“நீயும் இருக்கலாம்” என்று ராகவ் சொன்னதில் அவளுக்கு மனம் வலித்தது.
இது என் வீடு இல்லையா? எனக்கு உரிமையான வீடு இல்லையா? யாரோ ஒருத்தியை அவன் திருமணம் முடித்துக் கொண்டு வருவான். நான் இருக்கும்போதே வருபவளுடன் குடும்பம் நடத்துவான். அப்போது என் ரோல் என்ன? அனைவருக்கும் நான் ஒரு வேலைக்காரி. சம்பளமில்லாத வேலைக்காரி.
என் குழந்தைகளுக்காக எல்லாவற்றையும் நான் ஏற்றுக்கொள்வேன் என்று என்னை மிக எளிதாக நினைத்துள்ளான்.
எனக்கு என்ன குறை? ஏன் இப்படி நடந்தது? அவளுக்கு ஆற்றாமை வர கண்ணாடியைப் பார்த்தாள்.
மாநிறம். வட்டமுகம். கொஞ்சம் உடம்பு போட்டுவிட்டது. வருடங்களுக்கு முன் நானும் நன்றாகத்தானே இருந்தேன். கணவன் குழந்தைகள் என்று பார்த்துப் பார்த்து கவனித்து என்னை நான் கவனிக்காமல் போய்விட்டேன். திரும்பவும் நான் யோகா செய்தால் உடற்பயிற்சி செய்தால் என்னால் நான் இழந்த வசீகரத்தை மீண்டும் கொண்டுவர முடியும். ஆனால் யாருக்காக? வெறும் உடல் அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கணவனுக்காகவா? அவன் காமக்கண்கள் வேறு எங்கும் பார்த்துவிடக்கூடாது. எப்போதும் தன் மேல் மட்டுமே நிலைத்திருக்க வேண்டும் என்றா? எவ்வளவு அசிங்கமான விஷயம் இது? மதிக்காமல் பேசும் அவனை உடம்பைக் காட்டி மயக்க நினைப்பது அறிவற்ற செயல்.
அப்போது நான் என்ன செய்ய வேண்டும்? வருவது வரட்டும் என்று வாழ்க்கை போகும் போக்கில் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? முடியாது.
சுயத்தை இழந்து வாழ்வதைவிட மோசமான விஷயம் வேறு ஒன்றும் இல்லை.
சந்தியா
ம்
இந்த உலகில் யாரும் யாரையும் நம்பி இல்லை.
உண்மை
அன்பு பாசம் நேசம் காதல் அனைத்தும் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க தேவைப்படும் போலியான காரணிகள்.
ஆம்
வாழ்க்கை சுவாரசியமாக இருக்க போலியாக பூசப்படும் முலாம்கள் இவை.
உண்மை
ஆனால் இந்த உணர்வுகளை முற்றிலும் புறம் தள்ள முடியாது தேவைப்படும் நேரத்தில் தேவைப்படும் உணர்வு நம்மை ஆட்கொள்ளத்தான் செய்யும் ஆனால் அந்த உணர்வையும் மீறி அறிவுப்பூர்வமாக சிந்தித்தோம் என்றால் நம்மை எந்த கவலையும் அணுகாது.
உதாரணம்?
இவன் என்னை நான் தான் உலகம் என்று நேற்று கொண்டாடினான். அது எனக்கு அப்பொழுது மகிழ்வாக இருந்தது இவன் எப்பொழுதும் இவ்வாறு என்னை கொண்டாட வேண்டும் என்று மனம் விரும்பியது அதற்காக ஏங்கியது. ஆனால் இவனுக்கு வேறொருத்தி கிடைத்ததும் அவளைக் கொண்டாட ஆரம்பித்து விட்டான். அவன் இயல்பு அது தான் என்று புரிந்து கொண்டு அவனைப் பற்றியோ அல்லது அவனால் நமக்கு கிடைத்த பாதிப்பு பற்றியோ கவலைப்படுவதை நிறுத்த வேண்டும். கவலைப்படுவதால் விதி ஒன்றும் மாறிவிடாது. அடுத்து என்ன என்று வாழ்க்கை போய்க் கொண்டே இருக்க வேண்டும்.
என் வாழ்க்கையில் அடுத்து என்ன? தெரியவில்லை.
அவனுக்கும் அவன் திருமணம் செய்யப்போகும் அவளுக்கும் பணிவிடை செய்து காலத்தை கழிப்பதுதான் என் வாழ்க்கையா?
