“என்ன சொல்ற?” வரதன் திடுக்கிட்டார்.
சண்முகம் கண்ணீரை துடைத்தபடி பேசினார்.
“அது பழிவாங்குது”
“என்ன சண்முகா உளர்றே?”
“நான் உளறல. உண்மை. கருப்பன் பையனும் என்னோட பையனும் இன்னிக்கு இல்ல. எங்க நிலைமை உனக்கும் பாண்டிக்கும் வரவேண்டாம்”
“அய்யோ”
“என்னாச்சு?”
“ரொம்ப வருஷமா வராமயிருந்த விஷ்வாவும் அவனோட குடும்பமும் முனீஸ்வரனுக்குப் பொங்கல் வைக்க அடுத்த வாரம் ஊருக்கு வராங்க”
“வேண்டாம் வரதா. அவங்களை எப்படியாவது தடுக்கப் பாரு. அவங்கள ஊருக்குள்ள வர விடாத.என்னால அவ்வளவுதான் சொல்ல முடியும்”
சண்முகம் சொல்ல வரதன் பரபரப்பானார்.
“சரி சண்முகா நான் அப்படியே பண்றேன்”
“நான் பாண்டியப் பார்த்து சொல்லிடறேன்”
“ம்”
சண்முகம் வெளியேற வரதன் மனம் படபடப்பானது. தன் மொபைலை எடுத்தவர் விஷ்வாவிற்கு அழைத்தார்.
ரிங் போனது. போய்க்கொண்டே இருந்தது. விஷ்வா எடுக்கவில்லை.
***
சென்னை.
பெஷண்ட் நகர் பீச்,
“கோகுல் இங்கயே நில்லு பெரிய அலை வருது பாரு” இந்து குரல் கொடுக்க கோகுல் தன் மழலைப் பற்கள் தெரிய சிரித்தான்.
“அம்மா கொஞ்ச தூரம் மட்டும்” சொன்னவன் இந்துவின் பதிலை எதிர்பாராமல் இன்னும் கொஞ்சம் உள்ளே நடந்தான்.
“உங்க பையன் உங்கள மாதிரியே இருக்கான். சொல்ற பேச்சைக் கேட்க மாட்டேங்கிறான்” இந்து தன் கணவன் விஷ்வாவிடம் சொல்ல அவன் புன்னகைத்தான்.
“விடும்மா சின்னக்குழந்தைதானே?”
“அப்புறம் எதுக்கு ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாதுன்னு சொல்லி வச்சிருக்காங்க?”
“உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது” கன்னத்தில் குழவிழ விஷ்வா சொல்ல இந்து அவனை ரசித்தாள்.
அப்போது “அம்மா” என்ற கோகுலின் அலறல் சத்தம் கேட்டது.
இருவரும் சுதாரித்து எழுவதற்குள் கோகுலை பெரிய அலை ஒன்று உள்ளே இழுத்துப்போக அவள் பாய்ந்தாள். கோகுலின் தலைமுடியைப் பற்றியிழுத்துக் கரையில் கொண்டுவந்து போட்டாள்.
அவள் வேகம் நம்பமுடியாத அளவில் பிரமிக்கத்தக்கதாய் இருந்தது.
விஷ்வா இந்து இருவரும் பதறிப்போய் கோகுலைத் தூக்கிக்கொண்டனர்.
“அவனுக்கு ஒண்ணுமில்ல. ஒண்ணும் ஆகாது”
குரல் வந்த திசையை விஷ்வா பார்க்க அவள்தான். நடுத்தர வயது. நெற்றியில் பெரிய பொட்டு. வாயில் வெற்றிலை.
விஷ்வா கையெடுத்துக் கும்பிட்டான்.
“ரொம்ப நன்றிம்மா”
அவள் விஷ்வாவைப் பார்த்து கபடமாய் சிரித்தாள்.
“அவசரப்பட்டு நன்றி சொல்லாத. வருத்தப்படுவே” கோகுலை ஒரு மாதிரியாகப் பார்த்தபடி அவள் சொல்ல இந்து பயந்து போய் அவளைப் பார்த்தாள்.
“என்னம்மா சொல்றீங்க?”
“பையனுக்கு நேரம் ரொம்பப் பக்கத்துல வந்திருக்கு” அவள் சொல்ல விஷ்வா ஆத்திரமானான்.
“இந்து நீ கோகுலைக் கூப்பிட்டு வா” அவளிடமிருந்து தள்ளி நடந்தான். இந்து கோகுலைத் தன்னோடு அணைத்துக்கொண்டு விஷ்வாவைப் பின்தொடர்ந்தாள். எதார்த்தமாய் இந்து பின்னால் திரும்பிப்பார்க்க அதிர்ந்தாள். அவள் அங்கில்லை.
‘எங்கு போயிருப்பாள்?’ தனக்குள் எண்ணிய இந்து அவளை சுற்றும் முற்றும் தேடினாள். ஆனால் அவள் மீண்டும் எங்கும் தென்படவில்லை.
“காஃபி சாப்பிடறியா இந்து?” விஷ்வா கேட்க தலையசைத்தாள்.
ஹோட்டல் ஆர்யாஸில் மூவரும் நுழைந்தனர்.
விஸ்வா மூவருக்கும் மசால்தோசை காஃபி ஆர்டர் செய்தான்.
“எனக்கு மனசே ஆறலங்க. ஒரே பயமா இருக்கு” இந்து கவலையாய் சொல்ல விஷ்வா கோபமானான்.
“கண்டவங்க கண்டதும் சொன்னா அதை அப்படியே நம்ப முடியுமா என்ன?”
