ரகுவின் உடல் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டபின் கருப்பனிடம் ஒப்படைக்கப்பட்டது.
கருப்பன் மனம் முழுவதும் பாரத்துடன் பெற்றுக்கொண்டார்.
போலீஸ் டிரைவரை விசாரித்தது.
“விபத்து எப்படி நடந்தது?”
“நான் லெஃப்ட் டர்ன் பண்ணேன் சார். சடனா பைக்ல முன்னாடி வந்து விழுந்துட்டான். “
“நீங்க பிரேக் போடலயா?”
“போட்டேன் சார் ..ஆனா..”
“ஆனா? “
“பிரேக் பிடிக்கல.”
“என்ன சொல்றீங்க? பிரேக் ஃபெயிலியரா?”
“இல்ல சார். அதுக்கப்புறம் பிரேக் நல்லாவே பிடிக்குது.”
“வாட்? அந்த நேரம் மட்டும் பிரேக் பிடிக்கலன்னா சொல்றீங்க?”
“ஆமா சார்”
“நீங்க சொல்றது நம்பற மாதிரி இருக்கா என்ன? அது எப்படி அந்த நேரம் மட்டும் பிரேக் பிடிக்காமப் போகும்? “
“எனக்கு நல்லா தெரியுது சார் நான் சொல்றது என்னாலேயே நம்ப முடியாதுதான் ஆனால் நான் சொல்றதுதான் உண்மை.”
டிரைவர் பிடிவாதமாக சொல்ல குழம்பிய சப்-இன்ஸ்பெக்டர் மேற்கொண்டு அந்த வாதத்தில் ஆர்வம் காட்டாமல் விலகிச் சென்றார்.
டிரைவருக்கு மட்டும் நடந்தது ஒன்றுமே புரியவில்லை. ஆனால் விபத்திற்குத்தான் காரணம் அல்ல என்பதை மட்டும் தெரிந்து வைத்திருந்தார்.
***
கருப்பன் வீட்டில் ரகுவின் உடல் வைக்கப்பட்டிருக்க அனைவரும் குழுமியிருந்தனர்.
கருப்பனின் நண்பர் சண்முகம் கருப்பனிடம் வந்தார்.
“கருப்பா என் ஆழ்ந்த வருத்தங்கள்”
“ம்”
“எப்படி ஆச்சு?”
“ஆக்சிடென்ட்.”
சொன்ன கருப்பனை உற்றுப் பார்த்த சண்முகம்
“என்கிட்ட நீ ஏதோ மறைக்கிறே சரியா?” என்று கேட்டார்.
“”இல்லையே” என்று பதட்டத்துடன் சொன்ன கருப்பனின் தோள் மீது கை வைத்தார்.
“நாம இன்னிக்கு நேத்து பழகல. ரொம்ப வருஷமா நான் உன்னப் பாத்துட்டிருக்கேன். எந்த சிச்சுவேஷன்ல எப்போ எப்படி நீ ரியாக்ட் பண்ணுவேன்னு எனக்கு நல்லாத் தெரியும்.”
சண்முகம் சொல்ல கருப்பன் முகம் மாறியது.
“சண்முகா”
“ம் “
“எனக்கு பயமா இருக்கு “
சண்முகம் திடுக்கிட்டார்.
“என்ன சொல்றே?”
“இங்க வா சொல்றேன் ” தனியாக அழைத்துப் போனார்.
சண்முகத்தின் காதில் கருப்பன் சொல்ல சண்முகம் முகம் மாறியது.
“என்ன சொல்றே?” என்று அதிர்ந்தார்.
“எனக்கு சந்தேகமா இருக்கு உன்னோட பையன் வருணை ஜாக்கிரதையா பார்த்துக்கோ “
“கருப்பா “
“கொஞ்ச நாளாவே எனக்கு சகுனம் தட்டுச்சு. யாருக்கும் எதுவும் நடந்துடக்கூடாதுன்னு ரொம்பவும் கவனமா இருந்தேன். ஆனா இப்படி நடந்துடுச்சு.”
கருப்பன் சோகமாய் சொல்ல சண்முகம் அவரையே பார்த்தார்.
“நீ சொல்றது உண்மையா?”
“ஆமா “
“அப்படின்னா வரதன்கிட்டயும் பாண்டிகிட்டயும் கூட ஜாக்ரதையா இருக்க சொல்லணும்.”
“ஆமா அவங்ககிட்ட நீயே சொல்லிடு ” சொன்ன கருப்பன் தளர்ந்துபோய் நடக்க சண்முகம் உறைந்துபோய் நின்றார்.
இது அதுவா?
