Home Featuredமாஸ் 2

மாஸ் 2

by GK Tamil Novels
13 views

அசோக் டிடெக்டிவ் ஏஜன்ஸி.

“எனக்கு அதுல நம்பிக்கை இல்லை” அசோக் சொல்ல கார்த்தி சிரித்தான்.

திவ்யா முறைத்தாள்.

“எனக்காக ஒரு சின்ன விஷயம் கூட பண்ணமாட்டியா? நான் என்ன கேட்டேன்? இன்னிக்கு உன் பிறந்தநாள். கோயிலுக்குப் போவோம்னு கேட்டேன். “

டேவிட் அசோக்கைப் புன்னகையுடன் பார்த்தான்.

“அசோக் வேற வழியில்ல. நீ ஓகே சொல்லலன்னா இன்னிக்கு முழுக்க திவ்யா மூஞ்சியத் தூக்கி வைச்சுட்டு உட்கார்ந்துக்குவா. போயிட்டு வந்திடலாம். வா. “

“அப்படிங்கிறே?”

“ஆமா”

“எந்த கோயிலுக்கு போலாம் டேவிட்?”

“கணபதி கோயில்”

“பி2 போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரில் இருக்கே அதுவா?”

“ஆமா”

“சரி போலாம் வா” அசோக் சொல்ல திவ்யாவின் முகம் மலர்ந்தது.

“தேங்க்ஸ் அசோக்”

“எதுக்கு?”

“என்னோட விருப்பத்துக்கு மதிப்பு கொடுத்ததுக்கு”

“திவ்யா நம்ம நாலு பேருக்கும் யாரும் இல்லன்னு நமக்குத் தெரியும். உனக்கு மதிப்பு கொடுக்காம என்னிக்குமே இருந்ததில்லை நான். எதுக்கு வீணா இந்த பிறந்தநாள் கொண்டாடிட்டு? நான் என்ன அவ்வளவு பெரிய ஆளா?” அசோக் சிரிக்க கார்த்தி சொன்னான்.

“எங்களுக்கு நீ எப்பவுமே முக்கியமான ஆள்தான் அசோக். இல்லையா டாமி?” கார்த்திக் கேட்க டாமி அசோக்கைப் பார்த்து வாலாட்டியபடி குரைத்தது.

“சரி வாங்க போலாம்”

டேவிட் டிரைவர் சீட்டிலும் அசோக் முன்சீட்டிலும் ஏறிக்கொள்ள கார்த்தியும் திவ்யாவும் பின் சீட்டில் ஏறிக்கொண்டனர்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் கார் கணபதி கோவிலை அடைந்தது.

நான்கு பேரும் சாமி கும்பிட்டு விட்டு பிரகாரத்தில் அமர அசோக்கை அர்ச்சகர் அழைத்தார்.

“அர்ச்சனை பிரசாதம் வாங்கிக்கங்க”

அர்ச்சகரிடம் பிரசாதம் வாங்கிக்கொண்டு அசோக் திரும்ப எதிரில் கண்மூடி கணபதியை வழிபட்ட வரதராஜன் கண் திறந்து பார்த்தான். அவன் விழிகள் மலர்ந்தன.

“சார்” அழைத்தான்.

“நீங்க? ” அசோக் அவனை கேள்வியாய் பார்க்க

“என்ன பண்றதுன்னு தெரியாம கோவிலுக்கு வந்தேன் சார். கடவுள் என்னோட பிரச்சனைக்கு ஒரு நல்ல வழி காட்டுவார்னு சாமி கும்பிட்டேன். எனக்கு நல்ல வழி காட்டிட்டார்.”

“யார் நீங்க என்ன சொல்றீங்க எனக்கு ஒண்ணும் புரியல.”

“உங்கள இந்தியா டுடே கவர் பேஜ்ல பார்த்திருக்கேன் சார்”

“ஓகே. சொல்லுங்க”

“என் பேரு வரதராஜன். எஸ்பிஐ ல வொர்க் பண்றேன். என் பொண்ணு வான்மதி காலேஜ்ல ஃபர்ஸ்ட் இயர் படிச்சா. அவ இப்ப உயிரோட இல்ல ” வரதராஜன் சொல்ல அசோக் அவனை அதிர்ச்சியாய் பார்த்தான்.

வரதராஜன் மேற்கொண்டு பதினைந்து நிமிடங்கள் எடுத்துக்கொண்டு நடந்ததை சொல்லி முடித்தான்.

