வந்தனா கதவைத் திறக்க சதீஷ் நின்றிருந்தான்.
“உள்ள வரலாமா?”
அவன் கேட்க வந்தனா ஒன்றும் பேசாமல் மௌனமாய் வழி விட்டாள்.
“எப்படி இருக்கீங்க மேடம்?”
“ம் என்ன புதுசா மேடம்னு?”
“நீங்க தான் பெரியாளாச்சே? சொல்லாம கட் பண்ணிட்டுப் போயிடுவீங்க. திரும்ப வருவீங்கன்னு நைட் ஃபுல்லா தூங்காம காத்திருக்கிறது நான் தானே?”
“ஸாரிப்பா”
வந்தனா சொல்ல அவள் முகத்தைப் பார்த்தான்.
“வந்து உனக்கு பிடிக்கலைன்னா முடியாதுன்னு சொல்லியிருக்கலாம். நான் ஒண்ணும் உன்னை கம்பெல் பண்ணலை.”
“நான் உன்ன அந்த மாதிரி நினைக்கல.”
“என்னை நம்பச் சொல்றியா இத?”
“ப்ளீஸ் சதீஷ் புரிஞ்சுக்கோ”
“சரி அப்படியே இருந்தாலும் அதை சொல்லிட்டுப் போயிருக்கலாமில்ல? திடீர்னு கட் பண்ணிட்டுப்போனா நாம பழகினதுக்கு என்ன அர்த்தம் இருக்கு?”
“ஸாரிப்பா”
“சரி விடு”
“ம்”
“நான் போறேன்”
“சதீஷ்”
“ம்”
“காஃபி சாப்பிடறியா?”
“எதுக்கு சிரமம்?”
“இதுல ஒண்ணும் சிரமமில்ல. இரு.”
சதீஷ் சோபாவில் உட்கார்ந்தான். வந்தனா கிச்சனுக்குள் சென்று பாலை சுட வைத்தாள். எதார்த்தமாகத் திரும்பி சதீஷைப் பார்க்க அவன் அவளையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
அவளுக்குள் மீண்டும் பரவசம் பரவத் தொடங்கியது. அவள் முகம் அவளையும் மீறி மலர்ந்தது.
காஃபி கலந்தவள் கொண்டுபோய் அவனிடம் கொடுத்தாள்.
வாங்கிக்கொண்ட சதீஷ் அவளையே இமைக்காமல் பார்த்தான்.
வந்தனாவிற்கு உள்ளே பதறியது.
“என்னாச்சுப்பா?”
“டெய்லி எக்ஸர்சைஸ் பண்ணுவியா?”
“ம் யோகா அரை மணி நேரம். ஏன் கேட்டே?”
“செம்ம்மயா இருக்கே.” அவன் ம்க்கு அழுத்தம் கொடுத்து சொல்ல அவள் முகம் சிவந்தது.
“நிஜமா நல்லா இருக்கேனா என்ன?”
“என்ன கேள்வி இது? உன்னை ரசிக்க என் வாழ்நாள் பத்தாது. தவமிருந்து கடவுள் கிட்ட வரம் கேட்பேன்.”
“என்னன்னு?”
“இந்த ஜென்மத்துல இந்த தேவதையை நான் பார்த்துட்டேன் அதனால எனக்கு அடுத்து வர்ற ஜென்மம் எதுவும் வேண்டாம். அந்த வாழ்நாட்களையும் இந்த ஜென்மத்திலயே கொடுத்திருங்க கடவுளேன்னு.”
சதீஷ் அவளைப் பார்த்து சொல்ல அவள் உள்ளம் நெகிழ்ந்தது.
‘இவனிடம் போய் பேசாமல் இருக்கவேண்டும் என்று நினைத்தேனே. தவறு செய்ய இருந்தேன். ‘
அவனையே பார்த்தாள்.
“வந்து”
“என்னப்பா?”
“என்னாச்சு?”
“ஒண்ணுமில்ல”
“உன் ரெண்டு கண்ணும் ஒரு நிமிஷம் ரோஜாப்பூ மாதிரி இருந்துச்சு. அதான் கேட்டேன்”
“ம்”
“வந்து”
“ம்”
“மிஸ் யூ”
“நானும்”
“நிஜமாவா?₹
“ஆமா”
“அப்போ நான் கேட்டதுக்கு ஒண்ணும் சொல்லாம கட் பண்ணிட்டுப் போயிட்டே?”
