கோவை.
துடியலூர் முருகன் தியேட்டரில் இருந்து சற்றுத் தள்ளி இரண்டாவது மாடியில் டாக்டர் சந்திரசேகர் மனநல மருத்துவர் என்று வெளியில் போர்ட் வைக்கப்பட்ட ஏசி அறையில் தன் முறைக்குக் காத்திருந்தான் முரளி.
இன்றைய தேதிக்கு தமிழ்நாட்டிலிருந்து இந்திய நாட்டிற்கு பெருமை தேடித் தரப்போகும் கிரிக்கெட் வீரன். ஆனால் அவன் முகம் கவலையாக இருந்தது. எங்கே விட்டால் அழுது விடுவானோ என்று தோன்றியது. அதற்குக் காரணம் ஹேமா.
கொஞ்ச நாள் முன்புதான் ஹேமா அவனுக்கு அறிமுகமானாள். கொஞ்ச நாள் பழக்கத்திலேயே மனதிற்குள் ஒட்டிக்கொள்ள முரளி ஹேமாவை காதலித்தான். ஒரு நல்ல நாள் பார்த்து அதை வெளிப்படையாக அவளிடம் சொல்ல அவள் சிரித்தாள்.
“முரளி எனக்கு உங்களை பிடிக்கும் ஆனால் அது லவ் இல்ல ஜஸ்ட் புரிஞ்சுக்கங்க “
ஹேமா அப்படி சொல்வாள் என்று முரளி எதிர்பார்க்கவில்லை. முரளிக்கு பெண் ரசிகைகள் அதிகம் அதனால் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையுடன் இருந்தான். எப்படியும் அவள் தன்னை மறுக்க மாட்டாள் என்று யோசித்தவன் அவள் அப்படி சொன்னதும் உள்ளே நொறுங்கிப் போனான்.
“ப்ளீஸ் ஹேமா என்னோட மனசுக்குள்ள நான் உன் கூட வாழத் தொடங்கிட்டேன் என்னை அக்செப்ட் பண்ணிக்க ப்ளீஸ் “ கெஞ்சிய முரளியை அவள் புறக்கணித்தாள்.
அவன் அவள் மொபைலுக்கு மீண்டும் மீண்டும் அழைக்க அவனை பிளாக் செய்தாள். முரளி கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்தவன் போல் மாறினான் தன் அறையிலேயே முடங்கினான் தன்னை யாராவது சந்திக்க வந்தால் சந்திக்காமல் தவிர்த்தான். ஹேமாவின் நினைவிலேயே தவித்தான். அவன் படும் கஷ்டம் பார்த்து அவன் நண்பன்
“முரளி சொல்றேன்னு தப்பா நினைக்காத உனக்கு ஒரு நல்ல எதிர்காலம் காத்திட்டிருக்கு. இந்த மாதிரி நேரத்துல நீ இப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறது சரி இல்லை நீ எதுக்கும் ஒரு சைக்யாட்ரிஸ்ட்டப் பார்த்தா என்ன?” என்று கேட்க அது முரளியை அசைத்துப் பார்த்தது. சரி போகலாம் என்று முடிவு எடுத்தவன் சற்று தூரமாக யாராவது இருந்தால் நல்லது என்று இணையத்தில் பார்த்தான். டாக்டர் சந்திரசேகர் முகவரி கிடைக்க வந்து விட்டான்.
“மிஸ்டர் முரளி” ஒரு பெண் அழைக்க எழுந்தான்.
“உள்ளே போங்க”
சென்றான்.
டாக்டர் சந்திரசேகர் முரளியை ஏறிட்டார். கண்களால் தன் எதிரிலிருந்த சேரைக் காண்பிக்க முரளி அமர்ந்தான்.
“ யெஸ்”
“சார் என் பேர் முரளி. கிரிக்கெட்டர்”
“நைஸ்”
“எனக்கு கொஞ்ச நாளா மனசு சரியில்ல”
“காரணம்?”
“ஒரு பொண்ணு”
“ம்”
“கொஞ்ச நாள் முன்னாடி எனக்கு அறிமுகம் ஆனா . என்னன்னு தெரியல அவளை எனக்கு ரொம்ப பிடிச்சது அவ தான் என்னோட உலகம்னு நெனச்சேன். ஆனா அவ என்னை அப்படிப் பார்க்கலைன்னு அவ சொல்றப்ப என்னால் அதைத் தாங்க முடியல. “
“இது ஜஸ்ட் லவ் ஃபெயிலியர் தானே?”
