Home Featuredஒரு பௌர்ணமி நாளில் 3

ஒரு பௌர்ணமி நாளில் 3

Crime Story

by GK Tamil Novels
16 views

அன்புவின் இதயம் படபடத்தது.

இங்கே ஏதோ தவறாக இருக்கிறது. வந்த நாள் அன்றே அன்னம்மாள் என்னைப் பார்த்த பார்வை சரியில்லை.

இப்போது என்ன செய்வது? மற்றவர்களிடம் சொன்னாலோ அல்லது ஏதாவது தெரிந்ததாக காட்டிக் கொண்டாலோ ஆபத்து இன்னும் அதிகமாகத்தான் இருக்கும்.

யோசித்த அன்பு ஓசைப்படாமல் நடந்து தங்கள் அறையை அடைந்தான்.

ராதிகாவும் ராகுலும் இன்னும் நல்ல உறக்கத்தில் இருக்க அன்பு வாட்டர் சைக்கிள் இருந்த நீரை எடுத்துக் குடித்தான்.

இங்கே மொட்டை போட வேண்டாம்:விடிந்ததும் ஏதாவது காரணம் சொல்லி உடனடியாக ராதிகாவையும் ராகுலையும் அழைத்துக் கொண்டு இங்கே இருந்து போய்விட வேண்டும்.

யோசித்த அன்பு எப்பொழுது விடியும் என்று காத்திருந்தான். பார்வை மட்டும் ஜன்னல் வழியாக பின் கதவை நோக்கி இருந்தது.

இந்நேரம் அன்னம்மாள் அங்கே அமர்ந்திருப்பதற்கான காரணம் என்னவாக இருக்க முடியும்? கூட ஒரு கழுகும் இருக்கிறதே. பொதுவாக கழுகுகள் இரவில் எங்கும் பறப்பதில்லை. ஆனால் இந்த கழுகு அன்னம்மாளுடன் அமர்ந்திருப்பதைப் பார்த்தால் ஏதோ நீண்ட நாட்கள் அன்னம்மாள் பழக்கியது போல் தோன்றுகிறதே.

யோசித்தவன் கவனத்தை ஈர்த்தது அந்த சத்தம்.

அழுகுரல். முன்தினம் இரவு கேட்ட அதே அழுகுரல்.

இது மரப்பட்டி என்றல்லவா மாமா சொன்னார்? அப்படியென்றால் இது அதல்லவா? மாமாவிற்கும் ஒருவேளை எல்லாம் தெரிந்திருக்குமோ?

யோசித்த அன்பு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அறையில் இருந்து வெளியே வந்தான்.

பின் கதவு இன்னும் திறக்கப்படவில்லை. காளிமுத்துவின் அறைக்கதவு திறந்திருக்க அவர் எப்படி உறங்கினாரோ அதே நிலையில் உறங்கிக் கொண்டிருக்க அன்பு யோசித்தபடி நடக்க

“என்ன தூக்கம் வரலையா?” குரல் கேட்டவன் திடுக்கிட்டுப் பின்னால் பார்க்க அன்னம்மாள் நின்றிருந்தார்.

அன்புவின் இதயம் தாறுமாறாய் துடிக்க மௌனமாய் ஏறிட்டவனை

“ஏதாவது வேணுமா?” அன்னம்மாள் மீண்டும் கேட்க

“வேண்டாம் அத்தை” சொன்னபடி தன் அறையை நோக்கி ஓடினான்.

வேகமாக உள்ளே வந்து கதவை அடைக்கும் போது எதார்த்தமாக அவன் பார்வை பின் கதவை நோக்கிப் போக அது இன்னும் பூட்டப்பட்டிருந்தது.

எப்படி அன்னம்மாள் உள்ளே வந்திருக்க முடியும்? வெளியே நான் பார்த்தது அவர்தானா?

நிச்சயம் அது அன்னம்மாள்தான்.

யோசித்தவன் திரும்பிப் பார்க்க ஜன்னலில் அமர்ந்திருந்த கமுகு ராகுலையே பார்த்தது. அதன் பார்வையில் உக்கிரம்.

***

“என்ன சொல்றீங்க?” ராதிகா பதட்டமாய் கேட்டாள்.

“சில விஷயங்களை வீட்ல சொல்ல முடியாதுன்னு தான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன் “ அன்பு சொல்ல ராதிகா அவனையே பார்த்தாள்.