நிச்சயமாக இல்லை.
அப்படி என்றால் சுயசார்பு இருக்க வேண்டும்.
நான்தான் வேலைக்கு போவதில்லையே.
நிச்சயமாக ஒருவேலை தேடிக்கொள். அது உன்னையும் உன் குழந்தைகளையும் காப்பாற்றும்.
கிடைக்குமா?
நிச்சயமாக கிடைக்கும் ஆனால் முயற்சிக்க வேண்டும். வேலை கடினமாகக்கூட இருக்கலாம் ஆனால் வாழ்க்கையை ஒப்பிடும்போது அத்தனை கடினமாக இருக்காது. இனிமேல்தான் போராட்டம் இருக்கப் போகிறது அதற்கு நான் தயாராக வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் எதுவும் என்னை பாதிக்காத வகையில் நான் நடந்து கொள்ளவேண்டும். குறிப்பாக எளிதில் அழுவதை நான் நிறுத்த வேண்டும்.
பல மணி நேரம் யோசித்த சந்தியா தெளிந்தாள்.
***
“நிஜமா நான் வேணுமா? நல்லா யோசிச்சுப் பாரு” புனிதா தன் மடியில் படுத்திருந்த ராகவன் தலையைக் கோதியபடி கேட்டாள்.
“சத்தியமா நீ வேணும் அதுல எந்த மாற்றமும் இல்லை நான் நல்லா யோசிச்சுப்பாத்துட்டேன்.”
“ஏன்பா ?”
“நீ என்னோட உலகம் புனிதா” ராகவ் சொல்ல புனிதா நெகிழ்ந்தாள்.
“ராகவ்”
“ம்”
“சந்தியா பாவம்”
“அவ கிட்ட பேசிட்டேன் அவளுக்கு ரொம்ப சந்தோஷம்தான்”
“என்னால ஒத்துக்க முடியாது புருஷனை இன்னொருத்திக்கு விட்டுக்கொடுக்கிறதோ பங்கு போடுறதோ பொண்ணுங்களுக்கு பிடிக்காதுப்பா”
“நீ சொல்றது கரெக்ட்தான் புனிதா. ஆனா என்னோட விஷயம் தான் உனக்குத் தெரியுமே அவளால தாம்பத்தியத்தில் ஈடுபட முடியல அவளுக்கு ஆர்வம் இல்ல. விருப்பமில்லாத பெண்ண என்னால வற்புறுத்த முடியல. இன்ஃபாக்ட் உன்னப் பார்க்கறதுக்கு முன்னாடி பல நாள் என்னோட வாழ்க்கை நரகமா இருந்தது தெரியுமா உனக்கு? இப்படியே வாழ்க்கை போயிடுமோன்னு எனக்குள்ள தவிச்சுக்கிட்டு இருந்தேன். கடவுள் கண்ணைத் திறந்துட்டார். எனக்கு உன்னோட அறிமுகம் கிடைச்சது. எப்ப உன்னை முதல்ல பார்த்தேனோ அப்பவே உள்ளுக்குள்ள எனக்கு ஸ்பார்க். எப்படியாவது உன்கிட்ட பேசணும்னு நிறைய பிளான் பண்ணேன் ” ராகவ் சொல்ல புனிதா சிரித்தாள்.
“ராகவ்”
“ம்”
“ஏன் அப்படி மெனக்கெடணும்? ஒரு பொண்ணுக்காக”
“நீ ஈஸியா சொல்லிடுவே புனிதா. கிடந்து தவிக்கிறவங்களுக்குத்தான் அந்த அருமை தெரியும்.”
அவன் கண்களை கலக்கமாய் வைத்தபடி சொல்ல அவள் நெகிழ்ந்து போய் பார்த்தாள். சட்டென்று அவனை அணைத்துக் கொண்டாள்.
‘பாவம். இவன் கண்களில் தெரியும் காதல் உண்மையானது எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கிறான். இனிமேல் இவன் கஷ்டப்படக் கூடாது. அது என் கையில் தான் இருக்கிறது இவன் என் மீது கொண்டிருக்கும் பாசம் உண்மையானது. ‘
புனிதாவின் மனம் அவனுக்காக நெகிழ்ந்த அதே தருணத்தில் சந்தியாவை நினைத்து அனுதாபப்பட்டது.
