Home Featuredகட்டுவிரியன் 3

கட்டுவிரியன் 3

by GK Tamil Novels
16 views

“முனியா” ராமநாதன் முனியனை அழைக்க அவன் ஓடி வந்தான்.

“அய்யா”

“டாக்டரோட அக்கா கிட்ட பேசுனியா?”

“ஜாடைமாடையா சொன்னேனுங்க”

“புரிஞ்சிக்கிட்டாளா?”

“காறித் துப்பி அனுப்பிட்டாங்க”

“என்னடா சொல்ற?”

“கெட்ட வார்த்தைல திட்டிட்டா”

“அப்படி என்ன சொன்னா?”

“என் புருஷன் கூட நான் சண்டை போட்டிருக்கலாம். ஆனா எனக்கு எல்லாமே என் புருஷன்தான். கண்டவன் கூட படுக்கறதுக்கு நான் ஒண்ணும் அவுசாரி இல்லன்னு…”

முனியன் தயக்கமாய் சொல்ல ராமநாதன் சிரித்தார்.

“இத சொல்றதுக்கு ஏண்டா தயங்கற? சில பேர் அப்படித்தான். கற்புன்னா இதுதான் இலக்கணம்னு நெனச்சுக்கிட்டு வாழ்க்கைய வாழாம இருப்பாங்க அவங்களுக்கு நாமதானே வாழ்க்கைன்னா என்னன்னு சொல்லிக் கொடுக்கணும்?”

“அப்ப என்னங்கய்யா பண்றது?”

“டாக்டர் பொண்ணு காலேஜ்ல சேர்ந்துட்டாளா?”

“சேர்ந்துட்டாங்கய்யா”

“அது போதும். நாம பணம் கொடுத்தாச்சு பொண்ணுக்கு காலேஜ்ல அட்மிஷன் போட்டாச்சு. இப்ப நீ என்ன பண்ற?”

“சொல்லுங்கய்யா”

“அவளோட அப்பன என்ன வந்து பார்க்கச் சொல்லு. அவன நாம பண்ற டார்ச்சர்ல அவன் வீட்டில் போய் புலம்பணும். அதக் கேட்டுட்டு அவளுக்கு வாழ்க்கைன்னா என்னனு புரியும் அதுக்கப்புறம் நல்லா தூக்கலா மிளகு போட்டு நாட்டுக்கோழி வறுவல் பண்ணிடு” ராமநாதன் அலட்டிக் கொள்ளாமல் புன்னகையுடன் சொல்ல முனியன் தலையசைத்தான்.

***
பங்கஜம் கோவிலில் அமைதியாக அமர்ந்திருந்தாள். மனம் எதையோ யோசித்துக் கொண்டிருந்தது.

“அம்மா நல்லா இருக்கீங்களா?” குரல் கேட்டவள் நிமிர்ந்தாள்.

ரேவதி நின்றிருந்தாள்.அவளைப் பார்த்த பங்கஜம் மலர்ந்தாள். ரேவதியை சிறு வயதிலிருந்தே பங்கஜம் அறிவாள். அவள் தோழி கலைவாணியின் மகள் தான் ரேவதி.

“எப்படிப்பா இருக்கே? பார்த்து ரொம்ப வருஷமாச்சு. இப்ப எங்க இருக்கீங்க?”

“ஆமாம்மா. எனக்கு போஸ்டிங் போட்டாங்க.”

“ரொம்ப நல்ல விஷயம் எங்க போட்டிருக்காங்க?”

“நம்ம ஊர் ஸ்கூல்லதான்” ரேவதி சொல்ல பங்கஜம் முகம் மாறியது.அதை ரேவதியும் கவனித்துவிட்டாள்.

“என்னாச்சுமா?”
பங்கஜம் சமாளித்தாள்.

“இல்ல ஒண்ணுமில்ல”

“சரிமா நான் வரேன்” சொன்ன ரேவதி விடை பெற்று செல்ல செல்லும் அவளைப் பார்த்த பங்கஜம் பெருமூச்சுவிட்டாள்.

‘பாவம். இவ்வளவு அழகா இருக்கா. என்னாகப் போறாளோ?’

காளியம்மனையே பார்த்த பங்கஜத்தின் மனம் ரேவதிக்காக பரிதாபப்பட்டது.

‘அம்மா நீ தான் இந்தப் பொண்ண எப்படியாவது காப்பாத்தணும்’

***

“கண்ணு” ராமநாதன் அழைக்க அவர் வயலில் நாற்று நட்டுக்கொண்டிருந்த செவ்வந்தி கையில் நாற்றுடன் அவர் அருகில் வந்தாள்.

“என்னங்கய்யா?”

