Home Featuredஒரு பௌர்ணமி நாளில் 1

ஒரு பௌர்ணமி நாளில் 1

Crime Story

by GK Tamil Novels
26 views

1

“நாட்டுக்கோழிய வாட்டிட்டுத்தான் சுத்தம் செய்யணும். ” அன்னம்மாள் சொல்ல வேணி தலையசைத்தாள்.

“சரிங்கத்தை”

“சுடுதண்ணி வெச்சுட்டியா?”

“வெச்சுட்டேன் அத்தை”

“சரி ” சொன்னபடி அன்னம்மாள் உள்ளே பார்த்தார்.

“குமாரு…” உள்ளே பார்த்து குரல் கொடுத்தார்.

“என்னம்மா?”

“ராதிகா எங்க வந்துட்டிருக்கா?”

“ஒட்டன்சத்திரம் தாண்டியாச்சாம்”

“இப்பத்தான் ஒட்டன்சத்திரமே வர்றாளா?”

“டென்ஷன் ஆகாதமா. வந்திடுவா.”

“சரி நீ போய் குளி”

“ம்”

“உங்கப்பா எங்க போனார்?”

“தெரியலமா”

அதே நேரத்தில் காளிமுத்து உள்ளே நுழைந்தார்.

“நான் இங்கதான் இருக்கேன்”

“குடலும் நுரையீரலும் வாங்கிட்டீங்களா?”

“வாங்கிட்டேன் இந்தா”

கொடுத்துவிட்டு வந்தவரை குமார் சிரிப்புடன் பார்த்தான்.

“அப்பா”

“ம்”

“அம்மா ஏன் இன்னிக்கு இவ்வளவு டென்ஷனா இருக்காங்க?”

“அது டென்ஷன் இல்ல சந்தோசம்”

“சந்தோசமா?”

“ஆமா”

“ராதிகா அவ விருப்பப்பட்டவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா ன்னு அவ குடும்பத்துக்கிட்ட இத்தனை வருஷம் பேசாம இருந்தோம் இல்லையா?”

“ஆமா”

“அதுலயும் அவ மேல உங்க அம்மாக்குத்தான் ரொம்ப கோவம். “

“தெரியுமே”

“பாசமும் அவ மேலத்தான் ஜாஸ்தி. ராதிகான்னா உங்கம்மாக்கு உயிர். கல்யாணத்துக்கு அப்புறம் முதல் முறையா அவளும் மாப்பிள்ளையும் பேரனும் வர்றாங்கன்னு உங்க அம்மா தல கால் புரியாம சந்தோஷமா இருக்கா. இருந்துட்டுப் போகட்டும். விடு. உங்க அம்மாவை இப்படி சந்தோஷமாப் பார்த்து எவ்வளவு வருஷம் ஆச்சு தெரியுமா?” காளிமுத்து நெகிழ்வாய் சொல்ல குமார் அவரை பாசமாய் பார்த்தான்.

“குமார்” அன்னம்மாள் அழைத்தார்.

“என்னம்மா?”

“அவளுக்கு கொஞ்சம் போன் பண்ணு அவ எங்க வந்துட்டு இருக்கா ன்னு கேளு.”

அன்னம்மா சொல்ல குமார் பொய்கோபத்துடன் முறைத்தான்.

“இப்பதானேம்மா சொன்னேன்? ஒட்டன்சத்திரம் தாண்டி வந்துட்டு இருக்காங்கன்னு “

குமார் சொல்ல அன்னம்மாள் சிரித்தார்.

“அது வேற ஒண்ணும் இல்லப்பா. ஒரு மாதிரி பரபரப்பா இருக்கு அதான்” அன்னம்மாள் சொல்லிவிட்டுப் போக அதே நேரத்தில் குமாரின் மொபைல் அடித்தது.

“ஹலோ”

“குமார் .ராதிகா பேசறேன்” அவள் குரலில் எக்கச்சக்கமாய் பதட்டம் தெரிந்தது. அது குமாரையும் ஒட்டிக்கொண்டது.

“அக்கா என்னாச்சுக்கா?”

“குமார்”

“சொல்லுக்கா”

“ஒரு நிமிஷம் நீ தனியா வா நீ பேசறத யாரும் கேட்கக்கூடாது “

“சரிக்கா”

சொன்னவன் தன் அறைக்கு விரைந்தான். உள்ளே வந்து கதவை சாத்தினான்.

