டு பேர்? எதுக்காக அவங்க பிழைக்கக் கூடாது? இதுக்கு பின்னாடி யார் இருக்காங்க?”
முருகன் பதட்டமாய் கேட்க தாஸ் கேலியாகச் சிரித்தான்.
“முருகா நீ இவ்வளவு கேள்வி கேட்கிறது ரொம்ப ஆபத்தானது. வேலையை முடிச்சிட்டு காசு வாங்கிட்டு கொஞ்ச நாள் கண் காணாம போய் இரு. முடியாதுன்னு சொன்னாலோ இல்ல வேற யார்கிட்டயாவது சொல்லி எல்லாரையும் உஷார் பண்ணலாம்னு நினைச்சாலோ நீ இந்த ஹாஸ்பிடல்ல விட்டு வெளியே போன அடுத்த நிமிஷமே உயிரோடு இருக்க முடியாது. நான் சொல்றத நீ சாதாரணமாக எடுக்கக்கூடாது. ஏன்னா இதுக்கு பின்னாடி ரொம்ப பெரிய நெட்வொர்க் இருக்கு”
தாஸ் சொல்ல முருகன் குழம்பினான்.
“இது ரொம்ப பாவம் ப்ளீஸ் வேண்டாம்”
முருகன் கெஞ்ச தாஸ் முகம் கடுமையானது.
“முருகா உனக்கு ஸ்கூலுக்கு போற ஒரு பொண்ணு இருக்கு கரெக்டா ?”
தாஸ் கேட்க முருகன் முகம் மாறியது.
“என்ன சொல்ற?”
“ஸ்கூலுக்குப் போற பொண்ணு ஸ்கூலுக்கு மட்டும் போயிட்டு வந்தா ரொம்ப நல்லது. மார்ச்சுவரிக்குப் போகணுமா வேண்டாமான்னு நீ பார்த்துக்க. நான் வேற என்ன சொல்றது?” தாஸ் சொல்ல முருகன் பயமாய் பார்த்தான். கேட்டான்.
“இப்ப நான் என்ன பண்ணனும்?”
“ஐசியுக்குள்ள போறப்ப ஆக்சிஜன் சிலிண்டர் எல்லாத்தையும் ஓபன் பண்ணிடு.”
தாஸ் சொல்ல முருகன் மௌனமாய் நின்றான்.
“முருகா”
“ம்”
“நான் ஏதாச்சும் சொன்னா நீ ம் சொல்லணும் .இல்லன்னு வை என்ன நடக்கும்னு உனக்கே தெரியும். புரியுதா ?”
“ம்”
“உள்ள இருக்குற ஆக்சிஜன் சிலிண்டர் எல்லாமே திறந்து விடணும்”
“ம்”
“ஆக்சிஜன் தன்னால எரியாது. ஆனா ஏதாச்சும் எரிஞ்சா தீ மளமள ன்னு பரவும். அங்க இருக்குற எல்லாருமே செத்து சாம்பலாய்டுவாங்க”
“ம்”
“அது எப்படி நடக்கும்னு பார்க்கிறயா?”
“ம்”
“ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் மட்டும் நாங்க கொண்டு வந்து வைக்கிறதா இருக்கும். அதுல இருக்கிறது ஒரிஜினல் ஆக்சிஜன் கிடையாது. கன்டாமினேட்டட் கேஸ். அது ஈசியா பத்திக்கிட்டு எரியும். மத்த ஆக்சிஜன் சிலிண்டர் ல இருந்து லீக் ஆகுற ஆக்சிஜன் எல்லா இடத்திலும் தீயை பரவ வைக்கும் .நினைச்சுப் பார்க்கற நேரத்துக்குள்ள அங்க இருக்கறவங்க எல்லாரும் செத்துப்போயிடுவாங்க புரியுதா ?”
“ம்”
“என்ன ஒரு மாதிரி குழப்பமா பாரக்கற என்ன சொல்லு?”
“ஒருவேளை நீ நினைக்கிற மாதிரி ஐசியுல இருக்கிற எல்லாருமே சாகல. கொஞ்சம் பேர் மட்டும் தான் சாகுறாங்கன்னு வை . அப்ப என்ன பண்ணுவே?”
“எங்க பாஸ்க்கு தேவை அங்க இருக்கற ரெண்டு பேர் சாகணும். அவ்வளவுதான் செத்துப் போனவங்கள்ல அந்த ரெண்டு பேர் இருந்தாங்கன்னா எங்களுக்கு ஓகே”
“ஆமா உங்க பாஸ் யாரு?”
“அது உனக்கு தெரிய வேண்டாம்”
“வேல முடிஞ்சதும் நீ காசு தருவேன்னு எப்படி நான் நம்பறது?”
“மொபைல் வச்சிருக்கியா?”
“ம்”
“உன்னோட பேங்க் அக்கௌன்ட் லிங்க் பண்ணிருக்கியா?”
“பண்ணிருக்கேன்”
“உன்னோட அக்கவுண்ட்ல எவ்ளோ இருக்குன்னு பாரு”
தாஸ் சொல்ல முருகன் பார்த்தான். அதிர்ந்தான்.