“ஒண்ணும் கவனிக்க மாட்டேங்கிற”

“வீட்ல அம்மா இல்லைங்களா?”

“இருக்….கா” சலிப்போடு அவர் சொன்னவிதம் அவளுக்கு சிரிப்பை வரவழைத்தது. ஆனால் சிரிக்காமல் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள். சிரித்தாள் நிச்சயம் விபரீதம் ஆகிவிடும். செவ்வந்தி ராமனாதனைப் பற்றி அனைத்தும் அறிந்து வைத்திருந்தாள்.

“புருஷன் வீட்டில் இருக்கானா?”

“பார்க்கணுங்களா அவரை?”

“அவனைப் பார்த்து நான் என்ன பண்ணப் போறேன்?”

“சரி நான் போகட்டுங்களா? இன்னும் நிறைய நாத்து நடறதுக்கு இருக்கு”

“அட இரு போலாம். என் வயல்தானே? உன் வயல் மாதிரி அநியாயத்திக்கும் விசுவாசமா இருக்கே”

“இல்லைங்கய்யா சீக்கிரம் வேலைய முடிச்சுட்டுப்போலாம்னு”

“அது சரி. எனக்கு ஒரு சந்தேகம் பதில் சொல்லிட்டுப் போ”

“என்னங்கய்யா?”

“அதெப்படி கொண்ட போட்டாலும் சரி ஜடை போட்டாலும் சரி ரெண்டிலயும் அம்சமா இருக்கே?” அவர் கேட்க அவள் தன்னையும் மீறி சிரித்து விட்டாள்.

“நான் போறேங்கய்யா” சொல்லிவிட்டு அவர் பதிலுக்குக் காத்திராமல் வயலுக்குச் செல்லும் அவள் பின்புறத்தை கண்ணிமைக்காமல் பார்த்தவர் பெருமூச்சுவிட்டார்.

“நடவு வேலை பார்த்தாவே நல்லாயிருப்பாளுங்க போல. ம்…பார்க்கலாம். எங்க போயிடப்போறா?” தனக்குள் நினைத்தவர் மொபைல் அடித்தது.

முனியன்.

“சொல்லு முனியா”

“அய்யா உங்களப் பார்க்க சண்முகம் வந்திருக்காரு “

“இருக்கச் சொல்லு. இப்ப வர்றேன்” சொன்னவர் தன் புல்லட்டில் ஏறினார். கிக்கரை உதைக்க அது உறுமியது. தோட்டத்து பங்களாவை நோக்கி விரைந்தது.

அடுத்த கால் மணி நேரத்தில் தன் தோட்டத்தை அடைந்தார்.

பைக்கை நிறுத்திவிட்டு இறங்கினார். நின்று கொண்டிருந்த சண்முகம் அவரைப் பார்த்ததும் வணங்கினான்.

“கும்பிடறேனுங்க”

“ம்”

“அய்யா கூப்பிட்டதா சொன்னாங்க”

“ஆமா” சொன்ன ராமநாதன் ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன் பார்த்தான் சண்முகம். அவன் குழப்பத்தை ரசித்தவர் மெல்ல ஆரம்பித்தார்.

“சண்முகா”

“அய்யா”

“இளையவ காலேஜ்ல சேர்ந்துட்டாளா?”

“ஆமாங்க உங்களுக்கு கோடி புண்ணியங்க”

“அதெல்லாம் வேண்டாம் சண்முகா . அந்தப் புண்ணியத்தை நீயே வச்சுக்கோ. அதை வச்சுக்கிட்டு நான் என்ன பண்ணப்போறேன்?” கோணலாய் புன்னகைத்தபடி அவர் பார்க்க சண்முகம் ஒன்றும் புரியாமல் முழித்தான்.

“அய்யா”

“ஒரு தென்னந்தோப்பு விலைக்கு வருது. நம்ம பங்காளிதான் விக்கிறான். அவனுக்கு ஏதோ ஒரு பணத்தேவை. என்கிட்ட வந்து அந்த தோப்பை வாங்கிக்கோன்னு சொல்றான். நானும் சரின்னுட்டேன். அப்புறம்தான் தெரிஞ்சது. கையில இருந்த காசை உனக்கு கொடுத்துட்டேன்னு. நீ என்ன பண்றே? இன்னும் ரெண்டு நாள்ல அந்தக்காச கொண்டு வந்து கொடுத்துடு. ” ராமநாதன் முடிக்கும் முன் சண்முகம் அதிர்ந்தான்.

“அய்யா என்ன சொல்றீங்க?”

“எதையும் ரெண்டாவது தடவ சொல்லி எனக்கு பழக்கம் இல்ல புரியுதா?”