“சார் ஜஸ்ட்ங்ற வார்த்தையை தயவு செய்து யூஸ் பண்ணாதீங்க”
“ஸாரி… சொல்லுங்க மிஸ்டர் முரளி”
“அவ மேல நான் வச்சிருந்த காதல் எனக்கு மட்டும் தான் தெரியும் அத யாராலயும் புரிஞ்சிக்க முடியாது”
“ஓகே ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்”
“என்னக் காப்பாத்துங்க டாக்டர். எங்க எப்படி ஏதாவது பண்ணிடுவேனோன்னு டவுட்டா இருக்கு “
சொன்ன முரளி சட்டென்று தன் தலையை பிடித்துக் கொண்டான்.
“முடியல டாக்டர்”
“இட்ஸ் ஓகே நான் உங்களுக்கு ஒரு டேப்லட் தரேன் அதை சாப்பிடுங்க சாப்பிட்டுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க ஓகேவா?”
“யெஸ் டாக்டர்”
டாக்டர் சந்திரசேகர் உள்ளே இருந்து ஒரு சிறிய பெட்டியை எடுத்தார். அதைத் திறந்து உள்ளே இருந்து ஒரு மாத்திரையை எடுத்தார்.
“இந்தாங்க மிஸ்டர் முரளி இதை இப்ப சாப்பிடுங்க”
முரளி டாக்டர் கொடுத்த மாத்திரையை வாங்கி விழுங்கினான். ஐந்தாவது நிமிடத்தில் தலை சுற்ற ஆரம்பித்தது.
மூளை தாறுமாறாக கட்டளைகள் பிறப்பிப்பது போல் உணர்ந்தான்.
‘ஹேமா உன்ன விட்டுட்டு போயிருக்கக் கூடாது அவ தப்பு பண்ணிட்டா’
‘போனாப் போறா அவ தான் இந்த உலகத்திலேயே பொண்ணா என்ன?’
‘ இல்ல அவ என்னோட குழந்தை அவ இல்லாம நான் இல்லை. நான் இந்த உலகத்தில் இருக்கக்கூடாது நான் இப்பவே சாகணும்’
முரளி தடுமாறினான் தன் தலையைப் பிடித்துக் கொண்டான்.
“ஐயோ டாக்டர் இப்ப எனக்கு எதுவுமே முடியல ஹெல்ப் பண்ணுங்க”
கத்திய முரளியை டாக்டர் சந்திரசேகர் அமைதியாகப் பார்த்தார்.
“முரளி”
“ம்”
“உங்களுக்கு என்ன ஆச்சு?”
“ஏதோ ஒரு குரல் என்ன செத்துப் போகச் சொல்லுது”
“அப்ப செத்துப்போயிடுங்களேன்” டாக்டர் கபடமாய் புன்னகைத்தபடி சொல்ல முரளி அதிர்ந்தான்.
“டாக்டர் ப்ளீஸ்”
“சொல்லுங்க முரளி”
“நான் சாகமாட்டேன் எங்க அப்பா அம்மாவுக்கு நான் ஒரே பையன் அவங்களுக்காகவாது நான் சாகாம இருக்கணும் காப்பாத்துங்க டாக்டர் “
“இல்ல முரளி உங்களால திரும்பவும் இயல்பு வாழ்க்கைக்கு மாற முடியாது நீங்க காதலிச்ச பொண்ணு மேல வெச்ச பாசம் உங்களை திரும்பவும் இயல்பான வாழ்க்கைக்கு மாத்தாது. அப்படி நீங்க திரும்ப மாறிட்டீங்கன்னா நீங்க உங்க ஹேமா மேல வச்சிருக்கிற காதல் பொய்னு ஆயிடும்”
டாக்டர் முடிக்குமுன் முரளி கத்தினான்.
“இல்ல டாக்டர் தயவு செய்து அப்படி சொல்லாதீங்க.”
“அப்படித்தான் சொல்லுவேன்”
“என்னோட ஹேமா மேல வெச்சிருக்கற காதலை நான் ப்ரூவ் பண்றதுக்கு நான் என்ன டாக்டர் பண்ணனும் சொல்லுங்க?”
முரளி கேட்க டாக்டர் அவனை உன்னிப்பாய் பார்த்தார்.
“சொன்னா செய்வீங்களா?”
