ஜனனி ஹாலில் கிடத்தப்பட்டிருந்தாள். மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்தன. பாலா ஜனனியின் முகத்தையே பார்த்தான்.
அதே குழந்தை முகம்.ஆனால் அந்தப் புன்னகை மட்டும் இல்லை. ஜனனி நிம்மதியாக உறங்குவதைப் போல் தோன்றியது பாலாவிற்கு. மாலையைப் போட்டான். தடுமாறி விழப் போனவனை கணேஷ் பிடித்துக்கொண்டான்.
அருகில் யாரோ ஒரு பெண் ஜனனியின் குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.
“பாலா வா இப்படி” கணேஷ் அழைக்க
பாலா அவன் பின் சென்றான்.
“எப்படி கணேஷ் என்னாச்சு ஜனனிக்கு?” பாலா கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கேட்க கணேஷ் அவன் காதில் சொன்னான்.
“தற்கொலை பாலா.”
“கடவுளே கடவுளே ஜனனிக்கு என்னாச்சு ஏன் இப்படி?”
“நேத்து சாயங்காலம் அருணுக்கும் ஜனனிக்கும் ஏதோ சண்டை நடந்திருக்கு.”
கணேஷ் சொன்னதைக் காதில் வாங்கிய பாலா அருண் எங்கே என்று தேடினான்.
ஓரமாய் அருண் அழுதபடி நின்றிருக்க அவனருகில் சென்றான் பாலா.
“என்கூட வா”
பாலா இலக்கில்லாமல் நடக்க அருண் பின்தொடர்ந்தான்.
அருகில் யாரும் இல்லை என்று உறுதி செய்த பாலா அருணிடம் கேட்டான்.
“என்னாச்சு குமார்?”
அருண் அழுதான்.
“சார் என்ன மன்னிச்சிடுங்க சார் நான் தான் ஜனனியைக் கொன்னுட்டேன்.”
“என்ன சொல்றே குமார்?”
“நேற்று சாயங்காலம் ஒரு ட்ரிங்க்ஸ் பார்ட்டி. ஃப்ரண்ட்ஸ் கூட. கொஞ்சம் ஜாஸ்தியா குடிச்சிட்டேன். வீட்டுக்கு வந்தா ஜனனி ரொம்பக் கேவலமா திட்டினா. எனக்கு ரொம்ப ஆத்திரமாச்சு. நீ மட்டும் என்ன ஒழுங்குடி? பாலா கூட சேர்ந்து சுத்தினவ தானே நீ? இந்தக் குழந்தை எனக்குத்தான் பிறந்துச்சான்னு கேட்டுட்டேன் சார்”
அழுதபடியே அருண் சொல்லி முடிக்க பாலா அதிர்ந்தான்.
“என்ன குமார்? இப்படி பண்ணியிருக்க? தங்கம் மாதிரி ஒரு பொண்ணு அதும் நீ நேசிச்ச ஒரு பொண்ணு தொலைச்சிட்டு வந்து நிக்கிற. ஐயோ இதுக்காகவா நான் உனக்கு ஜனனியைக் கல்யாணம் பண்ணி வைச்சேன்?”
“கடவுளே கடவுளே” பாலா கண்ணீர் விட்டபடி கதறினான்.
“சார் என்ன மன்னிச்சுடுங்க சார். குடிபோதையில் அப்படி பேசிட்டேன் சார்” அருண் பாலாவின் கால்களில் விழ
“நான் உன்னை எதுக்கு மன்னிக்கணும்? அதனால் என்ன குமார் பிரயோஜனம்? ஜனனி திரும்ப வந்துருவாளா?”
பாலாவை கணேஷ் பிடித்துக்கொண்டான்.
“குமார்”
“சார்”
“உன் குழந்தை சத்தியமா உனக்குத்தான் பொறந்திருக்கு. உனக்கு நம்பிக்கை இல்லன்னா அதை என்கிட்ட கொடுத்துடு. நான் வளர்த்துக்கிறேன். நாளைக்கு குழந்தையை ஏதாவது பேசி குழந்தையையும் சாகடிச்சுடாத.”
“அய்யோ சார் நான் என்ன பண்ணுவேன்? பாழாப்போன அந்த குடியால என் வாழ்க்கையே போச்சு சார்”
பாலா மீண்டும் ஜனனி கிடத்தப்பட்டிருந்த ஹாலிற்கு வந்தான்.
‘என்னை விட்டுக்கொடுத்துட்டியே பாலா’
ஜனனி சொன்னது போல இருக்க
பாலா கணேஷை அழைத்தான்.
“எனக்கு ஒரு மாதிரியா இருக்கு நாம கிளம்பலாமா?”
“சரி வா பாலா போலாம்.”
அவர்கள் வெளியே கிளம்பி வரும்போது உள்ளே ஒரு வயதான அம்மாள் சொல்லிக் கொண்டிருந்தது காதில் கேட்டது.