இறக்கும் போது அதன் பார்வை நான்கு பேர் மீதும்தான் நிலைத்திருந்தது.
என்ன இது புதிய சோதனை?
எவருக்கும் தெரியவில்லை. எல்லாவற்றையும் மூடி மறைத்தாகிவிட்டது என்று நிம்மதி கொண்டிருந்தேனே.
அய்யோ. இப்போது என்ன செய்யப் போகிறேன்? அது தான் காரணம் என்றால் அதனிமிருந்து தப்பிப்பது என்பது நிச்சயம் முடியாது.
முதலில் வருணை அழைத்து எச்சரிக்கை செய்.
சண்முகம் வருணின் அலைபேசிக்கு அழைத்தார்.
ரிங் போனது.
வருண் எடுத்தான்.
“அப்பா”
“வருண் எங்க இருக்கே?”
“ஆபீஸ்ல தான் பா”
“லீவு போட்டுட்டு உடனே வீட்டுக்கு வா”
“என்னப்பா சொல்றீங்க? யாருக்கு என்னாச்சு?”
“யாருக்கும் ஒண்ணும் ஆகல. நீ முதல்ல நான் சொல்றதைக் கேளு”
“அப்பா இப்ப லீவ் கிடைக்காது ஆடிட் நடந்துட்டிருக்கு”
“வருண் உன்னோட நல்லதுக்குத்தான் சொல்றேன் உடனே கிளம்பி வந்துரு.”
“அப்பா நீங்க வைங்க நான் சாயங்காலம் கூப்பிடறேன் “
சொன்ன வருண் அழைப்பைத் துண்டித்தான்.
அருகிலிருந்த அவன் நண்பர்கள் மதன் மூர்த்தி இருவரும் சிரித்தனர்.
“அது எப்படிடா அவ்வளவு கரெக்டா பொய் சொல்றே? “
“பின்னே? நான் ஆபிஸ்க்கு கட் அடிச்சுட்டு கொடைக்கானல் வந்துருக்கேன். இங்கதான் நாலு நாள் இருக்கப் போறேன்னு சொன்னா எங்கப்பா அவ்வளவுதான். கிளம்பி இங்கேயே வந்துடுவார். “
கண்ணாடி டம்ளரில் இருந்த விஸ்கியை சுவைத்தபடி சிரித்தான் வருண்.
“மூர்த்தி” வருண் அழைத்தான்.
“ம்”
“நைட்டுக்கு ஏதாவது கிடைக்குமா?”
“கஷ்டம்”
“என்ன மூர்த்தி எப்பவுமே முடியாது கஷ்டம்னே பேசறே? “
“வருண்”
“ம்”
“தண்ணியடிக்கிறது தப்பில்ல.”
“ம்”
“தம் பொண்ணு ரெண்டும் தப்பு”
“எப்படி?”
“தம்மடிக்கிறவன் சூழலைக் கெடுக்கிறான். பொண்ணுங்க வேணும்னு கேக்கறவனால தான் நிறைய பேரை இஷ்டமில்லாம இதில தள்ளி விட்டுடறாங்க”
“அதனால?”
“அதனால தண்ணியடி எவ்வளவு வேணாலும் சாப்பிடு. உன்னோடு போகும் அது”
“மூர்த்தி”
“ம்”
“நல்லாப் பேசற நீ” சொன்ன வருண் எதார்த்தமாக வெளியே பார்க்க ஏதோ ஒன்று கடந்து சென்றது போலிருந்தது.
என்னவாக இருக்கும்?
ஆர்வமான வருண் எழுந்தான். கதவைத் திறந்தான்.
***
போலீஸ் ஸ்டேஷன்.
அக்ஷய் தன் டேபிளில் அமர்ந்து ரகு ஃபைலை ஆராய்ந்தான்.
“சார்”
நிமிர்ந்தான். கான்ஸ்டபிள் மஞ்சுநாத் நின்றிருந்தார்.
“யெஸ்”
“சுக்கு காஃபி சார்”
“தேங்க்ஸ்” சொன்னவன் மீண்டும் ஃபைலில் மூழ்கினான்.
ரகு இறந்தது விபத்துத்தான். பிரேக் ஃபெயிலியர். ஆனால் டிரைவரின் ஸ்டேட்மெண்ட் இடிக்கிறது.
ஏதோ அந்த நேரத்தில் மட்டும் பிரேக் பிடிக்காதது போல் உளறியிருக்கிறான். அதை கண்டுகொள்ளாமல் இருப்பது நலம்.
அப்போது இந்த கேசை விபத்து என்று முடித்து விட வேண்டியதுதான்.