“அதில்லங்க. அவ நம்ம கோகுல”
“அதெல்லாம் யோசிச்சு கவலைப்படாத. முனீஸ்வரன் கோயிலுக்கு பொங்கல் வைக்கப்போறோம் இல்லையா?”
“ஆமாங்க”
“எல்லா பிரச்னையும் சரியாப் போயிடும்.”
“ம்”
“எப்ப ஊருக்குக் கிளம்பறோம்?”
“இன்னும் நாலு நாள் இருக்கு வெள்ளிக்கிழமை நைட் பஸ் புக் பண்ணியிருக்கேன்”
“ம்”
***
“என்ன சண்முகா சொல்ற? இந்தக்காலத்துல இப்படியா?” பாண்டி சண்முகம் சொன்னதை நம்பாமல் சிரித்தான்.
“இல்ல பாண்டி உன்னோட நல்லதுக்குத்தான் சொல்றேன் எதுக்கும் எச்சரிக்கையாயிரு”
“எனக்கு என்ன இருக்கு? நான் ஒண்டிக்கட்ட. கல்யாணம் கூட பண்ணிக்கல .”
பாண்டி சொல்ல சண்முகம் ஒரு நிமிடம் யோசித்தார்.
“பாண்டி”
“ம்”
“இன்னைய தேதியில நீ யார் மேலயாவது அதிகமா பாசம் வச்சுருக்கியா?”
“எதுக்குக் கேக்கறே? “
“சொல்லு விஷயமிருக்கு”
சண்முகம் கேட்க பாண்டி ஒரு நிமிடம் யோசித்தார்.
“எனக்குனு யார் இருக்காங்க? என்னோட தங்கச்சி செண்பகமும் தங்கச்சி மவ ராசாத்தியும்தான் இருக்காங்க”
பாண்டி சொல்ல ஏதோ புரிந்து கொண்டது போல் சண்முகத்தின் முகம் மாறியது.
“என்ன சண்முகா சொல்லு”
“ராசாத்தி மேல கொஞ்சம் கவனமாயிரு”
“ஏன் அப்படி சொல்ற?”
“உனக்கே சீக்கிரம் புரியும்” சொன்ன சண்முகம் கவனம் என்பதாக சைகை மட்டும் காண்பித்துவிட்டு வாசலை நோக்கிச் சென்றார்.
பாண்டி மட்டும் ஒன்றும் புரியாமல் சண்முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றார்.
எதற்கும் தங்கை வீட்டுக்குச் சென்று இருவரையும் எச்சரித்தால் நல்லது என்று அவருக்குத் தோன்றியது.
தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியே வந்தார். அன்று மழை பெய்யும் சூழல் இருந்ததால் மாலை நேரமே நன்றாக இருட்டிவிட்டது.
தங்கையின் வீட்டுக்குச் செல்ல வேண்டுமென்றால் அவர் சூரியங்கரடைத்தாண்டித் தான் செல்ல வேண்டும். பகல்பொழுது என்றால் அவருக்கு எந்தவித சஞ்சலமும் இருக்காது. இரவு நேரம். அதிலும் சண்முகம் அதைப்பற்றி ஞாபகப் படுத்திவிட்டதால் அது எங்கேயாவது இருக்கிறதா என்று மனதிற்குள் ஒரு ஓரமாக எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது. ஏனென்றால் வருடங்களுக்கு முன்பாக அதன் மரணம் இந்த சூரியங்கரட்டில்தான் சம்பவித்தது. இறக்கும் முன் அதன் நிலைத்த பார்வை நான்கு பேர் மீதும் பட்டதை நினைத்தால் இன்னும் பாண்டிக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது.
அப்படி ஒரு சம்பவத்தை அன்று நடக்கவிட்டிருக்கக்கூடாது. எப்படியாவது தடுத்திருக்க வேண்டும். இதோ .. இப்பது துரத்துகிறது. சரி இனிமேல் அதைப் பற்றி வருத்தப்பட்டு என்ன செய்வது? இப்பொழுது என்ன செய்ய முடியுமோ அதைத்தான் செய்ய முடியும்.
பாண்டியின் மனதில் பலவித எண்ணங்கள்.
செண்பகத்தின் வீட்டை அடைந்தார்.
“அம்மா செண்பகம்”
“வாங்கண்ணா” பாண்டியைப் பார்த்த செண்பகத்தின் முகம் மலர்ந்தது.
“இந்த பக்கம் வந்தேன்மா. அதான் உன்னையும் அப்படியே ஒரு எட்டு பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன்”
“வாங்கண்ணா என்ன சாப்பிடறீங்க?”
“தண்ணி மட்டும் போதும்பா. ஆமா ராசாத்தி எங்க போயிருக்கு? காணோம்?”
“ட்யூஷன்ல இருந்து இன்னும் வரலைண்ணா. வர்ற நேரம்தான்.”
“ம்”
நேரம் கடந்தது ராசாத்தி வரவில்லை பாண்டி தவித்தார்.
அப்போது தூரத்தில் ஏதோ ஒரு மிருகம் வித்யாசமாக ஊளையிட்ட சத்தம் அவர் காதில் கேட்டது.
***
வெள்ளிக்கிழமை இரவு.
கோயம்பேடு பேருந்து நிலையம். சென்னை.
விஷ்வா இந்து கோகுல் மூவரும் பேருந்தில் ஏறி அமர்ந்தனர்.
பேருந்து நகரத் தொடங்கிய அதே நேரம்.
ஆந்தை ஒன்று பயங்கரமாய் அலற நாகம் ஒன்று படம் எடுத்து சீற
சூரியங்கரட்டில் கல்லறை விரிசல் விட ஆரம்பித்தது.