“சுமங்கலியாக போய் சேர்ந்திருக்கிற சின்னப் பொண்ணு. நமக்கு சாமி மாதிரி. தோட்டத்தில் அடக்கம் பண்ண ஏற்பாடு பண்ணுங்க”
பாலா பின்னால் ஏறிக்கொள்ள கணேஷ் தன் பைக்கை எடுத்தான்.
நேராகத் தன் வீட்டிற்குச் சென்றான்.
“இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல கணேஷ்” பாலா அழ கணேஷ் அவனைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.
பாலா சேரில் அமர்ந்தான்.
கணேஷ் பாட்டிலிலிருந்து கொஞ்சம் பிராந்தியை ஒரு கிளாசில் ஊற்றி பாலாவின் முன் வைத்தான்.
“குடி பாலா இப்ப இது உனக்குத் தேவை.”
அதை பார்த்தவுடன் ஜனனி முன்பொருநாள் காஃபி ஷாப்பில் வைத்து குடிக்கக் கூடாது என்று சொன்னது நினைவுக்கு வந்தது.
“வேண்டாம் கணேஷ். ஜனனிக்குப் பிடிக்காதது எதுவும் நான் செய்ய மாட்டேன்.”
நேரம் கடந்தது.
“சாப்பாடு வாங்கிட்டு வரேன். சாப்பிடு”. கணேஷ் சொல்ல பாலா தலையசைத்தான்.
கணேஷ் பைக்கை எடுத்துக்கொண்டு போய் ஹோட்டல் சிவரஞ்சனியில் இரண்டு சாப்பாடு வாங்கிக் கொண்டு பைக்கை நிறுத்தி விட்டு மேலே ஏறினான். கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருக்க திகைத்தான்.
“பாலா” அழைத்தான்
பதிலில்லை.
“பாலா” இன்னும் சத்தமாக அழைக்க உள்ளே நிசப்தம்.
கணேஷ்க்குள் நடுக்கம் பரவியது.
குரல் நடுக்கமாய் வெளிப்பட்டது “பா….லா…”
ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்க பாலா சேரில் அமர்ந்தபடி மயங்கியிருந்தான். தன் இடது கை மணிக்கட்டை வெட்டியிருந்ததில் ரத்தம் கீழே வழிந்திருந்தது.
***
கே எம் சி ஹெச் மருத்துவமனை.
பாலாவிற்கு சிகிச்சை போய்க்கொண்டிருந்தது.
கணேஷ் பதட்டமாக நின்றிருந்தான்.
டாக்டர் வெளியே வர
“சார்” அவர் பின்னால் ஓடினான்.
“இனி பயப்பட ஒண்ணுமில்லை. அவர் ரைட்டர் பாலா தானே? எதுக்கு சூசைட் அட்டெம்ட் பண்ணார்?”
டாக்டர் கேட்க
“அது வந்து சார்” கணேஷ் தயங்கினான்.
“இட்ஸ் ஓகே நீங்க போய் பாருங்க ” சொன்ன டாக்டர் நகர்ந்து விட்டார்.
கணேஷ் உள்ளே சென்றான்.
பாலா சோர்வாய் இருந்தான். புன்னகைத்தான்.
“ஏண்டா சாகணும்னு சொன்னா என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல விஷம் கொடுத்திருப்பேன்”
கணேஷ் சொல்ல பாலா சிரித்தான்.
“அப்புறம் எதுக்கு என்னை இங்கே கூப்பிட்டு வந்து காப்பாத்தினே ?”
“பேசு ட்ரீட்மென்ட் முடியட்டும் அப்புறம் உன்ன கவனிச்சிக்கிறேன்.”
“ஸாரி கணேஷ். என்னால உனக்கு ரொம்பத் தொல்ல.”
“போடா லூசு. நான் என்ன உனக்கு சொந்தக்காரனா? உன்னை தொல்லைன்னு நினைக்க? ஒரு நிமிஷம் என் உயிர் கலங்கிப் போச்சுடா ”
கணேஷ் சொல்ல பாலா கண்களை மூடியபடி கணேஷின் கைகளைப் பிடித்துக் கொண்டான்.
“மருந்து வாங்கப் போறேன். பத்திரமா இரு” சொல்லிவிட்டு கணேஷ் அறையை விட்டு வெளியேற
‘பாலா’ ஜனனியின் குரல் கேட்டது.
பாலா பதட்டமானான்.
‘ஜனனி எங்கேமா இருக்கே நீ?’
‘என்ன பாலா இது?’
‘நீ இல்லாத உலகத்தில் என்னால் இருக்க முடியல மா’
‘அதுக்காக? பாலா நேரம் வரும்போது நானே வருவேன் உன்னை கொண்டு போயிடுவேன்.’