“அது தப்புப்பா.”
“ஏன்?”
“எப்படி சரியா வரும்?”
“ஒரு ஆண் தன்னோட நேசத்தை எப்படி காட்டுவான்?”
“எப்படி?”
“அவளை ஆராதிக்கறதன் மூலமாத்தான்.”
“இப்ப நீ அதானே செய்றே?”
“வார்த்தையால மட்டும் இல்ல. எல்லா விதத்திலும் ஆராதிக்க ஆசைப்படுவான்.”
“ம்”
“ஒரு பெண் ஒருத்தன நேசிச்சா என்ன பண்ணனும் தெரியுமா?”
“என்ன பண்ணனும்?”
“தன்னைக் கொடுக்கணும்”
“ம்”
“வந்து”
“சொல்லுப்பா”
“நீ என்னை நேசிக்கிறியா?”
“சதீஷ்” வந்தனாவின் குரல் நடுங்கியது.
“சொல்லு. ஆமாவா இல்லையா?”
“உன்னை பிடிக்கும்பா ஆனா?”
“இந்த சப்பக்கட்டெல்லாம் வேண்டாம் தெளிவா சொல்லு”
“என்ன சொல்லணும்?”
“நான் கிளம்பறேன் வந்தனா”
“என்னாச்சு?”
“ஒண்ணுமில்ல வேலையிருக்கு நான் கிளம்பறேன்.”
சதீஷ் சொல்ல வந்தனா கடுமையான ஏமாற்றத்தை உணர்ந்தாள்.
“ம்” சொன்னவளைப் பார்த்து சதீஷ் சிரித்தான்.
அவள் புரியாமல் பார்க்க சதீஷ் சிரித்தபடியே கேட்டான்.
“இப்போ உன்னோட மூஞ்சி பார்க்கறதுக்கு எப்படி இருக்கு தெரியுமா?”
“எப்படி?”
“பொம்மைய வச்சு விளையாடிட்டிருந்த ஒரு குழந்தைகிட்ட இருந்து பொம்மைய யாராச்சும் பிடுங்கிட்டுப் போனா எப்படியிருக்கும்? அப்படி.”
சதீஷ் சொல்ல மௌனமாய் அவனையே பார்த்தாள்.
“வந்து”
“ம்”
“எனக்கு எந்த வேலையும் இல்ல. நான் இன்னிக்கு ஃப்ரீ தான். நீ எப்ப என் கழுத்தைப் பிடிச்சு தள்ளறியோ அதுவரைக்கும் கூட இருக்கேன்.”
வந்தனா முகம் மலர அவனையே பார்த்தாள்.
“இப்ப சொல்லு வந்து?”
“ம்”
“என்னை நேசிக்கிறயா இல்லையா?”
“ஆமா சதீஷ். உன்னைப் பிடிக்கும் ரொம்பப் பிடிக்கும். நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடி நான் உன்ன பார்க்காமப் போயிட்டேனேன்னு எத்தனையோ முறை நினைச்சிருக்கேன் சதீஷ்.
கல்யாணத்துக்கு முன்னாடி நான் யாரையும் லவ் பண்ணதில்ல.
எனக்கு நிறைய கனவுகள் கற்பனைகள் இருந்துச்சு. யாரையாவது காதலிச்சு அதுல பிரச்னை வந்து பிரியற மாதிரி வந்தா அது என்னால் தாங்க முடியாது. அதுக்காகவே நான் யாரையும் லவ் பண்ணல.
நானும் ஒரு பொண்ணுதான். எனக்கும் எல்லா உணர்ச்சிகளும் இருக்கு. என் ஆசை எதிர்பார்ப்பு எல்லாமே என்னோட ஹஸ்பண்ட் கிட்ட சொல்லணும். அவர் என்னைப் பார்த்து பார்த்து கவனிக்கணும். சின்ன சின்ன விஷயங்கள்ல சர்ப்ரைஸ் கொடுக்கணும். என்கூட சண்டை போடணும். என்ன சமாதானப்படுத்த என்னக் கொஞ்சணும். எங்கயும் என்ன விட்டுக் கொடுக்கக் கூடாது. அவரோட உலகம் நானா இருக்கணும் என்னோட உலகம் அவரா இருக்கணும்.
