அகாலம் 1
1
“வள்ளி”
“வள்ளி”
அழைத்தபடி வந்த கணவன் கருப்பனைப் பார்த்து புன்னகைத்தாள் வள்ளி
“ரெடிங்க”
சொன்னவளைப் பார்த்து புன்னகைத்த கருப்பன் காரில் ஏறினான்.
வள்ளியும் ஏறிக்கொள்ள கார் கிளம்பியது.
“என்னங்க?”
“ம்”
“இந்த இடமாவது நம்ம ரகுக்கு அமையுமா?”
“அமையும்”
“எனக்கு என்னமோ நம்பிக்கை இல்லங்க. வர்றது எல்லாமே ஏதாவது ஒரு காரணத்தால தட்டித்தட்டிப் போகுது.”
“இப்ப நாம போய் பார்க்கிறவர் ரொம்பப் பெரிய ஆள். நீலகண்ட பணிக்கர். அவர் சொன்னா அப்படியே நடக்கும்.”
“ம்”
“நம்பிக்கையோடு இரு வள்ளி. கண்டிப்பா நம்ம ரகுக்கு நல்லது நடக்கும்.”
“நடந்தா தீ மிதிக்கிறேன்னு அம்மன் கோயில்ல வேண்டியிருக்கேன்”
சொன்ன வள்ளியைப் பார்த்த கருப்பன் பெருமூச்சு விட்டான்..ஒரே மகன் ரகுக்கு கடந்த நான்கு வருடங்களாக பெண் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஒன்றும் அமையவில்லை. இத்தனைக்கும் ரகு நன்றாகப் படித்திருக்கிறான் நல்ல வேலையில் இருக்கிறான். பார்ப்பதற்கும் நன்றாக இருப்பான். இருந்தாலும் அவனுக்கு இன்னும் ஒன்றும் அமையவில்லை.
வள்ளிக்குத்தான் அதில் நிறையவே வருத்தம். என்னென்னமோ செய்து பார்த்து விட்டாள். ஏதேதோ வேண்டுதலும் வைத்திருக்கிறாள். இருந்தாலும் ரகுவிற்கு இன்னும் ஒன்றும் அமையவில்லை. அப்போதுதான் கருப்பனின் நண்பன் ஒருவன் நீலகண்ட பணிக்கரைப் பற்றி சொன்னதைக் கேட்டு கருப்பனுக்கு நம்பிக்கை வந்தது. அவரை போய் பார்த்தால் நிச்சயம் ரகுவிற்கு ஏதாவது நல்ல வாக்கு சொல்வார். மனதில் தோன்றக் கிளம்பிவிட்டான்.
வேலந்தாவளம் வர காரின் வேகத்தைக் குறைத்தான்.
“விநாயகர் கோயில் ஒண்ணு வரும். அது ஒட்டியே போனா இடது பக்கத்தில் ஒரு பெரிய ஓலை குடிசை இருக்கும். அங்கதான்.”
நண்பன் சொன்னதை நினைவு படுத்திக் கொண்ட கருப்பன் ஓலைக்குடிசை முன்பு சரியாக வந்தடைந்தான். காரை நிறுத்தி இருவரும் இறங்கிக் கொண்டனர்.
“ஜாதகம் எடுத்துட்டீங்களா?”
“ம்”
கூட்டம் சற்று அதிகமாகவே இருக்க தங்கள் முறை வருவதற்காகக் காத்திருந்தனர்.
***
“ரகு”
“ம்”
“ஐ லவ் யூ”
“மி டூ”
“பார்க்கணும் போலிருக்கு” சொன்ன மைதிலிக்கு இருபத்திரெண்டு வயது. தற்சமயம் ரகுவைத் தீவிரமாய் காதலித்துக்கொண்டிருக்கும் மைதிலி எம் எஸ் சி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள். வீடு சிவாஜி நகர். தமிழ்ப்பெண்தான். ஆனால் பிறந்தது வளர்ந்தது எல்லாமே பெங்களூரு. ரகுவிற்கு மாரத்தஹள்ளியில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை.
