Home Featuredடெவில் ஸ்கோர் 2

டெவில் ஸ்கோர் 2

by GK Tamil Novels
16 views

செக்யூரிட்டி “அவள் ஒரு சைக்கோ” என்று சொல்ல அந்த இளைஞனுக்கு புன்னகை.

“என்னாச்சுப்பா?”

“நானும் ஒரு சைக்கோத்தான் ஐயா.”

அந்த இளைஞனுக்கு நேரம் சரியில்லை என்று பெரியவர் நினைத்தார்.

அவன் உள்ளே நுழைந்தான். அஞ்சு இருந்த கவுண்டருக்குக் சென்றான்.

“ஹலோ” அழைத்தான்

“சொல்லுங்க சகோ” என்றாள் அஞ்சு.

“வாட்? “அவன் புருவத்தை உயர்த்த

அவள் மீண்டும் சொன்னாள்

“சொல்லுங்க ப்ரோ.”

“ப்ரோ வா?”

“ம். பிரதர்னு சொன்னேன்.”

“நூறு ரூபாய் இருக்குமா?” அவன் கேட்க எதற்கு கேட்கிறான் என்று திகைத்த அஞ்சு அவளையும் அறியாமல் பரிசைத் திறந்து பார்க்க
இருநூறு ரூபாய்த் தாள்கள் மட்டுமே இருந்தன.

“டு ஹன்ட்ரட் ருபீ நோட் தான் இருக்கு.”

“பரவாயில்லை கொடுங்க.”

அவள் குழப்பத்துடன் கொடுக்க நன்றி சொல்லிப் பெற்றுக்கொண்டான்.

அவளைத் திரும்பிப் பார்க்காது நடக்க முயல அஞ்சு பதறினாள்.

“ஏய் நில்லு.”

நின்றான்.

“யார் நீ? நீ பாட்டுக்கு வந்த. இருநூறு ரூபாய் வாங்கிட்டு நீ பாட்டுக்கு போயிட்டுருக்கே.”

“என்னங்க நீங்க? என்னத் தெரியலையா?”

“இல்லையே”

“உங்க பிரதர்ங்க. சகோ.”

அவன் சொல்ல அஞ்சு அவனையே பார்த்தாள்.

“என்ன கலாய்க்கறீங்களா?”

“சத்தியமா இல்லைங்க. நீங்க சொன்னத உங்களுக்கு ஞாபகப்படுத்துனேன்.”

“அது சும்மா பேச்சுக்கு”

“அது ஏன் ப்ரோன்னு சொல்லணும்?”

“ஒரு சேஃப்டிக்கு”

“ஆம்பளைங்க எல்லாருமே துச்சாதனனுங்க பாருங்க. நீங்க சேஃப்டி பார்க்கிறதுக்கு. எத்தனையோ பேரு வேலை செஞ்சிக்கிட்டு குடும்பத்தைப் பார்த்துகிட்டு பொறுப்பா நடந்திட்டுருக்காங்க. நீங்க ப்ரோன்னு சொல்றது சகோன்னு சொல்றது அண்ணான்னு சொல்றது எல்லாமே ஒருவகையில் எங்களைக் கேவலப்படுத்தற செயல். இயல்பா இருங்களேன். முடியாதா என்ன? “

அவன் சொல்ல அஞ்சு மௌனமாய் அவனையே தொடர்ந்து பார்த்தாள்.

“உங்களுக்கு என்னப் பார்த்தா லவ் பண்ணனும்னு தோணுதா?”

“நான்சென்ஸ் என்னை யாருன்னு நினைச்சுப் பேசிட்டுருக்கே?”

“பார்த்தீங்களா உங்களுக்கு இவ்ளோ கோவம் வருது. அப்படின்னா உங்களுக்கு உங்க மேல அபார நம்பிக்கை. உங்கள என்னோட கம்பீரம் எந்த விதத்திலயும் சலனப்படுத்தாது. அப்படி இருக்கறப்ப எதுக்கு உங்க மேல நீங்களே நம்பிக்கை இல்லாம என்ன ப்ரோ ன்னு கூப்பிடணும்?”

அவன் அவளைப் பார்த்து புன்னகைக்க அஞ்சு அயர்ந்தாள்.

“அய்யாசாமி தெரியாம சொல்லிட்டேன். என்னோட பணத்தை திரும்பக் கொடுத்துட்டு நடையக் கட்டுங்க.”

“நிச்சயமாக உங்க பணத்தை திருப்பிக் கொடுப்பேன் ஆனா இன்னிக்கு இல்ல”

அவன் சொல்ல அஞ்சு கோபமானாள்.

“என்ன சொல்ற?”

“நாளைக்கு திரும்ப என்ன பார்க்கற வரைக்கும் என்னையே நெனச்சிட்டு இருங்க.”

“நான் எதுக்கு உன்னை நினைக்கணும்?”

“இரு நூறு ரூபாய் திரும்ப வருமா வராதான்னு நீங்க கண்டிப்பா யோசிப்பீங்க. அப்ப ஆட்டமேட்டிக்கா என்னோட ஞாபகம் வரும்.”

அவன் சிரிக்க அஞ்சு பயங்கர கோபமாக அவனைப் பார்த்து சொன்னாள்.

“நீ இப்ப பணத்தைத் தரலன்னா உன்ன ரிப்போர்ட் பண்ணுவேன்.”

அவன் அருகில் வந்தான்.

