Home Featuredடெவில் ஸ்கோர் 3

டெவில் ஸ்கோர் 3

by GK Tamil Novels
27 views

அவன் குரலைக் கேட்ட அஞ்சு கோபமானாள்.

“என்னோட நம்பர் எப்படி கிடைச்சது? எனக்கு எதுக்கு போன் பண்ணிருக்கே?”

“அமெரிக்கன் பிரசிடண்ட் ட்ரம்ப் உன் நம்பர் கொடுத்தார். அவர் தான் உன்கூட பேசச் சொன்னார்.”

“என்ன கலாய்க்கிறீயா?”

“நிஜமா அவர் தான் கொடுத்தார். இன்னும் உன்னப் புகழ்ந்து…”

“ஸ்டாப் இட். எதுக்கு போன் பண்ணே?”

“உன் வயசு என்ன?”

“வாட்?”

“சொல்லு”

“இருபத்தாறு.”

“இருபத்தாறு வயசாகுது. இன்னும் போன் பண்றது எதுக்குன்னு சின்னப்பிள்ளை மாதிரி கேட்கறே? பேசறதுக்குன்னுத் தெரியாதா?”

“உனக்கும் எனக்கும் நடுவில் பேசறதுக்கு என்ன இருக்கு?”

“ஆயிரம்…. இல்லல்ல…. இருநூறு இருக்கு.”

“லுக், அதை நீயே வச்சுக்க. திரும்ப உன்னப் பார்க்கக் கூட எனக்குப் பிடிக்கல.”

“நீ ஒண்ணாவது படிச்சிருக்கியா?”

“எதுக்குக் கேக்கற?”

“சொல்லு”

“ஆமா படிச்சிருக்கேன். இப்ப என்ன அதுக்கு?”

“ஏற்பது இகழ்ச்சின்னு ஆத்திசூடி இருக்குமே”

“ஓ காட்”

“அவரை எதுக்குக் கூப்பிடற? அவராவது நிம்மதியா இருக்கட்டும்.”

“ஆல்ரைட். உனக்கு என்ன வேணும்?”

“தூக்கம் வரல. ஆப்ல உன்னோட கதையைப் படிச்சேன். கேவலமா இருந்துச்சு. அதையும் அத்தனை பேர் புகழ்ந்து தள்ளறாங்க. அதான் எதுவும் கமிஷன் கொடுத்து ஃபேன்ஸ் க்ளப் வச்சிருப்பியோன்னு டவுட் வந்துச்சு. “

அஞ்சு மெளனமாக இருந்தாள்.

“எங்கம்மா என்ன சொல்லிருக்காங்க தெரியுமா?”

“என்ன?”

“எந்த டவுட்னாலும் எப்ப வேணாலும் க்ளியர் பண்ணனும் னு சொல்லிருக்காங்க. அதான் இந்த டவுட் உன்கிட்ட க்ளியர் பண்ண போன் அடிச்சேன்.”

“வேணும்னே வெறுப்பேத்தறியா?”

“சேச்சே அது நான் உனக்குப் பண்ண முடியாது.”

“ஏன்?”

“நீ எப்பவுமே யார் மேலயாவது வெறுப்பாத்தானே சுத்திட்டிருப்ப”

அஞ்சு பெருமூச்சு விட்டாள்.

“சைபர் செல்லுக்கு ஒரு கம்ப்ளெயின்ட் போதும். உனக்கு நல்ல கவனிப்பு கிடைக்கும்.”

“பண்ணு. நான் வேண்டாம்னு சொல்லல.”

“நான் தூங்கணும்”

“நான் தாலாட்டு பாடணுமா?”

“போன் வை”

“குட் நைட் அஞ்சு “

அவன் சிரித்தான். வைத்துவிட்டான்.

அவனை என்ன பண்ணலாம்?

அஞ்சு யோசித்தாள்.

ஐடியா கிடைத்தது.

***

மறுநாள் காலை அலுவலகம் போனதிலிருந்து அவனை அவளுக்கும் தெரியாமல் எதிர்பார்த்தாள்.

அவனிடம் இயல்பாக இருப்பது போல் நடித்து அவனைப் பழி வாங்க வேண்டும்.

