அன்புவிற்கு உள்ளே பயம் இருந்தாலும் அந்தக் கண்களை மீண்டும் பார்க்க மொபைல் டார்ச் அடித்துப் பார்த்தான்.
சற்று முன் பார்த்த அந்தக் கண்களைக் காணவில்லை.
அன்பு திடுக்கிட்டான். மொபைலை எல்லாப் பகுதிகளுக்கும் வெளிச்சம் படும்படி வைத்துப் பார்த்தான்.
“அன்பு” ராதிகா அழைத்தாள்.
“ம்”
“ஏன் இப்படி வேர்க்குது உங்களுக்கு?”
“ராதிகா”
“ம்”
“ஒரு விஷயம் சொன்னா பயப்படாத”
அவன் சொல்ல ராதிகா பதட்டமாய் கேட்டாள்.
“என்னங்க?”
“நாம இங்க இருந்து சீக்கிரமா போயிடலாமா?”
“மொட்டையடிக்கிறதுக்கு இன்னும் மூணு நாள் தானே இருக்கு? “
ராதிகா புரியாமல் கேட்க அன்பு மேற்கொண்டு ஒன்றும் சொல்லவில்லை.
நிச்சயமாக இங்கே ஏதாவது ஆபத்து நிகழப்போகிறது. யாரோ எங்களை கண்காணிக்கிறார்கள். வெளியில் சென்று பார்க்கலாமா? ஒருவேளை அது யார் என்று தெரிந்து கொள்ள முடியும்.
அன்பு யோசித்தான்.
“ராதிகா”
“ம்”
“டார்ச் லைட் எடு. நான் வெளில போய் பார்க்கறேன் “
“எதுக்குங்க இந்த நேரத்துல வெளியில போகணும்? வேண்டாம் படுங்க “ ராதிகா சொல்ல அப்போது வெளியில் யாரோ நடக்கும் சத்தம் கேட்க அன்பு இம்முறை மொபைல் வெளிச்சம் இல்லாமல் ஜன்னல் வழியே பார்த்தான். யாரோ நடந்து போவது தெரிந்தது. அன்பு பிரமை பிடித்தவன் போல் பார்க்க சற்று தூரம் நடந்த அந்த உருவம் சட்டென்று திரும்பி அன்புவைப் பார்த்தது.
***
எப்போது தூங்கினோம் என்றே தெரியாமல் நன்றாகத் தூங்கி எழுந்த ராதிகா காலையில் எழும்பொழுது மணி ஏழைத் தாண்டியிருந்தது.
எழுந்தவள் அருகில் பார்க்க யாருமில்லை.
எங்கே போனார்கள்? யோசித்தபடி வெளியில் வந்தாள்.
அன்னம்மாள் மடியில் ராகுல் அமர்ந்திருந்தான்.
“பாட்டி”
“ம்”
“உங்க ஊரு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”
“ம்”
“நானும் உங்க கூட இங்கயே இருந்திரட்டா?”
கேட்ட ராகுலை அழுத்தமாய் பார்த்தபடி அன்னம்மாள் சொன்னார்.
“நீ இங்கதான் இருக்கப் போறே”
“ஐ ஜாலி. நிஜமாவா பாட்டி?”
“ஆமா”
“உங்க ஊர்ல ஈகிள் இருக்கா?”
“அப்படின்னா…?”
“உயரமாப் பறக்குமே?”
“தெரியலயே”
இருவரும் பேசுவதை மகிழ்வாய் வேடிக்கை பார்த்த ராதிகா இடையில் சொன்னாள்.
“கழுகும்மா”
“கழுகா?”
“ம்”
“இங்கு நிறைய கழுகு இருக்கு. கவனமா இருக்கணும். இல்லன்னா…?” அன்னம்மாள் சொல்ல ராகுல் கேட்டான்.
“இல்லன்னா என்ன பாட்டி?”
கேட்ட ராகுலுக்கு பதில் சொல்லாத அன்னம்மாள் வாசலைப் பார்க்க அன்பு உள்ளே நுழைந்தான்.