“சார்”

“சொல்லுங்க”

“என் பொண்ணோட சாவுக்கு ஒரு நீதி வேணும் சார். கோயில்ல வச்சு சொல்றேன். எனக்கு நீங்கதான் சார் சாமி “

“வரதராஜன் நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க நான் பார்த்துக்கறேன் ” அசோக் சொல்ல வரதராஜன் கண்களில் நீருடன் அசோக்கைப் பார்த்தான்.

அருகில் வந்த கார்த்தி அசோக்கைக் கேள்வியாய் பார்க்க

“கார்த்தி இவர் நம்ம க்ளையண்ட். டீட்டெயில்ஸ் கலெக்ட் பண்ணிக்க. நான் இப்ப வர்றேன்” சொன்னா அசோக் சாலையைக் கடந்து போலீஸ் ஸ்டேஷனிற்குள் சென்றான்.

எதிரில் தென்பட்ட கான்ஸ்டபிளிடம் கேட்டான்.

“இன்ஸ்பெக்டர் இருக்காரா?”

“இருக்கார் சார்”

அசோக் உள்ளே நுழைந்தான்.

“மே ஐ கம்மின்?”

“யெஸ்” என்றபடி நிமிர்ந்த ராஜவேலின் முகம் அசோக்கைப் பார்த்ததும் மாறியது.

“நல்லா இருக்கீங்களா சார்?” அசோக் கேட்க பதில் ஒன்றும் சொல்லாமல் விழிகளால் நாற்காலியைக் காட்டினார்.

“என்ன விஷயம் அசோக்? இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க?”

“சாமி கும்பிட கோயிலுக்கு வந்தேன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர வேண்டியதா போயிடுச்சு “

“சொல்லுங்க நான் என்ன பண்ணனும்?”

“ஒரு சின்ன இன்ஃபர்மேஷன் வேணும்”

“கேளுங்க”

“வான்மதி மர்டர் கேஸ்” அசோக் சொல்ல ராஜவேலு அசோக்கை பார்த்தார்.

“அதுல அக்யூஸ்ட்டைப் பிடிச்சாச்சு.”

“தெரியும்”

“அதுல என்ன சந்தேகம் உங்களுக்கு?”

“அவன்தான் அக்யூஸ்டா இல்லையான்னு…” அசோக் சொல்ல ராஜவேலு கோபமானார்.

“நீங்க எங்க டிபார்ட்மெண்டுக்கு நிறைய கேஸ்ல ஹெல்ப் பண்ணியிருக்கீங்க. அந்த மரியாதைக்காகத்தான் நான் டீசண்டா பேசிட்டிருக்கேன். உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன் “

“புரியுது. ஆனா ஒரு விஷயம் புரியல”

“என்ன சொல்றீங்க?”

“நீங்க அரெஸ்ட் பண்ணி வச்சிருக்கிறது அக்யூஸ்டா இல்லையான்னு கேட்டா உங்களுக்கு கோவம் வருது. அது ஏன்? தெரியல “

“நோ நோ எனக்கு ஒரு கோபமும் இல்லை “

“தட்ஸ் குட் அப்படின்னா அந்த அக்யூஸ்ட் பத்தின விவரங்கள் நீங்க என்னோட ஷேர் பண்ணலாம் உங்களுக்கு பிரச்னை ஒண்ணுமில்ல ஏம் ஐ ரைட்?” புன்னகையுடன் சொன்ன அசோக்கை பதில் ஒன்றும் சொல்லாமல் வெறித்தார் ராஜவேல்,

“சார் நீங்க தர்றீங்களா இல்ல நான் டிஎஸ்பிய பார்க்கணுமா?” அசோக் கேட்க ராஜவேல் பற்களைக் கடித்தபடி சொன்னார்.

“தர்றேன்”

***

“என்ன அசோக் சொல்றே?” டேவிட் கேட்க தான் கையில் வைத்திருந்த ஃபைலை அசோக் டேவிட்டின் கையில் கொடுத்தான்.

“இதப் பாரு”

டேவிட் ஃபைலை பிரித்துப் பார்க்க ஒரு ஃபோட்டோ இருந்தது.

“யார் அசோக் இவன்?”

“இவன் பேர் செபாஸ்டியன்.இவன் இப்ப போலீஸ் கஸ்டடியில இருக்கான். இவன் நமக்கு வேணும்”

“எப்படி?”

