Home Featuredராஜமகுடம் 1

ராஜமகுடம் 1

Historical crime series

by GK Tamil Novels
25 views

ராஜமகுடம் 1
கவுதம் கருணாநிதி

அது ஒரு தனியார் கலைக் கல்லூரி. கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து கோவை செல்லும் வழியில் பரமத்திக்கு முன்பாக இடது புறம் திரும்பினால் வரும் சாலையில் அரை மணி நேரம் பயணித்தால் அன்னை கலைக் கல்லூரி என்று போர்டு வைக்கப்பட்ட சிறிய ரோட்டில் ஐந்து கிமீ சென்று திரும்பினால் கல்லூரி தான். பெரும்பாலும் மாணவர்கள் வகுப்பிற்கு வெளியே தான் அமர்ந்திருப்பார்கள். ஆனால் இப்பொழுது புதிய பிரின்சிபால் ஆறுமுகம் பொறுப்பு எடுத்துக் கொண்ட பின் மாணவர்கள் ஒன்று வகுப்பில் இருப்பார்கள் அல்லது நூலகத்தில் இருப்பார்கள்.

“ஸ்டுடென்ட்ஸ் லைப் என்னால புரிஞ்சிக்க முடியும் நீங்க சந்தோசமா இருக்கணும் ஆனா அதே நேரத்துல சந்தோஷமா இருந்தா மட்டும் பத்தாது இந்த லைஃப்ல நீங்க என்ன பண்றீங்களா அதுதான் வாழ்க்கை ஃபுல்லா உங்களை வழி நடத்தும். லைப்ரரிய நல்லா யூஸ் பண்ணுங்க “ ஆறுமுகம் அடிக்கடி சொல்வது இது.

ராஜா தன் அருகில் அமர்ந்திருந்த மலர் ஏதோ ஒரு புத்தகத்தில் மூழ்கியிருப்பதைப் பார்த்து அருகில் சென்றான்.

“மலர்” கிசுகிசுத்தான்.

“உஷ்” வாயில் விரல் வைத்து மௌனமாய் எச்சரித்த மலர் லைப்ரரியில் வைக்கப்பட்டிருந்த சைலன்ஸ் போர்டைக் காட்டினாள்.

ராஜா மௌனமாய் அவளைப் பார்த்தான். அவனுக்கு மலரை மிகவும் பிடிக்கும். அவனுக்கு மலரையும் சேர்த்து மொத்தம் மூன்று நண்பர்கள் .

ராஜா ரகு திவ்யா மலர் நான்கு பேர் பள்ளியிலிருந்தே நண்பர்கள் . எப்பொழுதும் ஒன்றாகத்தான் இருப்பார்கள். அவர்களின் நட்பு அனைவருக்கும் தெரியும்.

ராஜா வெளியில் வந்தான். ரகுவும் திவ்யாவும் தூரத்தில் நடந்து வருவதைக் கண்டவன் முகம் மலர்ந்தது.

“ரகு கிளாஸ் முடிஞ்சதா?”

“ம். மிஸ் அசைன்மென்ட் கொடுத்துட்டு கிளாஸ் விட்டுட்டாங்க” சொன்னவன் கேட்டான். “மலர் எங்கே?”

“அவ உள்ள சீரியஸா என்னமோ படிச்சிட்டுருக்கா”

“என்ன படிக்கிறா?”

“தெரியல”

“கூடாதே தப்பாச்சே” திவ்யா சொல்ல ராஜாவும் ரகுவும் சிரித்தனர்.

“நான் போய் பார்க்கிறேன் “ சொன்ன திவ்யா சத்தம் போடாமல் மலரின் பின் சென்றாள்.

மலர் தன்னை மறந்து அந்த புத்தகத்தில் ஆழ்ந்திருக்க திவ்யா ஆச்சரியமானாள். என்ன புத்தகம் என்று எட்டிப் பார்க்க

“எனக்கு இந்த காதல் வந்திருக்கக் கூடாது. களம் காண வேண்டிய ஒருவனிடமா என் உள்ளம் வசப்பட வேண்டும்? என் நாட்டு மக்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பர்? எனக்கு இந்தப் பதவி வேண்டாம் இந்த பொறுப்பு வேண்டாம். “

புத்தகத்தில் இருந்த வரிகள் திவ்யாவை ஈர்க்க மலரிடமிருந்த புத்தகத்தைத் திருப்பி முகப்பைப் பார்த்தாள்.