“எங்க போனீங்க?” ராதிகா கேட்க அவளுக்கு பதில் ஒன்றும் சொல்லாத அன்பு கண்களால் அவளை உள்ளே வரும்படி அழைத்தான்.
உள்ளே வந்த ராதிகா கேட்டாள்.
“என்னங்க?”
“நேத்து நாம வீட்டுக்கு வரும்போது இங்க மழை இல்ல”
“சரி அதுக்கென்ன இப்ப?”
“நைட் மழை இருந்தது. ஞாபகம் இருக்கா?”
“ஆமா”
“காலைல முதல் ஆளா நான் வெளில போய் பார்த்தேன்”
“என்ன பார்த்தீங்க?”
“ஒரு செருப்புத்தடம் நம்ம வீட்டுக்குள்ள இருந்துச்சு. “
அன்பு சொல்ல ராதிகா திகிலாய் பார்த்தாள்.
“என்னங்க சொல்றீங்க?”
“காலையில இருந்த செருப்புத் தடம் இப்ப இல்ல “
“அப்படின்னா?”
“யாரோ நம்ம வீட்ல இருந்து வெளில போயிட்டு வந்திருக்கலாம். இல்லன்னா வேற யாராவது நம்ம வீட்டுக்கு வந்திருக்கலாம். “
“நைட்ல யா?”
“ஆமா”
“நம்ம வீட்ல இருந்து கூட யாராவது போயிருக்கலாம் இல்லையா?”
“ம்”
“அப்ப அது சாதாரண விஷயம்தானே? நீங்க எதுக்கு இப்ப இந்த விஷயத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரீங்க?” ராதிகா கேட்க அன்பு தனக்குள் சொல்லிக் கொண்டான்.
‘நேற்று அந்த கண்ணப் பார்த்தது நான்தான். அதான்’
“என்ன நான்பாட்டுக்கு கேட்டிட்டிருக்கேன். நீங்க அமைதியா இருக்கீங்க பதில் சொல்லாம?”
“உனக்கு புரியுதா ராதிகா நான் என்ன சொல்றேன்னு?”
“சரியா புரியல”
“நம்ம வீட்ல இருந்து யாராவது ஒருத்தர் வெளியில போயிட்டு வந்திருந்தா அது ஒரு சாதாரணமான விஷயம். ஆனால் அந்த செருப்புத்தடம் யாரும் பார்த்திரக்கூடாதுன்னு உடனே அழிச்சிருக்காங்க. “
அன்பு சொல்ல ராதிகாவிற்கு ஏதோ புரிவது போல் இருந்தது.
“அப்படின்னா என்ன சொல்றீங்க?”
“மொட்டை போட்டு முடிக்கிற வரைக்கும் கவனமா இருக்கணும். ராகுலையும் பத்திரமா பார்த்துக்கணும்.” சொன்னவன் கைகளை பிடித்த ராதிகா பயமாய் கேட்டாள்.
“ஒண்ணும் பிரச்னை வராதுதானே?”
“தெரியல” சொன்னவன் கதவருகில் சென்று வேகமாய் கதவைத் திறந்தான். வெளியே வேணி காபிக் கோப்பைகளுடன் நின்றாள்.
“இந்தாங்க காபி” வேணி சொல்ல வாங்கிக் கொண்ட அன்பு மனதில் கேள்வி ஓடியது.
‘இவள் எப்போது வந்திருப்பாள் ? எல்லாம் கேட்டிருப்பாளோ?’
“மாமா” குமார் அழைக்க அன்பு வெளியே வந்தான்.
“சொல்லுங்க குமார்”
“வாங்க போங்கல்லாம் வேண்டாம் மாமா. சும்மா வா போன்னே கூப்பிடுங்க “ குமார் எதார்த்தமாகச் சொன்னது அன்புவிற்கு குமாரை பிடிக்க வைத்தது.
“குமார்”
“சொல்லுங்க மாமா”
“நீங்க எப்ப ஃப்ரீ?”
“ஃப்ரீ தான் மாமா நீங்க சொல்லுங்க”
“இல்ல எனக்கு இந்த ஊரை சுத்திப் பார்க்கணும் “ அன்பு சொல்ல குமார் சிரித்தான்.
“என்ன மாமா காமெடி பண்றீங்க?”