“சொல்லுங்க”

“உங்க வீட்ல ஏதோ ஒரு வில்லங்கம் இருக்கு”

“என்ன சொல்றீங்க?”

“நல்லா யோசிச்சுப்பாரு நாம வரும்போது ஏதோ ஒரு குரல் உன்கிட்ட போக வேண்டாம் ஆபத்துன்னு சொன்னது. கரெக்டா ?”

“ஆமா ஆனா நீங்க தான் அத நம்பலையே?”

“நாம வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி சூறாவளி மாதிரி காத்து சுத்துச்சு பார்த்திருப்பே?”

“ஆமா”

“அப்ப என்னோட காதுலயும் ஒரு குரல் கேட்டுச்சு” அன்பு சொல்ல ராதிகா அவனை பதட்டமாய் பார்த்தாள்.

“என்னங்க சொல்றீங்க?”

“உயிரை விடறதுக்குன்னே இங்க வந்தியா ன்னு”

“ஐயோ”

“பயப்படாத “

“எப்படிங்க பயப்படாம இருக்க முடியும்?”

“ராதிகா பயப்படறதவிட முதல்ல இங்கிருந்து நாம கிளம்பணும். ஆனா அது அவ்வளவு ஈஸி கிடையாது”

“ஏங்க இப்படி சொல்றீங்க?”

“முந்தாநாள் நைட் நான் ஜன்னல் வழியா வெளியே பார்க்கறப்ப மொபைல் டார்ச் வெளிச்சத்தில ரெண்டு கண்ணப் பார்த்தேன்”

அன்பு சொல்ல ராதிகாவின் முகம் பயத்தில் வெளிறியது.

“திரும்பப் பார்க்கிறப்ப யாரோ நடந்து போனத மட்டும் பார்த்தேன்”

“ம்”

“காலையில நம்ம வீட்டுல ஒரு செருப்புத்தடம் இருந்துச்சு. அத அப்புறம் யாரோ அழிச்சிட்டாங்க. உங்க கிட்ட கூட சொன்னேன்”

“ஆமா”

“நேத்து நைட்டு ஒரு விஷயத்தை பார்த்தேன் உன் கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல”

“சொல்லுங்க என்ன விஷயம்?”

“நைட் தூக்கம் வரலன்னு சும்மா அப்படியே நடந்தேன் அப்பதான் பின்னாடி ஏதோ சத்தம் கேட்டுச்சு. பின் கதவை திறந்து பார்க்கலாம்னு போனேன். ஆனா அதை யாரோ வெளியில பூட்டிருந்தாங்க “

“அப்படின்னா?”

“நம்ம வீட்ல இருந்து யாரோ வெளியில் போய் இருக்கணும் அப்படித்தானே?”

“ஆமா அப்படி யாரும் போனாங்களா என்ன?”

“ஆமா போயிருக்காங்க”

“என்னங்க சொல்றீங்க யாருங்க அது?”

“உங்கம்மாதான். “

அன்பு சொல்ல ராதிகா கோபமாய் பார்த்தாள்.

“என்ன உளறல் இது?”

“ராதிகா ப்ளீஸ் என்னை நம்பு உங்க அம்மா கிட்ட என்னமோ தப்பிருக்கு”

“இனிமே நீங்க எங்க அம்மாவப்பத்தி ஒரு வார்த்தை தப்பா பேசக்கூடாது.”

“ராதிகா நான் என்ன சொல்ல வர்றேன்னு கேளு”

“வேண்டாம் இவ்வளவு வருஷம் எங்கம்மா என்னை பிரிஞ்சிருந்தது போதும் இனிமே அதையும் இதையும் சொல்லி பிரச்னை எதுவும் பண்ணாதீங்க “

“சரி”

“வந்தது வந்துட்டோம் ராகுலுக்கு மொட்டை அடிச்சிட்டுத்தான் கிளம்பறோம் “ ராதிகா சொல்ல அன்பு ஒன்றும் சொல்லாமல் மௌனமாய் நின்றான்.

இவளிடம் இதற்கு மேல் எதுவும் பேச முடியாது. என்ன செய்யலாம்?

யோசித்தான்.

“என்ன யோசிக்கிறீங்க?”

“சரி ராதிகா நீ சொல்றபடியே பண்ணிடலாம்” அன்பு சொல்ல ராதிகா தலையசைத்தாள்.