ராஜமகுடம் என்றிருந்தது.

“வா திவ்யா”

“என்னடி இது கதையா ?”

“இல்ல நிஜமா நடந்திருக்காம்”

“எங்க?”

“நம்ம கரூர்ல”

“சும்மா யாராவது சொன்னாங்கன்னு ஏதாவது சொல்லிட்டு இருக்காத”

“உனக்கு நம்பிக்கை இல்லைன்னா விடு “

“நீ சொல்றதுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கா?”

“இல்ல”

“அப்ப எப்படி நம்பறது?”

“எங்க பக்கத்துல அரசகோட்டைன்னு ஒரு இடம் இருக்கு.”

“இடம் மட்டும் தான் இருக்கு அங்க மக்கள் யாரும் இல்ல அது ஒரு காடு தெரியும் இல்ல?*

“கரெக்ட் இப்ப அங்க யாரும் இல்ல ஆனா ஒரு காலத்துல அங்கதான் அரண்மனை இருந்துச்சுன்னு சொன்னா உன்னால நம்ப முடியுமா?*

“என்னடி சொல்ற?”

“அரச கோட்டையில அரண்மனை இருந்திருக்கு அங்க ஒரு இளவரசியும் இருந்திருக்காங்க. அந்த இளவரசி எப்படி தெரியுமா செத்துப்போனாங்க ?”

“எப்படி?”

“தன்னோட வாளை எடுத்து தன் கழுத்த அறுத்துக்கிட்டாங்க “

“ஏன்?”

“காதல்”

“சும்மா லூசு மாதிரி உளறாத “

“இளவரசி தற்கொலை பண்ணிக்கிட்டதுக்கு ஆதாரம் இருக்கு “

“என்ன ஆதாரம்?”

“ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட்ல கிடைச்ச கல்வெட்டுல இந்த விஷயம் இருக்கு”

“மலர்”

“ம்”

“உனக்கென்ன இவ்வளவு ஆர்வம் ?”

“தெரியல. புக் கிடைச்சது. படிக்க ஆரம்பிச்சேன். என்னையும் மீறி எனக்குள்ள ஏதோ ஒண்ணு இதில் இழுத்துட்டுப் போகுது. “

“என்னடி சொல்றே?”

“திவ்யா நான் ஒண்ணு கேட்கவா ?”

“ம் கேளு”

“நாம இந்த அரச கோட்டைக்கு போய் பார்க்கலாமா?”

“லூசா நீ ?”

“ஏன்?”

“அங்கே வெறும் காடு தான் இருக்கு அங்க போய் என்ன பண்ணப் போறே?”

“இல்லப்பா எனக்கு ஜஸ்ட் போகணும்னு தோணுது “

“சரி பார்க்கலாம். “

***

பாசறை.

நான்கு மல்லர்கள் உருவிய வாட்களுடன் தங்களுக்கு நடுவில் சிக்கிய இளைஞனை நோக்கிப் பாய்ந்தனர். மல்லர்களின் உருவமே பயமுறுத்துவதாக இருக்க அவர்களின் முகங்களில் தெரிந்த உணர்வும் கைகளில் உறுதியாக பிடித்திருந்த வாட்களில் படிந்திருந்த குருதியும் எவரையும் எளிதில் பயமுறுத்தும்படி இருக்க இளைஞனின் முகத்தில பயத்தின் சாயல் துளி கூட இல்லை. நான்கு பேர் மீதும் அவன் விழிகள் சுழன்றன. தன் வாளால் தற்காப்பில் ஈடுபட்டவன் அவ்வப்போது தாக்கவும் செய்தான். நான்கு பேரில் ஒருவரின் வாள் கூட இளைஞன் மீது படவில்லை. இளைஞனின் வாள் எட்டுத் திசையிலும் சுழன்றது. இளைஞன் நான்கு மல்லர்களுடன் போரிடுவதை சற்றுத் தள்ளி தன் மீசையை தடவியபடி பார்த்தார் காளியண்ணன். வாட்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் ஓசையும் அதனால் விளைந்த தீப்பொறிகளும் அவரின் ஆர்வத்தை அதிகப்படுத்தின. போர் என்றால் எவருக்காவது பாதிப்பு வரவேண்டும்தானே? ஆனால் இங்கு எவரும் பாதிக்கப்படவில்லை. நான்கு பேருக்கும் சலிக்காமல் இளைஞனும் தன் வீரத்தை பறைசாற்றியதைப் பார்த்த காளி அண்ணன் இந்தப் போர் எதுவரை போகும் என்று தனக்குள் எண்ணினார். அப்போது இரண்டு மல்லர்களின் வாட்கள் அவர்கள் கைகளில் இருந்து கீழே விழுந்தன. ஆஹா இளைஞனுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது என்று காளியண்ணன் பார்க்க இளைஞன் அவர்களை தாக்காமல் அவர்கள் வாட்களை எடுத்துக் கொள்ள அவகாசம் அளித்தான். அவர்கள் வாட்களை எடுத்துக் கொண்டு மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டனர். என்னதான் அவர்கள் ஆவேசமாய் தாக்கினாலும் இளைஞனின் வியூகத்திற்குள் அவர்களால் நுழைய முடியவில்லை.
நேரம் கடந்தது. இளைஞனைத் தாக்கிய நான்கு பேரும் களைத்தனர்.
தங்களுக்குள் புன்னகைத்துக் கொண்டனர்.

