Home Featuredஜனனி 2

ஜனனி 2

by GK Tamil Novels
31 views

பாலமுருகனுக்கு விழிப்பு வந்து விட்டது. மணி பார்த்தான். இரவு ஒரு மணி. அருகில் மனைவி கமலம் உறங்கிக் கொண்டிருக்க எழுப்பலாமா யோசித்தான்.

தன் தேவைக்காக நன்றாகத் தூங்கும் மனைவியை எழுப்புவதா? மனசாட்சி கேட்க மனம் சொன்னது. இப்போதெல்லாம் உங்களுக்குள் எதுவும் நடப்பதில்லை. கடைசியாக எப்போது? பாலமுருகன் யோசித்துப் பார்க்க இரண்டு மாதங்களுக்கு முன்னால் என்று தோன்றியது. அதுவும் சரியாக நினைவில்லை.

எப்பொழுது பாலமுருகன் முயன்றாலும் கமலம் ஏதாவது காரணம் சொல்வாள். இப்போதெல்லாம் நேரிடையாகத் தாக்க ஆரம்பித்துவிட்டாள்.

‘இவ்வளவு குறைச்சலா சம்பளம் வாங்கிட்டு இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தோணறது?’

‘ஊர்ல அவனவன் எப்படி இருக்கான்? எனக்குன்னு வந்து வாய்ச்சீங்க.’

‘அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா நாம பார்த்துக்கவே கூடாது’

கமலம் வழக்கமாகப் பேசும் அனைத்தும் பாலமுருகன் மனதில் வந்து போயின.

எவ்வளவுதான் அவள் திட்டிப் பேசினாலும் அவள் தானே மனைவி? பாலமுருகன் பல நேரங்களில் காயப்பட்டாலும் வெளியே காண்பித்துக் கொள்ள மாட்டான்.

சமீப காலமாக அவனுக்குத் தேவைப்படுகிறது. தனக்கு தேவைப்படுகிறது என்பதை நன்கு உணர்ந்திருந்தான். தன் தேவையை மனைவியிடம் தெரிவிக்க முயலும் போதெல்லாம் தாக்கப்பட்டான்.

இன்றும் ஏதாவது சொல்லிவிடுவாள் தூங்கி விடலாம் பாலமுருகன் நினைக்கும்போது கமலம் அசைந்தாள்.

பாலமுருகன் மெதுவாக அவள் கையைப் பிடிக்க அவள் தட்டிவிட்டு திரும்பிப் படுத்தாள். பாலமுருகனுக்குப் புரிந்தது.

எழுந்துபோய் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தான்.

ஜன்னல் வழியாகப் பார்க்கும்போது மேகக் கூட்டங்களின் நடுவே முழுநிலா தெரிய

பேனாவும் பேப்பரும் எடுத்துக்கொண்டு வந்து நாற்காலியில் அமர்ந்தான்.

‘வாசிக்கப்படாத கவிதை நான்
நேசிக்கப்படாமலே இறந்தும் போவேனோ?
போற்ற வேண்டாம் எவரும் என்னை
தூற்றிக் கொண்டே இருப்பதில்
தோற்றுக் கொண்டே போகிறது மனம்.
மாற்றம் என்றாவது மலருமா? காயம்
ஆற்றிவிட எவரும் வருவரோ?’

எழுதி முடித்த கவிதையை படித்துப் பார்த்தான்.

மனம் பாராட்டியது.

கவிதை நன்றாகத்தான் இருக்கிறது.

அதே மனம் கேலி செய்தது.

இனிமேல் தான் உன் வாழ்க்கையில் உன் காயத்தை ஆற்றி விட யாரும் வரப்போகிறார்களா?

ஏன்?

உன் வயது என்ன?

நவம்பர் வந்தால் முப்பத்தொன்பது.

பொய் சொல்லாதே.

முப்பத்தொன்பது தான்.

இல்லை நாற்பது வயது.

மனம் சொல்ல பாலமுருகன் சிரித்தான்.