“ரொம்ப ஜாஸ்தியா இருக்கு”
“நீ செய்யப் போற வேலைக்குத்தான்”
தாஸ் சொல்ல அயர்ந்த முருகன் கேட்டான்.
“அது எப்படி நான் ஒத்துக்குவேன்னு ஏற்கனவே தெரியுமா? காசு போட்டு வச்சிருக்கீங்க”
“நீ கண்டிப்பா ஒத்துக்குவேன்னு தெரியும். எதுக்குன்னு தெரியுமா?”
முருகன் மௌனமாய் தாஸைப் பார்க்க அவன் தொடர்ந்தான்.
“உனக்கு உன்னோட பொண்ணுன்னா உயிர்”
***
ஒரு பின்னிரவு வேளையில் …
ஐசியு என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அறையின்
கண்ணாடி கதவை தள்ளிக் கொண்டு முருகன் உள்ளே நுழைந்தான்.
பேஷண்ட்கள் அனைவரும் மயக்கத்தில் இருந்தனர்.
நர்ஸ் யாரும் இல்லை என்பதை உறுதி செய்தவன் ஒரு ஆக்சிஜன் சிலிண்டரின் அருகில் சென்றான். சுற்று முற்றும் பார்த்தபடி வால்வைத் திறந்துவிட்டான்.
இருந்த அனைத்து சிலிண்டர்களையும் வாழ்வைத் திறந்து விட்ட பின் மூலையில் தனியாக இருந்த சிலிண்டரின் வால்வைத் திறந்துவிட்டான். உடனடியாக வெளியே வந்து கண்ணாடிக் கதவை சாத்தினான்.
“இப்ப எல்லா கேஸும் திறந்து விட்டா அது எப்படி பத்திக்கும்?”
“நீ வெளியில வந்ததுக்கு அப்புறம் தரையில் நல்லா பாரு. ஒரு ப்ளூ கலர் வயர் இருக்கும். ஒரு பிளாக் கலர் ஒயர் இருக்கும். அது பக்கத்துல ஒரு ஸ்விட்ச் போர்டு இருக்கும். அந்த சுவிட்ச் ஆன் பண்ணா உள்ள ஐசியூல ரெண்டு ஒயரும் கனெக்ட் ஆகும். ஸ்பார்க் வரும். இது ரொம்ப கவனமா செய்யணும். ஏன்னா உள்ள வெடிச்சுப் பரவற தீ வெளியிலயும் பரவலாம்”
தாஸ் சொல்ல முருகன் அதிர்ந்தான்
“அப்படின்னா?”
“பதறாத முருகா வெளியில ஓடி வர்றதுக்கு உனக்கு டைம் நிறையவே இருக்கு. உன் பொண்ணுக்கு அப்பாவா ரொம்ப வருஷம் நீ இருக்கலாம். புரியுதா ?”
“ம்”
முருகன் இரண்டு ஒயர்களும் எங்கே என்று தேடினான்.
அவை பார்வைக்கு கிடைத்தன. அருகில் ஒரு ஸ்விட்ச் போர்டு இருக்க முருகன் விரல்கள் நடுங்கின.
மனதை திடப்படுத்திக்கொண்டு அந்த ஸ்விட்சை ஆன் செய்தான், உள்ளே டொம் என்று பெரிய சத்தத்துடன் தீப்பற்ற முருகன் அவசரமாய் ஓடி வந்து வெளியே விழுந்தான்.
தீ நன்றாக கொளுந்து விட்டு எரிந்தது.
***
“மாநகரில் மருத்துவமனையில் பற்றிய தீ. எட்டு பேர் எரிந்து சாம்பல்.
மின் கசிவு காரணமா? போலீஸ் விசாரணை”
செய்திகள் ஓடிக் கொண்டிருக்க முருகன் பயமாய் பார்த்தான்.
“அப்பா” மகள் அர்ச்சனா அருகில் வந்து அமர்ந்தாள்.
“சொல்லுப்பா”
“அவங்க பாவம் பா”
“ம்”
“ஏன்பா அவங்க யாரையும் காப்பாத்த முடியல நம்மளால ?”
அர்ச்சனா கேட்க முருகன் ஒன்றும் சொல்லாமல் அவள் முகத்தைப்
பார்த்தான்.
***
“சார் நான்தான் வாசுதேவன் பேசறேன்”
தொழிலதிபர் வாசுதேவன் மிகுந்த பவ்யத்தோடு பேசிக் கொண்டிருந்தார்.
“டிவில நியூஸ் பார்த்தீங்களா? நம்ம கைங்கரியம்தான்”
“யாருக்கும் எந்த சந்தேகமும் வராதே?”
“இல்ல சார் தாஸ் கரெக்டா பிளான் பண்ணி கச்சிதமா முடிச்சிட்டான்”
“இப்ப கொஞ்சம் நிம்மதியா இருக்கு அந்த ரெண்டு பேரும் சாகல ஐ சி யுல தான் இருக்காங்கன்னு தெரிஞ்சதும் ரொம்ப பதட்டமா இருந்துச்சு”
“நீங்க எதுக்கும் கவலைப் படாதீங்க சார் நான் இருக்கேன்.”