“நிச்சயமா”
“அப்ப செத்துப்போயிடுங்க வீட்ல போனதுக்கப்புறம் முதல் வேலையா தற்கொலை பண்ணி சாகறீங்க “
டாக்டர் சொல்லிவிட்டு முரளியை ஏறிட அவன் தீர்க்கமான குரலில் சொன்னான்.
“கண்டிப்பா டாக்டர்” அவன் குரலில் உறுதி தெரிந்தது.
“ஓகே அப்ப நீங்க கிளம்பலாம்” சொன்னவர் அவனை அழைத்தார்.
“முரளி”
“சார்”
“ஒருவேளை சாகறதுக்கு பயமா இருந்தா இப்ப கொடுத்த மாத்திரை இன்னொன்னு தர்றேன் அதை வீட்டில் போய் சாப்பிட்டுட்டு செத்துப் போயிடுங்க “
“யெஸ் சார்”
அன்றிரவு எல்லா தொலைக்காட்சிகளிலும் தலைப்புச் செய்திகள் ஓடிக்கொண்டிருந்தன.
கிரிக்கெட் வீரர் முரளி தற்கொலை. அணியில் இடம் பெறாத காரணமா? காதல் தோல்வியா? அல்லது வேறு ஏதாவது காரணமா போலீசார் விசாரிக்கின்றனர்.
டாக்டர் சந்திரசேகர் தன் கிளாசில் இருந்த விஸ்கியை ஒரு வாய் குடித்தார்.
“ஹேமா” அழைக்க முரளி காதலித்த அந்த ஹேமா அவரைப் பார்த்து புன்னகைத்தாள்.
“சார்”
“சும்மா சொல்லக்கூடாது உன்னோட திறமையே திறமை. பாராட்ட எனக்கு வார்த்தை இல்லை “
“இதுல என்ன சார் இருக்கு?”
“பாஸ் கூட தயங்கினார் இது நடக்குமா இது முடியுமா நிறைய தயங்கினார். ஆனா நான்தான் அவருக்கு எடுத்துச்சொல்லி சமாளிச்சேன். அவர் நேத்து ரொம்ப சந்தோஷமா பேசினார். அனேகமா உனக்கு ஏதாவது பரிசு கொடுத்தாலும் கொடுப்பார் “
சந்திரசேகர் சொல்ல ஹேமா புன்னகைத்தாள். கேட்டாள்.
“அடுத்தது யார் சார்?”
“இன்னும் கவர் வரல”
“சார்”
“சொல்லு ஹேமா”
“முரளி கூட பழகச் சொன்னீங்க. அவன் என்னைக் காதலிக்கிற மாதிரி பண்ணனும். அவன் அவனோட காதலை என் கிட்ட சொல்றப்ப முடியாதுன்னு சொல்லிட்டு போகணும்னு சொன்னீங்க. இப்ப அவன் தற்கொலை பண்ணி செத்துப் போயிட்டான். இதெல்லாம் எதுக்காக சார்?”
“ஹேமா உனக்கு காரணம் வேணுமா பணம் வேணுமா?”
“எனக்கு பணம் தான் சார் வேணும் காரணம் எதுவா இருந்தாலும் பரவால்ல “
“வெரி குட் அதனாலதான் உன்னை இந்த டாஸ்க்க்கு செலக்ட் பண்ணோம். “
“ பண்ணோம்னா?”
“நாங்க . அதாவது எங்க நெட்வொர்க்”
“என்ன சார் ஏதோ பெரிய ரேஞ்சுல சொல்றீங்க”
“ஆமா ஹேமா இது ஒரு பெரிய நெட்வொர்க் எங்களோட நோக்கம் நிச்சயமா யாரும் நினைக்கிறது கிடையாது. இன்னும் சொல்லப்போனா நாங்க எதுக்காக இதெல்லாம் பண்றோம் எதை நோக்கி போறோம்னு எங்களோட பாஸ்க்கு மட்டும் தான் தெரியும் வேற யாருக்கும் எதுவும் தெரியாது பாஸ் சொல்றத செய்யறவங்க தான் எல்லாருமே “
டாக்டர் சந்திரசேகர் சொல்ல ஹேமா தலையசைத்தாள்.
***
ஹோட்டல் ரோலக்ஸ் .
அறை எண் 412 .
“சார்” நீரஜ் அந்த வட இந்தியனை அழைத்தான்.
அவன் நீரஜைக் கேள்வியாகப் பார்க்க நீரஜ் கேட்டான்.