‘பாவம் இப்படிப்பட்ட ஒருவன் கூட வாழ்வதற்கு கொடுத்து வைக்கவில்லை அவளுக்கு. என்ன சிக்கல் என்று தெரியவில்லை ஒரு முறை அவளிடம் நேரில் பேச வேண்டும்’
யோசித்தவள் ராகவின் கை தன் இடைக்கு மேலே வருவதை தயக்கமாய் பார்த்தாள்.
“ராகவ்”
“ம்”
“என்னாச்சுபா?”
“ப்ளீஸ் எதுவும் பேசாத”
“ஏன்?”
“ஐ ஜஸ்ட் நீட் யூ நவ்” அவன் சொல்ல அவன் முகத்தைப் பார்த்தாள். அவளால் மறுக்க முடியவில்லை.
முதல் முறை அவன் அத்துமீறும் பொழுது அவனை தடுக்க முற்பட்டு அவன் முகம் ஏமாற்றத்தால் வாடியதைப் பார்த்து புனிதாவால் தாங்க முடியவில்லை. இருந்தாலும் கட்டுப்பாட்டை மீறாமல் இது தப்பு என்று தனக்குள் உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்டிருந்தாள். ஆனால் அவன் சொல்லும் பலவித கதைகளும் அவன் அப்பாவியான முகபாவமும் அவளை அவளை நம்ப வைத்தன. அடுத்தடுத்த முறைகளில் முயற்சி மேற்கண்டு அவன் வெற்றி அடைந்தான்.
இது எத்தனையாவது முறை என்பது இருவருக்கும் நினைவில்லை.
தன்மேல் படர்ந்தவன் தன்னை ஆவேசமாகத் தழுவ புனிதா தன் இரு விழிகள் மூடி மயங்கினாள். அவன் இதழ்கள் படாத இடம் அவள் உடம்பில் இல்லை எனும்படி முத்தத்தில் மொத்தமாய் அவளை நனைத்தான். தன் முழு கட்டுப்பாட்டையும் புனிதா இழந்து விட அவன் அவளை தன் இஷ்டப்படி கையாண்டான்.
புனிதா முழுவதும் கிறங்கினாள். இன்பத்தில் இருவரும் சற்று நேரம் எதுவும் பேசாமல் மயங்கினர்.
நேரம் கடந்தது.
“ராகவ்”
“ம்”
“நான் ஒண்ணு கேட்கவா? தப்பா நினைக்கக் கூடாது.”
“கேளு”
“நீதான் எப்ப வேணாலும் வர்றே. நானும் உனக்கு இல்லைன்னு சொல்லாம எல்லாமே தர்றேன். இதுக்கு மேல நீ என்ன கல்யாணம் பண்ணிக்கத்தான் வேணுமா? எனக்கு சந்தியாவ நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்குப்பா.”
ராகவ் ஒன்றும் சொல்லவில்லை எழுந்தான். ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான்.
“புனிதா”
“ம்”
“எனக்கு உன் மேல இருக்கிறது வெறும் காமம் இல்லை. காதல். அத நீ புரிஞ்சுக்கணும். உடம்புதான் தேவைன்னா அதுக்கு எனக்கு ஆயிரம் வழி இருக்கு. எனக்கு நீ வேணும் புனிதா. நான் உன்னை இழக்கத் தயாரா இல்ல. ப்ளீஸ் புரிஞ்சுக்க. இனிமே இந்த மாதிரி பேசி என்னைக் கஷ்டப்படுத்தாத”
அவன் சொல்ல புனிதாவின் கண்கள் கலங்கின.
“ஸாரிபா ” சொன்னவள் அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
***
ராகவ் வீட்டிற்கு வரும் பொழுது வழக்கம்போல் குழந்தைகள் இருவரும் தூங்கியிருந்தனர். சந்தியா மட்டும் சோபாவில் அமர்ந்திருந்தாள்.
ராகவ் அவளை கண்டுகொள்ளாமல் செல்ல அவள் அவனை அழைத்தாள்.
“என்னங்க”
“என்ன?”
“உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும்”
சொன்னவளை அலட்சியமாய் பார்த்தபடி கேட்டான் ராகவ்.
“என்ன? முடிவெடுத்துட்டியா?”
“ஆமா”
“அப்ப புனிதாவை இங்க ஒரு நாள் கூட்டிட்டு வரேன். நீயே சொல்லிடு உனக்கு சம்மதம்னு”
“நான் பேச வந்தது அந்த விஷயம் இல்ல” சந்தியா சொல்ல திகைத்தான்.
“வேற எந்த விஷயம்?”