“போதும். எங்களால் இனி முடியாது” அவர்கள் ஒருமித்த குரலில் சொல்ல இளைஞன் புன்னகைத்தான். காளியண்ணன் அருகில் வந்தார் இளைஞனை தழுவிக்கொண்டார்.

“வீரசிம்மா உன் வாட்திறமையை நேரில் கண்டு பெருமிதம் கொள்கிறேன். வாட்போரில் உன்னை வெல்ல இனி எவரும் இல்லை “

“எல்லாம் தங்களின் ஆசி” வீரசிம்மன் தலை தாழ்த்தி வணங்க காளியண்ணன் நெகிழ்ந்தார்.

“உன் பணிவு உன்னை மென்மேலும் உயர்த்தும் வீரசிம்மா. போய் வா “

அனைவரிடமும் விடைபெற்றவன் தன் புரவியின் மீது தாவி அமர்ந்தான். அது அரண்மனை நோக்கிப் பாய்ந்தது.

***

அரசவை பெரும் மௌனத்தில் ஆழ்ந்திருக்க மன்னர் ராஜசிம்மன் தன் முன் நின்றிருந்த ஒற்றனை ஏறிட்டார்.

“நீ சொன்னது உண்மை தானா?”

“ஆம் அரசே. பெருஞ்சேரல் இரும்பொறை மன்னர் சோழன் செங்கணானுடன் ஏற்பட்ட போரில் தோற்றுவிட்டார். அவரை சோழ மன்னன் சிறை பிடித்து விட்டார். “

“அப்படி என்றால் சோழனின் பார்வை அடுத்து நம் மீது விழலாம் இல்லையா?” தலைமை அமைச்சரை பார்த்து ராஜசிம்மன் கேட்க அவர் மெதுவான குரலில் சொன்னார்.

“இங்கே நம் படைபலம் மிகவும் வலுவாகத்தான் இருக்கிறது அரசே.”

“சோழனின் படைபலத்தை ஒப்பிடுகையில் நாம் அப்படி ஒன்றும் பலமானவர்கள் அல்ல அமைச்சரே”

“மாட்சிமைப் பொருத்திய மன்னரின் மனதில் என்ன இருக்கிறது என்று சொன்னால் நான் அதை முயற்சித்துப் பார்ப்பேன் “ தலைமை அமைச்சர் பணிவான குரலில் சொல்ல ராஜசிம்மன் பதில் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவர் யோசனையில் இருக்கிறார் என்பதை அவர் நெற்றிச் சுருக்கம் காட்டிக் கொடுக்க தலைமை அமைச்சர் மௌனமாய் அவரை ஏறிட்டார்.

***

அந்தப்புரம்.

ராஜசிம்மன் முகத்தையே பார்த்த அரசி அங்கயற்கண்ணி

“வழக்கத்திற்கு மாறாக உங்கள் முகத்தில் ஏதோ ஒரு கவலையின் ரேகை ஓடுகிறதே? என்ன ஆயிற்று உங்களுக்கு ?”

“சேரன் வீழ்ந்தான் என்று கேட்டதும் எனக்கு சோழன் அடுத்து என்ன செய்வான் என்பதிலேயே தான் முழுக் கவனமும் “

“நம் மீது படை எடுப்பான் என்று தோன்றுகிறதா?”

