கணேஷ் கீர்த்தியை அணைத்துக்கொண்டான் . முத்தமிடக் குனிந்தபோது அவன் பார்வையில் ஜன்னலில் படிந்திருந்த அந்த கை பட்டது.
கணேஷ் திடுக்கிட்டான்.
“யாரது?” கீர்த்தியை விடுவித்தவன் எழுந்தான். கீர்த்தி ஒன்றும் புரியாமல் பார்த்தாள் . தன் வாயில் விரலை வைத்து ‘உஷ்’ என்று சைகை காட்டினான். அவன் சைகையைப் புரிந்துகொண்ட கீர்த்தி ஜன்னலைப் பார்க்க உச்சமாய் அதிர்ந்தாள்.
கணேஷ் வெளி விளக்கைப் போட்டான் கதவைத் திறந்து வெளியில் வந்து பார்த்தான். யாரும் இல்லை.
ஜன்னலருகே போய் நன்கு ஆராய்ந்தான். யாரும் அங்கே வந்த மாதிரி தெரியவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தான். எந்தச் சலனமும் இல்லை.
‘ஒருகை தெரிஞ்சதே எப்படி அது?’ தனக்குள் குழம்பினான்.
கீர்த்தி அறையிலிருந்து வெளியே வந்தாள்.
“என்னாச்சுப்பா?”
கீர்த்தி கேட்க
“ஒண்ணுமில்ல கீர்த்தி” கணேஷ் சொன்ன அந்த நொடியில் கீர்த்தி அலறினாள்.
“கணேஷ் பின்னாடி பாருங்க” கணேஷ் சுதாரிப்பதற்குள் அந்த உருவம் கணேஷைத் தாக்கியது. கணேஷ் நிலைகுலைந்தான் சுதாரித்து எழ முயன்றான். அந்த உருவம் கணேஷைப் பிடிக்க முயன்றது. பிடிக்க முயன்ற உருவத்திடமிருந்து கணேஷ் தப்பிக்க முயற்சிக்க அந்த உருவம் கோபமானது
பயங்கரமான வினோதமான சத்தத்தில் அலறியது கீர்த்தி நடுங்கினாள்.
கணேஷ் யோசித்தான்.
‘அறைக்குச் செல்ல வேண்டும் என்றால் அந்த உருவத்தைத் தாண்ட வேண்டும். அது முடியாத விஷயம். என்ன செய்யலாம்? கேட்டை திறந்து கொண்டு வெளியே ஓடி விடலாமா? கண்டிப்பாக அது துரத்தும்’
கணேஷிற்கு வியர்த்துக் கொட்டியது.
“கணேஷ் எப்படியாவது தப்பிச்சுடுங்க”
கீர்த்தி கத்த அந்த உருவத்தின் கவனம் கீர்த்தி மீது திரும்பியது. கீர்த்தியை நோக்கி அந்த உருவம் ஓடி வந்தது.
கீர்த்தி பதறியபடி அறையை நோக்கி ஓடினாள். அவள் அறையை அடைவதற்குள் அசுர வேகத்தில் ஓடி வந்த அந்த உருவம் அவளுக்கு முன்பாக வந்து நின்றது. கணேஷ் தவித்தபடி அறையை நோக்கி ஓடிவந்தான்.
உருவத்தின் கண்கள் ஒளிர்ந்தன கீர்த்தி என்ன செய்வது என்று யோசிப்பதற்குள் அந்த உருவத்தின் கைகள் கீர்த்தியைப் பிடித்து இழுத்தன.
“கணேஷ் காப்பாத்துங்க”
கீர்த்தி கதறினாள்.
கணேஷ் தவித்தான்.
‘என்ன செய்வது?’ என்று சுற்றுமுற்றும் பார்த்தான்.
உருட்டுக்கட்டை ஒன்று அருகில் இருக்க அதை பாய்ந்து எடுத்தான்.
உருவம் கீர்த்தியின் தலையை சாய்த்துப் பிடித்தது. கீர்த்தி அதன் பிடியிலிருந்து விடுபட போராடினாள் அவளால் அசையக்கூட முடியவில்லை உருவம் தன் கோரைப் பல்லால் கீர்த்தியின் கழுத்தை கடிக்க முயல கணேஷ் அதிர்ச்சியில் உறைந்தான்.