“ஏன்?”
“இந்த ஊர்ல ஒண்ணுமே இல்ல மாமா”
“புரியல”
“இங்க மொத்தம் இருபது வீடு இருக்கு மாமா. அதுலயும் நாலு வீடு காலியா இருக்கு இந்த ஊருக்கு ஒரே ஒரு கோயில் மட்டும் தான் இருக்கு. அந்த கோயிலும் பௌர்ணமிக்கு மட்டும்தான் திறக்கும். மத்த நாள்ல திறக்காது “
“ஓ”
“அதான் மாமா சிரிச்சேன் இங்க என்ன சுத்திப் பார்க்கறதுக்கு இருக்கு?”
“அது என்ன கோயில்?”
“காளியம்மன் கோவில் மாமா”
“ம்”
“எதுக்கு மாமா கேட்டீங்க?”
“சும்மாத்தான்”
“அங்க நான் இதுவரைக்கும் போனதே இல்ல மாமா”
“ஏன்?”
“அங்கே யாருமே போக மாட்டாங்க மாமா. அதுக்கு காரணம் அங்க இருக்கிற காளியம்மன் ரொம்ப உக்ரமா இருக்கும்னு சொல்வாங்க. ரொம்ப வருஷத்துக்கு முன்னால ஒரு சின்னப் பையன அந்தக் காளி காவு வாங்கிடுச்சின்னு சொல்வாங்க. அதுல இருந்து எல்லாருக்கும் பயம். அந்தக் கோயில் எப்பவுமே பூட்டித்தான் வச்சிருப்பாங்க. ஒரே ஒரு பூசாரி இருக்கிறார். அவரும் பௌர்ணமிக்கு மட்டும் வந்துட்டு ஒரு மணி நேரம் பூஜை பண்ணிட்டுப் போயிடுவாரு”
குமார் சொல்ல அன்பு உன்னிப்பாய் கேட்டான்.
“நைட் கூட இங்க இருக்கிறவங்க வெளிய போக மாட்டாங்க மாமா” சொன்ன குமார் தொடர்ந்தான். “ஊருக்குள்ள காளியோட நடமாட்டம் இருக்குன்னு சொல்லுவாங்க “
குமார் சொல்ல அன்புவிற்கு முன்தினம் இரவு பார்த்த ஒரு ஜோடி கண்கள் நினைவிற்கு வந்தன.
***
பெளர்ணமி வெளிச்சத்தில் கோவில் ஒளிர்ந்தது.
ராகுல் பயமாய் பார்க்க எதிரில் அது நின்றது.
“யார் நீ?”
“என் கூட வந்துடறியா?” அது கேட்க ராகுல் மறுப்பாய் தலையாட்டினான்.
“இல்ல வரமாட்டேன்”
அது சிரித்தது.
“இங்க பாரு நான் சொல்றத ஒழுங்கா கேளு. இந்த பீடத்துல வந்து தலைய வை” கேட்டபடி கையில் அந்த ஆயுதத்தை எடுக்க ராகுல் பயந்து போய் ஓடினான்.
“என்னை விடு அப்பா அம்மா கிட்ட நான் போகணும்” ராகுல் கத்த அது சட்டென்று ஆங்காரமாய் அவனைப் பார்த்தது.
“சொன்னா கேக்க மாட்டியா?” அவனை நாலு எட்டில் பிடிக்க ராகுல் அலறினாள்.
அவன் தலையைப் பீடத்தின் மேல் வைத்து இடது கையால் அவன் தலையைப் பிடித்து வலது கையால் அந்த ஆயுதத்தில் அவன் கழுத்தை வெட்டப் போக…
“அப்பா” ராகுல் அலற…
பதறியடித்து எழுந்தான் அன்பு.
அருகில் ராதிகாவும் ராகுலும் உறங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தவன் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டான்.
இந்த மாதிரி கனவு ஏன் எனக்கு வர வேண்டும்? ஒருவேளை குமாரிடம் பேசியதை ஆழ்ந்து யோசித்திருப்பேனோ?
குமார் என்ன சொன்னான்?