“இவனை பெயில்ல எடுப்பாங்க. என்னோட கணக்கு சரின்னா இவனை எங்கயாவது தலைமறைவாத் தங்க வைப்பாங்க. பெயில் கிடைச்சு இவன் வெளில வரும்போது தூக்கிடு”

“புரியுது அசோக்”

***

இன்ஸ்பெக்டர் ராஜவேல் தன் முன் நின்றிருந்த லாயர் கோபாலை ஏறிட்டார்.

“பெயில் ஆர்டர் இன்ஸ்பெக்டர்.”

ராஜவேல் வாங்கிப் பார்த்தார். கான்ஸ்டபிளை அழைத்து கண்கள் காட்ட புரிந்து கொண்ட கான்ஸ்டபிள் லாக்கப் கதவைத் திறந்தார்.

“நீ போலாம்” கான்ஸ்டபிள் சொல்ல செபாஸ்டியன் ஒரு கோணலான புன்னகையுடன் வெளியே வந்தான்.

“செபாஸ்டியன் நீ போய் கார்ல ஏறு நான் வரேன்” கோபால் செல்ல செபாஸ்டியன் வெளியே வந்தான். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறிக் கொண்டான். அவன் மொபைல் அடித்தது. எடுத்துப் பார்த்தவன் முகம் மாறியது. மரியாதையாய் “சார் ” என்றான்.

மறுமுனையில் ஏதோ சொல்லப்பட மிகவும் கவனமாய் கேட்டான்

“சரி சார். ஒண்ணும் பிரச்னை இல்ல சார் “

“புரியுது சார்”

“அப்படியே பண்ணிடறேன் சார்”

சொல்லிவிட்டு மொபைலை வைப்பதற்குள் அவனுக்கு வியர்த்தது.

கோபால் காரில் வந்து ஏறினார்.

“செபாஸ்டியன்”

“சொல்லுங்க சார்”

“என்ன இப்படி வேர்த்து ஊத்துது?”

“சார் போன் பண்ணார்” செபாஸ்டியன் சொல்ல கோபால் பவ்யமாய் கேட்டார்.

“என்ன சொன்னார்?”

“கொஞ்ச நாள் ஊர்ல இருக்கக்கூடாதுன்னு சொன்னார். அவர் சொல்ற இடத்தில மாறி மாறி தங்கிட்டே இருக்கணும்னு சொன்னார்”

“அப்படியே பண்ணிடு”

“சார்” செபாஸ்டியன் கோபாலை அழைத்தான்.

“சொல்லு”

“சார எதுக்கறதுக்கு யார் இருக்காங்க? எதுக்கு சார்…” செபாஸ்டியன் முடிக்கவில்லை கோபால் குறுக்கிட்டார்.

“நாம அவர் சொல்றத செய்றதுக்கு மட்டும்தான் இருக்கோம். அவர் ஏன் இப்படி சொல்றாருன்னு யோசிக்கிறதுக்கு இல்ல. புரியுதா?”

“சாரி சார் நான் அந்த அர்த்தத்துல கேட்கல”

“நீ எந்த அர்த்தத்துலயும் கேட்க வேண்டாம்”

கோபால் சொல்ல அதன்பின் செபாஸ்டியன் ஒன்றும் பேசவில்லை.

“நீ எங்க இறங்கணும்?”

“டோல்கேட் ல”

“ம்”

அடுத்த பத்து நிமிடங்களில் செபாஸ்டியன் இறங்கினான். சுற்று முற்றும் பார்த்தான். தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்று சுற்றுப்புறத்தை பார்வையால் அலசினான். யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின் யாருக்கோ மொபைலில் அழைத்தான்.

அவன் அழைப்பிற்காக காத்திருந்தாற் போல் அந்த பச்சை கலர் ஆல்டோ கார் அவன் அருகில் வந்தது. டிரைவர் சீட்டைப் பார்த்த செபாஸ்டியன் மலர்ந்தான்.

விக்டர் புன்னகைத்தான்.

“வா செபா”

காரில் முன்பக்கம் ஏறி விக்டரின் அருகில் அமர்ந்தான்.

“எங்க நம்ம இடத்துக்கா?”

“ஆமா”

“ஏதாவது சம்பவம் பண்ணிட்டியா?”

“இல்ல”

“அப்புறம் எதுக்கு ஓடற ?”

“சார் போகச் சொன்னார்”

“புரியுது.”

மேற்கொண்டு விக்டர் ஒன்றும் பேசவில்லை. எதுவும் பேசாமல் மெளனமாய் காரை ஓட்டினான்.

சற்று நேரத்தில் ஒரு காட்டுப் பகுதி வர கார் மண்சாலையில் பயணித்தது.

“செபா”

“ம்”

“எதுவும் வேணுமா?”