“குமார் ஒரு சின்ன பிரச்சனை”

“என்னக்கா சொல்லுக்கா சரி பண்ணிடலாம்”

“நான் சொன்னா உனக்கு நம்பிக்கை வராது ஆனாலும் சொல்றேன்”

“சொல்லுக்கா என்னக்கா ஆச்சு?”

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி திடீர்னு ஏதோ ஒரு உருவம் பேனட்ல வந்து மோதுச்சு. “

“அய்யோ என்னக்கா சொல்ற?”

“அது மட்டுமில்ல”

“வேற என்ன நடந்துச்சு? சொல்லுக்கா”

“ஊருக்கு போகாத ஆபத்து திரும்பிப் போ” ன்னு

“யாருக்கா அது?”

“மூணு தடவை சத்தம் மட்டும் கேட்டுச்சு ஆனா குரல் எங்கிருந்து வந்ததுன்னு தெரியல”

ராதிகா சொல்ல குமாருக்கு ஒன்றும் புரியவில்லை.

“இப்ப எங்க இருக்கீங்க?”

“வாடிப்பட்டி தாண்டிட்டோம்”

“நீங்க எதுவும் குழம்பாம கிளம்பி வாங்க.”

“குமார்”

“சொல்லுக்கா”

“அப்பா அம்மாக்கு இன்னும் கோவம் இருக்கா?”

“நிச்சயமா இருக்குக்கா ஆனா அதைவிட உன் மேல பாசம் தான் ஜாஸ்தியா இருக்கு ரெண்டு பேருக்கும்”

“சரி குமார் நாங்க கிளம்பி வர்றோம் வேற ஒன்னும் பிரச்சனை வந்துடாதே?”

“ஒரு பிரச்னையும் வராதுக்கா. நான் இருக்கேன் வா”

“சரி குமார்”

போனை வைத்த ராதிகாவையே பார்த்தான் அன்பு.

“உன்னோட தம்பி என்ன சொல்றான்?”

“அங்க எல்லாரும் நம்மளத்தான் ரொம்ப எதிர்பார்க்கிறாங்களாம்.”

“நம்ப முடியல ராதிகா”

“என்ன சொல்றீங்க?”

“இதுவரைக்கும் ரொம்ப கோவமா இருந்தாங்க. அப்படியே சடனா மாறி இவ்வளவு பாசம் காட்டறாங்கன்னா ஒண்ணுமே புரியல.”

“எங்க வீட்ல மட்டும் இல்ல எங்க ஊரே அப்படித்தான்”

“நல்ல ஊர் போ. நீ மட்டும் நம்ம ராகுலுக்கு வேற எங்கயாவது மொட்டை போடலாம்னு சொல்லியிருந்தா இங்க வந்தே இருக்கத் தேவையில்ல “

“அப்படி இல்லப்பா நம்ம குழந்தையோட முதல் மொட்டை நம்ம குலதெய்வம் கோயில்ல போய் போடணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை. அதான் மாமாக்கு போன் பண்ணி சொன்னேன் மாமா போய் அம்மாகிட்ட சொல்லிட்டாரு உடனே அவங்க போன் பண்ணி என்கிட்ட பேசவும் எனக்கு அழுகை வந்துருச்சு தெரியுமா?”

“ராதிகா இந்த கதையை நீ எத்தனாவது தடவை என்கிட்ட சொல்றே தெரியுமா? நான் பாவம்” அன்பு சிரித்தபடி சொல்ல ராதிகா மௌனமாய் பார்த்தாள்.

“ஏங்க?”

“சொல்லு ராதிகா”

“வர்றப்ப என் காதுல ஊருக்குப் போக வேண்டாம் ஆபத்துன்னு எனக்கு கேட்டுச்சே. அது உங்களுக்கு கேட்கலையா என்ன?”

“நிஜமா அப்படி ஒண்ணும் எனக்கு கேட்கல. இப்பக் கூட நீ சொல்றது என்னால நம்ப முடியல ராதிகா. ஏதோ ஒரு பிரமை உனக்குன்னு நினைக்கிறேன் “

“எனக்கு என்னமோ மனசுக்குள்ள ஒரு மாதிரி பயமா இருக்கு”

“அப்ப சொல்லு நம்ம வீட்டுக்கு திரும்பிப் போயிடலாமா?”

“வேண்டாம் நமக்காக அவங்க எல்லாம் காத்துட்டிருக்காங்க. “

“ம்”

அதன்பின் ராதிகா ஒன்றும் பேசவில்லை.