“வரட்டுமா?” ரகு கேட்கப் புன்னகைத்தாள்.
“வேண்டாம்”
“ஏன்டி?”
“வீட்ல எல்லாரும் இருக்காங்க.”
“வேணும்னா சொல்லு ஆள வச்சி எல்லாரையும் தூக்கிடலாம்.”
“சீ”
“வேண்டாமா?”
“வேண்டாம்.”
“அப்ப என்னைப் பார்க்க வேண்டாமா?”
ரகு கொக்கி போட மைதிலி எளிதில் வீழ்ந்தாள்.
“சொல்றேன். அநேகமா எங்கப்பா அம்மா ரெண்டு பேரும் இந்த வாரம் ஊருக்குப் போவாங்கன்னு நினைக்கிறேன்.”
“செம”
“அப்ப மீட் பண்ணலாம்”
“மைதிலி”
“சொல்லுப்பா”
“ஒன்லி மீட்டிங் தானா?”
“சீ”
***
தங்கள் முறை வர கருப்பன் பதட்டமாக எழுந்தான். இருவரும் உள்ளே சென்றனர்.
நீலகண்ட பணிக்கர் தரையில் விரிப்பில் அமர்ந்திருந்தார். அவரது நீண்ட முடியும் தீட்சண்யமான விழிகளும் கருப்பனையும் வள்ளியையும் கும்பிடச் செய்தன.
மெலிதாய் தலையசைத்தவர் உட்காருமாறு விழிகளால் பணித்தார்.
அமர்ந்தனர். கருப்பன் பணிவாய் ரகுவின் ஜாதகத்தைக் கொடுக்க வாங்கிக்கொண்டார். பார்த்த இரண்டாவது நிமிடத்தில் அவர் முகம் மாறியது.
கருப்பனை கேள்வியாய் பார்த்தார்.
புரிந்துகொண்டவன்
“எங்க பையன். எப்ப கல்யாணம் ஆகும்னு “
கருப்பனை முழுமையாக சொல்ல விடாதவர் இடைமறித்து தலையாட்டினார்.
“ஆகாது”
இருவரும் அதிர்ந்து போய் பார்த்தனர்.
“அய்யா”
“ஆகாது”
“என்னய்யா சொல்றீங்க?”
“அகாலம்”
“அய்யா”
“உன் மகன் அகால மரணம் அடைஞ்சிடுவான்.”
பணிக்கர் சொல்ல திக்கென்று அதிர்ந்தனர்.
“அய்யா” அழத் தயாராக இருந்த வள்ளி “உங்களை நம்பித்தான் வந்திருக்கோம் எங்க பையன எப்படியாவது காப்பாத்துங்க” கையெடுத்துக் கும்பிட்டாள்.
நீலகண்ட பணிக்கர் இருவரையும் பார்த்தார். ஒரு நிமிடம் கண்கள் மூடி யோசித்தார்.
எதிரில் கருப்பனும் வள்ளியும் அவரையே பயமாய் பார்த்துக் கொண்டு நின்றனர்.
கண்கள் திறந்தவர் அவர்கள் இருவரையும் பரிதாபமாய் பார்த்தார்.
“அகால மரணம் கண்டிப்பா நடந்துதான் தீரும்”
அவர் சொல்லி முடிக்கவில்லை. வள்ளி அழ ஆரம்பித்தாள்.
“அய்யா” கருப்பன் பரிதாபமாய் அழைத்தான்.
“ம்”
“நீங்க தான் ஏதாவது அருள்வாக்கு தரணும். அவன் எங்களுக்கு ஒரே பிள்ளைய்யா.”
“அவன் குறிப்பிட்ட நேரத்துல அதாவது அகால மரணம் சம்பவிக்கிற நேரத்தில ஏதாவது ஒரு கோயில்ல இருந்தா அது நடக்காமப் போக வாய்ப்பிருக்கு. ஆனா அது நடக்காம வேற ஏதோ சக்தி தடுக்கறதுக்கு வாய்ப்பு நிறைய இருக்கு.”