சரி நாற்பது வயது

இந்த நாற்பது வயதில் இந்த மாதிரி எண்ணங்கள் வேண்டாம். சரியோ தவறோ வாழ்க்கை எப்படி அமைந்ததோ அதை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு அப்படியே வாழ்ந்து விட்டுப் போனால் தான் பேர் கெடாது

வாழத்தான் முடியவில்லையே? என்ன செய்வது?

அது மட்டும் தான் வாழ்க்கையா என்ன? உனக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.

ஏன் எனக்கு மட்டும் வாழ்க்கை இப்படி அமைந்தது?

எல்லோரும் கேட்கும் கேள்வி. நன்றாக யோசித்துப் பார்த்தால் எல்லோருக்கும் வாழ்க்கை நன்றாகத்தான் அமைந்திருக்கும் ஆனால் எது கிடைக்கவில்லையோ அதை எண்ணித்தான் எல்லோரும் இப்படி புலம்புவர்.

இல்லை நிஜமாகவே என் வாழ்க்கை அப்படித்தான்.

அடுத்த நொடியில் வாழ்க்கை நிச்சயமற்ற நிலையிலா நீ இருக்கிறாய்?

இல்லை.

பிறகு எதற்கு குறை கூறுகிறாய்?

……

என்ன மௌனம்?

ஒன்றுமில்லை.

பாலா இயல்பாக இரு நடப்பவற்றை ஏற்றுக்கொள். எதையும் மாற்ற முயலாதே. எதற்காகவும் கவலைப் படாதே.

சரி

பாலமுருகன் நாற்காலியில் அமர்ந்தபடியே தூங்கி போனான்.

***

மறுநாள் காலை.

பாலமுருகன் தான் வேலை பார்க்கும் பள்ளிக்குச் செல்லும் பொழுது சரியாக ஒன்பது மணி. ஒன்பது முப்பதுக்குத் தான் அனைவரும் வருவர். அவன் எப்பொழுதும் அரைமணி நேரம் முன்பாக வந்து விடுவான். பேப்பரில் எதையாவது எழுதிக் கொண்டு அமர்ந்திருப்பான்.
வழக்கமாக கவிதைகள் எழுதுபவன்
முதல் முறையாக ஒரு நாவல் எழுதியிருந்தான்.

அதை மூன்று காப்பிகள் நகலெடுத்து தன்னுடன் பணிபுரியும் மூவருக்கு கொடுத்துவிட்டு அவர்கள் படித்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்வதற்காக காத்திருந்தான்.

“குட்மார்னிங் பாலமுருகன்”

வரதராஜன் புன்னகையுடன் சொல்ல

“குட் மார்னிங் சார்” என்றான் பாலமுருகன்.

“சார்”

“சொல்லுங்க பாலமுருகன்”

“நான் கொடுத்த கதை?”

“ஓ போன வாரம் கொஞ்சம் பேப்பர்ஸ் கொண்டுவந்து கொடுத்தீங்க. அது கதையா? சாரி நான் இன்னும் பார்க்கல. இந்த வாரம் நான் பிஸி எப்ப டைம் கிடைக்குதோ அப்போ பார்க்கறேன்”.

“ஓகே சார் தேங்க்யூ” பாலமுருகன் உள்ளுக்குள் வழக்கம்போல் ஏமாற்றமாக உணர்ந்தான்.

உடன் பணிபுரியும் வளர்மதியின் அருகில் சென்றான்.

“வாங்க சார்”

“மேடம் குட் மார்னிங்”

“குட் மார்னிங் சார் சொல்லுங்க”

பாலமுருகன் பதில் ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தான்.

வளர்மதி புரிந்துகொண்டாள்.

“கொஞ்சம் படிச்சேன் சார். அப்புறம் வீட்டு வேலை ரொம்ப ஜாஸ்தி. இன்னும் முடிக்கல. முடிச்சிட்டு சொல்றேன்.”