“தேங்க்ஸ் வாசுதேவன். ஆனா அவன் இன்னும் உயிரோடத்தான் இருக்கான்”
“யார் சார்?”
“புதிய உதயம் ரிப்போர்ட்டர் அருண்”
“அவன் கையில கிடைச்சா அவனையும் முடிச்சிடலாம் சார்”
“அது அவ்வளவு ஈஸி இல்ல வாசுதேவன்”
“சார் நீங்க எதுக்காகவும் கவலைப்பட வேண்டாம் என்கிட்ட இருக்கிறவங்க எல்லாரும் காரியத்தை ரொம்ப கச்சிதமா முடிப்பாங்க. எப்படி நடந்துச்சுன்னு யாருக்கும் எந்தவித சின்ன சந்தேகமும் வராது”
“ரொம்ப நல்லது”
மொபைலில் பேசி முடித்த வாசுதேவன் தன் எதிரே நின்ற தாசை ஏறிட்டார்.
“தாஸ்”
“சார்”
“பாஸ் ரொம்ப பயப்படறார்”
“ஏன் சார்?”
“ரிப்போட்டர் அருண் வெளியில இருக்கிற வரைக்கும் அவருக்கு நிம்மதி இருக்காது”
“புரியுது சார்”
“அருண சீக்கிரம் மேல அனுப்பி வைக்கணும் புரியுதா ?”
“யெஸ் சார்”
“ அவன் வெளியில இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் நமக்கு ஆபத்து ஜாஸ்தி ஆயிட்டே இருக்கு”
“புரியுது சார்
***
“அடப்பாவி அப்படின்னா அந்த ஹாஸ்பிடல்ல நடந்தது விபத்து கிடையாதா?”
சங்கர் கேட்க அருண் இல்லை என்று தலையாட்டினான்.
“உன்னோட வெர்ஷன் என்ன?”
“அந்த ஹாஸ்பிடல்ல இருக்கிற ஐ சி யுல பேஷண்ட்ஸ் கொஞ்சம் பேர் உயிரோட திரும்ப வரக்கூடாதுன்னு யாருக்கோ அவசியம் இருந்திருக்கு.
“
“அப்படி ஒருவேளை நீ சொல்ற மாதிரி யாருக்காவது அவசியம் இருந்தா அவங்க அவனை மட்டும் தானே கொல்வாங்க? இப்படி ஹாஸ்பிட்டல் மொத்தமும் கொளுத்துவாங்களா என்ன?”
“சங்கர் நீ கேக்கறது ரொம்ப லாஜிக்கல். ஆனா இவங்க மோசமான கிரிமினல்ஸ் . இவங்க மாட்டிக்க கூடாதுன்னா எந்த எக்ஸ்ட்ரீம்க்கும் போவாங்க.”
“எப்படி சொல்ற?”
“எனக்கு உண்மை தெரிஞ்சிடுச்சுன்னு அவங்களுக்குத் தெரியும். அதனால நான் எங்க இருக்கேன்னு தேடிட்டு இருப்பாங்க”
“ஆனா உனக்கு எல்லாமே தெரியுமா?”
“நடந்தது விபத்து இல்லை ஐசியுல இருக்குற கொஞ்சம் பேர கொல்றதுக்காக நடந்த ஒண்ணு”
“அது யாருன்னு தெரியுமா?”
“ தெரியாது.”
“இப்ப என்ன பிளான் ?”
“அந்த ஹாஸ்பிடலுக்கு போய் என்கொயரி பண்ணனும்”
“அவங்க உன்னை தேடிட்டு இருக்காங்கன்னு சொல்ற. அந்த ஹாஸ்பிடலுக்கு போவேன்னும் சொல்ற. ஏன்?”
சங்கர் கேட்க அருண் புன்னகைத்தான்.
“எனக்கு என்னோட உயிரை விடவும் என்னோட ஃபேஷன் தான் ரொம்ப முக்கியம்”
சொன்ன அருண் வீட்டில் இருந்து வெளியே வந்து தன் பைக்கை ஸ்டார்ட் செய்தான்.
கொஞ்ச தூரம் சாலையில் பயணித்த பின் தான் தெரிந்தது ஒரு கார் ஒன்று அவனை நீண்ட நேரம் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது என்பது.
அருண் சட்டென்று மெயின் ரோட்டில் இருந்து இடதுபுறம் திரும்பி மண்சாலையில் பயணித்தான். காரும் அதே சாலையில் சட்டென்று திரும்பியது. வேகத்தை அதிகப்படுத்தியது.
அருண் தன்னைப் பின் தொடர்ந்த காரில் வந்தவர்களிடம் மாட்டாமல் ஹாஸ்பிடலை அடைந்தான்.
உள்ளே செல்லலாம் என்று பைக்கை பார்க் செய்துவிட்டு காரிடாரில் நடந்த அருண் எதார்த்தமாக வாசலைப் பார்க்க அவனைப் பின்தொடர்ந்த கார் வாசல் வழியாக உள்ளே நுழைந்தது.
2 comments
Nice
Story super