இருவரும் பைக்கில் வீட்டை நோக்கி கிளம்பினர்.

ராதிகா வீட்டிற்குள் நுழையும் போது ராகுல் வாந்தி எடுத்துக் கொண்டிருக்க பதறியபடி வேகமாய் ஓடினாள்.

“ராகுல் என்னப்பா ஆச்சு?”

“பாட்டி கசாயம் கொடுத்தாங்கம்மா அதான் வாமிட் வருது” ராகுல் சொல்ல அதைக் கேட்ட அன்பிற்கு கோபம் தலைக்கேறியது.

“எதுக்கு அதையும் இதையும் கொடுக்கணும்? இப்ப யாரு கஷ்டப்படறது?” ராதிகாவிடம் கேட்க மெதுவாய் சொன்னாள்.

“ஷ் மெல்லப்பேசுங்க அம்மா காதுல விழுந்தா மனசு கஷ்டப்படுவாங்க”

ராதிகா சொல்லும் போதே அங்கே வந்த அன்னம்மாள் பதறினார்.

“என்னய்யா வாந்தி வந்திடுச்சா? எடு எடு நல்லதுதான். சளி போயிடும்” சொன்னபடி ராகுலின் தலையை பிடித்துக் கொண்டார்.

அவர் ராகுல் மீது காட்டிய பாசம் ராதிகாவை நெகிழ்த்தியது. அன்பு மட்டும் பல்லைக் கடித்துக் கொண்டான்.

‘என்னமா நடிக்கிறா இவ. இவர் சாதாரணமானவ கிடையாது. இவ கிட்ட ரொம்ப கவனமா இருக்கணும்’

வெளியே சென்றிருந்த குமார் வீட்டுக்குள் நுழைந்தான்.

“என்னம்மா ராகுலுக்கு என்ன ஆச்சு?”

“சளி பிடிச்சிருந்துச்சுப்பா நெஞ்சுச் சளி, அதான் கசாயம் போட்டுக் கொடுத்தேன்”

“சரி சரி” என்றவன் அன்புவை பார்த்து சிரித்தான்.

“எங்கம்மா எப்பவும் இப்படித்தான் மாமா அவங்க முன்னாடி யாரும் இருமக்கூடாது தும்மக்கூடாது உடனே கசாயம் போட்டுக் கொடுத்துடுவாங்க. நானும் அக்காவும் சின்ன வயசுல எவ்வளவோ பட்டிருக்கோம் “ குமார் சொல்ல ராதிகா சிரித்தாள்.

“அதெல்லாம் ஒரு காலம் குமார்”

“ம்”

அன்னம்மாள் ராகுலின் முகத்தைக் கழுவியபடி கேட்டார்.

“இப்ப எப்படிப்பா இருக்கு?” கேட்டபடி அவன் நெஞ்சில் காதை வைத்தார்.

“பாரு இப்ப சத்தமே இல்லை இன்னும் ரெண்டு முறை கசாயம் குடிச்சா சரியாப் போயிடும்.” சொன்னவர் வேணியிடம் திரும்பினார்.

“வேணி”

“அத்தை”

“கொஞ்சம் மிளகு தட்டிப் போட்டு நெஞ்செலும்புல சூப் போட்டுக் கொண்டு வாம்மா. ராகுல்க்கு கொடுத்தா சரியாயிடும்” அன்னம்மாள் சொல்ல அன்பு ஒரு நிமிடம் வியப்பாய் பார்த்தான்.

எப்படி இவளால் இப்படி முடிகிறது? இவள் முகத்திரையை கிழிப்பது அவ்வளவு எளிதானது அல்ல.

யோசித்தவன் அருகில் வந்த குமார் அவன் காதில் கிசுகிசுத்தான்.

“மாமா”

“ம்”

“ஊரை சுத்தி பார்க்கணும்னு சொன்னிங்களே?”

“ம்”

“போலாமா?”

அன்பு விற்கும் வெளியில் எங்காவது சென்று வந்தால் பரவாயில்லை என்று தோன்றியது.

“சரி” சம்மதித்தான்.

இருவரும் பைக்கில் ஏறினர்.

கொஞ்ச தூரம் சென்ற பின் ஒரு காடு வந்தது.