“தேங்க்ஸ் மேடம்”

தன் இருக்கையில் வந்து அமர்ந்தான்.

அது ஒரு தனியார் பள்ளி. பாலமுருகன் ஆஃபீஸ் ஸ்டாஃப். கிளார்க். அவனுடன் இன்னும் எட்டு பேர் பணிபுரிகின்றனர்.

மாணவர்களிடமிருந்து கட்டணம் வசூலிப்பது வருகைப் பதிவேடு பராமரிப்பு ஆசிரியர்களுக்கு சம்பள பில் தயார் செய்வது அவர்களின் விடுப்பு விவரங்களைக் குறித்து வைத்துக் கொள்வது இவைதான் வேலை.

“பாலா” குரல் கேட்டுத் திரும்பி பார்த்தான் பாலமுருகன்

உடன் பணிபுரியும் கணேஷ் நின்றிருந்தான். புன்னகைத்தான்.

“என்ன அமைதியா உட்கார்ந்திருக்கே? வழக்கமா ஏதாவது எழுதிட்டுருப்பே?”

கணேஷ் கேட்டதற்கு பாலா வெறுமையாகப் புன்னகைத்தான்.

“என்ன அர்த்தம் இதுக்கு?”

“அர்த்தம் ஒண்ணும் இல்லைன்னு அர்த்தம் அவ்வளவுதான்”

“என்ன பதில் இது? சரி வா காஃபி சாப்பிடப் போலாம்.”

கணேஷ் அழைக்க பாலா எழுந்தான்.

இருவரும் கேண்டீனுக்குச் சென்றனர். கணேஷ் இரண்டு காஃபி டோக்கன்கள் வாங்கினான்.

“பாலா வேற எதுவும் சாப்பிடறியா?”

கணேஷ் கேட்க வேண்டாம் என்று தலையசைத்தான் பாலா.

காஃபி கப்களை எடுத்துக்கொண்டு டேபிளில் அமர்ந்தனர்.

“பாலா”

“சொல்லு கணேஷ்”

“என்ன காலையிலேயே விரக்தி?”

“ப்ச். ஒண்ணுமில்ல.”

“சந்தோசமா இரு எப்பவுமே ஸ்மைல் இருக்கணும் முகத்தில்.”

“சரி கணேஷ்”

“நீ சொல்ற சரி சரியில்லை” சொன்ன கணேஷ்

“சிரிடா” என்றான்.

பாலாவிற்கு கணேஷ் சொன்ன விதம் சிரிப்பை வரவழைக்க சிரித்தான் சிரித்தபடியே யதார்த்தமாக வாசலை பார்த்தவன் பார்வையில் அவள் பட்டாள்.

மாநிறம். வட்ட முகம். குழந்தை முகத்தில் நிரந்தரமாய் ஒட்டியிருந்த புன்னகை. பார்த்த மாத்திரத்தில் அந்த முகம் பாலாவின் மனதில் தங்கியது.

“என்ன பாலா அப்படி பார்க்கிற?” கணேஷ் கேட்க

“இல்ல யாருன்னு பார்த்தேன். புதுசா இருக்காங்களே.இதுவரைக்கும் பார்க்கலன்னு.”

“புதுசா ஜாயின் பண்ணியிருக்காங்க
டீச்சர். வயது இருபத்தாறு. வீடு சம்பத் நகர்.”

கணேஷ் சொல்ல பாலமுருகன் வாயைப் பிளந்தான்.

“அடப்பாவி எப்படி அவ்வளவு சீக்கிரம் கலெக்ட் பண்ணிட்டே.”

“ஹலோ அந்த ஜாப் அப்ளிகேஷன் ஃபைல் பார்க்கிறதே நான்தான்.”

கணேஷ் சிரிக்க பாலாவும் சிரித்தான்.

“எல்லாம் சொல்லிட்ட பேர் மட்டும் சொல்லலியே.”

“கரெக்ட். அவங்க பேர் ஜனனி.”

You may also like

Leave a Comment

error: Content is protected !!