கார் அடுத்த முக்கால் மணி நேரத்தில் ஒத்தக்கடையைத் தாண்டியது. சப் ரெஜிட்ரர் அலுவலகத்தைத் தாண்டும் போது அன்பு ராதிகாவிடம் கேட்டான்.

“இப்ப எப்படி போகணும்?”

“காளமேகப் பெருமாள் கோவில் வரும். அதுக்கு ஆப்போசிட்ல உள்ளப் போகணும் “

கார் பெருமாள் கோவிலை தாண்டி ஊருக்குள் நுழைந்தது. திடீரென்று எங்கிருந்தோ வந்த காற்று ஆவேசமாய் சுழன்றது. அன்புவிற்கு எதையும் பார்க்க முடியவில்லை.

‘என்னடா ஒரு தடவை சொன்னா கேக்க மாட்டியா உயிரை விடறதுக்குன்னே வந்திருக்கியா?’ அட்சர சுத்தமாய் குரல் அவன் காதில் கேட்க அன்பு அதிர்ந்தான்.

அருகில் யாராவது இருக்கிறார்களா என்று சுற்று முற்றும் பார்த்தான். எவரும் இல்லை .பின் இந்த குரல் எப்படி?

அவன் முகத்தில் தெரிந்த அதிர்ச்சி ராதிகாவை திடுக்கிட வைத்தது. அன்பு சுதாரித்தான்.

இதை நான் இவளிடம் இப்பொழுது சொன்னால் பயந்து விடுவாள் வேண்டாம்.

“என்னங்க ஆச்சு?”

“நத்திங்” சொன்னவன் மிகக் கவனமாய் காரை செலுத்தினான்.

கொஞ்ச தூரம் போகும்போதே காளிமுத்துவும் குமாரும் அவன் கண்களில் பட்டனர்.

“வாங்க மாப்பிள்ள வாம்மா ராதிகா” காளிமுத்து கண்களில் நீருடன் சொல்ல ராதிகா நெகிழ்ந்தாள்.

அன்பு ராதிகா தங்கள் மகன் ராகுலுடன் காரில் இருந்து இறங்கினர். வீட்டிற்குள் செல்வதற்கு முன்பே அன்னம்மாள் எதிரில் வர ராதிகா “அம்மா” என்றபடி முன்னால் போய் நிற்க அன்னம்மாள் ராதிகாவையே பார்த்தார். சட்டென்று உடைந்து அழுதார்.

“ஏண்டி உன் மேல பாசத்தை காட்டினதத் தவிர நாங்க வேற என்ன தப்பு பண்ணோம் சொல்லு”

“அம்மா”

“எத்தனை நாள் வாசலப் பார்த்துட்டே உட்கார்ந்திருந்தேன் தெரியுமா?” கேட்ட அன்னம்மாவின் பார்வை ராகுல் மீது பட்டது.

“உன் குழந்தையா?” பரவசத்துடன் கேட்டபடி ராகுலிடம் திரும்பினார்.

“வாய்யா உன் பாட்டியப் பார்க்க இப்பத்தான் உனக்கு வழி தெரிஞ்சதா?” கேட்டபடி ராகுலை அணைத்துக்கொண்டார்.

காளிமுத்து லேசாக தொண்டையை செருமப் புரிந்து கொண்ட அன்னம்மாள் அன்புவை ஏறிட்டார்.

“வாங்க”

“ம்”

குமார் அன்புவின் அருகில் வந்தான்.

“உட்காருங்க மாமா சாப்பிடலாம்”

“ம்”

குமாரின் மனைவி வேணி அனைவரையும் புன்னகையுடன் பார்த்தபடி “எல்லாரும் உட்காருங்க சாப்பிடலாம் “ என்றபடி வரிசையாக விரிக்கப்பட்டிருந்த வாழை இலைகளில் இனிப்பு சாதம் நாட்டுக்கோழி வறுவல் பரிமாறினாள்.

“அத்தை” ராகுல் அழைக்க வேணி பாசமாய் அவன் பக்கம் திரும்பினாள்.

“என்னப்பா என்ன வேணும்?”

“அந்த அண்ணனுக்கு சாப்பாடு வைக்கலையா? அவர் மட்டும் அழுதுட்டு நிக்கறார்?” ராகுல் மழலை மொழியில் கேட்க திரும்பிப் பார்த்த வேணி அங்கே யாரும் இல்லாமல் திகைத்தாள்.