“மாமா”

“ம்”

“கேட்கிறேன்னு தப்பா நினைக்கக் கூடாது”

“கேளு குமார்”

“நீங்க சரக்கு அடிப்பீங்களா?” குமார் கேட்க அன்பு புன்னகைத்தான்.

“இல்ல”

“நிஜமாவா மாமா? சாப்பிட மாட்டீங்களா?”

“பழக்கம் இல்ல”

“என்ன மாமா என்னால நம்ப முடியல”

“குமார் நாம எங்க இருந்தாலும் நாம எப்படி இருக்கணும்னு நாம தான் முடிவு பண்ணனும் “ அன்பு சொல்ல குமார் அன்புவைப் பெருமையாகப் பார்த்தான்.

“சரி வாங்க மாமா”

இருவரும் பைக்கில் ஏறிக்கொண்டு சற்று தூரம் செல்ல காளியம்மன் கோவில் முன் பூசாரி நிற்பதைப் பார்த்த குமார் ஆச்சரியமானான்.

“என்ன பூசாரி அதிசயமா இருக்கு இன்னிக்கு வந்திருக்கீங்க இன்னைக்கு பௌர்ணமி இல்லையே?” கேட்டான்.

பூசாரி அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அன்புவை கேள்வியாய் பார்த்தார்.

“எங்க மாமா பூசாரி இது. “

“மாமாவா?”

“ஆமா அக்கா வீட்டுக்காரர்”

“எந்த ஊர்ல இருக்காங்க?”

“கோயம்புத்தூர்ல”

“குழந்தைங்க ?”

“ஒரு பையன்”

குமார் சொன்னதைக் கேட்ட பூசாரியின் முகம் மாறியது. சட்டென்று சுதாரித்துக்கொண்டார். அதை குமார் கவனித்து விட்டான்.

“என்ன பூசாரி என்ன ஆச்சு?” கேட்டான்.

“குமார் ஒரு நிமிஷம் அப்படி வர்றியா?”

“மாமா ஒரு நிமிஷம் இப்ப வரேன்” சொன்ன குமார் பூசாரியுடன் தனியாக வந்தான்.

“சொல்லுங்க பூசாரி”

“கொஞ்ச நாள் முன்னாடி எனக்கு ஒரு கனவு வந்துச்சு”

“சரி”

“கனவுல காளியம்மன் வந்தாங்க”

“ஓ”

“அது மட்டும் இல்ல எனக்கு காவு கொடுங்கடான்னு கேக்கறாங்க”

“ஐயோ என்ன சொல்றீங்க பூசாரி?”

“இந்த கனவு வந்ததுக்கு அப்புறம் என்னால நிம்மதியா இருக்க முடியல சரின்னு நம்ம பிரசிடெண்டப் பார்த்து பேசினேன். அவர் சொல்றாரு. வர்ற பௌர்ணமி அன்னிக்கு ஊர்ல யாருமே வெளியில நடமாடக்கூடாது அப்படி நடமாடாம எல்லாரையும் வீட்லயே இருக்கணும்னு கேட்டுக்கணும்னு சொன்னார்”

“ஆனா…”

“என்ன?”

“பௌர்ணமி அன்னிக்குத்தான் எங்க அக்கா பையனுக்கு மொட்டை அடிக்கிறதா அக்கா வேண்டியிருக்கு.”

“நடக்காது”

“என்ன சொல்றீங்க பூசாரி?”

“எனக்கு உத்தரவு கிடைக்கல”

“அப்பா அக்காக்கு என்ன சொல்றது?” கவலையாய் கேட்ட குமாரை பூசாரி பதில் ஒன்றும் சொல்லாமல் மௌனமாய் பார்த்தார்.

குமாரும் பூசாரியும் தூரமாக ஏதோ பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த அன்பு சற்று நேரம் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தான். கோவில் பிரகாரத்தை வலம் வந்தவன் பார்வை சற்றுத் தள்ளி இருந்த ஒரு பாழடைந்த வீட்டின் மீது விழுந்தது. ஏதோ ஒன்று திண்ணையில் இருக்க.. அன்பு மனம் பரபரத்தது.

அது என்ன? அன்பு உன்னிப்பாய் பார்த்தான்.

கருப்பாய் கம்பளி போர்வை போர்த்தியது போல் தெரிந்த அந்த உருவம் சட்டென்று திரும்பி அன்புவைப் பார்த்தது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!