“சரக்கா?”

“ம்”

“இருக்கா?”

“உன்னை நம்ம இடத்தில விட்டுவிட்டு நான் வேணும்னா போய் வாங்கிட்டு வரவா?”

“ஒண்ணும் பிரச்சனை ஆயிடாதே?”

“எதுக்கு இப்படி பயப்படற? “

“பயமில்லை விக்டர். சாரைப் பத்தி உனக்கு தெரியும் தானே? “

“நீ சொல்றது கரெக்ட்தான் ஏதாவது தப்பாயிட்டா நினைச்சுக்கூட பாக்க முடியாது “

“ஆனாலும் நீ வாங்கிட்டு வரவான்னு கேட்டதும் எனக்கு சாப்பிடணும் போல இருக்கு.”

“கவலைப்படாத போனதும் உன்னை விட்டுட்டு சரக்கு வாங்கிட்டு வந்து உன் கையில கொடுக்கிறேன். சரியா?”

“ம்”

கார் ஒரு வீட்டை அடைந்தது. அந்த ஏரியாவிற்கு அந்த வீடு சற்றும் பொருத்தம் இல்லாமல் இருந்தது. அப்படி ஒரு வீடு அங்கே இருக்கிறது என்று எவராலும் நம்ப முடியாது. வீட்டின் பெரும்பாலான பகுதிகளில் காட்டுக் கொடிகள் படர்ந்திருந்தன.

விக்டர் இறங்கினான். தன் பாக்கெட்டிலிருந்து சாவியை எடுத்து திறந்தான். செபாஸ்டியன் உள்ளே நுழைந்தான்.

“செபா”

“ம்”

“இங்க எத்தனை நாள்?”

“நாளைக்கு நைட் கிளம்பச் சொல்லியிருக்கார்.”

“சரி நீ கதவைப் பூட்டிட்டு உள்ளயே இரு. நான் போய் உனக்கு என்ன என்ன தேவையோ எல்லாம் வாங்கிட்டு வந்துடறேன்.”

“ஓகே விக்டர்”

விக்டர் வெளியே வந்து தன் காரை எடுத்து நகரை நோக்கி விரைந்தான்.

அடுத்த அரை மணி நேரத்தில் நகர எல்லையை அடைந்தவன் ட்ரிங்க்ஸ் பாட்டில்கள் வாங்கினான். பாய் பிரியாணி ஹோட்டலில் பிரியாணி வாங்கிய விக்டருக்கு யாரோ தன்னை கவனிப்பது போல் தோன்ற சுற்றும் முற்றும் கவனித்தான். எல்லோரும் அவரவர் வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்க விக்டர் பிரியாணி வாங்கிக்கொண்டு காரில் ஏறும் பொழுது அவன் மொபைல் அடித்தது.

எடுத்துப் பார்த்தவன் அதிர்ந்தான்.

‘சார் கூப்பிடறார்’

மொபைலை எடுத்தவன் பவ்யமாய்
“சார் ” என்றான்.

“விக்டர்”

“சார்”

“செபாஸ்டியன் எங்க இருக்கான்? பக்கத்துல இருக்கானா?”

“இல்ல சார் அவன் காட்டில இருக்கான்”

“நீ எங்க இருக்கே? “

“நான் அவனுக்கு சாப்பாடு வாங்க வந்தேன் சார்”

“விக்டர் நீ எனக்காக ஒண்ணு பண்ணனும் ” அவர் சொல்ல விக்டருக்குப் பதறியது.

“நீங்க சொல்லுங்க சார் நான் நிச்சயம் பண்றேன்”

“செபாஸ்டியன் நமக்கு தலைவலியா இருப்பான் அதனால…”

“சார்…”

“அவனைத் தீர்த்துடு “

விக்டர் அதிர்ந்தான்.

“சார்”

“என்ன சொல்லு?”

“அவன் பாவம் சார் நமக்காக அவன் நிறைய பண்ணியிருக்கான் “

“தெரியும். இப்ப அவன் இருக்கிறது நமக்கு எல்லாருக்கும் தொந்தரவாகும். புரியுதா?”

“புரியுது சார்”

“காட்டிலயே வச்சு அவனை முடிச்சிட்டு அங்கயே டிஸ்போஸ் பண்ணிடு”

மறுபடியும் போன் வைக்கப்பட விக்டர் காரை எடுத்த அதே வேளையில்.

டேவிட் சீரான இடைவெளியில் தன் பைக்கில் விக்டரைத் தொடர்ந்தான்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!