“ஐயா என்னுடைய நிலைமை தெரியும் உங்களுக்கு. தெரிஞ்சும் இப்படிக் கேட்டா நான் என்ன பண்றது?”
பரிதாபமாய் சொன்ன சண்முகத்தை கோபமாய் பார்த்தார் ராமநாதன்.

“டேய் உன்கிட்ட நான் மரியாதையா பேசிட்டிருக்கேன். நான் சொல்றபடி செய்யலன்னா என்னோட கோபத்தை நீ தாங்க மாட்டே” அவர் சொல்ல சண்முகம் பயமாய் பார்த்தான். கண்கள் கலங்கின என்ன செய்வது என்று தெரியவில்லை.

“அய்யா” ஏதோ சொல்ல முயல அவர் அவனை எரிக்கும் விழிகளால் பார்த்தார். சண்முகம் கையெடுத்து கும்பிட்டபடி அங்கிருந்து சென்றான்.

அவன் மறைந்ததும் அவர் முனியனை புன்னகையாய் பார்க்க முனியன் அவரையே பார்த்தான்.

“என்ன முனியா அப்படி பார்க்கற?”

“அய்யா ஒரு நிமிஷம் நானே பயந்துட்டேன்”

“நமக்கு ஒரு விஷயம் தேவைன்னா நாம எந்த எல்லைக்கும் போகத் தயாரா இருக்கணும். அப்பத்தான் நமக்கு அந்த விஷயம் கிடைக்கும்.”

“அது சரிதானுங்க. ஆனா சண்முகம் பாவங்கய்யா”

“அழகானப் பொண்ணப் பெத்த எந்த அப்பனும் பாவம் இல்ல முனியா” சொன்ன ராமநாதன் சிரித்தார்.

“முனியா”

“அய்யா”

“இவன் போய் வீட்ல கண்ணீர் விடுவான் கதறுவான் அதைப் பார்த்துட்டு மூத்தவ என்ன பண்ணனுமோ அதை ஆட்டோமேட்டிக்கா பண்ணுவா பாரு”

ராமநாதன் சொல்ல முனியன் மௌனமாய் நின்றான்.

“முனியா”

“சொல்லுங்கய்யா”

“என் கூடவே இருக்கே. என்னப் பத்தி எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கே. என் பொண்டாட்டிக்குக் கூட உனக்குத் தெரிஞ்சளவுக்குத் தெரியாது ஆனாலும் தண்ணி அடிக்க மாட்டேங்கி,ற வேற தப்பு தப்பா எதுவும் பண்ண மாட்டேங்கிற. எப்படி அது?”

“பழகிடுச்சுங்க”

“ரொம்ப நல்லது. முட்டை இருக்கா?”

“இருக்குங்க”

“ரெண்டு முட்டையை எடுத்து நல்லா அடிச்சு பச்ச மிளகாய் சின்ன வெங்காயம் போட்டு மிளகு தூக்கலாப் போட்டு ஒரு ஆம்லெட் போட்டுக் கொண்டு வா” சொன்னபடி வி எஸ் ஓ பி பிராந்தி பாட்டிலை எடுத்தார். அளவு பார்த்து கண்ணாடி கிளாசில் ஊற்றிக் கொண்டார்.
தண்ணீர் சேர்க்காமல் அப்படியே குடித்தார்.

மனதிற்குள் சரஸ்வதி வந்து கதறினாள்.

“வேண்டாம் ப்ளீஸ்”

***
“போதும்மா ப்ளீஸ்” சிவா சொல்ல பங்கஜம் “இன்னும் ஒரு தோசை சாப்பிடு” என்றபடி வைத்துவிட்டுப்போக தக்காளி சட்னியை தோசைக்குப் போட்டவன் சாப்பிட்டபடி சொன்னான்.

“எங்க போனாலும் உன் கையில சாப்பிடற மாதிரி வரலம்மா”

சொன்னவனை பார்த்து புன்னகைத்தாள் பங்கஜம்.

“சும்மா சொல்லாத”

“ப்ராமிஸ்மா. பெங்களூர்ல எது சாப்பிட்டாலும் இனிப்பா இருக்கு. சாம்பார்ல கூட வெல்லத்தைப் போடறாங்க.”

“ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷல்”

“உன்னோட காரமான சாப்பாட்ட சாப்பிட்டுப் பழகிட்டேனா. அதான் எப்படா வீட்டுக்குப் போவோம்னு இருந்துச்சு?”

“ம் எத்தனை நாள் லீவ்?”

“பத்து நாள்”

“ஆயுத பூஜை சரஸ்வதி பூஜைக்கு அவ்வளவு நாள் லீவு கொடுக்கிறாங்களா என்ன?”