வரட்டும்.

சரியாக பதினோரு மணியளவில் வந்தான்.

“ஹலோ” அழைத்தான்.

புன்னகைத்தாள்.

“இந்தா உன்னோட பணம்”

கொடுத்தான். வாங்கிக் கொண்டாள்.

“நான் வர்றேன்” அவன் திரும்ப

“ஒரு நிமிஷம்” அஞ்சு தன் சீட்டில் இருந்து எழுந்து வெளியே வந்தாள்.

“நான் பண்ணது தப்பு ஐ யாம் ஸாரி”

சொன்னவளைப் பார்த்து புன்னகைத்தான்.

“இட்ஸ் ஓகே. நீ ஒரு ரைட்டர். ரைட்டருங்க சைக்கோவா இருக்கிறது சகஜம் தானே? “

சொன்னவன் நாக்கைக் கடித்துக் கொண்டான்.

“ஸாரி. எதார்த்தமா சொல்லிட்டேன் ” அவன் சிரிக்க அஞ்சு புன்னகைத்தாள்.

‘மவனே சாவடிக்கிறேன் உன்னை இரு’

“காஃபி சாப்பிடலாமா?”

“ஓ”

“கேன்டீன் அந்தப் பக்கம் இருக்கு”

“ம்”

இருவரும் எதிரெதிரில் அமர்ந்து காஃபி குடித்தனர்.

புன்னகையுடன் விடை பெற முயன்ற அவனிடம் அஞ்சு கேட்டாள்.

“உன் பேர் என்ன?”

“சிவா”

“ஃபிரண்ட்ஸ்?”

அவள் கை நீட்ட

சிவா இருகரம் கூப்பி வணக்கம் சொன்னான்.

“ஏன் ஹேண்ட் ஷேக் பண்ண மாட்டியா? “

“ஒவ்வொருத்தருக்கும் ஒரு பாலிஸி.ஏன்?”

“ஒண்ணுமில்ல. அப்புறம்”

“சொல்லு அஞ்சு”

“உனக்காக நான் எழுதின கொஞ்சம் புக்ஸ் கொண்டு வந்திருக்கேன் படிச்சுட்டு சொல்றியா?”

சிவா யோசித்தான். புன்னகையாய் தலையசைத்தான்.

“இந்தா சிவா” கொடுத்தாள்.

மவனே படிச்சுட்டு உனக்கும் பைத்தியம் பிடிக்காம இருந்தா சரி மனதில் நினைத்துக் கொண்டாள்.

***
“என்ன சொல்ற சிவா?” கேட்டது அவன் ரூம் மேட் நண்பன் மனோகர்.

மனோ கொஞ்சம் புக்ஸ் தரேன் அது படி. அதுல நல்ல விஷயம் என்ன கெட்ட விஷயம் என்னன்னு நோட்ஸ் மாதிரி தயார் பண்ணனும்.

“ஏன் அது நீ பண்ண வேண்டியது தானே?”

“எனக்கு டைம் இல்ல மனோ. நீ எப்படியும் ஹெல்ப் பண்ணுவேன்னு உன் மேல அபார நம்பிக்கைல புக்ஸ் வாங்கிட்டு வந்துட்டேன்.”

சிவா சொல்ல மனோ யோசித்தான்.

“சரி பண்ணித்தரேன். எனக்கு என்ன கொடுப்பே?”

“என்ன வேணும்?”

“ஒரு ஃபுல்”

“ஓகே டீல்.”

ஒரு புத்தகத்தை எடுத்துப் பார்த்தான் சிவா.

புதையலைத் தேடி என்றிருக்க

சை என்று வைத்தான்.

‘இன்னும் புத்தி வளரலை. புத்தி வளரலைன்னா என்ன ஆள் நல்லா வளர்ந்திருக்கா’ சிவாவின் மனம் சொல்ல தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.

‘அதெல்லாம் இப்பயா சொல்றது?’ மனசாட்சியிடம் செல்லமாய் சண்டை போட்டான்.

‘ஏன்? என்னாச்சு?’ மனசாட்சி கேட்க
‘வெட்கமா இருக்குதுல்ல?’ முகத்தை மூடிக் கொண்டவனை ஒரு மார்க்கமாய் பார்த்தான் மனோகர்.