“யாரும் இல்லையே” வேணி சொல்ல ராகுல் கை காண்பித்தபடி சொன்னான். “அதோ அங்க இருக்கார் அண்ணன்”

வேணி மீண்டும் திரும்பிப் பார்த்து யாரும் இல்லை என்று திகைப்பாய் பார்க்க அதே நேரத்தில் குமார்

“வேணி மாமாக்கு குடலெடுத்து வை” சொல்ல அன்புவிற்கு பரிமாறினாள்.
அன்புவை ராகுல் சொன்னது திடுக்கிட வைத்திருந்தது.

அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்தனர்.

எங்கிருந்தோ ஏதோ ஒரு மிருகம் ஊளையிடுவது போல் சத்தம் கேட்க அன்பு பதறினான்.

“என்னது?”

காளிமுத்து புன்னகையுடன் சொன்னார்.

“அது மரப்பட்டி மாப்பிள்ள. இப்படி ஊளையிடும். சில நேரம் அழுகை சத்தம் மாதிரி கேட்கும். இதைக் கேட்டு பழகாதவங்க ரொம்பப் பயந்துடுவாங்க எங்களுக்கு இந்த சத்தம் பழகிடுச்சு.”

“ஓ”

“உங்களுக்கு உள் ரூம்ல எல்லா அரேஞ்மென்ட் பண்ணியிருக்கு மாப்பிள்ள. நீங்களும் பாப்பாவும் அங்க தூங்கலாம். “

“சரி மாமா” சொன்னவன் அழைத்தான்.

“மாமா”

“சொல்லுங்க மாப்பிள்ள”

“ராகுலுக்கு முதல் மொட்டை குலதெய்வம் கோயில்ல அடிக்கணும்னு ராதிகா ஆசைப்பட்டா”

“கவலைய விடுங்க சிறப்பா பண்ணிடலாம் “

“குலதெய்வம் கோயில் இங்கிருந்து எவ்வளவு கிலோமீட்டர் மாமா?”

“பதினஞ்சு கிலோமீட்டர் வரும். பத்து கிலோமீட்டர் தான் கார் போகும். உள்ள அஞ்சு கிலோமீட்டர் இருக்கு. சில நேரம் குதிரை வண்டி கிடைக்கும். சில நேரம் ஒண்ணும் கிடைக்காது. நடந்துதான் போகணும் “

“சரிங்க மாமா”

“நீங்க போய் தூங்குங்க மத்தது காலைல பேசிக்கலாம் “

“சரிங்க மாமா”

அனைவரும் உறங்கிவிட அன்னம்மாள் மட்டும் உறங்காமல் அமைதியாக எங்கோ பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

சற்று நேரத்தில் காம்பவுண்ட் சுவர் மீது ஒரு உருவம் எகிறிக் குதித்தது. முற்றத்தில் அமர்ந்திருந்த அன்னம்மாளையே பார்த்தது. அவர் அருகில் சென்றது.

அப்போது அந்த அழுகுரல் அந்தப் பிரதேசத்தை உலுக்க ராதிகா பதறிப்போய் எழுந்தாள். ஜன்னல் வழியாக பார்க்க ஒன்றும் தெரியவில்லை. அருகில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த அன்புவை
எழுப்பினாள்.

“ஏங்க”

அன்பு சிரமப்பட்டு இமைகளைப் பிரித்தான்.

“என்ன ராதிகா ?”

“யாரோ அழற சத்தம் கேட்டுச்சு”

“அதுவா அது மரப்பட்டியா இருக்கும். மாமா சொன்னாரே”

“புரியல”

“காட்டுல மரப்பட்டின்னு ஒரு விலங்கு இருக்கு அது கத்தறது பெரும்பாலும் மனுஷங்க கத்தற மாதிரி தான் கேட்குமாம். “

“யார் எங்கப்பா சொன்னாரா?”

“ம்”

“எனக்கு என்னமோ பயமா இருக்கு நீங்க கொஞ்சம் என்னன்னு பாருங்க” ராதிகா அழாக்குறையாக சொல்ல அன்பு எழுந்தான்.

இந்நேரம் மற்றவர்களை எழுப்பினால் அது சரியாக வராது.

யோசித்தவன் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான். இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. தன் மொபைல் டார்ச்சை ஆன் செய்து மீண்டும் பார்த்தான். அதிர்ந்தான். மொபைல் வெளிச்சத்தில் பளீரென்று மின்னின ஒரு ஜோடி கண்கள்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!