‘ம்’
‘நான் இந்த ஜென்மம் எடுத்ததே உன்னை நேசிக்கத்தான் பாலா. உன்னை மட்டும் நேசிக்கத்தான். ‘
‘ம்’
‘நீ படைப்பாளி பாலா. எழுது. உன்னால் முடிஞ்ச வரைக்கும் எழுது.உன்னோட ஒவ்வொரு எழுத்துலயும் நான் இருப்பேன். உன்னோட ஜனனி கூட இருப்பா.’
‘ம்’
பாலாவிற்கு மயக்கமாக இருந்தது.
***
வசந்த் கண்களை துடைத்துக்கொண்டான்.
“அதுக்கப்புறம் ஈரோட்டில் இருக்க எனக்குப் பிடிக்கல. தமிழ்நாடு வேண்டாம்னு டெல்லிக்கு மாறிட்டேன். எழுதிட்டே இருந்தேன். வெறி பிடிச்ச மாதிரி எழுதினேன்.எக்கச்சக்கமா எழுதிக் குவிச்சேன்.
நிறைய விருதுகள் நிறைய பணம் எல்லாமே கிடைச்சது. ஆனா எல்லாமே எனக்கு சாதாரணமா போயிடுச்சு. என்னோட ஜனனி வந்து என்னைக் கூட்டிட்டுப் போற நாளுக்காக காத்திருக்கேன்.”
பாலமுருகன் சொல்லி முடித்தார். வசந்த் அவரைக் கும்பிட்டான்.
கார் மருதமலை சாலையில் திரும்பியது.
கல்லூரி வளைவில் கார் நுழைந்தது.
ரிசப்ஷன் முன் போய் நிற்க பாலமுருகன் இறங்கினார். கல்லூரியின் தாளாளர் மலர்மாலை அணிவித்தார். முதல்வர் கும்பிட்டு வரவேற்றார்.
ஆடிட்டோரியம் மாணவ மாணவிகளால் நிரம்பியிருந்தது.
“எழுத்தாளர் ஐயா பாலமுருகன் அவர்களை பேச அழைக்கிறேன் ” தொகுப்பாளர் அறிவிக்க பலத்த கைதட்டல்களுக்கிடையில் மைக்கைப் பிடித்தார் பாலமுருகன்.
“அனைவருக்கும் வணக்கம்.
இங்கு உங்கள் முன் நான் நின்று கொண்டிருப்பது உங்களுக்கு அறிவுரை சொல்ல அல்ல. என் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள.
இருபது வருடங்களாய் நான் தமிழ்நாட்டிற்குள் வரவில்லை. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு எனக்கு வரவேண்டும் என்று தோன்றியது.
உங்களையெல்லாம் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
எல்லாருக்கும் நான் சொல்வது ஒன்றுதான். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு தனித்திறமை நிச்சயம் இருக்கும். சிலர் அதைத் தாங்களே கண்டறிவர் சிலரை அவருக்கு நெருக்கமான சிலர் அவரை நேசிக்கும் சிலர் கண்டறிவர். அப்படி ஒரு நேசிக்கும் உள்ளம் ஒவ்வொருவருக்கும் கிடைப்பது அவர்கள் செய்த புண்ணியம். அதுபோல் ஒரு நேசிக்கும் உள்ளம் எனக்கு கிடைத்ததால் தான் இன்று நான் உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன். கடைசியாக ஒன்று நம்மால் முடியாது என்று எப்பொழுதும் எண்ணாதீர்கள். எதற்காகவும் விரத்தி கொள்ளாதீர்கள். மனதை மகிழ்வோடு வைத்திருங்கள். அதுவே எந்த நோயையும் வரவிடாது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இன்று எல்லோர் முகங்களிலும் சிரிப்பைப் பார்க்கிறேன் நான். வாழ்வின் அழுத்தங்களால் காலப்போக்கில் உங்கள் சிரிப்பு தொலையாமல் இதேபோல் எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருக்குமாறு கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்”
பாலமுருகன் தன் பேச்சை முடிக்கும் போது நெஞ்சில் சுருக்கென்று வலி ஏற்பட்டது.
‘பாலா’
ஜனனியின் குரல் காதில் கேட்க பாலா பரவசமடைந்தார்.
‘ரொம்பக் கஷ்டப்பட்டியா பாலா? நான் இல்லாம.’
‘ம்’
‘போலாமா?’
‘ம்’
பாலாவின் மனதிற்குள் மீண்டும் ஜனனியின் குழந்தை முகமும் அதில் உறைந்த புன்னகையும் தெரிந்தது.
நெஞ்சைப் பிடித்துக் கொண்டு பாலா மேடையிலேயே சரிந்து விழுந்தார்.
அய்யா பெருங் கூச்சலுடன் அனைவரும் எழுந்தனர்.
நிறைந்தது.
வாசித்தோருக்கும் நேசித்தோருக்கும் நன்றிகள்.
கவுதம் கருணாநிதி.