***

சிவா வெளியே போயிருக்க புத்தகங்களைப் படிக்க எண்ணி எண்ணிப்பார்த்தான். மொத்தம் நான்கு புத்தகங்கள்.

எந்த ஜானர் படிக்கலாம்? யோசித்த மனோகர் ஹாரர் புக் ஒன்றை எடுத்தான். படிக்க ஆரம்பித்தான்.

போர் அடித்தது. பத்து பக்கங்கள் படித்திருப்பான். தூக்கம் கண்களைத் தழுவியது. அப்போது மனோகர்க்கு அந்த ஐடியா வந்தது. உண்மையில இந்தப் பெண்ணின் ஹாரர் நாவல்கள் வாங்கி வைத்திருப்பது அவசியம். தூக்கம் வராத இரவுகளில் அஞ்சுவின் ஹாரர் நாவல்கள் படித்தால் உடனே தூக்கம் வரும்.

‘தேங்க்ஸ் சிவா. உண்மையிலேயே நீ க்ரேட்.’

ரொமான்டிக் நாவல் என்றிருக்க அதை எடுத்துப் படித்தான். இரண்டு பக்கங்களுக்கு மேல் அவனால் முடியவில்லை.

ஆடுகளம் திரைப்படத்தில் சேவலிடம் தனுஷ் தம்பி விட்ராத தம்பி என்று சொல்வது போல் தன் மனதில் தானே சொல்லிக் கொண்டான்.

மனதில் சிவா வாங்கித் தரப் போகும் ஃபுல் பாட்டில் வந்து போக பிடிவாதமாய் அந்த நாவலைப் படித்தான்.

‘நாதா நீங்க எனக்கு சாதா இல்லை.’

நாயகி நாயகனைப் பார்த்து சொன்ன வசனம் அவனை உச்சமாய் கடுப்பேற்றியது.

ஏதோ ஒரு பைத்தியம் தான் இப்படி எழுத முடியும் யோசித்தவன் ஸ்கிப் செய்து ஸ்கிப் செய்து படித்தான்.

முடிவுரை என்றிருக்க

மிகச்சிறந்த நாவல் படித்து மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கும் என் வாசக சகோக்களே நான் தான் உங்கள் அஞ்சு என்றிருக்க தன்னையும் மீறிய கடுப்பில் தலையைச் சுற்றி அதை எறிந்தான் மனோகர். அது சுவரில் பட்டுக் கீழே விழுந்தது.

கொஞ்ச நேரம் பால்கனியில் போய் நின்று ஆசுவாசப்படுத்திக்கொண்டான்.
கீழே இருந்த புத்தகத்தை எடுத்து ஷெல்ஃபில் வைத்தான்.

தனக்குள் சொல்லிக் கொண்டான்.

‘மனோ நமக்கு சரக்கு முக்கியம்.’

***

‘இந்நேரம் போன் வந்தா கண்டிப்பா எடுக்கக் கூடாது. நம்ம கதையைப் படிச்சு செம காண்டாயிருப்பான்’

அஞ்சு சிவாவைப் பற்றி யோசித்தாள்.

‘போன் பண்ணுவானா?’

நிச்சயம் பண்ணுவான். திமிர் பிடிச்சவன்.

நேரம் போய்க் கொண்டிருக்க

இன்னும் கதை படிக்கலை போல. அதான் போன் பண்ணல

கொஞ்சம் ஏமாற்றமாக உணர்ந்தாள்.

போன் அடித்தது. அவன் தானா? ஆர்வமுடன் எடுத்தாள். இல்லை.

அம்மா.

“சொல்லும்மா”

“நீ புக் படிக்கக் கொடுத்து பைத்தியம் ஆனாரே பப்ளிகேஷன்ஸ் ஓனர்?”

“சாதாரணமா சொன்னாலும் தெரியும்.” கடுப்புடன் சொன்னாள்

“அவர்?”

“அவருக்கென்ன?”

“அவர் செத்துட்டார்.”

You may also like

Leave a Comment

error: Content is protected !!