உருட்டுக்கட்டையால் பலம் கொண்ட மட்டும் உருவத்தின் பின்பக்கம் அடித்தான். உருவம் அவனை லட்சியம் செய்யாது கீர்த்தியின் கழுத்தில் தன் கோரைப் பற்களை பதித்தது. ரத்தம் பீறிட கீர்த்தி அலறினாள்.
உருவம் ரத்தத்தை உறிஞ்சி குடிக்க ஆரம்பித்தது.
கணேஷ் துடித்தான். என்ன அடித்தும் உருவத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. உருவம் கீர்த்தியின் ரத்தத்தை முழுவதுமாய் குடித்து முடித்தது கீர்த்தியின் உடல் துடித்தது. ரத்தம் படிந்த உடலை அந்த உருவம் தள்ளி விட்டது.
கணேஷ் பரிதவிப்பாய் பார்க்க அந்த உருவம் கணேஷை இலட்சியம் செய்யவில்லை. எங்கோ வேகமாய் ஓடியது. இருட்டில் மறைந்தது.
கணேஷ் கீர்த்தியின் அருகில் தவிப்பாய் சென்று பார்த்தான். நிலைத்த விழிகளுடன் இறந்துகிடந்த கீர்த்தியைப் பார்த்து கணேஷ் கதறி அழுதான்.
***
காலை.
நடந்த சம்பவம் கேட்டு அதிர்ச்சி அடைந்து நின்றான் முருகன்.
கீர்த்தியின் உடல் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டது.
கணேஷ் அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருந்தான்.
‘எனக்கு தப்பா படுதுங்க ஏதோ கெட்டது நடக்க போகுது’ கீர்த்தியின் குரல் இன்னமும் காதில் கேட்டது.
“ஹலோ உங்களைத்தான்”
குரல் கேட்டுத் திரும்பினான் கணேஷ்.
சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா நின்று கொண்டிருந்தார்.
“சார்” கணேஷ் எழுந்தான்.
“உங்க மனைவி எப்படி இறந்தாங்க?”
“ரத்தக்காட்டேரி சார் என் கண்ணு முன்னாடி என்னோட கீர்த்தியை கழுத்தில் கடித்து ரத்தத்தைக் குடிச்சுக் கொன்னுடுச்சு சார்” அழுகை வர கட்டுப்படுத்திக் கொண்டு சொன்னான்.
“அந்த காட்டேரி என்னைத்தான் சார் துரத்தியது கீர்த்தி சத்தம் போட காட்டேரி அவளக் கொன்னுடுச்சு”
சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா முருகனைக் கூப்பிட்டார்.
“இங்க வா”
அருகில் வந்த முருகன் வணங்கினான்.
“இந்த காட்டேஜில் நீ என்ன பண்ற?”
“மேனேஜர் மாதிரி சார் வர்றவங்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கவனித்துக் கொடுப்பேன்”
“இந்த சம்பவம் நடக்கும்போது நீ எங்க போயிருந்த?”
“நான் சார் கிட்ட சொல்லிட்டு வீட்டுக்கு போயிட்டேன் சார்”
கிருஷ்ணா கணேஷிடம் திரும்பினார்.
“உண்மையா?”
கணேஷ் தலையசைத்தான்.
முருகனிடம் திரும்பிய கிருஷ்ணா
“இதுக்கு முன்னாடி இந்த மாதிரி இந்த காட்டேஜில் ஏதாவது நடந்து இருக்கா?”
“இல்ல சார் இந்த மாதிரி எதுவும் நடந்ததில்லை இதுதான் முதல் தடவை”
“இந்த சிசிடிவி கேமரா ஃபுட்டேஜ் எனக்கு வேணும்”
“வாங்க சார் நான் காட்டறேன்”
முருகன் கிருஷ்ணாவை தன்னுடன் அழைத்துச் சென்றான்.
மேனேஜர் அறையிலிருந்த கம்ப்யூட்டரை உயிர்ப்பித்தான். இரவு ஏழு மணியிலிருந்து நடந்த சம்பவங்களை பார்க்கத் தொடங்கினர்.