“சோழ நாட்டிற்கும் பாண்டிய நாட்டிற்கும் இடையில் நாம் தான் இருக்கிறோம் அப்படி என்றால் நமக்கு இருவராலும் ஆபத்து எப்பொழுதும் இருக்கிறது என்று தான் பொருள். இருவரில் ஒருவரை முடிந்தால் இருவரையும் நட்பில் வைத்திருப்பது தான் நமக்கு எப்பொழுதும் பாதுகாப்பு”

ராஜசிம்மன் சொல்ல அங்கயற்கண்ணியின் முகத்தில் இளநகை ஓடியது. அதைப் பார்த்த ராஜசிம்மன் அரசியை புரியாமல் பார்க்க

“நீங்கள் என்னடாவென்றால் நட்பாக இருக்க வேண்டும் சமாதானமாக இருக்க வேண்டும் என்று யோசிக்கிறீர்கள் ஆனால் நம் புதல்வன் எங்கே களம் இருக்கிறதோ அங்கே தான் என் வீரமும் என்றல்லவா போர்க்களத்திற்காக காத்திருக்கிறான்? “

“வீரசிம்மனை சொல்கிறாயா? அவனுக்கு அனுபவம் போதாது இளைஞர்களுக்கு வீரம் அதிகமாக இருக்கும் ஆனால் அனுபவக் குறைவால் அந்த வீரம் எவருக்கேனும் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்திவிடும். சில நேரங்களில் நமக்கு கூட”

“என்ன சொல்கிறீர்கள் மன்னா ?”

“வீரத்தை விடவும் விவேகம் முக்கியம் என்கிறேன்”

“எனக்கு சரியாக புரியவில்லை”

“நான் ஒரு யோசனை சொல்கிறேன் இது சரியாக வருமா என்று மட்டும் யோசி”

“சொல்லுங்கள்”

“சோழ நாட்டுடன் நாம் உறவாகிவிட்டால் சோழன் நம் மீது படை எடுக்க மாட்டான் அல்லவா?”

“அப்படியென்றால்…?”

“நம் வீரசிம்மனுக்கு சோழனின் தங்கை பொற்கொடியை மணம் முடித்து வைத்தால்…?” ராஜசிம்மன் கேட்க அங்கயற்கண்ணியின் முகம் மலர்ந்தது.

“மிகச் சிறந்த யோசனை”

“ஆனால் இது நடக்குமா என்று தான் தெரியவில்லை”

“பொற்கொடியின் சுயம்வரத்தில் வீரசிம்மன் கலந்து கொண்டால் நிச்சயம் மாலை இவன் கழுத்திற்குத் தான் விழும் “ அங்கயற்கண்ணி சொல்ல ராஜசிம்மன் சிரித்தார்.

“சுயம்வரம் நடக்கும் என்று நாம் காத்துக் கொண்டிருக்க முடியாது. நம் நாட்டைக் காப்பாற்ற நம் நாட்டு மக்களைக் காப்பாற்ற இது ஒன்றுதான் சிறந்த வழி என்றால் அந்த வழியை எப்பாடுபட்டாவது செய்து தீர வேண்டும் “

“எனக்கு புரிகிறது எல்லாம் வல்ல இறைவன் நம்முடன் இருக்கட்டும்”

***

கார் மண்சாலையில் மேற்கொண்டு எந்த வழியும் இல்லாமல் நின்றது.

ராஜா ரகு திவ்யா மலர் நான்கு பேரும் இறங்கினர்.

“மலர்” ராஜா அழைத்தான்.

“ம்”

“ஏதோ நீ ஆசைப்பட்டோம்னு அரசக்கோட்டைக்கு நாலு பேரும் போய்ட்டிருக்கோம் . அங்க நமக்கு என்னாகப்போகுதுன்னு தெரியல “

ராஜா சொல்ல ரகு திவ்யா இருவரும் சிரித்தனர். மலர் மட்டும் தொடர்ந்து முன்னேறினாள்.

கொஞ்ச தூரம் நடந்திருப்பார்கள். சட்டென்று யாரும் எதிர்பாரா வண்ணம் அங்கே சூறைக்காற்று சுழன்றது.

தொடரும்

 

 

 

 

 

 

 

 

 

 

You may also like

Leave a Comment

error: Content is protected !!