“எலக்ஷனுக்கு இன்னும் ரெண்டு மாசம் தான் இருக்கு அதுக்குள்ள இங்க ஏதாவது பண்ணி ஜெயிக்க முடியும்னு நம்பறீங்களா சார்?”
வட இந்தியன் உடைந்த தமிழில் சொன்னான்.
“நிச்சயமா முடியும் தமிழ்நாட்டுல ஜாதி கலவரமோ மதக்கலவரமோ எடுபடாதுன்னு எங்க எல்லாருக்கும் தெரியும். அதனால இங்க நாங்க வேற ஸ்ட்ரேட்டஜி வச்சிருக்கோம் “
“என்ன சார் சொல்றீங்க?”
“தமிழ்நாட்டுல ஆம்பளைங்களுக்கு சினிமா பிடிக்கும் இல்லன்னா கிரிக்கெட் பிடிக்கும். பொம்பளைங்களுக்கு சீரியல் பிடிக்கும். அதனால ..”
“அதனால…?”
“இந்த ஃபீல்டுல இப்ப புதுசா மேல வர்றவங்களத் தூக்கணும். அவங்க எல்லாரும் தற்கொலை பண்ணிக்கிட்டா தமிழ்நாட்டில் குழப்பமாகும். அதுமட்டுமில்ல ஒவ்வொரு மாவட்டத்திலயும் குறைஞ்சது நூறு யங்ஸ்டர்ஸ் தற்கொலை பண்ணிக்கணும்.”
வட இந்தியன் குரூரப் புன்னகையுடன் சொல்ல நீரஜ் அதிர்ந்தான்.
“சார் இதெல்லாம்..”
“எதுக்குன்னு கேக்கறியா? இங்க எங்களோட சித்தாந்தம் எடுபட மாட்டேங்குது. இங்க ஆட்சி செய்றவங்களை இப்படி எல்லாம் பண்ணி ஏதாவது குழப்பி தொந்தரவு செஞ்சாதான் எங்க கட்சிய நாங்க இங்க வளர்க்க முடியும்.”
“கட்சியை வளர்க்கறதுக்கு இப்படி எல்லாம் கண்டிப்பா செய்யணுமா சார்? ஜனங்க பாவம் இல்லையா?”
“ஜனங்க மேல எங்களுக்கு இரக்கம் நிச்சயமா இருக்கு அதனால தான் எலக்சன் அன்னிக்கு ஓட்டுப் போடறதுக்கு ஒவ்வொருத்தருக்கும் அவங்க எதிர்பார்க்கிறத நாங்க கொடுக்கறோம் “
“சார்”
“ம்”
“ஒருவேளை மாட்டிக்கிட்டா இங்க கம்பி எண்ற மாதிரி வந்துடும் சார் “
“நீரஜ் இந்த மாதிரி நாங்க பண்ண போறோம்னு தெரிஞ்சுக்கறதே ரொம்ப கஷ்டமான விஷயம். அதத் தெரிஞ்சுகிட்டாலும் நாங்க எப்படி பண்ணப் போறோம்னு கண்டுபிடிக்கவே அவனுக்கு ஒரு ஜென்மம் ஆயிடும். அதுக்கப்புறம் எங்க மேல நடவடிக்கை எடுப்பானா?
செம காமெடி நீரஜ் . எங்களப் பிடிக்கிறதுக்கு இங்க எவனுமே கிடையாது “
***
“அவசரப்பட்டு சொல்லாதடா” ஆர்த்தி தன் சித்தி பையன் ரகுவை செல்லமாய் மிரட்ட அவன் சிரித்தான்.
“அக்கா ட்ரெயின் எடுக்கப் போறாங்க மாமா ட்ரெயின் மிஸ் பண்ணப் போறார் “ ரகு சொல்ல ஒரு மெல்லிய தவிப்பு ஆர்த்தியின் மனதிற்குள் ஓடியது.
ரயிலின் நீண்ட ஹாரன் அது புறப்படப் போவதை முன்னறிவிப்பு செய்ய ஆர்த்தி தவித்தாள்.
ரயில் கிளம்பியது. மெதுவாய் ஊர்ந்த ரயில் வேகம் எடுத்த அந்த நொடியில் ரயிலுடன் கூடவே ஓடி வந்து. சட்டென்று தாவி கம்பார்ட்மென்டில் ஏறினான் விஷால்.
தொடரும்.