பத்து மணிவரை எல்லாமே இயல்பாக இருக்க அதற்குப்பின் ஒரு உருவம் கேட்டைத் தாண்டிக் குதித்தது தெரியவந்தது. அதைப் பார்த்து கிருஷ்ணா அதிர்ந்தார்.
‘சந்திரன் செல்வி கீர்த்தி மொத்தம் மூன்று கொலைகள் இதுவரை. இன்னும் எத்தனை பேர் அந்தக் காட்டேரிக்குப் பலியாகப் போகிறார்களோ? அதற்குள் இந்த கேசில் ஏதாவது செய்யவேண்டும்’
கிருஷ்ணா சிசிடிவி புடேஜ் வாங்கிக்கொண்டார். வெளியில் வந்தார்.
கணேஷிடம் வந்து
“நீங்க ஸ்டேஷனுக்கு வந்து ஒரு கம்ப்ளைன்ட் கொடுங்க” என்று சொல்ல கணேஷ் கண்ணீருடன் தலையசைத்தான்.
***
எஸ்பி அலுவலகம்
எஸ் பி பிரபு தன் முன் நின்றிருந்த சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா வையும் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் தையும் நேர் பார்வை பார்த்தபடி அவர்கள் சொல்வதை உன்னிப்பாய் கவனித்தார்.
“இதுவரைக்கும் செத்துப்போனது சந்திரன் செல்வி கீர்த்தி மொத்தம் மூணு பேரு சார் மூணு பேரும் ஒரே மாதிரி செத்துருக்காங்க ரத்தக்காட்டேரி கழுத்தில் கடித்து ரத்தத்தை உறிஞ்சி குடித்து மரணம் மூணு பேரோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் தான் சொல்லுது”
“ரஞ்சித் எனக்கு ஒரு டவுட்” எஸ்பி சொல்ல
“சொல்லுங்க சார்” ரஞ்சித் எஸ்பியை பார்த்தார்
“சந்திரன் செல்வி இவங்கள்லாம் வெளியே போகும்போது காட்டேரி அடித்துக் கொன்னுருக்கு. ஆனா கணேசும் கீர்த்தியும் ரூம்ல இருக்கும்போது காட்டேரி தேடிவந்து கீர்த்தியை கொலை பண்ணி இருக்கு. இது சம்திங் நெருடுது”
“சார் நீங்க என்ன சொல்றீங்க?”
“இது ஏன் திட்டமிட்ட கொலையா இருக்கக்கூடாது?”
“பட் சார் இது மூணுமே காட்டேரி பண்ண கொலைகள் இது எப்படி திட்டமிட்ட கொலை ஆக முடியும்?”
“கிருஷ்ணா உங்க ஒபினியன் என்ன?”
எஸ்பி கேட்டார்.
“அந்த கிராமத்துல ஏற்கனவே ரத்தக்காட்டேரி இருக்கு சார் ஒரு பத்திரிக்கைக்காரர் எடுத்த போட்டோவில் அது இருக்கு. அது மட்டும் இல்ல காட்டேஜ்ல காம்பவுண்டு சுவர் தாண்டி குதிக்கிற காட்டேரியோட சிசிடிவி புட்டேஜ் நம்மகிட்ட இருக்கு சார்”
“அப்போ மூணு கொலைகளும் காட்டேரி செஞ்சது தான் அது சந்தேகமில்லை”
“எஸ் சார்”
“நீங்க போலாம்” எஸ் பி சொல்ல இருவரும் அவரது அறையை விட்டு வெளியேறினர்.
எஸ்பி கொஞ்ச நேரம் யோசித்தார்.
அலைபேசியை எடுத்தார்
ஓர் எண்ணிற்கு அழைத்தார் .
மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட
எஸ் பி கேட்டார்.
“நான் எஸ்பி முத்துக்குமார்”
“சொல்லுங்க சார்”
“அசோக் இருக்காரா?”
“இப்ப கொடுக்கிறேன் சார்”
ஒரு நிமிடம் காத்திருப்புக்கு பின் மறுமுனையில் குரல் கேட்டது.
“சார் ஐ’ம் அசோக்”