“தசரா அங்க பெரிய பண்டிகை. அதான்”

“சரி நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடு”

“ம் அப்பா எப்பம்மா வருவாரு? வந்ததிலிருந்து அப்பாவைக் காணோம்?”

சிவா கேட்க பங்கஜத்தின் முகம் மாறியது. என்னவென்று சொல்வது யாராவது கிடைப்பாளா என்று எவளையாவது துன்புறுத்திக் கொண்டிருப்பார் என்றா? அல்லது எவளுடனாவது இருப்பார் என்றா?

பங்கஜம் ஒன்றும் சொல்லாமல் மௌனமாய் பெருமூச்சுவிட்டாள். சிவாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

அம்மா ஏன் இந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் தவிர்க்க வேண்டும்? அப்பாவிற்கு அம்மாவிற்கும் ஏதாவது பிரச்னையா? ஒருவேளை அது எனக்குத் தெரியக்கூடாது என்று நினைக்கிறார்களா?

யோசித்தவன் எழும் நேரத்தில் ராமநாதன் உள்ளே வந்தார். சிவாவைப் பார்த்ததும் புன்னகைத்தார்.

“எப்படா வந்த?”

“சாயங்காலம்பா”

“காலேஜ் எப்படி போகுது?”

“நல்லா போகுதுப்பா”

“நீ எப்படி இருக்க?”

“நல்லா இருக்கேன்பா”

“ம் சாப்பிட்டியா?”

“சாப்பிட்டேன்பா. நீங்க சாப்பிடுங்கப்பா”

“நான் அப்புறம் சாப்பிடறேன்” சொன்னவர் பார்வை அவன் அணிந்திருந்த டீசர்ட் மீது பட்டது.

“அதென்னடா டீ சர்ட்ல ராயல்ஸ்னு இருக்கு?”

“அது எங்க டிபார்ட்மெண்ட் பசங்கள அப்படித்தான் சொல்லுவாங்க”

“”புரியல”

“மெக்கானிக்கல் பசங்கள ராயல் மெக்ன்னு சொல்லுவாங்க. “

“மத்த பசங்க ராயல் கிடையாதா?” ராமநாதன் கேட்க சிவா முழித்தான்.

“படிக்கிறதுக்கு காலேஜுக்கு அனுப்புனா அதைத் தவிர எல்லாமே செய்ங்க” சொன்ன ராமநாதன் உள்ளே சென்றுவிட சிவா பங்கஜத்தை பாவமாய் பார்த்தான்.

அவள் தன் விழிகளால் அவனை சமாதானப்படுத்தினாள்.

***

அறைக்குள் வந்த பங்கஜம் ராமநாதன் உறங்கவில்லை என்று அறிந்ததும் அவர் அருகில் சென்றாள்.

“என்னங்க”

“சொல்லுமா”

“சிவாக்கு பத்து நாள் லீவ்”

“ஓகே”

“அவனுக்கு எதுவுமே தெரியாது” பங்கஜம் சொல்ல ராமநாதனுக்கு புரிந்தது.

“ம்”

“அவன் திரும்ப காலேஜ் போறதுக்கு ஒரு பத்து நாள் ஆகும்”

“ம்”

“இந்த பத்து நாள் மட்டும் எங்கயும் போகாம வீட்டோட இருங்க”

“நான் எங்க போகப் போறேன் பங்க..” அவர் முடிக்கவில்லை பங்கஜம் அவரை முறைத்தாள். அவள் பார்வையைத் தாங்க முடியாதவர் வேறு எங்கோ பார்த்தபடி சொன்னார்.

“சரி நீ சொன்னபடியே நடந்துக்கறேன்”

“நம்பலாமா?”

“என்ன பங்கஜம் என் மேல நம்பிக்கை இல்லையா?”

கேட்டவரை ஒன்றும் சொல்லாமல் ஒரு நிமிடம் பார்த்த பங்கஜம் தரையில் பெட்டைப் போட்டு படுத்துக்கொள்ள ராமநாதன் கட்டிலில் படுத்தார்.

அவர் மொபைல் அடித்தது.

இந்நேரம் யார் என்று திகைத்தவர் எடுத்துப் பார்த்தார். புதிய எண்.

“யாரு?”

“நான் சரஸ்வதி பேசறேன்”

அவளை அந்நேரம் எதிர்பாராதவர் திகைப்பாய் மீண்டும் யார் என்று கேட்க அவள் மீண்டும் சொன்னாள்.

“நான் சரஸ்வதி. எப்ப வரணும்?”

 

You may also like

Leave a Comment

error: Content is protected !!