இப்படி நிறைய கற்பனை வச்சிருந்தேன் சதீஷ். எதுவுமே நடக்கல.
கல்யாணம்னா என்ன? செக்ஸ் மட்டும் வச்சிட்டாப் போதுமா? அதுவும் புருஷனுக்குத் தேவைப்படறப்ப மட்டும்?
பார்த்துப் பார்த்து சமைச்சுக்கொடுப்பேன். சின்னதா ஒரு ஸ்மைல் இருக்காது.
வேண்டியதெல்லாம் செய்வேன். ஆனா?
ஆனா நீ அப்படி இல்ல சதீஷ். முதல் முறை என்னைப் பார்க்கறப்பவே நீ என் முகத்தை மட்டும் பார்க்கல. என் கழுத்துக்குக் கீழே பார்க்கறப்போ உன் கண் விரிஞ்சது. எல்லோரும் சொல்வாங்க. கோபம் வரும்னு. கோபம் வரணும்னு ஆனா உண்மைய சொல்லட்டா? நான் சந்தோஷமா உணர்ந்தேன். என்னை ஒருத்தன் ரசிக்கிறான்னு பெருமையா இருந்துச்சு. என்னடா இவ இப்படி பேசறா ன்னு நினைக்காதப்பா. அவ்வளவு தூரம் நொந்து போயிருக்கேன்.
அடிச்சு உதைச்சாத்தான் கொடுமைங்கிறது இல்ல. ஆறுதலான பேச்சு இல்லாம அழுத்தத்தோட வாழறதும் கொடுமை தான்.
அன்னைக்கு நீ என்கிட்ட வந்து கோவிலுக்கு கூட நானும் வரவான்னு கேக்கறப்ப யார் என்ன நினைச்சாலும் சரின்னு உன் கூட கோயிலுக்குப் போறதுக்கு மனசு ஏங்குச்சி. ஆனா காட்டிக்கல சதீஷ்.
நேத்து நீ என்னை எடுத்துக்கவான்னு கேட்டே.
நான் சரின்னு சொல்லியிருந்தா நான் சந்தோஷப்பட்டிருப்பேன் நீயும் சந்தோஷப்பட்டிருப்பே. ஆனா நாளைக்கு குழந்தையோட வர்ற உன்னோட பொண்டாட்டி சந்தோஷப்படுவாளா?
நான் எல்லாமே யோசிப்பேன் சதீஷ்.
உன்ன மாதிரி புரியாத ஆம்பளைங்கதான் பொம்பளைங்ககிட்ட போய் என்னப் புடிக்குமா புடிக்குமான்னு கேப்பிங்க. ஆனா எங்களுக்குப் புடிக்கும் நாங்க மனசுக்குள்ளேயே வச்சுக்குவோம். நாங்க சாகற வரைக்கும் அது வெளியே தெரியாது. அப்படியே எங்க கூடயே சேர்ந்து அந்த நினைப்பும் செத்துப்போகும்.”
வந்தனா சொல்லி முடிக்க சதீஷ் மலைத்துப் போய் பார்த்தான்.
“சதீஷ்”
“ம்”
“இப்பக்கூட என் ஹஸ்பண்டுக்கு நான் துரோகம் பண்ணக்கூடாதுன்னு எனக்குள்ளே எண்ணம் இருக்கு சதீஷ்.”
“ம்”
“எனக்காக ஒரு சின்ன ஹெல்ப் பண்றியா?”
“சொல்லு வந்து”
“திரும்ப என் முன்னாடி வராதப்பா ப்ளீஸ் “
வந்தனாவின் கண்கள் கலங்கி இருக்க சதீஷ் அவளையே பார்த்தான் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவன் கதவைத் திறந்துகொண்டு வெளியில் சென்றான்.
வந்தனா கதவைத் தாழிட்டாள்.
நீண்ட நாட்களுக்குப்பிறகு அவளுக்கு மனம் விட்டு அழத் தோன்றியது.
அழுதாள்.