அக்ஷய் ரிப்போர்ட் எழுத ஆரம்பித்தான். அப்போது அக்ஷயின் பார்வை எதார்த்தமா ரகுவின் ஃபோட்டோ மீது விழுந்தது. இரண்டாவது ஃபோட்டோ சற்று வித்தியாசமாக இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அதைத் தனியாக எடுத்தவன் உற்றுப் பார்த்தான்.
அருகில் வைத்துப் பார்க்க அதிர்ந்தான். ரகுவின் முகம் பயத்தோடு இருக்கிறது. ரகு யாரையோப் பார்த்து பயந்திருக்கிறான்.
யார் அது?
இந்தளவிற்குப் பயந்திருக்கிறானென்றால் இதில் ஏதோ விபரீதம் இருக்கிறது.
என்ன செய்யலாம்? கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாமா?
எதற்கும் ட்ரைவரைப் போய் நாளை ஒரு முறை பார்த்துப் பேச வேண்டும்.
எதற்கு? தேவையில்லாமல்?
இல்லை. பார்த்துப் பேசினால் ஏதாவது தெரியும்.
அக்ஷய் தனக்குத் தானே குழம்பிக்கொண்டான்.
***
வருண் வெளியே வந்தான். காலநிலை மிகவும் குளிராக இருந்தது.
தங்கியிருந்த ரிசார்ட்டின் பின்னால் காட்டு மரங்கள் அடர்த்தியாய் இருக்க அங்கே யாராவது இருந்தால் கூட யாருக்கும் தெரியாது என்று வருணுக்குத் தோன்ற கடந்து சென்றது யார் என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவனை உந்தித் தள்ள காட்டுப்பகுதியில் வெளிச்சம் இல்லாததையும் பொருட்படுத்தாமல் நடக்கத் தொடங்கினான்.
கொஞ்சம் தூரம் நடந்திருப்பான். ஒன்றும் விசித்திரமாகத் தட்டுப்படவில்லை.
திரும்பிவிடலாமா? என்று நினைக்கையில் அந்த சத்தம் அவன் காதில் கேட்டது.
யாரோ அழும் சத்தம். வியப்பானான்.
யாரோ இருக்கிறார்கள். தன் அலைபேசியின் வெளிச்சத்தில் இன்னும் உள்ளே நடக்க அவளைக் கண்டான். தரையில் அமர்ந்திருந்தாள். கூந்தல் முன்னால் விழுந்து அவள் முகத்தை மறைத்திருந்தது.
பெண். யாரவள்? வருண் ஆச்சர்யமானான்.
“யாரது?” என்றான்.
அவள் அழுகையைத் தொடர அருகில் சென்றவன் உறைந்தான். அவள் அருகில் ஒரு நாய் தன் செந்நிறக் கண்களால் அவனையே பார்த்தது. உறுமியது.
வருண் திகைத்துப் பின்வாங்க நினைக்க அவள் செலுத்தப்பட்டது போல் எழுந்தாள். அவள் முகத்தைப் பார்த்த வருண் அதிர்ந்தான்.
முகம் முழுவதும் ரத்தமும் மண்ணும் அப்பிக்கிடக்க ஆடைகள் அங்கங்கே நைந்திருந்தன. நகங்கள் நீளமாய் வளைந்திருக்க பார்வை மட்டும் அவன் மீது தீர்க்கமாய் இருந்தது.
ஆபத்து வருண். ஓடிவிடு
மூளை எச்சரிக்க வருண் ஓட முயன்று முடியாமல் அவளிடம் மாட்டிக்கொண்டான்.
“எங்கடா ஓடற ?” கேட்டவள் ரத்தக்கறை படிந்த பற்கள் தெரிய சிரித்தாள்.
“உனக்காக சுடுகாட்டில இருந்து எழுந்து வந்திருக்கேண்டா. எங்கடா ஓடற ?”
கேட்டவள் அவன் திகிலுடன் நடுங்கத் தொடங்க அவனை அப்படியே இரண்டாய் ஒடித்து எறிந்தாள்.
வருண் வலி பொறுக்க முடியாமல் கதறினான். அவன் கதறலை ரசித்தவள் அவன் கழுத்தைத் தன் கூர்மையான நகங்களால் இறுக்கினாள்.
“அய்யோ வேண்டாம்” வருண் துடித்தான்.
நகங்கள் அவனுக்குள் ஊடுருவி ரத்தம் பல துளைகளிலிருந்தும் வெளியேற வருண் முகம் அஷ்ட கோணலாக மாறி உடம்பு துடித்தது.
அடங்கியது.
அவள் அவனைக் கீழே எறிந்தாள்.
நாய் காத்திருந்தாற்போல் வருணை சூழ்ந்து கொண்டது.