“உங்களுக்கு நான் வேண்டாதவளாப் போயிட்டேன். அதனால உங்க வாழ்க்கையில் இருந்து நான் விலகிடலாம்னு இருக்கேன்.”
அவள் அவனை தீர்க்கமாய் பார்த்தபடி சொல்ல அதை எதிர்பாராதவன் திகைப்பாய் பார்த்தான். கேட்டான்.
“என்ன பண்ணப்போறே?”
“நாம டைவர்ஸ் பண்ணிக்கலாம்” சந்தியா எந்தவித டென்ஷனும் இல்லாமல் சொல்ல ராகவ் பதட்டமாகக் கேட்டான்.
“என்ன பேசற? யோசிச்சுத்தான் பேசறியா?”
“ஆமா”
“நான்தான் சொன்னேனே? நீ இந்த வீட்ல இருக்கலாம். குழந்தைங்களும் இந்த வீட்ல இருக்கலாம். எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லன்னு”
“ஆனால் எனக்கு பிரச்னை இருக்கு “
“என்ன சொல்ற?”
“என்னோட வாழ்க்கையை இழந்துட்டு இங்க இருக்கிறது எனக்கு சரியாக வராது”
“அதுக்கு?”
“டைவர்ஸ் பண்ணிக்கலாம் நீங்க உங்களோட வாழ்க்கைய வாழுங்க. நான் என்னோட வாழ்க்கைய வாழறேன் “
“இதுதான் உன் முடிவா?”
“ஆமா”
“ஓகே அப்படியே ஆகட்டும். நாளைக்கு ரெண்டு பேரும் போய் ஒரு நல்ல வக்கீல் பார்ப்போம்.”
“சாப்பாடு போடவா?”
“வேண்டாம்” என்றவன் அவளை அழைத்தான்.
“சந்தியா”
“சொல்லுங்க”
“டைவர்ஸ் வாங்கினாலும் மாசம் உனக்கும் குழந்தைகளுக்கும் என்ன ஆகுதோ அதைக் கொடுத்துடறேன்”
“வேண்டாம்”
“ஏன்?”
“உங்க தயவு தேவையில்லை”
“ஓஹோ அப்படியா? அப்ப உனக்கு வேண்டாம்னா பரவால்ல. குழந்தைகளுக்கு?”
“குழந்தைங்க என்கிட்ட இருக்க மாட்டாங்க உங்ககிட்டத் தான் இருப்பாங்க.”
“என்ன சொல்ற?”
“நீங்களும் உங்க புது மனைவியும் நம்ம குழந்தைகளை பார்த்துக்குங்க.”
“நீ என்ன பண்ணப் போற?”
“வாரத்தில் ஒரு நாள் குழந்தைகள வந்து பார்த்துட்டுப் போறேன்”
“எல்லா கேஸ்லையும் அம்மா கூடத்தான் குழந்தைங்க இருக்கும் அப்பா வந்து பார்த்துட்டுப் போவாங்க. ஆனா நீ நடைமுறைய மாத்தி சொல்றே?”
“ஏன்? இப்படி இருக்கக் கூடாதா? உங்களால உங்க குழந்தைகளை பார்த்துக்க முடியாதுன்னா சொல்லுங்க. நான் பாத்துக்கறேன்.”
“ஏன் முடியாது? என்னால முடியும்.”
“அப்ப பார்த்துக்கங்க”
“உன்னால உன் குழந்தைகளை விட்டுட்டு இருக்க முடியுமா?”
“இந்த சென்டிமென்ட்னாலத் தான் ஆம்பளைங்க அவங்க ஆசைப்பட்டபடி வாழ்க்கைய அமைச்சுக்கிறாங்க சந்தோஷமா இருக்காங்க. இந்த சென்டிமென்ட்னாலத் தான் பொம்பளைங்க இன்னும் கஷ்டப்பட்டுட்டே இருக்காங்க எனக்கு இந்த சென்டிமென்ட் வேண்டாம். அப்புறம் இது நடைமுறைக்கு மாறா இருக்குன்னு நீங்க சொன்னீங்க. அதுக்கு என்ன காரணம்னு தெரியுமா?”
“என்ன காரணம்?”
“இந்த கதையை எழுதறவர்தான்.”
“என்ன சொல்ற?”
“புரியலையா? கடவுள சொல்றேன்.”
சொன்ன சந்தியா அவனை லட்சியம் செய்யாமல் உள்ளே செல்ல ராகவ் ஒரு சிகரட்டைப் பற்ற வைத்தான்