அந்த காளி கோவிலுக்கு யாரும் செல்வதில்லை .நிறைய வருடங்களுக்கு முன்பு யாரோ ஒரு சிறுவன் அங்கே கொல்லப்பட்டிருக்கிறான்.
காளி காவு வாங்கியதாக ஊரார் நம்புகிறார்கள். முதலில் அந்தக் கதை உண்மையா என்று விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். யாரிடம் கேட்பது?
அப்படி ஒருவேளை ஏதாவது ஒரு சிறுவன் அங்கே கொல்லப்பட்டிருந்தால் அது நிச்சயமாக காளி காவு வாங்கியதாக இருக்காது. வேறு ஏதாவது காரணத்திற்காக வேறு எவராவது கொலை செய்திருப்பார்கள். அப்படி என்றால் அவர்கள் யார்? எதற்காக அந்த சிறுவனை கொலை செய்ய வேண்டும்? கேள்விகள் மட்டும் தான் எனக்குள். இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை காண்பதற்காகவா நான் இங்கு வந்திருக்கிறேன்? என் மகனுக்கு மொட்டை போட்டு முடித்த பின் இந்த ஊருக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. மீண்டும் நான் இங்கே வருவதற்குக் கூட யோசிப்பேன். அப்படி இருக்க இது எனக்கு தேவையில்லாத வேலை தான்.
ஆனால் அப்படியும் என்னால் ஒதுங்கிப் போக முடியாது. அதற்கு காரணம் இந்த ஊருக்கு வரும்போது ராதிகா விற்கும் எனக்கும் ஏதோ ஒரு குரல் எச்சரிக்கை செய்திருக்கிறது. எனக்கு என்னவோ ஏதோ நிச்சயமாக விபரீதம் நடக்கும் என்று தோன்றுகிறது. ஆனால் அது என்னவென்று தெரியவில்லை. அதற்கு காரணம் யாராக இருப்பார்கள் என்று கூட இன்னும் எனக்கு தெரியவில்லை.
நேற்று இரவில் மழை பெய்யும் போது வீட்டில் இருந்து யாரோ வெளியில் சென்று மீண்டும் வந்திருக்கிறார்கள். ஒருவேளை நான் கண்ட கண்கள் இங்கே எவருடையதாக இருக்குமா?
தெரியவில்லை.
இருட்டில் கண்டதால் எதையும் சரியாக என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது இந்த வீட்டில் யாரோ ஒருவர் எங்களுக்கு நடக்கப் போகும் விபரீதத்திற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் எதையும் உறுதிப்படுத்தாமல் என்னால் எதுவும் செய்ய முடியாது.
தனக்குள் பலவிதமாக யோசித்த அன்பு மெல்ல எழுந்தான். வெளியே வந்தான். நடந்தான். காளிமுத்து கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். நடந்தான். குமார் அறையில் மெலிதான குறட்டை ஒலி கேட்டுக் கொண்டிருந்தது.
வேணி குமாரின் அறையில் இருப்பாள். அன்னம்மாள் எங்கே?
அன்பு மனதில் அந்தக் கேள்வி வர சுற்றுமுற்றும் பார்த்தவன் காதில் வீட்டிற்குப் பின்னால் இருந்து ஏதோ சத்தம் கேட்கத் தயங்கினான்.
போய் பார்க்கலாமா?
பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த டார்ச்சை எடுத்தான். மெல்ல நடந்து பின்பக்க கதவை அடைந்தான். கதவை மெல்ல தள்ளிப் பார்க்க அது வெளிப்பக்கம் பூட்டியிருந்தது. அன்பு அதிர்ந்தான்.
யாரோ வீட்டிலிருந்து இந்நேரம் வெளியில் சென்றிருக்கிறார்கள் அதுவும் பின்பக்க கதவை வெளியிலிருந்து பூட்டி விட்டு சென்றிருக்கிறார்கள்.
யோசித்த அன்பு சற்று எம்பி வெளியில இருப்பதைப் பார்க்க முடியுமா என்று பார்த்தான். பார்க்க முடிந்தது.
அங்கே ஒரு திட்டில் அன்னம்மாள் சலனமற்று அமர்ந்திருக்க அருகில் ஒரு கழுகு.