“அய்யா அந்த நேரம் எப்ப வரும்னு?”
“வர்ற சனிக்கிழமை உன்னோட பையன் தாண்டிட்டா ஆபத்து கிடையாது”
“இது போதுங்கய்யா”
கருப்பனும் வள்ளியும் வெளியே வந்தனர்.
***
மாரத்தஹள்ளி,
தன் ஃப்ளாட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த ரகு மொபைல் அடிக்க எடுத்துப் பார்த்தான்.
அப்பா.
“சொல்லுங்கப்பா”
“ரகு உன்கிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.”
“சொல்லுங்கப்பா”
“உன்னோட ஜாதகம் பார்த்தோம்”
“ம்”
“உனக்கு ஒரு சின்ன பிரச்னை இருக்கு.”
“என்ன பிரச்னைப்பா?”
“பெருசா ஒண்ணும் இல்லப்பா ஆனா வர்ற சனிக்கிழமை மட்டும் நாள் முழுக்க நீ சிவன் கோயிலில் போய் இரு.”
“என்னப்பா சொல்றீங்க? இந்த காலத்தில் போய் என்னென்னமோ சொல்றீங்க?” ரகுவிற்கு அப்பா சொன்னதை நம்ப முடியவில்லை.
“ரகு நான் சொல்றது கேளுப்பா”
“சொல்லுங்கப்பா”
“வர்ற சனிக்கிழமை முழுநாளும் நீ உனக்குப் பக்கத்தில் இருக்கிற சிவன் கோயில்ல இருந்தாகணும்.”
“இருந்தா?”
“தயவு பண்ணி இருப்பா. எனக்காகவும் உங்கம்மாக்காகவும்”,
கருப்பன் கெஞ்சாக்குறையாய் சொல்ல ரகுவிற்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் சம்மதித்தான்.
“சரிப்பா இருக்கேன்.”
***
சனிக்கிழமை.
ரகு குளித்துவிட்டு கோயிலுக்குக் கிளம்ப அவன் அலைபேசி அடித்தது.
எடுத்துப் பார்த்தான்.
மைதிலி. ரகுவின் முகம் மலர்ந்தது.
“சொல்லு மைதிலி”
“எங்க இருக்கே?”
“நஞ்சுண்டேஸ்வரா டெம்பிளுக்குக் கிளம்பிட்டிருக்கேன். என்ன சொல்லு மைதிலி?”
“வீட்டுக்கு வா. அம்மா அப்பா யாரும் இல்லை.”
“வாவ்
நல்ல வாய்ப்பு. நழுவ விடக்கூடாது. மனதிற்குள் விசில் அடித்தவன் உற்சாகமானான். அப்பா சொன்னது கோவிலுக்கு போக வேண்டியது அனைத்தும் மறந்தான்
சிவாஜி நகரில் இருக்கும் மைதிலியின் வீட்டை நோக்கி பைக்கைத் திருப்பினான்.
அவள் தனியாக இருக்கிறாள் என்ற உற்சாகம் அவனை அதிக வேகத்தில் பயணிக்க வைக்க வலது புறத்தில் இருந்து இடதுபுறம் திரும்பிய பிடிஎஸ் பஸ் டிரைவர் அவனை கொஞ்சமும் எதிர்பாராது பிரேக் போட்டும் ‘த்தட்’டென்று பெரிய சத்தத்துடன் மோதிக் கொண்ட ரகு வானில் பறந்து முழுவேகமாய் தரையை நோக்கிப் பாய்ந்தான். ரத்தமாய் சிதறினான்.
***
சுடுகாட்டில் சிரிப்பு சத்தம் முதலில் சாதாரணமாய் பின்பு அதிக வெறியுடன் கேட்க பறவைகள் பயந்தபடி ரெக்கைகளை அடித்துக்கொண்டு பறந்தன.
தொடரும்.