“எங்கே வேணாலும் போய் ரிப்போர்ட் பண்ணிக்கோ. யாரும் என்னோட தலைய வெட்டிட மாட்டாங்க. “

சொன்னவன் அவள் முகத்தை உற்றுப் பார்த்தான்.

“எப்பவுமே எல்லார் கூடயும் சண்டை போட்டுட்டு எல்லாரையும் திட்டிட்டு மூஞ்சிய கடுகடுன்னு வச்சிருக்காத பார்க்கறதுக்கு நல்லா இல்ல. சந்தோசமாய் இரு சிரிச்சிட்டிரு அப்பப்ப ஸ்மைல் பண்ணு. எனக்கு சிரிக்கிறவங்களத்தான் பிடிக்கும்.”

சொன்னவன் அருகில் வந்து கேட்டான்

“நாளைக்குப் பார்க்கலாமா சகி?”

***

அஞ்சு வாஷ் ரூம் சென்று கண்ணாடியில் பார்த்தாள்.

“அறிவு கெட்டவளே எவனோ ஒருத்தன சகோன்னு கூப்பிடப் போய் இருநூறு ரூபாய் கைவிட்டுப் போயிடுச்சு. அவன் நாளைக்கு வருவான்னு என்ன நிச்சயம? “

கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்துடன் பேசியவள் வாஷ் ரூம் கதவைத் திறந்து அவளுடன் பணிபுரியும் மேலும் இரண்டு பெண்கள் உள்ளே வர தலை சீவுவது போல் சமாளித்தாள்.

அவர்கள் அஞ்சுவைப் பார்த்ததும் அவர்களுக்குள் கமுக்கமாக சிரித்துக் கொண்டார்கள்.

அஞ்சு வெளியே வர சந்திரன் நின்றிருந்தான்.

அஞ்சுவின் டீமில் சந்திரன் புதிதாக இணைந்திருக்கிறான்.

“மேடம் இன்னைக்கு நீங்க ஆப்ல போட்டக் கதை சூப்பர்”

அஞ்சுவிற்குப புன்னகை வந்தது

நன்றி சகோ என்று சொல்லப் போனவள் அவன் நினைவு வர சொல்லாமல் “நன்றி சந்திரன் ” என்றாள்.

“குறிப்பா போர் பத்தி எழுதியது சான்ஸே இல்லை மேடம். செம்மையா எழுதறீங்க மேடம்.”

சந்திரன் ஒரேயடியாகப் புகழ அஞ்சுவிற்கே ஒரு மாதிரியாக இருந்தது. உண்மையாக சொல்கிறானா இல்லை வெறுமனே சொல்கிறானா என்று தெரியாமல் முழித்தாள்.

“மேடம் நாளைக்கு லீவ் வேணும்.”

சந்திரன் சொல்ல அஞ்சுவிற்குப் புரிந்தது.

“நத்திங் டூயிங் போய் வேலையைப் பாருங்க”

அஞ்சு சொல்லிவிட்டுச்செல்ல சந்திரன் திகைத்து நின்றான். அவன் நிற்பதைப் பார்த்த அருண் சிரித்தபடி சந்திரனை நெருங்கினான்.

“என்ன சந்திரன் திட்டம் ஊத்திக்கிச்சுப் போல?”

“ம்”

“அப்போ உன்னால பார்ட்டிக்கு வர முடியாது.”

“ம்.”

“சரி நாங்க என்ஜாய் பண்றோம்.”

“ம்”

“உங்கிட்ட ஒண்ணு கேட்கணும்.”

“ம்”

“நிஜமாகவே அந்த ஸ்டோரி நல்லா இருக்கா?”

அருண் கேட்க சந்திரன் ஒரு கெட்ட வார்த்தையை உதிர்த்தான்.

“மூணு வாரத்துக்கும் மேல போர் போர்னு போர் அடிக்கிற கதை அது.”

“அப்புறம் ஏன்யா அதைப் போய் புகழ்ந்தே?”

“லீவ் கிடைக்கும்னு”

சந்திரன் பரிதாபமாக சொல்ல அருண் விழுந்து விழுந்து சிரித்தான்.

***

அன்று இரவு அஞ்சு சாப்பிட்டு முடித்த பிறகு தன் அறையில் யோசித்தாள்.

இன்னிக்கு மேனேஜர் என்னை ஒரு மாதிரி பார்த்தார். ஏன்? ரொம்ப நாளாவே அவர் என்ன கோபமா பார்க்கறார். உஷாரா இருக்கணும்

இன்னைக்கு அந்த ரெண்டு பொம்பளைங்க என்னப் பார்த்து சிரிச்சிட்டு போறாங்க. அவங்களுக்கெல்லாம் பொறாமை. எனக்கு பேரும் புகழும் கிடைக்குதுன்னு வயிறெரியறாங்க.

அவள் எண்ணம் அப்படியே அவனிடம் வந்தது.

யார் அவன்? எங்கிருந்து வந்திருப்பான்?
அவன் நாளைக்கு வருவானா? பணத்தைக் கொண்டு வருவானா? என்னா பேச்சு பேசறான். திமிர் பிடிச்சவன்.

அஞ்சுவின் மொபைல் அடித்தது.

“ஹலோ அஞ்சு ஹியர்”

“நான்தான்”

“யார் நீ? போன் பண்ணி நான் தான்னு சொன்னா எனக்கு எப்படித் தெரியும்? உனக்கு பேர் இல்லையா?”

அஞ்சு கோபமாகக் கேட்க

“நான் தான் சகி. இருநூறு ரூபாய் பேசறேன்.”

அவன் சிரித்தது அறை முழுக்க எதிரொலித்தது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!